Public Menace & Voyeur's delight

இரண்டு நாட்களுக்கு முன்பு ஹிந்துவில் ஒரு செய்தியைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு கல்லூரி மாணவி, தன்னுடைய வருங்காலக் கணவனுடன் சற்று நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்த அந்தரங்கமான தருணத்தை, அவரது தோழியர் சிலர், செல்பேசி காமிரா வழியாக, ரகசியமாக படம் பிடித்து, அந்தப் பெண்ணுக்கே அதை அனுப்பி வைத்தார்களாம். இது சும்மா வேடிக்கைக்காக நடந்த நிகழ்ச்சியாம்.

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, மொபைல் காமிரா எப்படியெல்லாம், தகாத முறையில், மற்றவர் சுதந்திரத்தை பாதிக்கும் வண்ணம் உபயோகப் படுத்தப் படுகிறது என்று ஹிந்துவில் கட்டுரை வெளியாகியிருக்கிறது.

சமீபத்திய தொழில்நுட்ப சாத்தியங்களின் படி, கண்ணுக்கே தெரியாத அளவுக்கு, ஒரு சின்ன செல்பேசி காமிரா மூலம், பேசுகிறாரா அல்லது புகைப்படம் எடுக்கிறாரா என்பது தெரியாத வண்ணம் ரகசியமாக புகைப்படம் எடுக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. சென்னை காவல்துறை ஆணையர் இரா.நடராஜன் , இது போல சம்பவங்கள் நடந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு போதிய சட்டங்களும், அமுலாக்க முறைகளும் இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார். ஆனாலும் சந்தேகமாகத்தான் இருக்கின்றன.

இந்த சட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்றால், மற்றவருடைய அனுமதி இல்லாமல் எடுக்கப் பட்ட புகைப்படங்கள், பொது இடத்தில் வைக்கும் போதுதான், அதாவது பத்திரிக்கை அல்லது இணையம் போன்ற இடங்களில் பிரசுரிக்கப் படும் போதுதான் நடைமுறைக்கு வரும். அது அல்லாமல், யாராவது ஒருத்தர், மற்றவருடைய அந்தரங்கமான தருணத்தை ரகசியமாகப் படம் பிடித்து தானே ரசிக்கிறார் என்றால், அந்த வக்கிர மனப்பான்மையை தண்டிக்கும் அளவுக்கு சட்டம் இருக்கிறதா என்பது கேள்விக்குறி.

மொபைல் காமிராக்கள், நவீனத் தொழில்நுட்பத்தின் ஒரு வரப்பிரசாதம். இந்த தொழில்நுட்பம் முன்னமேயே இருந்திருந்தால், பாப்பராஸிகள், துரத்தி துரத்தி சென்று, டயானாவை சாகடித்திருக்கவேண்டாம். தெஹல்கா தருண் தேஜ்பல், ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்ட லட்சக்கணக்கில் செலவு செய்திருக்க வேண்டாம். நல்லவிதமாகப் பயன் படுத்தப் படவேண்டிய இந்த மொபைல் காமிரா, சில வக்கிரம் பிடித்தவர்களின் கையில் சிக்கிக் கொண்டு சீரழிகின்றன. இதனைத் தடுக்க முடியாத வரையில்,. மொபைல் காமிராக்களை முறைப்படுத்தி விற்கவேண்டும். அல்லது ஜப்பான் நாட்டில் செய்திருப்பதைப் போல ஒட்டு மொத்தமாகத் தடை செய்யவேண்டும்.

அன்புடன்
பிரகாஷ்,சென்னை


Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I