Posts

Showing posts from September, 2005

கோவை

மன்னிக்கணும்...கிட்டதட்ட எங்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாக்குறுதி போல என்னுடைய வாக்குறுதியும் ஆயிப்போச்சு.. அதான், வாரம் முழுக்க தமிழ்ப்பதிவாப் போடுறேன்னு சொல்லிட்டு, கண்டுக்காம விட்டதைத் தான் சொல்றேன். அதுக்கு வழக்கம் போலவே ஒரு காரணம் வெச்சுருக்கேன்... நீங்க நம்ப மாட்டீங்கன்னாலும் சொல்றது என்னோட கடமை... அதாவதுங்க , இந்த வார இறுதியிலே நான் கோவைக்குக் பயணமாகிறேன். சென்னையை கெடுத்தது பத்தாதுன்னு இப்ப கோயமுத்தூரா ந்னு யாரோ ஒர்த்தர் கொரல் விடுறார் பாருங்க... பேசும் போது இப்படி ஊடால ஊடால குரல் கொடுத்தா என்னால கோர்வையாச் சொல்ல முடியாது.. கொஞ்சம் சத்தம் போடாம அமைதியாக் கேக்கணும் இல்லாட்டி எந்திரிச்சுப் போயிருவேன்... ஆச்சா.. இப்ப கேளுங்க.. எதுல உட்டேன்?.... ஆங்... கோவைக்குப் போறேன்...மூணு நாள் பயணம். தமிழ் குறும்பட அமைப்புன்னு ஒரு அமைப்பு தமிழ்நாட்டிலே இருக்குங்க.. அவங்களும், நிழல் னு ஒரு பத்திரிக்கையும் சேர்ந்து, கோவைலே, ஒரு மூணு நாள், பயிற்சிப் பட்டறை ஒண்ணு ஏற்பாடு செய்யறாங்க.. நிறைய பிரபல குறும்பட இயக்குனர்கள், திரைக்கதை ஆசிரியருங்க. எல்லாம் வந்து பாடம் எடுக்கிறாங்க.. அங்கியே தங்கி, பிற ம

இனி - பாரதிராஜா - I

பாரதிராஜாவின் திரைப்படங்கள் குறித்த ஒரு அலசல் கட்டுரை, சொ.சங்கரபாண்டி அவர்களால் எனக்குக் கிடைக்கப் பெற்றது. 1991-92 வாக்கில் வெளியான இக்கட்டுரையை எழுதியவர் சக்கரவர்த்தி. தற்போது சிற்றிதழ்களில் திரைப்படக் கட்டுரைகளை எழுதி வரும் வெங்கடேஷ் சக்கரவர்த்தியும் இவரும் ஒருவரே என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இக்கட்டுரை, இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமாக இருக்கின்றதா என்று ஆராய்ந்து பார்க்கும் போது புலப்படும் சங்கதிகள் சுவாரசியமானவை. பாரதிராஜா ஒரு முக்கிய திரைக்கலைஞராக அடையாளம் காட்டப்படுவதற்கு என இருக்கும் பல காரணங்களில், அவரது யதார்த்தமான கிராமத்துச் சித்திரிப்பும் ஒரு முக்கியமான காரணம். சக்கரவர்த்தியின் கட்டுரையும் இதைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளின் பிற்பகுதியிலே திரையுலகுக்குள் நுழைந்த பாரதிராஜா, அச்சு அசலான கிராமத்தை என்று இல்லாவிட்டாலும், நிஜத்துக்கு சற்றேனும் நெருக்கமாக இருக்கிற கிராமத்தை படம் பிடித்துக் காட்டி, ரசிகர்களை , விமர்சகர்களை ஆச்சர்யப்படுத்தினார். அவருடைய திரைப்படங்கள் வருவதற்கு முன்பு

ரோஜாப்பூ

Image
ரோஜாவின் பெயர் ஷிவானி புகைப்படம் பிடித்தவர், வண்டலூர் அருள்செல்வன் நரேந்திரன்

தமிழ் வாழ்க...

இந்த குற்ற உணர்ச்சியாகப்பட்டது பல ரகம். பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுவிட்டு, மோட்சம், பரங்கிமலை ஜோதி இன்ன பிற திரையரங்குகளில், படம் பார்த்து விட்டு வீட்டுக்கு தாமதமாகச் சென்று , ஏதாவது ஒரு சாக்கு சொல்லி ஏமாற்றும் போது ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் இருந்து தொடங்கி, வேலை அதிகம் என்று வரும் மடல்களுக்கு பதில் போடாமல் விட்டுவிட்டு பின் வருத்தப்படும் சமீபகால குற்ற உணர்ச்சி வரை, ரகம் ரகமாக இருக்கும் இவை, ஏற்படுத்தும் தாக்கமும் வகை வகையானவை. என்னுடைய சமீபத்திய குற்ற உணர்ச்சி, தமிழில் ஆங்கில வார்த்தைகளைக் கலந்து எழுதுதல் தொடர்பானது. இது திடீரென்று அதிகரித்ததற்கு மரத்தடி இணையக்குழுவில் நடந்த சில மடல் பரிமாற்றங்களும் காரணம். 2003 ஆண்டு மத்தியிலே இணையத்தில் முதன் முதலாக எழுத வந்த போது, சிந்தனை ஓட்டத்துக்கும், எழுதுகிற வேகத்துக்கும் இடைவெளி அதிகமாக இருந்த நேரத்திலே, பொருத்தமான தமிழ் வார்த்தைகள் கிடைக்காமல் போகும் போது, சட்டென்று வந்து விழும் ஆங்கில வார்த்தையை அப்படியே எழுதி வலையில் ஏற்றும் பழக்கம் வந்தது. இன்றைக்கும் இந்தப் பழக்கம் இருக்கிறது. நம் சிந்தனையை, ஒப்பனையில்லாமல், அது முகிழ்த்த நேரத்தில

ஆதவன் - காகிதமலர்கள் - சந்தோஷ்

ஆதவனின் காகிதமலர்கள் குறித்து 'ஐவேஜு' அதிகம் இருக்கிற எழுத்தாள/ விமர்சகர்களில் இருந்து ஜூனியர் மோஸ்ட் எழுத்தாள/விமர்சகர்கள் வரை என்ன எழுதியிருக்கிறார்கள் என்று வாசித்திருக்கிறேன். ஆனால், காகிதமலர்கள் குறித்து ஆதவனுக்கு ஏதேனும் சொல்ல இருந்திருக்க வேண்டுமே என்று நீண்ட நாளாக நினைத்திருந்தேன். காகிதமலர்கள் எழுத நேர்ந்ததன் பின்னணி குறித்தும், ஆதவன் சொன்னதை இப்போதுதான் படிக்க நேர்ந்தது, சந்தோஷ் வலைப்பதிவின் மூலம்... ஆதவன் சொல்கிறார்.. ".....என் படைப்புப் பற்றிக் கூறப்படும் ஒவ்வொரு அபிப்பிராயமும் என்னைப் பதட்டம் கொள்ளச் செய்கிறது, அவசரமாகக் 'கோடிட்ட இடங்களைப்' பூர்த்தி செய்யத் தூண்டுகிறது - எல்லாருமே எல்லாவற்றையும் கண்டு சொல்லியே ஆகவேண்டும் என்பதுபோல. ஆனால் இது அவசியமில்லாதது மட்டுமல்ல, 'காகித மலர்கள்' போன்ற ஒரு நாவலின் விஷயத்தில் இது சாத்தியமுமல்ல என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கும்போது நான் உணருகிறேன். பல இழைகளைக் கொண்டு வேயப்பட்ட - கொஞ்சம் சிக்கலான அமைப்புக் கொண்ட - ஒரு நாவல் இது. எல்லா இழைகளுமே எல்லாருக்கும் பிடிபடுவதில்லை; பிடிபட்டாலும் இவை எல்லாமே ஒவ்வொர

படங்காட்டுவது எப்படி - 2

Image
காட்டுப்பன்றியை பின்தொடர்ந்து படம் பிடித்தவர் V.A.Narendran கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து தானும் அதன் பொல்லாச் சிறகை விரித் தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி தொடரும்

படங்காட்டுவது எப்படி?

Image
ஒதகமந்துவின் ஆளரவமற்ற சாலை...நிழல்படம் எடுத்தவர். V.A.Narendran இதோ இப்படித்தான் படங்காட்டுபவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. எதிர்த்துக் குரல் தருவது ஒரு வகை. கூட சேந்து கொம்மாளம் அடிப்பது மற்றொரு வகை. நான் இரண்டாவது வகை,

என் நைனாவும், சாருநிவேதிதாவும்

நாலைந்து நாட்களாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். வீட்டிலே விநோதமாக ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. கோணல் பக்கங்கள் மூன்றாம் பாகம், என் அப்பாவின் புத்தகங்களூடாக இறைந்து கிடக்கிறது . நடைமுறை என்ன என்றால் என்றால், நான் வாங்கி வரும் அல்லது திருடிக் கொண்டு வரும் அல்லது இரவல் வாங்கி வரும் புத்தகங்கள்/சஞ்சிகைகளை, செத்துப் போன எலி, நிஜமாகவே செத்துப் போய்விட்டதா அல்லது கடுக்காய் கொடுக்கிறதா என்று சோதித்துப் பார்க்கிறார் போல, ஒரு முறை பார்த்து, தூக்கி எறிந்துவிட்டு , சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் அம்மாத 'ஞானசம்பந்தம்' இதழிலோ அல்லது ஜூனியர் விகடனின் ரத்தந்தோய்ந்த முகப்புப்படக்கதையிலோ மூழ்குவதுதான் வழக்கம். ஆனால், இப்போது நடப்பது என்னமோ வழக்கத்துக்கு மாறாக இருக்கிறது. என் வீட்டிலே அனைவருமே தமிழ்ப்புத்தகங்கள் வாசிக்கின்ற பழக்கம் இருந்தாலும், ஓவ்வொருவரும் தனியான ரசனையைக் கொண்டவர்கள். யாரும் யாரையும், குறிப்பிட்ட புஸ்தகத்தை ஏன் வாசிக்கிறாய் என்றொ ஏன் வாசிக்கவில்லை என்றோ கேட்டுக் கொள்வது கிடையாது. சற்றேறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு, ஒருமுறை , இரவுச்சாப்பாட்டுக்கடையின் போது, பிடித்

இரா.முருகன் + சுஜாதா + அரசூர் வம்சம்

இந்த வாரக்குமுதத்தில் இருந்து... [சுஜாதா எழுதியது] "... அண்மையில் என்னை இழுத்து வைத்துப் படிக்க வைத்த நாவல், இரா.முருகனின் 'அரசூர் வம்சம்'. தமிழ் நடையில் என்னுடைய பாதிப்பு பலரிடம் இருப்பதைக் கவனிக்கிறேன். முருகனின் தமிழ்நடையில் எல்லாத் தமிழ் எழுத்தாளர்களின் - ஜானகிராமன், புதுமைப்பித்தன், லா.ச.ரா. என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் எல்லோரையும் தன் கம்ப்யூட்டர் திறமை, ஆங்கில உத்திகள் சேர்த்து ஒரு புதிய தமிழ் நடையை உருவாக்கியுள்ளார். அவரது 'அரசூர் வம்சம்' நாவலின் 24-ம் அத்தியாயத்தின் சில பக்கங்கள் இங்கே. இதில் இருக்கும் seduction ஒவ்வொருவரும் வாழ்வில் எப்போதாவது சந்தித்திருக்கிறோம். *************** சாமிநாதன் நிறுத்தி நிதானமாக வீட்டுக்குள் ஒவ்வொரு இடமாகச் சுற்றி வந்தான். வேதபாடசாலை வித்தியார்த்திகளுக்கு ஆக்கும் போது, இரண்டு அகப்பை அதிகமாகப் போட்டுச் சமைத்து எடுத்து வந்து வைத்துப் போய்விட்டாள் ராமலச்சுமிப் பாட்டி. புளிப்பும் இல்லாமல், காரமும் இல்லாமல் சின்னக் குழந்தைக்கு நிலாக்காட்டி ஊட்டுவது போல் சாதுவான ரசமும், நெய்யுமாக அன்னம். புடலங்காய் பருப்பு உசிலி. அதில் இழை