இது எப்டி இருக்கு...

நட்சத்திரமாக நாமினேட் செய்த உடனே, யாரையாவது பேட்டி கண்டு போடவேண்டும் என்று மற்ற நட்சத்திரங்கள் எண்ணியது போலவே எனக்கும் ஒரு 'இது'.

அப்துல்கலாம், கமலஹாசன், மணிரத்னம், ஜெயமோகன், இளையராஜா என்று விஐபிகள் எல்லாம், " நான் பேட்டி கொடுக்கிறேன், நான் பேட்டி கொடுக்கிறேன்... " என்று முட்டி மோதிய போதும், அவர்களை எல்லாம், ஒதுக்கொ ஒதுக்கோ என்று ஒதுக்கி விட்டு, வலைப்பதிவு உலகின் வஸ்தாது ஒருவரை, தேர்வு செய்ததற்கு என்ன காரணம்? அவர் மட்டும் தான் நான் கேட்ட ஏடாகூடமான கேள்விகளுக்கு , கோபப்படாமல் பதில் அளிக்கிறேன், என்று உறுதி தந்தார். சொன்ன படியே பதில்களையும் தந்தார்.

பீடிங் பாட்டில், டயாப்பர் காலத்தில் இருந்து துவங்கி, மூணாங்கிளாஸ் படிக்கும் போது மஞ்சக்காமாலை வந்தது, எட்டாம் வகுப்பில் புது சைக்கிள் வாங்கி பக்கத்து வீட்டு அலமேலுவுடன் டபுள்ஸ் போனது, பத்தாம் வகுப்பில் முதல் க்ளாசில் வந்தது, அம்மாவுடன் போட்ட சண்டைகள், அப்பாவிடம் வாங்கிய உதைகள், கல்லூரி, கட் அடிப்புகள், வேலை, பணம், மேலும் பணம், என்று அனைத்தையும் கவர் செய்கிற மாதிரி ஒரு பர்சனல் நேர்காணலுக்கு என்று சுமார் ஒரு நூற்றைம்பது கேள்விகள் தயார் செய்து கொண்டு போயிருந்தேன் தான்.

ஆனால் பாருங்கள், நூற்றைம்பது கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல அவருக்கு டயமில்லை. அதிலிருந்து ரேண்டமாகப் பொறுக்கி எடுத்த பதிமூன்று கேள்விகளும், அதற்கான பதில்களும் இதோ.

இதை, அரைகுறை செவ்வி என்று சொல்லலாம், கிறுக்குத்தனம் என்றும் சொல்லலாம்.

அவரவர் விருப்பப்படி

அன்புடன்
பிரகாஷ்

Here it goes.....



பொதுவாக இங்கிருக்கும் பல்கலைக்கழகங்களில் படித்து விட்டு, சீமைக்குச் சென்று செட்டில் ஆவதுதான், நடைமுறை. ஆனால் நீங்கள், வெளிநாட்டில் மேற்படிப்பு படித்து விட்டு, இங்கே வந்து வியாபாரம் செய்கிறீர்கள். இந்தியா ஒரு பெரிய மார்கெட், மூளை இருந்தால், சாமர்த்தியமாக வியாபாரம் செய்தால், முன்னுக்கு வந்துவிடலாம் என்ற காரணத்தால் தானே?

அப்படியெல்லாம் முன் யோசனையுடன் எல்லாமே நடைபெறுவதில்லை. அந்த நேரத்தில் - நான் படிப்பை முடிக்க இருந்த நேரத்தில் - கிரிக்கின்ஃபோ (cricinfo) வேலைகளில் மிகவும் தீவிரமாக இருந்தேன். அப்பொழுது இந்தியா வருவதுதான் சரியாக இருக்கும், அமெரிக்காவில் இருப்பது பிரயோசனமாக இருக்காது என்று தோன்றியது. அதனால் சற்று ரிஸ்காக இருந்தாலும் இந்தியா வந்துவிட்டேன். ஆனால் இங்கு வந்ததும்தான் நம்மிடம் இருக்கும் விஷயங்களை வைத்துக்கொண்டு சுலபமாக நல்ல சம்பளத்தில் வேலைகள் கிடைக்கும் என்பது புரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பிற வாய்ப்புகளும் இருக்கின்றன என்று புரிந்தது.

இதையெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கவில்லை.

படிச்ச படிப்புக்கும், செய்யற தொழிலுக்கும் சம்மந்தமே இல்லையே என்று என்றைக்காவது ·பீல் (feel) ஆகி இருக்கிறீர்களா?

ம்ஹூம். இப்பொழுது நான் படித்தது அனைத்தும் மறந்துபோய் விட்டது. சில நாள்களுக்கு முன்னர் என்னுடைய PhD தீசிஸ் PDF கோப்பாக கார்னல் பல்கலைக்கழகத் தளத்தில் கிடந்தது என்று கண்டுபிடித்தேன். அதை மீண்டும் எடுத்துப் படித்துப் பார்த்தேன். ஒரு மண்ணும் புரியவில்லை. வெகு சீக்கிரத்தில் அனைத்தையும் மறைந்துவிடக்கூடிய அற்புதமான திறமை மனிதனிடத்தில் - அட் லீஸ்ட் என்னிடத்தில் - உள்ளது என்று புரிந்துகொண்டேன்.

படித்த படிப்பைவிட செய்யும் வேலை இதுவரையில் சுவாரசியம் அதிகமானதாகவே இருப்பதனால் இதுவரையில் 'ஃபீல்' ஆனதில்லை.

பள்ளி கல்லூரி நாட்களில், மற்ற மாணவப் பெருந்தகைகள் போல, க்ளாஸ¤க்கு கட்டடிப்பது, லவ் லெட்டர் குடுப்பது, ரூமில் சினிமா நடிகை போஸ்டர் ஒட்டுவது என்று இருந்திருக்கிறீர்களா? அல்லது பெரும்பாலான 'படிப்ஸ்' ஐப் போல நீங்களும் ஒரு ·ப்ரூட்டா? (fruit)

வகுப்புகளுக்கு கட் அடிப்பது - ஐஐடியில் ஒரு வகுப்பில் செய்திருக்கிறேன். ஏழாவது செமஸ்டர் அப்பொழுது. நான்தான் மெக்கானிகல் எஞ்சினியரிங் வகுப்பில் முதல் மாணவன். எனக்கும் இரண்டாம் மாணவனுக்கும் இடையில் ஏகப்பட்ட இடைவெளி. இந்த வாத்தியார் கொஞ்சம் கிறுக்குப் பேர்வழி. முதல் நாள், முதல் வகுப்பில் மாணவர்களிடம் பேசும்போது "கிளாஸில் முதல் அல்லது இரண்டாமிடத்தில் இருக்கும் மாணவன் என் வகுப்பில் எப்பொழுதும் முதலாவதாக வரமுடியாது. ஏனெனில் சும்மா 'உருப்போட்டு'தான் அனைவரும் முதல் அல்லது இரண்டாமிடத்தில் வருகின்றனர். என் வகுப்பில் முதல் மார்க் வாங்குபவன் நிஜமாகவே சூப்பர் புத்திசாலியாக இருப்பான்" என்றார். அத்துடன் இல்லாமல் என்னைச் சீண்டிக்கொண்டே இருந்தார்.

நான் ஒன்று - அவரை மூக்குடைக்க வேண்டும் என்று மிகவும் கஷ்டப்பட்டு, படித்து, அவரது கேள்விகளையும், சீண்டுதல்களையும் எதிர்கொண்டு உழைத்திருக்கலாம். இரண்டு - 'போடா மயிறு' என்று சொல்லிவிட்டு அந்த வகுப்பைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம்.

நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். அதற்குச் சில காரணங்கள். ஏழாவது செமஸ்டர் வரும்போதே GRE (General & Subjects), TOEFL எல்லாம் எழுதியாகி விட்டது. நிறையப் பல்கலைக் கழகங்களுக்கு மனு போட்டாகி விட்டது. ஏழாவது செமஸ்டர் முடியும் முன்னரே University of Illinois, Urbana Champaigne ல் முழு உதவித்தொகையுடன் இடம் கிடைத்து விட்டது. (ஆனால் பின்னர் கார்னலில் இடம் கிடைத்ததும், அதைத் தேர்ந்தெடுத்தேன்.) இனி ஏன் கிடந்து அல்லாட வேண்டும் என்று ஜூட் விட்டு விட்டேன். ஒரு வாரத்தில் இந்த மாமேதை வாத்தியாரின் வகுப்பு நான்கில் ஒன்றுக்கு மட்டும் செல்வேன். என்ன செய்கிறார் என்று மேலோட்டமாகத் தெரிந்து கொள்ள. அந்தப் பாடத்தில் எனக்கு B கிரேட்தான் கிடைத்தது. (S, A, B, C, D, E, F)

அதைத்தவிர வேறெந்த வகுப்பையும் வாழ்நாளில் கட் அடிக்கவில்லை.

லவ் லெட்டர் கொடுப்பது... அந்த அரிய வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் இப்படியெல்லாம் செய்தால் வீட்டில் உதை கிடைக்கும் என்று தெரியும். அதனால் ஒழுங்காக இருந்தேன். ஐஐடி வந்தபோது சரயு ஹாஸ்டலில் இருந்த எட்டு பேரை எண்பது பேர் பின்தொடர்ந்தார்கள். நமக்கு சான்ஸ் கிடையாது. அதன்பிறகு அமெரிக்கா போனதும் நிறைய 'ஜொள்'ளியிருந்தாலும் லெட்டர் கொடுக்கத் தோன்றவில்லை. அந்த அளவுக்கு தைரியம் கிடையாது.

ஒருவகையில் ஃப்ரூட் என்றே வைத்துக்கொள்ளலாம்.

இந்தியாவின் மிகச் சிறந்த entreprenuer என்று யாரைச் சொல்லுவீர்கள்? என்ன காரணத்தால்?

சில பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. ஜெஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா ஒருவர். இவர் அரை இந்தியர்தான். இந்தியாவில் வளரவில்லை, படிக்கவில்லை. ஆனால் டாடா குழுமத்தில் தலைமைப் பொறுப்புக்கு வந்ததும்தான் அந்தக் குழுமம் இந்தியாவின் மிக முக்கியமான தொழில் குழுமமாக மாறியது. இன்றும்கூட professional and honest group என்றால் அது டாடாதான்.

திருபாய் அம்பானி அடுத்தது. Ethics என்றெல்லாம் பார்த்தால் இவர் பெயரை தைரியமாகச் சொல்ல முடியாது. ஆனால் மாபெரும் vision என்றால் அதற்கு இவர்தான் முன்னோடி. ஒரு பின்னணியும் இல்லாது அடியிலிருந்து தன் தொழிற்சாலைகளை உருவாக்கியவர். நிச்சயமாக இவரது வாழ்க்கையும் ஒரு inspirationதான்.

இவர்கள் இருவர் அளவுக்கு இன்னமும் பெரிய பெயர்கள் வரவில்லை. நாராயண மூர்த்திக்கு ரிஸ்க் எடுக்கும் மனோபாவமே இல்லை. அவர் எனக்கு நிறைய ஏமாற்றத்தைத் தருகிறார். மற்றும் பலரிடமும் பல குறைபாடுகள் உள்ளன.

இந்த ஆளெல்லாம் ஏன் எழுதறான் என்று நீங்கள் நினைக்கும் ஒரு ஐந்து எழுத்தாளர்கள் பெயரைக் குறிப்பிடவும்

அப்படியெல்லாம் நான் யாரையும் சொல்லமாட்டேன். பிறர் எழுதுவது பிடிக்கவில்லை என்றால் நான் அதைப் படிக்கமாட்டேன். அவ்வளவே. Political correctness என்று இல்லை. நிஜமாகவே 'நீ எழுதாதே' என்று ஒருவரைப் பார்த்துச் சொல்லி நாம் என்ன சம்பாதிக்கப்போகிறோம் - அவரது வெறுப்பைத் தவிர?

இந்தியா முன்னேற வேண்டுமானால், ஒரு ஐந்து பேரைச் சுட்டுத் தள்ளலாம் என்று உங்களுக்கு அனுமதி தந்தால், யாரை எல்லாம் சுட்டுத் தள்ளுவீர்கள்?

யாரையும் அல்ல. முன்னேற்றத்துக்குத் தடையாக என்று யாரும் இருப்பதில்லை. சிலரது செய்கைகள் அவர்களது நன்மையை முன்வைத்து மட்டுமே உள்ளது. அதனால் நாட்டின் முன்னேற்றம் தடைப்படலாம். அதற்காக சுட்டுக்கொல்ல முடியுமா என்ன?

பீகாரை முன்னேற்றுவதற்கு ( லல்லு பிரசாத் யாதவை , பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்பது போன்ற வழிகள் தவிர்த்து ) , உருப்படியான வழிகள் ஏதாவது மூன்றைச் சொல்லவும்.

பீகாரின் பிரச்னை லாலு மட்டும் இல்லை. சொல்லப்போனால் லாலுவை விடப் பெரிய பிரச்னைகள் உள்ளன. சரியான நிலச்சீர்திருத்தம் பீகாரில் நடைபெறவில்லை. மஃபியா கும்பல்கள் பீகாரை மோசமான நிலைக்குத் தள்ளின. கல்வி குறைவு. வளர்ச்சி குறைவு. அவையெல்லாம் சரிசெய்யப்படக் கூடியவையே.

லாலு கோமாளி போலத் தோன்றினாலும் கோமாளி இல்லை. அவராலும் பல பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு நன்மைகள் ஏற்பட்டுள்ளன.

கூட்டணி அரசாங்கம் அமைக்க லாலுவும் ஒரு காரணம்.லாலுவைக் குறைசொல்வது பல பத்திரிகைகளுக்கு எளிதான விஷயமாகப் போய்விடுகிறது.ஆனால் லாலு ஒரேயடியாகப் பதவியில் இருப்பது பீகாருக்கு ஆபத்து. ஆட்சிகள் தொடர்ந்து மாறவேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு ஓரளவுக்காவது தங்களது சக்தியின் மீது நம்பிக்கை பிறக்கும்.

சந்திரமுகி படம் பார்த்துவிட்டீர்களா?

இல்லை.

உங்கள் சொந்த ஊரான நாகப்பட்டினத்தின், ஒரிஜினல் நெய்மிட்டாய் கடை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

அப்படி ஒரு கடை இருப்பது எனக்குத் தெரியாது. ஜெ.மு.சாமி துணிக்கடை என்று ஒரு கடை இருக்கும். அதற்கு வாசலில் ஒருவர் வீட்டிலிருந்து அல்வா செய்துகொண்டு வந்து விற்பார். உலகிலேயே தலைசிறந்த அல்வா அதுதான். இப்பொழுது என்ன ஆனார், தனது ஃபார்முலாவைப் பிறருக்குச் சொல்லிக்கொடுத்தாரா என்று தெரியாது. அறுசுவை பாபுவிடம்தான் கேட்க வேண்டும்.

ஒரு இருபத்து ஐந்து வயது இளைஞன், கையில் ஐந்து லட்சம் ரூபாய், கொஞ்சம் ஆங்கில அறிவு, டூவீலர் லைசன்ஸ், ஒரு டிகிரி சர்ட்டி·பிகேட் ஆகியவற்றுடன் வந்து, ஒரு தொழில் துவங்க வேண்டும், ஆனால், ஒரே வருஷத்தில், பணம் மூன்று மடங்காகத் திரும்பி வர்வேண்டும் என்று உங்களிடம் ஆலோசனை கேட்டால், அவனுக்கு உருப்படியாக ஏதாவது யோசனை தருவீர்களா அல்லது கீழ்ப்பாக்கம் போகும் பஸ்ஸில் ஏற்றி விடுவீர்களா?

ஒரே வருஷத்தில் பணம் மூன்று மடங்காக என்னிடம் எந்த யோசனையும் இல்லை. கஞ்சா விற்கலாம் என்று நினைக்கிறேன். அதற்காக கீழ்ப்பாக்கம் (அங்கு மனநல மருத்துவமனை ஏதாவது நிஜமாகவே இருக்கிறதா என்ன?) அனுப்பமாட்டேன். முதலில் உனது எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள் என்று யோசனை சொல்வேன். பின் அதற்கு அவர் ஒப்புக்கொண்டால் சில யோசனைகளைத் தெரிவிப்பேன்.

ஸ்ரீதேவி பற்றி உங்களுக்கு என்ன தோணுதோ அதைச் சொல்லுங்கள்.

ஒருமுறை நான் பயணம் செய்த விமானத்தில் ஸ்ரீதேவியும் பயணம் செய்தார். அவர் வீட்டு வேலைக்காரியும் பயணம் செய்தார். ஸ்ரீதேவியின் குழந்தை (கள்?) - ஒருவரா, இருவரா தெரியவில்லை - ஆயாவுடன் எகானமி கிளாசில் இருந்தனர். ஸ்ரீதேவியும், கணவரும் (என்று நினைக்கிறேன்) பிசினஸ் கிளாஸ் பயணம். அப்பொழுது அவர் நடிப்புத் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டார். குறுக்கும் நெடுக்குமாக குழந்தைகள் பிசினஸ் கிளாசுக்கும், ஸ்ரீதேவி எகானமி கிளாசுக்குமாக பயணம் செய்தவண்ணம் இருந்தனர். ஒவ்வொருமுறை என் இருக்கையைத் தாண்டிப்போகும்போதும் அவரிடம் ஏதோ பேசவேண்டும் போல இருந்தது. கடைசிவரையிலும் என்ன பேசுவதென்று தெரியவில்லை. பேசவேயில்லை.

அவர் நடித்த 'மீண்டும் கோகிலா', 'மூன்றாம் பிறை' இரண்டும் (தொலைக்காட்சியில்) பார்த்திருக்கிறேன். பிடித்திருந்தன. பல படங்களைப் பார்த்தது கிடையாது.

உங்கள் முதல் விமானப் பயண அனுபவம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

முதல் விமானப் பயணம் சென்னையிலிருந்து மும்பை சென்றது. (அங்கிருந்து தில்லி, பிராங்பர்ட், நியூ யார்க் - முதல் அமெரிக்கப் பயணம் 1991ல்). இருக்கைப் பட்டியைக் கட்டிக்கொள்ளத் தெரியவில்லை. மும்பை இறங்குவதற்குள் வாந்தியெடுத்துவிட்டேன். Sick bag என்று ஒன்று இருக்கும் என்று தெரியவில்லை. பக்கத்தில் இருப்பவர் நிறைய உதவினார். ஒன்னே முக்கால் மணிநேரப் பயணத்துக்கே இவ்வளவு தடவல், எப்படித்தான் பத்து பதினைந்து மணிநேரங்கள் விமானத்தில் பிழைக்கப் போகிறோம் என்று அழுகையாக வந்தது. அப்பொழுதெல்லாம் எனக்கு பஸ்ஸில் பயணம் செய்தாலே வாந்தி வந்துவிடும். டவுன் பஸ்ஸில் அரை மணிநேரம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது.

ஒன்றரை நாள் கழித்து திண்டாடி திண்டாடி அமெரிக்கா போய்ச்சேர்ந்தேன்.

அதன்பின் சில சமயங்களில் வாரத்துக்கு மூன்று நான்கு முறை என்றெல்லாம் பயணம் செய்திருக்கிறேன். ஒரே வாரத்தில் இரண்டு நாள்கள் லண்டன், அடுத்த ஒரு நாள் சென்னை, அடுத்த இரண்டு நாள்கள் லண்டன், மீண்டும் சென்னை என்றெல்லாம் பயணம் செய்துள்ளேன். ஆனாலும் அவ்வப்போது அந்த முதல் வாந்திப் பயணம் நினைவுக்கு வரும்.

இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் என்ன?
நிறைய. நான் ஒரு புத்தகத்தை எடுத்தால் அதை முழுதாகப் படித்துவிட மாட்டேன். அதற்குள் இன்னொரு புத்தகம் கையில் கிடைத்தால் அதையும் படிக்க எடுத்துவிடுவேன். அப்படியாக இப்பொழுதைக்கு முடிக்கப்படாமல் இருக்கும் சில புத்தகங்கள்:

பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவம்
காக்டெயில் - சுதேசமித்திரன்
The History of Srirangam Temple - Prof.Hari Rao
Jehad - Ahmed Rashid
கோயில் ஒழுகு - ஸ்ரீரங்கம் கோயில் chronicles

அதையும் தவிர பல புத்தகங்கள் பாதிப் படித்த நிலையில் உள்ளன. சிறிது சிறிதாக முடிக்க வேண்டும். தலைமாட்டில் எப்பொழுதுமே சில புத்தகங்கள் இருந்தபடியே இருக்கும்.

--பத்ரி

Comments

//இந்த ஆளெல்லாம் ஏன் எழுதறான் என்று நீங்கள் நினைக்கும் ஒரு ஐந்து எழுத்தாளர்கள் பெயரைக் குறிப்பிடவும்//

பதிலைப் படிக்கறவரைக்கும் எங்கே என் பேரு வந்திருமோ'ன்னு பயமா இருந்தது!
வாங்க தலைவா. நீங்க தான் நட்சத்திரமா. இதே டிரேட்மார்க் நக்கலோட இந்த வாரம் இருக்கணும்.

//பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவம்
காக்டெயில் - சுதேசமித்திரன்

The History of Srirangam Temple - Prof.Hari Rao
Jehad - Ahmed Rashid
கோயில் ஒழுகு - ஸ்ரீரங்கம் கோயில் chronicles//
ஐஞ்சுல நான் ரெண்டு பாஸ். பரவால்லை. கொஞ்சம் பார்டர் பாஸ் மார்க்தான், இருந்தாலும் முன்னேறிடலாம். ;-)

நான் கேட்க நினைத்த கேள்விகள், இதை நீங்களே கேட்டு வார கடைசில போடலாம்.

1. மீசை வைத்திருக்காமல் இருப்பதற்கு காரணமென்ன. நாயகன் கமல் பாதிப்பா ?
2. கிரிக் இன்போ நடத்தியதிலிருந்து கோல் எப்படி போடவேண்டும் என்பது பற்றிய புத்தகமெழுதும் எண்ணமிருக்கிறதா?
3. உங்கள் பதிப்பகத்தில் நீங்கள் எழுதிய புத்தகத்தினை போடாமல் இருப்பீர்களா?
4. சந்திரமுகி பார்க்காமல் சொர்க்கம் போகும் குறுக்கு வழிகள் தெரியுமா?
5. இந்தியாவில் வியாபாரம் செய்ய மூளை வேண்டுமா, சாமர்த்தியம் வேண்டுமா ?
6. இன்றைய இளம் நடிகைகள் பற்றிய உங்கள் கருத்தென்ன ?
7. நண்பர்களிடம் பிரபலமாக இருப்பதால், ஏதேனும் கட்சி ஆரம்பிக்கும் யோசனைகள் இருக்கிறதா ?
8. நீங்கள் இன்னமும் ஏன் தெளிவாக தமிழில் எழுதுகிறீர்கள். சிறுபத்திரிக்கை கலைஞனாகும் எண்ணங்கள் இல்லையா ?

இதுப் போல பிரகாஷ் உங்களுக்கு இணையாக ஒரு 200 கேள்விகளை என்னாலும் கேட்க முடியும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் பொளந்து கட்டுகிறேன்.
அன்பு said…
என்னங்க பிரகாஸ்,
பொய் சொல்லாம சொல்லுங்க, மெய்யாலுமே வேறநிறைய கேள்வி கேட்டிருந்தீங்களா? அல்லது இந்த 13 மட்டும்தானா? பத்ரிட்ட இன்னும் நிறையா கேட்கணும். அதனால், ஒரு மார்க் கேள்வியெல்லாம் எடுத்துட்டு மீண்டும் நெருக்கி பதில் வாங்குங்கோ. அதே மாதிரி, இந்த நாராயணண் & பிரகாஸ் - நெறைய தெரியவேண்டியிருக்கு அண்ணாத்தே...

கலக்கல்வாரம் தொடரட்டும்.
Vijayakumar said…
//இது எப்டி இருக்கு//

சூப்பர் :-)

பத்ரியின் பேட்டி சூப்பர். கலக்குங்க பிராகஸ்
Vijayakumar said…
//சந்திரமுகி படம் பார்த்துவிட்டீர்களா?//

//"இது எப்டி இருக்கு..."//

நல்லவே இல்ல.

ஒழுங்கான கேள்விகளுக்கு இடையில இது என்ன 'அபஸ்வரம்'(?) மாதிரி?
பத்ரியிடம் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்:

1) பதிப்பகம் ஆரம்பிக்கும் போது இவ்வளவு வரவேற்பு பெறும் என்று முன்னமே கணித்தீர்களா? இப்படியரு மார்க்கெட் இருப்பதை எந்த சமயத்தில் உணர்ந்தீர்கள்?

2) கிரிக்கெட்டை தவிர்த்து உங்களுக்கு பிடித்த உருப்படியான விளையாட்டு என்ன? என்ன விளையாட்டு ஆடப்பிடிக்கும்?

3) பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று மூன்றேமுக்கால் வரிக்கு மிகாமல் கூறவும்.

4) ஆ·ப் டிராயர் போட்டுக் கொண்டு பொது விழாக்களில் கலந்து கொள்ளும் மர்மம் என்ன? கலகவாதியாக தோற்றமளிக்க விரும்புகிறீர்களா?

5) 'காடு' நாவல் விமர்சனத்தை எழுதுவதாக சொல்லி ஒரு நூற்றாண்டு முடியப் போகிறதே? என்ன ஆயிற்று?
Welcome to a "DIFFERENT" Super Star :))

intha vAram kalakkalA irukkum enRu ethirpArkkiREn!!!

enathu "pallaviyum saraNamum -24" pArthIngkaLA ? ungkaLukkAga WAITING :-((

enRenRum anbudan
BALA
Kasi Arumugam said…
பிரகாஷ்,

ஆரம்பமே கலக்கல். எப்படி டெம்ப்போவை கொண்டுபோகிறீர்கள் பார்க்கலாம்;-)

//சுமார் ஒரு நூற்றைம்பது கேள்விகள் தயார் செய்து கொண்டு போயிருந்தேன்.// ஆனாலும் இதெல்லாம் அநியாயம்.

பத்ரி நல்ல மூடில் இறுக்கமில்லாமல் பதில் சொல்லியிருப்பது சுவையாக இருக்கிறது.

//ஒருவகையில் ஃப்ரூட் என்றே வைத்துக்கொள்ளலாம்.// :-D

//அதற்காக சுட்டுக்கொல்ல முடியுமா என்ன?// சே, ஒரு வாய்ப்பை வீணாக்கிவிட்டார் பத்ரி!

//உலகிலேயே தலைசிறந்த அல்வா அதுதான். // அ.சி. அண்ணாச்சிங்களா, சரியா?:P

சுவாரசியமான பேட்டிக்கு நன்றி. (யாருக்கு?)
SnackDragon said…
பேட்டி, தெரிந்த சமூகத்துக்குள் வாசிக்க நிறைய சுவையாக உள்ளது.
யாராச்சும் புது ஆளுக பாத்தா கல்லக் கொண்டு எறிவாய்ங்கையா. ஜாக்கிரதை. :-)

பின்னுட்டத்துல கேள்வி கேக்குறதெல்லாம் சட்டப்படி குற்றம் தெரியாதா?
Thangamani said…
நல்ல ஆரம்பம். இந்த வாரம் கலக்குங்க.

பத்ரியின் எல்லா பக்கங்களுக்கும் ஒவ்வொரு கேள்வி என்பது மாதிரி கேட்டிருந்தீர்கள். நல்ல கேள்விகள். நல்ல பதில்கள்.
பின்னூட்டம் அளித்த அனைத்து நண்பர்களுக்கு நன்றி.
//வகுப்புகளுக்கு கட் அடிப்பது - ஐஐடியில் ஒரு வகுப்பில் செய்திருக்கிறேன். ஏழாவது செமஸ்டர் அப்பொழுது.//
தலைவரே, ஐஐடியில இருப்பதே எட்டு செமஸ்டர்தானே? இதுக்கு நீங்க மூச்சைப் பிடிச்சுட்டு பேசாம கட் அடிக்காமலே இருந்திருக்கலாம் ;-)

பிரகாஷ், இதென்ன பேட்டி சீசனா? வரிசையாகப் பேட்டிகள். இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது, நடத்துங்கள்!
Venkat said…
பிரகாஷ், உங்ககிட்ட பத்ரி கேட்ட கேள்வியைப் போடலயா? "யோவ் சும்மா இருக்க மாட்டே?" :)

கலக்குங்க!
பிரகாஷ், பேட்டிக்கு சரியான மனிதரைதான் தேர்வு செய்துள்ளீர்கள். வம்பான கேள்விகளுக்கு சமத்தாக பதில் சொல்லியிருக்கிறார்.

"...... ஒரு மண்ணும் புரியவில்லை. வெகு சீக்கிரத்தில் அனைத்தையும் மறைந்துவிடக்கூடிய அற்புதமான திறமை மனிதனிடத்தில் - அட் லீஸ்ட் என்னிடத்தில் - உள்ளது என்று புரிந்துகொண்டேன்......"

பத்ரி, இதைப் படித்தபோது ரொம்ப சந்தோஷம் எனக்கு. அட உலகில் நம்மளைப்போல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று! :-)

பி.கு: நேற்றிக்கே போட நினைத்து, மறந்துபோய் தூங்கிவிட்டு இன்று போட்டுவிட்ட பின்னூட்டம் :-)
Chandravathanaa said…
This comment has been removed by a blog administrator.
Chandravathanaa said…
//"இது எப்டி இருக்கு..."//
சுவாரஸ்யமாயிருக்கு.

பிரகாஷ்
உங்கள் கேள்விகளும் அதற்குப் பத்ரி அவதானமாகத் தந்த பதில்களும் நன்றாயுள்ளன.
எல்க்ய வாசனை இல்லாம நல்லா இருக்கு இந்தப்பேட்டி. :-)

எங்க வீட்ல இப்போ எல்லாம் ரெண்டு மூணு நாள் கழிச்சுதான் நட்சத்திரம் தெரிகிறது. அதான் இவ்வளவு லேட்டு. :-(

க்ருபா
அண்டார்ட்டிகாவுக்கு வீடு மாத்திட்டீங்களா க்ருபா?!
// "இது எப்டி இருக்கு..."// கலக்கல்னேன்!
>மாயவரத்தான் said...

அண்டார்ட்டிகாவுக்கு வீடு மாத்திட்டீங்களா க்ருபா?!

ம்ஹூம், ஆனா ஆஃபீஸ் அண்டார்ட்டிகால தான் இருக்கு.

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்