மிக்ஸர் - I
* பாரிஜாதம் படம் பார்த்தேன். பாக்யராஜ் பழைய ஃபார்முக்கு வந்துட்டார். தொடர்ந்து, ரவுடியிசம், தாதாக்கள், அரிவாள் வெட்டு குத்து என்று படங்களாகப் பார்த்து பார்த்து, உடம்பெல்லாம் ஒரே ரத்த வாடை. பாரிஜாதம் பார்த்ததும் வாடை போயே போச்சு. பாக்யராஜின் பழைய, 'விடியும் வரை காத்திரு', 'தூறல் நின்னு போச்சு', இன்று போய் நாளை வா' போன்ற படங்களின் திரைக்கதை அமைப்புக்கு கிட்டக்க கூட வரமுடியாது என்றாலும், இந்த காலகட்டத்திலே ஒரு மாறுதலான படம். கிளிஞ்சல்கள் படத்தில் வந்த பூர்ணிமா ஜெயராமுக்கு கொஞ்சம் காத்தடித்து, முகத்திலே கருப்பாக மேக்கப் போட்டால், அவர் தான், சரண்யா பாக்யராஜ். ஒருதரம் பார்க்கலாம். அதாவது, படத்தைச் சொன்னேன். * என்.எஸ்.கிருஷ்ணன் பற்றிய புத்தகம் ஒன்றை வாசித்தேன். கிழக்குப் பதிப்பகத்தின் முத்துராமன் எழுதியது. ( இந்த மாதிரி வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களுக்கு என்றே, ஒரு டெம்ப்ளேட் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது). நல்ல சுவாரசியமான புத்தகம். குழப்பாமல் கோர்வையாக,ஒரே வாசிப்பில் முடித்துவிடுகிற மாதிரி எழுதியிருக்கிறார் முத்துராமன். அதிலே இருந்த தகவல்கள் நான் முன்னர் அறியாதவை.