Happy Birthday Sir...

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு இணையத்தளத்துக்காக எழுதிய கட்டுரையை ( எந்தவிதத் திருத்தமும் இல்லாமல் அப்படியே) இங்கே மீள் பிரசுரம் செய்கிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் , சுஜாதா சார்...அன்புடன்
பிரகாஷ்

****************************

சிகரம் தொட்ட....

ஒரு எழுத்தாளன் பற்றிய ஒரு வாழ்க்கை சித்திரம் என்றால், அவர் இன்னாருக்கும் இன்னாருக்கும் மகனாக பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார், எழுதினார் என்ற ஒரு சம்பிரதாயத்தை ஒட்டித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? அவர் பிறந்த வருஷம், எழுதிய வருஷம், விருது பெற்ற தேதி என்ற மொண்ணை எண்களை முன்னிலைப்படுத்துவது, ஒரு தேவையற்ற செயல்.

மேலும், அவர் முதல் முதலாக பார்த்த ஏர்போர்ட் கிரவுண்ட் இஞ்சினியர் வேலை, பின்னர் யுபிஎஸ்சி பாஸ் பண்ணி பாரத் எலக்ட்ரானிக்ஸில் விஞ்ஞானியாக சேர்ந்து பெரிய பதவியில் ரிடையர் ஆனது, பல முக்கியமான மின்னணு சாதனங்களில் அவரது பங்கு, போன்ற தகவல்கள் அவரது படைப்புலகம் பற்றிய கட்டுரைக்கு எவ்வளவு தூரம் வலு சேர்க்கும் என்று தெரியவில்லை.

ஒன்று வேணுமானால் சொல்லலாம்.

சம்பாதனைக்கு பங்கம் ஏதும் இல்லாத கவர்மெண்ட் வேலையால், அவருக்கு எழுதி சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. இன்றளவுக்கும், நீர்த்துப் போகாமல் இருக்கும் அவரது தரத்துக்கு அது ஒரு காரனமாக இருக்கலாம்.

சுஜாதா என்ற எழுத்தாளரை பற்றி ஒரு பாராவில் எழுதவும் என்று யாராவது சொன்னால் என்ன எழுதமுடியும்? முயன்று பார்ப்போமா?

ஒரு ஐயங்கார் குடும்பத்திலே மூன்று பேருக்கு நடுவிலே பிறந்த எஸ். ரங்கராஜன், படித்தது இயற்பியல், பின்ன்னர் பொறியியல். வாழ்க்கையை துவக்கியது மின்னணு பொறியாளராக. தடம் புரண்டது, மின்னணு பொறியியலின் செல்லப்பிள்ளையான கணிப்பொறியியலுக்கு. ரிட்டையர் ஆனது, ஒரு பொதுத்துறையின் பொது மேலாளராக, டில்லி வாசத்தின் போது, ஒரு நண்பனின் கதையை திருத்தி, அது பிரசுரமாகி, தனக்கும் எழுத வ்ரும் என்று தெரிந்தது, அவர் நண்பர் கஸ்தூரிரங்கன் மூலமாக கணையாழி கடைசிப் பக்கத்தில் எழுதத் துவங்கி, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுகதைகள் பிரசுரமாக.. எழுத்தாளர் ஆயாச்சு.. பிறகு தொடர்கதைகள், நாவல், கவிதை என்று கோலாச்சிய எழுபது எண்பதுகளில், அவரளவுக்கு எழுத்து பிரபலம் யாரும் இருக்க முடியாது என்றே நினைக்க வைத்தார். ஒரு காலகட்டத்தில், ஒரே நேரத்தில், ஏழு வார இதழ்களில் தொடர்கதை எழுதினார். ( இவ்வளவு அதிகமாக எழுதக் கூடாது என்று சிலர் முணுமுணுப்பார்கள். சுஜாதா மொழியிலேயே சொல்வதானால், அவர்களை பசித்த புலி தின்னட்டும் ). நாவல் சிறுகதைகள் என்பதில்ருந்து , நாடக, சினிமாவுக்கு வந்து, பத்திரிக்கை ஆசிரியராக மாறி, திரைப்படம் எடுத்து, அம்பலத்திலே ஈசி சேர் போட்டு அமர்ந்திருக்கும் சுஜாதாவின் வாழ்க்கையில் ஒரு பிரதான செய்தி மூன்று இருக்கிறது.

அதுதான் உழைப்பு, உழைப்பு மேலும் உழைப்பு.

தனிப்பட்ட முறையில் சுஜாதா என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரங்கராஜனை பற்றி நமக்கு அதிகம் தெரியாது என்றாலும், எழுத்தாளர் சுஜாதா, ஒரு முழுமையான எழுத்தாள வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

அவருக்கு எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியிருக்கும்.?
அவரே சொல்கிறார்.

பிற்காலத்தில் பிரபலமான சங்கீத வித்துவான்கள் மறக்காமல் ஒரு செய்தி சொல்லுவார்கள். அதாவது, தாய் வயிற்றில் சிசுவாக இருந்த போதே சங்கீத ஞானம் இருந்தது என்றும், குழந்தையாக இருந்து அழும் போது கூட ராகம் போட்டு சுதி விலகாமல் அழும் என்றும் சொல்வார்கள். சுஜாதாவுக்கும் அப்படியா என்று அவரை விசாரித்தால், தன்னுடைய பாரம்பரியத்திலே எழுத்தாளர்களே கிடையாது என்றும் எழுத வந்தது தற்செயலானது என்றும் சொல்கிறார். தன்னுடைய கல்லூரி யில், ஆங்கில வகுப்பு எடுத்த ஜோசப் சின்னப்பா என்கிர ஆசிரியர் கதைகளை விவரித்து பாடம் சொன்ன விதம் தான், ·பிக்ஷன் பக்கம் தன்னை ஈடுபடுத்தியது என்றும் சொல்கிறார்.
சின்ன வயதில் நடந்த நிகழ்ச்சிகளை , ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்ற தொகுப்பிலே கதைகளாகவும் கட்டுரைகளாகவும் குறிப்பிட்டு இருப்பார். அரை குறை ஆட்டோபயாக்ர·பி போல இருந்தாலும், மிகவும் சுவாரசியமாக இருக்கும். அவரது ஆரம்ப கால எழுத்து முயற்சிகளை கட்டுரையாக வடித்திருப்பார்.
எழுதத் துவங்கிய அறுபதுகள் தொடங்கி இன்றளவுக்கும் பிரபலமாக, பலரும் படிக்கத் தூண்டும் வகையில் அவரது படைப்புகள் இருப்பது எப்படி என்று யோசித்துப் பார்த்தால், அதற்கு முதல் காரணமாக அவரது நடையைத்தான் சொல்ல வேண்டும்.

அதாவது எழுத்து நடை.

எளிமையாகவும், அதே சமயம், அர்த்தம் பொதிந்தும் இருக்கும் அவரது நடை பரவலாக பெயர் பெற்றது. பலருக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது. எளிமையாக எழுதுவது என்பது மிகவும் முக்கியம் என்பதை அவர் மிகவும் நம்பினார். " அடித்தொண்டையில், இருந்து உமிழ்நீரை சேகரித்து, நாக்கின் மூலமாக அதை வெளியேற்றினான்" என்ற நீண்ட வாக்கியத்துக்துக்கு பதிலாக, ' துப்பினான் ' என்று எழுதலாமே என்று அவர் சொல்வது ஒத்துக் கொள்ளக்கூடியது மாதிரிதான் இருக்கிறது. அவரது நடையின் மற்றொரு சிறப்பு சொற்சிக்கனம். " அவன் அங்கே போனான் " என்று எழுதுவதற்கு பதிலாக. " போனான் " என்று சொன்னால், அதிலே அவனும் , அங்கேயும் மறைந்திருக்கிறது என்று சொல்வதையும், சொற்சிக்கனத்துக்கு உதாரணமாக சொல்லலாம்.

இது போன்ற நடை எழுத்துக்கு ஒரு வேகத்தை கொடுக்கிறது. நவீன பாணி எழுத்தின் துவக்கம் இது என்றே சொல்லலாம்.

வாசகனை ஈர்ப்பதற்காக அவர் செய்த கிம்மிக்குகள் பல.
ஒரு பெயர் சொல்லை வினைச்சொல்லாக உபயோகப்படுத்துவது என்பதையும் அவர் தான் முதலில் செய்தர். புன்னகை செய்தான் என்று எழுத வேண்டிய இடத்தில், புன்னகைத்தான் என்று எழுதி, மரபு காப்பளர்களை கோபப்படுத்தினாலும், அந்த வகையான கிம்மிக்குகள், அவருக்கென்று ஒரு தனியான வாசகர் வட்டத்தை தந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
சுஜாதாவுக்கு பல முகங்கள்.

எழுத்தாளர், கவிஞர்,. நாடக ஆசிரியர், கட்டுரையாளர், அறிவியலாளர், தமிழ் மொழி ஆர்வலர், பத்திரிக்கையாளர், தமிழ் இணையத்தின் முன்னோடிகளில் ஒருவர், என்று பல முகங்கள். இவற்றுடன் முக்கியமான ஒன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மனித நேயம் மிக்கவர்.

இதற்கு உதாரணமாக அவரது பல படைப்புகளை காட்டலாம். மாநகருக்கு வந்து லோல்படும் ஒரு கிராமத்துக்க்காரியின் கதையாக இருக்கட்டும் ( நகரம் ), கற்பழிந்த ஒரு புது மனைவியின் கதையை, மூன்றாவது கோணத்தில் இருந்து படம் பிடுத்த நாவலாக இருக்கட்டும் ( இருள் வரும் நேரம் ), சிக்னலில் பிச்சை எடுக்கும் சிறுவனுக்கு போட சில்லறை இல்லாமல் போகும் கவிதையாக இருக்கட்டும் ( உடல் கவிதை ), அவரது மனித நேயம் வெளிப்படும் பாங்கு அலாதியானது.

கற்பனைகள் வானத்தில் இருந்து முகிழ்ப்பதில்லை. மோட்டுவளையை பார்த்துக்கொண்டும், மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தாலும், ஒரு கதை உருவாவதில்லை. தான் பார்க்கும் மனிதர்கள், கடந்த நிகழ்ச்சிகள், அவற்றில் இருக்கும் முரண்பாடுகள், அதில் வெளிப்படும் உணர்ச்சிகள் தான் ஒரு கவிதையையோ அல்லது சிறுகதையையோ வெளிக் கொணர்கிறது.

என்றால், சுஜாதாவுக்கு மனிதர்களை பற்றிய அக்கறை இருந்திருக்கிறது.
விபத்தில் அடிபடும் ஒருவனுக்கு உதவி செய்ய முன்வராமல் போனதை நினைத்து குற்ற உணர்ச்சியை, அந்த விபத்தின் ரத்ததில் தோய்ந்த அரிசியை பொறுக்கும் சிறுவனை மையமாக வைத்து சிறுகதையாக புனைந்து விடுகிறார்.
ஒரு எழுத்தாளன் சமூகத்தை எந்த அளவுக்கு மாற்ற முடியும் என்று அவரிடம் கேட்டார்கள்.

" ஒரு எழுத்தாளன், ஒரு சமூகத்தில் நேரடியாக எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வந்து விட முடியாது. என் எழுத்தை படிக்கிறவர்கள், , பின்னாளில் தாங்கள் ஒரு டெசிஷன் மேக்கராக ஆகும் சமயத்திலே, நான் சொன்னதை நினைவில் வைத்திருந்து. அதை உபயோகப் படுத்தினால், என் எழுத்து அங்கே வெற்றி பெறுகிறது " என்று சொல்கிறார்.

இது தானே யதார்த்தம்.

தன்னுடைய படைப்பிலக்கியத்துக்கும், கட்டுரைகளுக்கும் அணுகுமுறை என்ன விதமான வேறுபாடு வேண்டும் என்பதிலே அவர் தெளிவாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சிறுகதைகளிலும், கவிதைகளிலும், அவர் பல முறை மரபுகளை மீறினார் என்றாலும், கட்டுரை எழுதும் போது, மரபுகளை அனுசரித்து எழுதினார். கட்டுரை என்பது, செய்தியை சுவாரசியமாக தரவேண்டும், ஆனால், உண்மையில் இருந்து பிறழக்கூடாது என்பதிலே அவர் கவனமாக இருந்தார். அறிவியலுக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு பாரா நார்மல் விஷயத்தையும் அவர் ஏற்பதில்லை.
தமிழும், அறிவியலும் சேர்வது ஒரு அபூர்வமாக நடக்கும் விஷயம். தமிழர்களுக்கு அறிவியலை பற்றி எளிமையாக சொல்லலாம். அதே நேரம், அறிவியலாளர்களுக்கு தமிழைப் பற்றியும் சொல்லலாம். இதை அவர் மிக நேர்த்தியாக செய்தார்.

அறிவியலை தமிழில் சொல்வது என்பது ஒரு கலை. தமிழிலும் தேர்ச்சி பெற்ற முனைவர் ஆனந்த கிருஷ்ணன் போன்றவர்கள் இருந்தாலும், வெகு சன ஊடகத்தில் அறிவியலை பரப்பியதில் சுஜாதாவுக்கு பெரிய பங்கு இருக்கிறது.
அறிவியல் பதங்களுக்கு இணையான தமிழ் சொற்களை தன் கட்டுரையில் புகுத்துவதையும் அறிவியல் பூர்வமாக , ஸ்ட்ராடஜிகலாக செய்தார்.
" நான் ஒரு சொல்லுக்கு தமிழ் வார்த்தையை என் படைப்பிலே புகுத்துவதற்கு ஒரு விதிமுறையை கையாள்கிறேன். அதாவது, வெப்பேஜ் என்பதை இணையத்தளம் என்று எழுத வேண்டுமானால், முதலில் எழுதும் போது, webpage ( இணையத்தளம் ) என்று குறிப்பிடுவேன். அடுத்து வரும் இடங்களில், அந்த பிரக்கெட் இடம் மாறும். அதாவது அடுத்த இடத்தில் , இணையத்தளம் (webpage). என்று எழுதுவேன்., நாளாவட்டத்தில், அந்த ஆங்கில சொல்லை எழுதுவதை தவிர்த்து விட்டாலும், இணையத்தளம் என்ற உடனே, நான் வெப் பேஜை குறிக்கிறேன் என்று புரிந்து கொள்வார்கள் " என்று அவர் சொல்கிறார்.

இன்றைக்கு, வெகு சன இதழ்களில், புழங்கும் பல அறிவியல் தமிழ்ச்சொற்கள், இது மாதிரி, ந்மக்கு தெரியாமலே நம் மூளைக்குள் புகுத்தப் பட்டவைதான்.
மின்னணு பொறியியல், கணிப்பொறியியல் வல்லுனராக இருந்தாலும், அவரை பொத்தாம் பொதுவாக அறிவியல் எழுத்தாளர் என்று குறிப்பிடுவதிலே ஒரு நியாயம் இருக்கிறது. அவர் தன் துறை மட்டுமல்லாது, உயிரியல் , பூகோளம், உயிர்தொழிநுட்பவியல், பௌதிகம், கணிதம் போன்ற பல துறைகளை பற்றியும் கட்டுரைகளை படைத்துள்ளார்.

இந்த உலகம் தோன்றியது எப்படி என்று ஆராய்ச்சி நோக்கில், விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் ஒப்பிட்டு அவர் ஞானபூமியில் எழுதிய கட்டுரைத் தொடரும், தினமணி கதிரில் எழுதிய சிலிகான் சில்லு புரட்சியும், சமீபத்தில் இணையத்தை பற்றி எழுதிய வீட்டிற்குள் ஒரு உலகம் என்ற கட்டுரை நூலும், அவர் மிகச்சிறந்த அறிவியல் தமிழாளர் என்பதை நிரூபணம் செய்தன.

அறிவியலை மக்கள் தொடர்பு சாதனங்களில் பிரபலப்படுத்தியதற்காக அவர் பெற்ற மத்திய அரசு விருதுதான் இதற்கு சான்று. மத்திய அரசு நிறுவனமான என்.சி.எஸ்.டி அந்த விருதினை வழங்கியது.

எனக்கு தெரிந்து அறிவியல் ஆசாமிகள் பொதுவாக சீரியஸ் டைப் ஆசாமியாக இருப்பார்கள். சுஜாதா அவர்கள், சீரியஸ் ஆசாமியா என்பது தெரியாது. ஆனால், அவரது எழுத்தை ஆழமாக படித்தவர்கள், அவர் நகைச்சுவை உணர்வுள்ளவர் என்பதை ஒத்துக் கொள்வார்கள்.

அவரது, எழுத்தில், வெள்ளமென பொங்கி வரும் நகைச்சுவை, ரொம்ப அபூர்வமாக காணக்கிடைப்பது. வினாடிக்கு ஒரு ஜோக்கு அடித்து எழுதும் நகைச்சுவை எழுத்தாளர்கள் ஒரு வகை என்றால், மிக கனமான விஷயத்தையும், லேசாக நகைச்சுவை பூசி, படிக்கும் வண்ணம் கொடுக்கும் அவரது ஸ்டைலுக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில், சஸ்பென்ஸ், க்ரைம் கதைகளை எழுதி வந்த போது, குறிப்பிட்ட கதாபாத்திரங்களை எடெர்னலாக படைக்கும் ஆங்கில பாணியில், சுஜாதாவும், கணேஷ், வசந்த என்ற இரு பாத்திரங்களை வைத்து கதைகள் எழுதினார். இந்த பாத்திரங்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல்களில், அபரிமிதமான நகைச்சுவை தென்படும். புத்திசாலித்தனமான காமெடி செய்யும் இந்த வசந்த் என்ற பாத்திரதுக்கு என்றே பல ரசிகர்கள் இருந்தார்கள்.
ஒரு முறை , வசந்துக்கு கல்யாணம் என்று ஒரு கதையை முடித்த போது, பல ரசிகைகள், கல்யாணத்தை நிறுத்து என்று தந்தி மேல் தந்தி கொடுத்தார்களாம்.
சுஜாதாவின் சாதுரியம் வெளிப்படுவது இங்கேதான். தன்னுடைய ஆளுமையை ஏற்றிச்சொல்ல அவர் பயன்படுத்திய பல கதாபாத்திரங்கள் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். " இது எப்படி எனக்கு தெரியாமபோச்சு " என்று வியப்பை ஏற்படுத்தும்.

அவரது புத்தக உரு பெற்ற நாவல்கள் அனைத்தும் வெகு சன பத்திரிக்கைகளில் தொடராக வந்தவை. இது மாதிரி தொடராக வந்த அவரது நாவல்கள், வார இதழின் அவசரங்களுக்கும், இதழ் ஆசிரியர்களுன் விருப்பு வெறுப்புகளுக்கும் உட்பட்டு வந்தவை. என்பதால், சில ச்மயம் இவை ஒரே மாதிரி எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டையும் கிளப்பின. கூடவே சுஜாதாவின் நவீன பாணி கதைகள், பல ஆங்கில கதைகளில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட்வை என்ற குற்றச்சாட்டையும் கிளப்பின
ஹர்ஷத் மேத்தாவின் திருவிளையாடல்களை ஒட்டி எழுதிய அனிதாவின் காதல்கள், மண்டைக்காடு கலவரத்தை ஒட்டி எழுதிய மண்மகன், ·ப்யூச்சரிஸ்டிக் பாணியில் வந்த என் இனிய இயந்திரா, சினிமா உலகினை படம் பிடித்து காட்டிய கனவு தொழிற்சாலை, தொழிற்சாலை விபத்தில் இறந்து போகும் ஒருவனைப் பற்றிய குருபிரசாதின் கடைசி தினம், கிரிக்கெட்டை மையமாக வைத்து எழுதிய நிலாநிழல், நகரில் நடக்கு நான்கு குற்றங்களை மையமாக வைத்து வந்த வஸந்தகால குற்றங்கள், ஆடிட்டரி ஹலூசினேஷன் பற்றிய ' ஆ', ரோபோட்டிக்ஸ் பற்றிய 'பேசும் பொம்மைகள்', நண்பனின் தங்கையை கற்பழித்தவனை பழிவாங்கும் நைலான் கயிறு, கிராமத்தில் நடக்கும் 'சின்னக்குயிலி', ஒரு சின்னஞ்சிறு கருவில் இருந்து, ஒரு பெண்குழந்தையை, அதன் வாழ்நாள் முழுக்க பின்னே தொடர்ந்து எழுதிய எப்போதும் பெண், ஒரு கொலை, அதை செய்ததாக நான்கு பேரை மாற்ற்றி மாற்றி காட்டி விட்டு, கடைசியில் அதை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கும் ' ஒரு நடுப்பகல் மரணம்,. ஹாஸ்டலின் நினைவுகள் பற்றிய " ஹாஸ்டல் தினங்கள், அழகான மனைவியை சினிமாவுக்கு தாரை வார்த்து விட்டு , அவளுக்கு கூஜாவாக மாறும், " ஏறக்குறைய சொர்க்கம்" , சின்ன பெண் கற்பழிக்கப்படும். " வாய்மையே சில சமயம் வெல்லும்". குட்டிப் பெண்ணின் , பூக்குட்டி, ·ப்ளைட் ஹைஜாக் பற்றிய, வானமெனும் வீதியிலே, பாகிஸ்தான் போரில் மாட்டி கொள்ளும், இந்திய படை வீரனைபற்றிய பதினாலு நாட்கள், இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் பற்றிய " 24 ரூபாய் தீவு" அத்லெடிக் பெண்பற்றிய " பத்து செகண்ட் முத்தம் "போன்ற அவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.

அவர் குமுதத்தில், துவக்கிய கருப்பு-வெளுப்பு-சிவப்பு என்ற தொடர் கிளப்பிய சர்ச்சை பிரசித்தம் பெற்றது. பலமான அஸ்திவாரம் கொண்ட குமுதம் குழுமத்தையே பின் வாங்கச் செய்தது. பின்னால், அந்த கதையை லேசாக மாற்றி, ரத்தம் ஒரே நிறம் என்ற நாவலை எழுதி முடித்தார் என்பது தனிக்கதை.
தொடர்கதைகளில் அவருக்கு நிர்ப்பந்தங்கள் இருந்தாலும், சிறுகதைகளில் அவர் ஜொலித்தார் என்று தான் சொல்லவேண்டும். மத்தியம வர்க்கத்தை அவரளவுக்கு இலக்கியப் பதிவு செய்தவர்கள் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
மத்யமர் என்பது ஒரு வகுப்பு அல்ல. அது ஒரு மனப்பாங்கு. இந்த மனப்பாங்கு உடையவர்கள், சில சமயம் அசாதாரணமான காரியங்களை மிகவும் சுவாதீனமாக செய்துவிடுவர். இந்த மெண்டாலிடியை படம் பிடித்த அவரது மத்யமர் என்ற சிறுகதை தொகுப்பு, அதற்கு சீக்வலாக வந்த மீண்டும் மத்யமர் தொகுப்பும் பல நல்ல சிறுகதைகளை உள்ளடக்கி இருந்தது.

நகரத்து பின்னணியில் இருக்கும் ஒரு நடுத்தர தம்பதி வீட்டில், திருட முயற்சித்து, சற்றும் எதிர்பாராத விதத்தில் அந்த மனைவி திருடர்களை தாக்கும் கதையும், ஒரு வகுளாபரணத்தையும் தோடியையும், ஒரு பத்து பேருக்காக பாடிக்காட்ட , டிசம்பர் சீஸனுக்கு , பத்தாயிரம் மைல் தொலைவில் இருந்து வரும், பாடகி ஆக முயன்று தோற்றுப் போன ஒரு அவுஸ் ஒய்·பும் இந்த மிடில்கிளாஸ¤க்கு ஒரு பிரதிநிதியாக செயல் படுகிறார்கள் தான் என்று சொல்லவேண்டும்.
கடையில் திருப்பம் வைத்து முடியும் ஓ ஹென்றித் தனமான கதைகளையும் அவர் தூண்டில் என்ற பெயரில் எழுதினார். தூண்டில் கதைகள் வாசகர்களிடையே அதிகமாக வாசிப்பு பெற்றவை.

சிறுகதைகள், அவரை, இது நாள்வரை தெரிந்த சுஜாதாவில் இருந்து வேறு படுத்திக் காட்டியது. வெளிநாட்டுக்கு தத்துப் போகும் இந்திய குழந்தை பற்றிய " பாரீஸில் ஒரு தமிழ் பெண்", இளமைக்கால நினைவுகளுக்காக, தன் பழைய வீட்டை வாங்கவேண்டும் என்று ஐஏஎஸ் கணவனிடம் மல்லுக்கு நிற்கும் ஒரு பெண்ணை பற்றிய " வீடு", தன் பண அந்தஸ்தினால் வரும் ஏற்ற தாழ்வுகளை சொல்லும் சில வித்யாசங்கள், அறிவியல் சிறுகதைகளான திமலா, மஞ்சள் ரத்தம், லஞ்சம் கொடுத்து பஜனை மடம் கட்டும் நிலம், மற்ற தொகுதிகளில் இருக்கும் அவரது பல்வேறு கதைகள் குறிப்பிடத்தகுந்தவை.

சரித்திரக்கதைகள் பற்றி அவருக்கு ஒரு மெலிதான எள்ளல் இருந்தது போலத் தோன்றுகிறது. மாறவர்மன், ராஜராஜ சோழன், கட்டாரி, என்றெல்லாம் கதை எழுதுவதிலே அவருக்கு தயக்கம் இருந்திருக்க வேண்டும். ரத்தம் ஒரே நிறம் என்ற நாவலை சரித்திரக்கதை என்று சொல்லி விட முடியாது. சிப்பாய் கலகத்தை பின்னணியாக கொண்டு புனையப்பட்ட அந்த நாவலில், அவர் சரித்திரக்கதைக்கு உண்டான எந்த விதமான இலக்கணத்தையும் ஒட்டி எழுதவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பாத்திரங்கள் சுத்த தமிழில் பேசவில்லை. அந்தப்புரங்களும், சதி திட்டங்களும், குறுவாளும், போர்களும் இல்லாமல், வந்த நாவல் அது. ஒரு நிஜமான சூழலில் , கற்பனை பாத்திரங்களை உலவ விட்டால் எவ்வாறு இருக்கும் என்ற சிந்தனையிலே உருவான கதை அது.

அவரை , ஏன் நிறைய சரித்திரக்கதை எழுத மாட்டேன் என்கிறீர்கள் . உங்களுக்கு தெரியாதா " என்று அடிக்கடி அவரை உசுப்பேற்றியிருக்க வேண்டும் என்று நினைக்கிறே,

சரித்திரம் தானே வேண்டும்,? இந்தா பிடியுங்கள் என்று எழுதினார்.

அதுதான் காந்தளூர் வசந்த குமாரன் கதை.

நமக்கு மிகவும் பரிச்சயமான கணேஷ¤ம், வசந்தும், கணேச பட்டராகவும், வசந்த குமாரனாகவும் கதையில் வலம் வந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார்கள். ரத்தம் ஒரே நிறம் எழுதிய பத்தாண்டுகள் கழிந்த பின் வந்த இந்த சரித்திரக்கதையில், இருந்த கேலியை மிகச் சிலரே புரிந்து கொண்டிருப்பார்கள். தனித்த குணாதிசயமுடைய இரண்டு வக்கீல் பாத்திரங்களுக்கு, சரித்திர முலாம் பூசி, spoof போல அல்லாமல் சீரியசாக கதை கொடுக்க முடிந்த அவரது திறமை தான் முதலில் பளிச்சிடுகிறது. கிண்டலெல்லாம் பிறகுதான்.

இயக்குனர் மணிரத்னத்திடம் ஒரு முறை கேட்டார்கள். " என்னங்க.. படத்திலே க்ரூப் டான்ஸே இல்லீங்களே.. ". அதற்கு, " க்ரூப் டான்ஸ்தானே.. இந்தா பிடி," என்று கிழவிகளை ஆடவைத்து பாட்டு எடுத்து படம் முடித்தார். படம் ரோஜா. சுஜாதாதான் அதற்கு வசனகர்த்தா என்பது தனிக்கதை.

வசந்தகுமாரன் கதைக்கும் , ரோஜா படத்துக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல தோன்றவில்லை.?

சுஜாதாவுக்கு சினிமா தொடர்பெல்லாம் பிறகுதான்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவர் நாடக உலகில் வெற்றிக் கொடி நாட்டி இருந்தார்.

அவருடைய முதல் நாடகம், முதல் நாடகம்.

ஆமாம். நாடகத்தின் பெயரே முதல் நாடகம் தான்.

நாடகம் போட பணம் தரமாட்டேன் என்று வம்பு செய்யும் அப்பாவுக்காக, ஒரு நிஜமான கொலைநாடகத்தை அரங்கேற்றி, அவரிடம் இருந்து பணம் பறிக்கும் ஒரு மகனை பற்றிய நாடகம். நகைச்சுவை வழிந்தோடும் இந்த நாடகத்தை பூர்ணம் விஸ்வநாதன் அரங்கேற்றினார். அந்த காலகட்டதில் இருந்த நாடகங்களுக்கு முற்றிலும் மாறாக, வித்தியாசமான நாடகங்களாக அமைந்தன இவை. டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, சரளா, கடவுள் வந்திருந்தார், சிங்கமையங்கார் பேரன், அடிமைகள் போன்ற நாடகங்கள் அப்போது பெரும் பரபரப்பை கிளப்பின. நாடக் இலக்கணத்தை மிகச் சரியாக அவர் புரிந்து வைத்திருந்தார். புரிந்து வைத்திருந்த காரணத்தினாலே, சில மரபுகளையும் மீறினார். அதனால், ஒரு தனித்த கவனத்தை பெற்றார்.

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு என்ற நாடகம். ஒரு அசம்பிரதயாமான முயற்சி. நரேந்திரன் என்ற டாக்டர் மேல் மூன்று வழக்குகள் வரும். அந்த மூன்று கேஸ்களையும் பிளாஷ்பேக்காக காட்டும் போது, போகஸ் லைட்டிங் மூலமாக மேடையையே மூன்றாக பிரித்து. ஒவ்வொரு கதையும் தனியாக நிகழும். நாடகம் பார்க்க வந்திருப்பவர்களிடமே பேசுவதாகவும் ஒரு காட்சி அமைப்பு உண்டு. இந்த புதுமையான முயற்சிகளுக்கு எல்லாம் உறுதுணையாக இருந்தவர் என்றால் அது பூர்ணம் விசுவநாதன் தான்.

நாடகத்திலே, அவருக்கு எழுதுவது மட்டும் தான் வேலை என்றாலும், சினிமாவில் இன்னமும் அதிகமாக ஈடுபாடு காட்டினார் என்று தான் சொல்லவேண்டும்.
அவர் சினிமாவுக்கு வந்தது நேரடியாக அல்ல.

முதலில் அவரது கதைகளை சினிமாவுக்கு தழுவ ஆரம்பித்தார்கள். சிலது அனுமதி வாங்கி. சிலது அனுமதி வாங்காமல்.

அனிதா இளம் மனைவி என்ற நாவல், இது எப்படி இருக்கு என்ற பெயரிலும், ப்ரியாவும் காயத்ரியும் அதே பெயரிலும், ஜன்னல் கைதி என்ற குறுநாவல் பெண்ணுக்கு யார் காவல் என்ற பெயரிலும் இன்னும் சில படங்களும் வந்தன. அனுமதி வாங்காமல், ஜேகே என்ற நாவலை சுட்டு எடுத்திருந்த ஏர்போர்ட் படத்தை இந்த கணக்கில் சேர்க்கலாமா என்று தெரியவில்லை.
இந்த லிஸ்டிலே விட்டுப் போன மிக முக்கியமான பெயர் ஒன்று உண்டு. அதுதான் காகித சங்கிலிகள்.

குமுதமோ, அல்லது ஆனந்த விகடன் கூடவோ, இலவச இணைப்பாக வந்த ஒரு குறு குறுநாவல்தான் கா.சங்கிலிகள் என்று நினைவு.

கிட்னி ·பெயிலியரால் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் கணவனுக்காக, உறவினர்கள், நண்பர்களிடம் கிட்னிதானம் பெற முயன்று தோற்றுப் போகும் ஒரு இளம் மனைவியின் கதை.

பூச்சு அலங்காரங்கள் இல்லாத மிக எளிமையான கதை. இந்த கதை பின்னால், எத்தனை மனங்களை பாதிக்கப் போகிறது என்பதை எழுதும் போது, சுஜாதாவே கூட அறிந்திருக்க மாட்டார். அத்தனை பலத்த வரவேற்பு பெற்றது.
இதற்கான ஒரு சில எதிர்வினைகளை, ஒரு கட்டுரையிலே குறிப்பிடும் போது, " நான் கிட்னி தருகிறே, அவனை காப்பாற்றுங்கள் என்று வந்த கடிதங்களையும், ஓவென்று கதறி அழுத ஒரு தொலைபேசி பெண் பற்றியும் அவர் குறிப்பாக சொன்ன போது முழுமையாக நம்பினேன்.

காரணம். அப்போது, காகித சங்கிலிகள் கதையை நானும் வாசித்து விட்டிருந்தேன்.

இந்த வரவேற்பு காரணமாக இது திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். திரையுலகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு , ஈடு கொடுக்க முடியாததால், சில மாற்றங்களை செய்து எடுத்த படம், வரவேற்பு பெறவில்லை. முதலில், சுமன் அம்பிகாவை வைத்து அதே பெயரில் எடுக்கப்பட்டு, பின் அது கைவிடப்பட்டு, சில ஆண்டுகள் கழித்து, ராகேஷ், சுலக்ஷணா வைக் கொண்டு பொய் முகங்கள் என்ற பெயரில் வந்தது. சந்தடியில்லாம சுருண்டு விட்டது.

காகித சங்கிலிகள் பற்றி தனியாக ஒரு வியாசமே, இதழ் ஒன்றில் எழுதி இருக்கிறார் என்றால், இந்த கதை ஏற்படுத்திய தாக்கங்களை பற்றி புரிந்து கொள்ள முடியும்.

சில அரை குறை ஆசாமிகளால் தான், திரையுலகம் இப்படி இருக்கிறது என்று புரிந்த் கொண்டு, திறமை யான கலைஞர்கள் துணை கொண்டு சுஜாதா தன் கைவரிசையை காட்டினார். மணிரத்னம், பாலசந்தர், கமலஹாசன், ராஜீவ் மேனன், பிசிஸ்ரீராம் போன்ற அற்புதமான கலைஞர்களுடன் இணைந்து பல நல்ல திரைப்படங்களுக்கு காரணமாக இருந்தார்.

நான் முன்னே சொன்னது போல, பல முகங்களை கொண்டு, ஒரு முழுமையான படைப்பாளி வாழ்க்கையை அவர் வாழ்ந்துவருகிறார் என்பதிலே எனக்கு ஐயமில்லை.

எழுத்தாளர்கள் படைப்புகளை உருவாக்குவார்கள். சுஜாதா, படைப்பாளிளையும் உருவாக்கினார் என்பது தான் நிசம்.

எழுத்திலே நாங்கள் சுஜாதா கோத்திரம் என்று சொல்லிக் கொள்ளும் வளர்ந்த, வளர்கிற எழுத்தாளர்கள் இன்றைக்கு அதிகம் உண்டு. மற்ற அனைவரையும் விட , சுஜாதா அடையாளம் காட்டிய படைப்பாளிகள் மிக அதிகம். தான் எழுதும் கட்டுரைகளில், நல்ல படைப்புகளை அடையாளம் காட்டுவதை ஒரு கடமையாகவே செய்தார். " பிராபல்யம் எனும் தற்செயல் வெளிச்சத்தில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு நல்ல எழுதுக்களை அடையாளம் காட்டுவது ஒரு கடமை" என்று அவர் நம்பினார். நம்பியது போலவே செய்தார்.
வெளிச்சத்துக்கு வந்த படைப்பாளிகள், சுஜாதா எழுதுவது இலக்கியமல்ல என்று பின்னால் வியாக்கியானம் செய்தாலும், அதை அவர் பொருட்படுத்துவதில்லை. கத்தை கத்தையாக காகிதங்களை அனுப்பி, அபிப்ராயம் கேட்கும் இளம் எழுத்தாளர்களை அவர் கோபிப்பதில்லை.

இன்றைக்கு புதுக்கவிதைகள் தெருவெங்கும் இறைந்து கிடப்பதற்கு, சுஜாதா போன்றவர்கள், அதை பத்திரிக்கைளில் வெகுவாக பரப்பியதுதான் காரணம். கவிதைக்கு என்ன செய்தாரோ, அதையே அவர் கணிப்பொறியியலுக்கும் செய்தார்,

நவீன எழுத்தில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுத்திய சுஜாதாவுக்கு, தமிழ் கூறும் நல்லுலகம் என்ன பதில் மரியாதை செய்தது என்று யோசிக்க சற்றே கூச்சமாகத்தான் இருந்தது.

சாகித்ய அகாதமி, ம்யூசிக் அகாதமி, ஞானபீடம் போன்ற விருதுகளுக்கு கொடுப்பினை இல்லை.

இதை பற்றி அவர் என்ன நினைக்கிறார்.?

"நான் இருபது முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய சிறுகதை ஒன்ற நினைவில் வைத்துக் கொண்டு, நேரில் பார்க்க்கும் போது, அந்த பாத்திரங்களின் பெயர் சம்பவம் போன்றவற்றை குறிப்பிட்டு சிலர் சிலாகிப்பார்கள். அப்போது எனக்கு ஏற்படுத்தும் மனநிறைவை, எந்த உயர்ந்த விருதும் கொடுத்து விடமுடியாது "

ஒப்புக் கொள்ள வேண்டியதுதான்.

(picture courtesy : raaja.com)

Comments

அட்டகாசம்! நம் அபிமான எழுத்தாள வாத்யாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். அவர மாதிரி வேற யாரும் இல்லீங்க. அவ்ளோ தான்.
Desikan said…
prakash,
Very good writeup.
- desikan
கொஞ்ச நாளைக்கு முன்னால், கே டிவியில் "விக்ரம்" மீண்டுமொருமுறை பார்த்தேன்.இன்றைக்கு பார்த்தால், நன்றாக கலாய்க்கலாம் என்று தோன்றினாலும், இரண்டே ஆச்சரியங்கள் தான் அதில். ஒன்று சுஜாதா. இரண்டு கமல்ஹாசன். ஒரு பிடிவாதமான படைப்பாளியிடத்தில் ஒரு எழுத்தாளனின் கனவு எப்படி உருபெறும் என்பதற்கு உதாரணம் விக்ரம். ரத்ன சுருக்கமான வசனங்கள் "ஹனிமூன் எப்படியிருந்தது - முடிஞ்சப் போச்சு.... என்னது.. she is dead" அவ்வளவுதான் வசனம். அந்த காலக்கட்ட சினிமாக்களில் இதே விஷயத்தினை நரம்புகள் புடைக்க, சிவப்பு போகஸ் லைட்டில் ஹீரோ சொல்லி முடிக்கும்போது நிறைய பேர் முகத்தில் கண்ணீரும், கோவமும் வெடிக்கும். அதையெல்லாம் உதறி தள்ளிவிட்டு, மகா கேஷுவலாய் பேசும் வசனமிது. நிறைய படைப்பாளிகளை அடையாளம் காட்டினார் என்கிற விஷயம் போதும், சுஜாதாவின் இருப்புக்கும், விருதுக்கும். வாழ்த்துக்கள் சுஜாதா சார் (மீண்டும் ஒரு முறை)
ரவியா said…
பெஸ்ட் கண்ணா பெஸ்ட்
thanks, Desi, Narain & Raviaa
சுஜாதாத்தா என்றெல்லாம் பழித்து எழுதப்பட்டத் தமிழ்மணத்தில் அவரைப் பற்றி இப்படி ஒரு பாராட்டா? மழைதான் வரப்போகிறது. அப்படியே வந்தாலும் நல்லதுதான். (நிஜமாகவே நங்கநல்லூரில் இப்போது இதை நான் எழுதும் போது வானம் இருட்டிக் கொண்டு வருகிறது).
அன்புடன்,
டோண்டு ராகவன்
Unknown said…
முன்பே படித்த கட்டுரையாக இருந்தாலும் திரும்ப படிக்கும்போதும் உற்சாகம் குறையாமல் படிக்க முடிந்தது.

காரணம் ஐகாரஸா, சுஜாதாவா... தெரியவில்லை.
Arul said…
சுவாரஸ்யமான கட்டுரை, மீண்டும் இட்டதற்கு நன்றி
தலைவா மெய்யாலுமே கீச்சிட்ட போ

மரவண்டு
சுஜாதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிரகாஷ், நல்லதொரு கட்டுரை.
ஈழத்தில் இருந்தபோது வாசித்த, சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ, இரூள் வரும் நேரம் (கல்கியில் தொடராய் வந்தது என்று நினைக்கின்றேன், மற்றும் ஒரு குழந்தையின் இறப்புடன் தொடங்கும் (அனிதா அல்லது அகல்யா) ஒரு புதினம் என்று பல படைப்புக்கள் பிடித்திருந்தன. சுஜாதாவின் கணேஷ்-வசந்ததை அவ்வளவு இலகுவில் மறக்க முடியுமா? பரத்- சுசீலா என்று துப்பறியும் சோடிகள் வந்தாலும் கணேஷ்-வசந்திற்கு என்னளவில் எவரும் தமிழில் ஈடாகவில்லை என்பதுதான் எனது எண்ணம்.
Mey said…
My Hero!!!!
Happy Birthday wishes to him.
தாத்தா எப்பவுமே சூப்பர்!!!

முதன்முதலில் வாசித்தது தினமணிக்கதிரில் வந்த தொடர்கதை. டில்லிக்கோ பம்பாய்க்கோ கிரிக்கெட் விளையாடப் போன பையன் வருவான். விகடன்/குமுதம் எல்லாவற்றிற்கும் தடா என்பதால் பெரிதாக வாசிக்கக் கிடைக்கவில்லை. ஆனால், பள்ளிக்கூட நூலகத்தில் கிடைத்த கணேஷ் வசந்த் ஈர்த்தார்கள். ஆனால், அதே நாட்களில் வாசிக்கத் தொடங்கியிருந்த ஆங்கில துப்பறியும் நாவல்களோடு ஒப்பிட்டால் சுவாரசியம் குறைய இருந்ததால் கைவிட்டுவிட்டேன். திரும்பவும் பரிச்சயம் வந்தது இணையத்தில்தான். அம்பலம்.காம், தேசிகனின் பக்கத்தில் இருந்த பழைய கட்டுரைகள், விகடனின் கற்றதும் பெற்றதும் தாத்தாவைக் கவனிக்க வைத்தன. அவருடைய கதைகளை விட கட்டுரைகளே என்னை மிகவும் ஈர்த்தன. இப்போதும் அவருடைய கதைகளில் சிலவற்றை நூலகத்தில் கண்டாலும் கை திரும்பத் திரும்ப அவரது கணையாழி கட்டுரைகளுக்கோ, கற்றதும் பெற்றதுக்கோ தான் செல்கிறது. கதைகளில் அவரது 'எப்போதும் பெண்' ஏற்படுத்திய தாக்கம் ரொம்பப் பெரியது.

நான் சுஜாதாவைச் சிலாகிக்கும் வி்ஷயம் - அவரது கட்டுரைகளில் அவர் அறிமுகப் படுத்தும் பிற படைப்பாளிகள், புத்தகங்கள் ஆகியவற்றிற்காகவே. தமிழில் வேறு யாரும் இப்படி, இந்த அளவிற்குச் செய்யவில்லை. அதனால்தான் அவரின் வீட்டுக்கு கேட்காமலேயே புத்தகங்கள் அனுப்பபடுகின்றன என்று நினைக்கிறேன். ;)

கற்றதும் பெற்றதும்'இல் அவருடைய வருட இறுதி பட்டியல்கள் சுவாரசியமானவை.

சில நெருடல்கள் இருந்தாலும் இந்நேரத்தில் அவை தேவையில்லை.

தாத்தாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

-மதி

பிரகாஷ், உங்களைப்போன்றவர்கள் அம்பல அரட்டைக்கு வந்தால் மிகவும் சுவாரசியமாக இருக்கும். கொஞ்சம் அவரின் மண்டையை நோண்டியமாதிரியும் இருக்கும். நீங்களெல்லாம் ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை. நீங்களெல்லாம் வருவீர்கள் என்றால் மறுபடியும் வெள்ளிக்கிழமைகளில் இரவு இரண்டு மூன்று மணிவரை விழித்திருக்க நான் தயார்!
நன்றி டோண்டு சார், கேவிஆர்., அருள், மரவண்டு, மெய்யப்பன்
நன்றி டி.சே.

//மற்றும் ஒரு குழந்தையின் இறப்புடன் தொடங்கும் (அனிதா அல்லது அகல்யா) //

அது 'எப்போதும் பெண்'
நன்றி மதி,

//முதன்முதலில் வாசித்தது தினமணிக்கதிரில் வந்த தொடர்கதை. டில்லிக்கோ பம்பாய்க்கோ கிரிக்கெட் விளையாடப் போன பையன் வருவான்//

அது நிலாநிழல்

//அம்பல அரட்டைக்கு வந்தால் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.//

அம்பலம் அரட்டை இன்னும் நடக்கிறதா? தேசிகன், அரட்டையை தொகுத்து, மடலாக அனுப்புவார். இப்போது வருவதில்லை, ஆகவே, அரட்டை இப்போது நடப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். சில மாசத்துக்கு முன்னால் ஒரு முறை வந்தேன். என்ன பேசறது என்றே தெரியாமல், கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து விட்டு வெளியே வந்துவிட்டேன். வெள்ளிக்கிழமைகளில் , சிக்கல் என்ன என்றால், அரட்டை நடப்பது என் அலுவலக நேரத்தில். ஞாயித்துக்கிழமையில் இருந்தால் சவுகரியமாக இருக்கும்.
arattai is still on.

indian time saturday morning 11.30 a.m

Montrel time - Friday night 2.30 a.m

:((

was awake 4-5 weeks ago and dropped in. ppl as usual had questions abt rajani etc.

saw Usha, maghudeswaran among others.

====
last year there was a discussion to change the timing. it would be a good idea to change the timing. most of the visitors were enthusiastic abt the timing change. maghudeswaran was opposing the change quite vehemently.

in my opinion. having the chat at differnt time would be quite beneficial.

ppl in the middle east cannot drop in on saturdays(working day). = Fridays would be good for them.

saturday 11.30 indian time translates to

friday night 2.30 in the east coast
11.30 in the west coast(dont see anyone from california or washington btw).

the present timing is ideal for people in europe, far east and australia (dont see anyone from those places either. J! used to drop in. infact, met her there. ;) )

sunday is a good day. but not 11.30 in the morning ;)

-Mathy
Mookku Sundar said…
பிரகாஷ்,

அருமையான கட்டுரை. கிட்டத்தட்ட எல்லா சுஜாதா ரசிகர்களும் ( எழுதத் தெரிந்திருந்தால்) இதையே எழுதி இருப்பார்கள். ஹாப்பி பர்த்டே டு என் மதிப்புக்குரிய தாத்தா..!!!!

அது சரி..தாத்தா என்று சொன்னால் தப்பா..?? அவரை இழிவு படுத்தியதாகவா அர்த்தம்..?? குவளகுடி சிங்கமய்யங்கார் பேரன் ரங்கராஜ அய்யங்கார் என்று சொல்ல வேண்டுமோ..??( கேள்வி டோண்டு ஸாருக்கு..:-) )
தகவலுக்கு நன்றி மதி. இந்த வாரம் வருகிறேன்.

// J! used to drop in. infact, met her there. ;) )//

ஆமா... கேக்கணும்னு நினைச்சேன். எங்க இருக்காங்க இப்ப?
நன்றி, சுந்தர்...

//அது சரி..தாத்தா என்று சொன்னால் தப்பா..?? அவரை இழிவு படுத்தியதாகவா அர்த்தம்..?? //

ஆமா... தாத்தான்னா என்ன தப்பு? ஏதோ திட்டினா, கிண்டல் பண்ணாக் கூட, அது ஒரு உரிமைல தானே?
---//மற்றும் ஒரு ழந்தையின் இறப்புடன் தொடங்கும் (அனிதா அல்லது அகல்யா) //

அது 'எப்போதும் பெண்'---

"எப்போதும் பெண்" - குழந்தையின் பிறப்பு/தாயின் இறப்பு ஆகியவற்றுடன் தொடங்கும்
Desikan said…
மதி/பிரகாஷ்,
என்னுடைய www.tamil.net/people/desikan/ கொஞ்ச நாட்களாக சரியாக வேலை செய்யவில்லை. அதனால் தான் chat transcriptடை என்னால் போட முடிவதில்லை. பாலா பிள்ளையிடம் சொல்லியும் பயணில்லை. நானே ஒரு புதிய domain ஒன்றை வாங்கலாமா என்று இருக்கிறேன். பார்க்கலாம்.
நன்றி தேசிகன். நேரம் கிடைக்கும் போது, அப்லோட் செய்யுங்கள்
கட்டுரையில் சில திருத்தங்கள்

//மண்டைக்காடு கலவரத்தை ஒட்டி எழுதிய மண்மகன், // என்பது

மண்டைக்காடு கலவரத்தை ஒட்டி எழுதிய 'விடிவதற்குள் வா' என்று இருக்க வேண்டும்.

//ஜன்னல் கைதி என்ற குறுநாவல் பெண்ணுக்கு யார் காவல் என்ற பெயரிலும்//

ஜன்னல் கைதி அல்ல, ஜன்னல் மலர்

சுட்டிக் காட்டிய நண்பர்களுக்கு நன்றி.
பிரகாஷ்,

அருமையான கட்டுரை! நிறைய தெரிஞ்சிக்க முடிஞ்சது. நான் கடைசியாப் படிச்சது
'பிரிவோம் சந்திப்போம்'தான். அதுக்கப்புறம் தமிழ்ப் படிக்க சான்ஸ் இல்லாமப் போச்சு(-:

நீங்கதான் இந்த வாரத்து நட்சத்திரமா? ஆரம்பமே அருமை!!! வாழ்த்துக்கள்!!

என்றும் அன்புடன்,
துளசி.
"அது சரி..தாத்தா என்று சொன்னால் தப்பா..?? அவரை இழிவு படுத்தியதாகவா அர்த்தம்..?? குவளகுடி சிங்கமய்யங்கார் பேரன் ரங்கராஜ அய்யங்கார் என்று சொல்ல வேண்டுமோ..??( கேள்வி டோண்டு ஸாருக்கு..:-) )"
மூக்கன் அவர்களே, தாத்தா என்பது சொல்லும் தோரணையையும் சந்தர்ப்பத்தையும் பொருத்தது. நான் பார்த்தவரை அவரை எதிர்மறையாக விமரிசனம் செய்த போது சுஜாதாத்தா என்பது சற்று அசந்தர்ப்பமாகப் பட்டது. அதே போல சிங்கமையங்கார் பேரன் என்று நீங்கள் குறிப்பிட்டதற்கும் ஒரு முறை பின்னூட்டம் கொடுத்துள்ளேன். அதற்கு காரணம் நீங்கள் கோட் செய்த அவருடைய அப்போதையக் கட்டுரையில் ஐயங்கார் ரெபெரன்ஸ் இல்லை. அதே நேரத்தில் சுஜாதா அவர்கள் தான் ஐயங்கார் என்பதைத் தேவையில்லாது காட்டிக் கொள்கிறார் என்று கூட ஒரு பேச்சு எழுந்தது. இம்மாதிரிப் பேச்சுகள் அடிக்கடி எழுந்தது கூட நான் ஐயங்கார் என்று வெளிப்படையாகக் களத்துக்கு வந்ததற்கு ஒரு தூண்டுகோலாக இருந்தது.
ஒரு முறை தன் க.பெ.வில் அவர் ஒரு குறிப்பிட்டவருக்காகத் தன் கட்டுரை மூலம் பொது மக்கள் உதவி செய்யலாம் என்று ஒரு பரிந்துரை கொடுத்தப் போது, அவர்தான் நிறைய சம்பாதிக்கிறாரே, அவர் இரு பிள்ளைகள் வேறு அமெரிக்காவில் இருக்கிறார்களே அவரே இந்தச் செலவை ஏற்று கொள்ள வேண்டியதுதானே என்று கூட ஒருவர் கேட்டிருந்தார். அது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
Prakash, nalla oru thoguppu. Ennai ponra Sujathavin perundil running-l thotri kondavargalukku, avar padaipugalin anivaguppu ubayogamaga irukkum - 2006 puttaga kankaatchiyil vaanguvadarku.

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Chennai Tamil Bloggers Meet - 2005

ரா.கி.ரங்கராஜன் - நாலு மூலை