I want my money back....

"மிஸ்டர் டைரக்டர், தொடர்ந்து, கத்தி அருவா பிச்சுவா படமா வந்துகிட்டிருக்கு.. ·பேன்ஸ் ரொம்ப ·பீல் பண்றாங்க... குஷி மாதிரி கதை இருந்தா சொல்லுங்க. " என்று விஜய் சொல்லி இருக்க வேண்டும்.

" அதுக்கென்ன விஜய் சார்? குஷி படம் மாதிரி எதுக்கு? குஷி படத்தையே திரும்ப எடுத்துடுவோம். ரசிகனுங்களுக்குப் கண்டுபிடிக்கத் தெரியாது...என்ன தாணு சார், நீங்க என்ன சொல்றீங்க..? என்று டைரக்டர் ஜான் ஒத்து ஊதி இருக்க வேண்டும்

" என்னமோ எடுங்கப்பா.... பூஜை போடற அன்னிக்கே மொத்த ஏரியாவும் வித்துப் போயிடும். எல்லாம் திருப்பாச்சி பண்ற வேலை...படத்தை சீக்கிரமா எடுத்து சுருட்டிக் குடுங்க...அடுத்த படத்துக்கு பூஜை போடணும் " என்று தயாரிப்பாளர் தாணு கரன்சிக் கனவுகளில் மிதந்திருக்க வேண்டும்.

விளைவு... வடபழனி கமலாவிலே மூணு மணிநேரத்துக்கு தொடர் தலைவலி... இந்தப் கழுத்தறுப்புக்குப் பேர் சச்சின்.

கதை?

என்னாத்த பெரிசா கதை?

இவர் அவரை லவ் பண்றார். அவரும் பதிலுக்கு லவ் பண்றார். ஆனால், அதை ஒத்துக்க மாட்டேங்கறார். காரணம். ஈகோ. அவர், உன்னை லவ் பண்ண வைக்கிறேன் என்று சபதம் போடுகிறார். இறுதியில், இவர் தனக்கு நிசமாவே லவ்வு வந்துவிட்டது, என்று உணர்ந்து அதைச் சொல்ல நினைக்கும் போதுதான், அவரது அப்பா, ஒரு பணக்காரர் என்று தெரியவருகிறது. "ஆஹா... நான் பணக்காரன் என்று தெரிந்த உடன் தானே, உனக்கு லவ்வு வந்தது?" என்று தப்பாக நினைக்கப் போகிறார் என்று இவர், சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து விட்ட லவ்வை, டபக்கென்று மறைத்துக் கொள்ளுகிறார். வழக்கம் போல இறுதிக் காட்சியில் இருவரும் ஒன்றாகச் சேர்கிறார்கள். ( இப்ப மட்டும் அவர் தப்பா நினைச்சுக்க மாட்டாரா என்றெல்லாம் கேக்கப்படாது, சொல்லிட்டேன்).

என்ன, கதை புரிஞ்சதா ? இல்லாட்டிப் நேரா படத்தைப் போய் பாத்துக்கங்க...உங்க தலைவிதியை யாரால மாத்த முடியும்?

பள்ளிக்கூடத்திலே ·பெயிலானாலே, டிசி குடுத்து, வேற ஸ்கூலுக்கோ, டுட்டோரியல் காலேஜுக்கோ துரத்தி விடுகிறார்கள். ஆனால் இதிலே காலேஜ் மாணவராக வரும் வடிவேலு, ஒரே வகுப்பில் ஒன்பது வருஷம் பெஞ்சைத் தேய்க்கிறாராம். என்னக் கண்றாவிடா இது? எம்.ஜி. வல்லபன் சொல்லுவார், " இயக்குனராக இருப்பவர்கள் எல்லா விஷயங்களைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால், எக்மோரில் இருந்து பம்பாய்க்கு டிரெயின் ஏறமுடியுமா முடியாதா? , இன்ஸ்பெக்டருக்கு தோள் பட்டையில் எத்தனை ஸ்டார், பிஸ்டலுக்கும், ரிவால்வருக்கும் என்ன வித்தியாசம் என்பது போன்ற அடிப்படை விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் " என்று. சச்சின் இயக்குனர், தன் பக்கத்து வீட்டில் இருக்கும் கல்லூரி மாணவர் யாரையாவது விசாரித்தாலே தெரிந்து கொண்டிருக்கலாம்.

குஷியில் மும்தாசு என்றால், இதிலே பிபாசா பாசு. யார் இவர்? திடீரென்று எங்கிருந்து வருகிறார்? கல்லூரியில் படிக்கிறாரா? அல்லது, ஈரோயினிக்கு அட்வைஸ் செய்ய, ஈரோவே செட்டப் பண்ணி அனுப்பி வைக்கிறாரா? ஒரு மண்ணும் புரியலை...உலகத்திலேயே பத்துப் பணக்காரர்களில் ஒருவரான ரகுவரன் தான் அப்பாவாம். அத்தனை பெரிய ஆள் ஏன், இந்த மாதிரி டொச்சு காலேஜுக்கு புள்ளையை அனுப்பி வைக்கிறார்? அத்தனை விசேசமான கோர்ஸ் ஏதாவது, இந்தக் கல்லூரியில் இருக்கிறதோ? இருந்தால், அதையாச்சும், சொல்லித் தொலைக்கலாமில்லையா?

படத்துலே இருக்கிற ஒரே நல்ல விஷயம், விஜயின் நடிப்புதான். நல்லா நடிக்க வருது இவருக்கு. யாராவது பெரிய டைரக்டரிடம் சிக்கினால், நல்ல படத்துக்கு வாய்ப்பு இருக்கிறது. சில காட்சிகளில்., ஈரோயினி ஜெனிலியாவுக்கும் நடிக்க நல்ல வாய்ப்பு. தேவலையாகச் செய்திருக்கிறார்.

விகடனிலே நாப்பத்துரெண்டு மார்க் போட்டிருக்கானே என்று நம்பி போன என்னை எதால் அடித்தால் தேவலை? பேசாமல், " ராரா... ஸரசகு ராரா.. ன்னு கூப்பிடற ஜோதிகாவை ...த்தனையாவது தடவையா பாத்திருக்கலாம் ( எத்தனையாவதுன்னு சொன்னா கண்ணு படும் ).

இந்தப் படத்தைப் பார்த்த வகையிலே, டிக்கெட்டுக்கு ரூ 35/-, சாரிடான் மாத்திரை ரூ 2/-, வசந்த பவனில் காபி செலவு + டிப்ஸ் ரூ.10/- , ஆட்டோ செலவு ரூ.20/-, மன உளைச்சலுக்கு காம்பென்ஸேஷன் ரூ 53/- ஆக மொத்தம் ரூ 120/- எனக்குத் திரும்ப வேணும்.

மிஸ்டர் தாணு... குடுத்துடுங்க ப்ளீஸ்...

Comments

திரு.பிரகாஷ் அவர்களே, இன்றுதான் முதன்முறையாக உமது பதிவை படிக்கின்றேன், உங்களது எழுத்தில் நல்ல நடை உள்ளது, உங்களது பெரும்பாலான பதிவுகள் திரைப்படத்தை குறித்தே அமைந்துள்ளது, திரைப்படங்களைவிட்டு வெளியில் வந்து வேறு பல நல்ல விடயங்களையும் எழுதுங்களேன், திரைப்படங்களைப்பற்றி எழுத அவர்கள் ரசிகர்கள் உள்ளனர்.
அய்யோ குழலி.... இது என்ன அபாண்டம் :-).... நான் அடிப்படையிலே சினிமா ரசிகன் மட்டுமே...இலக்கிய வஸ்தாதோ , சமூக விமர்சகனோ அல்ல. நான் எழுத வந்தது தற்செயலானது..ஆகவே எனக்குத் தெரிந்த சினிமா பற்றியே எழுதுகிறேன்.
அச்சோ சொல்ல விட்டுப் போனது.... " உங்கள் வெளிப்படையான கருத்துக்கு நன்றி... "
Sri Rangan said…
பிரகாஷ்,திரைப்படம் பற்றி நிறைய எழுதுங்கள்!ஆராக்கியமாக விமர்சியுங்கள்.மாற்றுச்சினிமாவின் அவசியத்தைப்பேசுங்கள்.சினிமாவென்பது தமிழர்களின் வாழ்வாகிப்போச்சு!இது கடல்கடந்து உலகம் பூராகவுமுள்ள தமிழர்களைக் தனது கரங்களுக்குள் கட்டிப்போட்டுள்ள இராட்சத ஊடகம்.இதைத் தவிர்த்துவிட முடியாது.ஆராக்கியமானவற்றைத் தேர்வுசெய்யும் மனநிலையுருவாகவேண்டும் நமக்கு.அதற்கு உங்கள் எழுத்துப் பங்களிக்கட்டும்.
ஹா..ஹ்..ஹா, நல்ல நகைச்சுவை ததும்பும் விமர்சனம்!

சச்சின் பாத்து தலைவலி வரனும்னு தலைவிதியிருக்கறவுங்க எல்லாம் படம் பாத்துட்டு(மத்தவங்க எல்லாம் படம் பாக்கறதுக்கு முன்னாடி) ஒரு முறை உங்க விமர்சனத்தை படிச்சு சிரிச்சா தலைவலி எல்லாம் சரியா போயிடும்.
டாய்லட் போக காசு குடுத்துட்டு உள்ள போனவன்,
திரும்பி வந்து, எனக்கு 'வரல', காச திரும்பக் குடுன்னு கேட்டா...

கருத்து: ஆமாங்க... சினிமாங்கறது டாய்லட் மாதிரி; வந்தாலோ, வர்ர மாதிரி இருந்தாலோ போகலாம்;
வந்தா இருக்கலாம்; வராட்டி, அடுத்தவாட்டி வர்ரப்ப போகலாம். அவ்ளோதான். consumer rights பேசி காச திரும்பக் கேட்டா... ஒரு மாதிரியா இருக்கும்.
ஸ்ரீரங்கன் : பொழுதுபோக்குத் திரைப்படங்கள்/மாற்றுச் சினிமா குறித்த உங்கள் பார்வைக்கும், என் பார்வைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அது இந்தக் குறிப்பிட்ட பதிவு பற்றியதல்ல என்பதால் சொல்லாமல் தவிர்க்கிறேன். பின்னொரு நாளில் விரிவாகப் பேசுவோம். வந்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி.

கோபி : நன்றி

ஞானபீடம் : ஆக, சச்சின் படம் பார்க்கப் போவது கழிப்பறைக்கு போகிற மாதிரி தான் என்று நான் சொல்லாமல் விட்டதை, நீங்கள் எடுத்துக் கொடுத்தது நன்றி :-). தாணு துட்டு கொடுக்க மாட்டார் தான். அதுக்காக கேக்காம விட்டுட முடியுமா? :-)
Mookku Sundar said…
//படத்துலே இருக்கிற ஒரே நல்ல விஷயம், விஜயின் நடிப்புதான். நல்லா நடிக்க வருது இவருக்கு. யாராவது பெரிய டைரக்டரிடம் சிக்கினால், நல்ல படத்துக்கு வாய்ப்பு இருக்கிறது.//

அது வந்து...இதுமாதிரி அப்பப்ப ஏதாவது ஒரு படத்துல நடிச்சுப்பாத்தாதானே, ஒரு ஏழெட்டு மசாலா படத்தில் நடிச்சு கல்லா வை ரொப்பிக்கலாம். நாளைக்கு யாராச்சும் கேட்டா " எங்காளுக்கா நடிக்கத் தெரியாது. ஆனா ஜனங்களுக்குப் பிடிச்ச மாதிரி படம் பண்ணனும்னு, மசாலா பண்ரார்ரு. நடிப்பில அவர் பெரிய கீரியாக்கும்" னு உதார் விடலாம். :-) :-)

அச்ச்ச்சோ ..தப்பான ஸைட்ல Rubப்பிட்டனோ..?? :-(
ilavanji said…
நம்ம பொலம்பலு இங்க!

http://ilavanji.blogspot.com/2005/05/blog-post.html
அப்பா பிரகாசு, உன்னோட பதிவ லேட்டா பாத்துட்டேன். ஒரு மூணு டாலர (NZ$3) பாதிக்கப்பட்டவர்கள் லிஸ்ட்ல் சேர்த்து எழுதி தாணுட்ட குடுத்துரு.

ஆமா நீ இன்னா விஜய் ரசிகரோ? எந்த பிரெம்ல நடிச்சிருக்கார்? ஒரு வேளை அங்கே கலாவில் தனி பிட்டு போட்டானோ என்னமோ?
ஜான பாத்தீன்னா பேசாம 2 வருஷம் அப்பாவோட படத்துக்கு க்ளாப் அடிக்க சொல்லிரு. மவனே படமெல்லாம் இன்னமே வேண்டாம்

சுரேஷ்
சூப்பர் ஸ்டாரையும் எங்கள் தங்கத் தலைவியையும் மறந்து கண்டவர் படத்தைப் பார்க்கப் போனால் இப்படித் தான் ஆகும். நான் இந்தப் படத்தைப் பார்த்தேன், ஆனா விமர்சனம் எழுதலை. அது தான் இந்தப் படத்தைப் பத்தி என்னோட விமர்சனம்.
Prakash,
nalla nakaissuvaiyaana pathivu ! After reading this, I am not planning to see the movie ;-))


en intha pathivukkum oru VISIT atissurungka !

http://balaji_ammu.blogspot.com/2005/05/no1.html#comments
பாலாஜி, படித்துக் கொண்டு வருகிறேன். பின்னூட்டம் தர பயமாக இருக்கிறது. :-)

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I