புதிய தலைமுறை.....

untitled

பத்ரி தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருக்கும் சமாசாரம் பற்றி எனக்கு சில அபிப்ராயங்கள் உண்டு. தொழில் தொடங்குதல், திட்டம் அறிக்கை தயாரிப்பு, முதலீடு ஏற்பாடு , கடன் வசதிகளைப் பெறுதல் போன்றவற்றில் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது என்பதால், அதனை இங்கே வலைப்பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்,

ஐஐடி மும்பை செய்திருக்கும் சேவை அளப்பரியது. ஆர்வமும், திறமையும் கொண்டவர்களை ஊக்குவிப்பதற்காக, அந்த கல்வி நிறுவனம் காட்டியிருக்கும் முனைப்பு பாராட்டத் தக்கது.

இந்தியாவில், குறிப்பாக சென்னையில் தொழில் தொடங்குவதென்பது அத்தனை சுலபமானது இல்லை. அதில் ஏற்படும் சிக்கல்களின் அளவு, குறிப்பிட்ட தொழில்கள், அவற்றின் இயல்பு ஆகியவற்றைச் சார்ந்ததாக இருக்கும்.

Oxford History of Indian Business என்ற ஒரு நூலின் சில பகுதிகளை, ஒரு வணிக நாளிதழிலே வாசிக்க நேர்ந்தது. இந்திய வர்த்தக நிறுவனங்கள் தோன்றி வளர்ந்த கதையினை விவரிக்கும் அந்த நூல், சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப் பட்டு தற்போதுதான் வெளியாகி இருக்கின்றது. ( விலை, இந்திய ரூபாய் 1,350/-). 1800 களின் மத்தியில் துவங்கி, டாடா, பிர்லா போன்ற தொழிலதிபர்கள், தங்கள் நிறுவன சாம்ராஜ்யத்தை எப்படி நிறுவினார்கள், அவை மேற்கொண்டு எப்படி வளர்ந்தன என்பதைப் பற்றிய ஒரு பகுதி மட்டும் படிக்கக் கிடைத்தது.

இது இப்போது எனக்கு நினைவுக்கு வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது இந்தியாவில், தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்துவதென்பது ஒரு புதிய விஷயமல்ல. கோடிக்கணக்கான ஆண்டுகளாக பிள்ளைப் பேறும் பிரசவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன, அவை மிகச் சாதாரணமானது தான் என்றாலும், அவரவருக்கு கிடைக்கும் அந்த அனுபவம் புதிதுதான். இது புதிய தொழில் தொடங்குதலுக்கும் பொருந்தும். ஆனாலும் , இந்த தொழில் முனைப்பு ( entrepreneurship) சமீபத்தில், அதாவது கடந்த பதினைந்து ஆண்டு காலத்தில் மிக அதிகமாகத் தென்படுகிறது அல்லது பேசப்படுகிறது. .

brick & mortar என்று சொல்லகூடிய பெருந்தொழில்கள் ஆட்சி செய்த காலத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, புதிய நிறுவனங்கள் ( new economies) முளைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு விஷயம்.... இவற்றை துவங்குவது, வர்த்தகத்திலே ஊறித்திளைத்த தொழிலதிபர்கள் இல்லை.

அப்படியானால் யார் இவர்கள்?

படித்த, திறமையான, தங்கள் திட்டங்களை முதலீட்டாளர்களுக்கு விற்கத் தெரிந்த இளைஞர்கள். நினைவுக்கு எட்டியவரையில் சபீர் பாட்டியா (hotmail), கே.பி.சந்திரசேகர் ( exodus), குருராஜ் தேஷ்பாண்டே, ராஜேஷ் ஜெயின் ( indiaworld.com), ப்ரதீப் கர் ( microland), பத்ரி சேஷாத்ரி ( cricinfo.com ), வினோத் கோஸ்லா ( Sun Micro, Juniper Networks) , கன்வால் ரேக்கி ( Nirvana, TiE) போன்ற இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர், டாடா , பிர்லா , அம்பானி, கிர்லோஸ்கர், டிவிஎஸ், சிவசைலம் குடும்பம் ( அமால்கமேஷன்), முருகப்பா குழுமம், மோடி, சிங்கானியா, ரூயா, கோயங்கா, கோத்ரெஜ், மித்தல், தாப்பர், முதலான குடும்பங்களில்/குழுமங்களில் இருந்து வந்தவர்கள் இல்லை. முறையான படிப்பு, திறமை, ஆர்வம், துணிச்சல், சிறு முதலீடு ஆகிவற்றை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளே வந்து வெற்றி பெற்றவர்கள், பெற்றுக் கொண்டிருப்பவர்கள்.

ஒரு திட்டத்தை வகுப்பது, அதனை ஊறப்போட்டு நிதானமாக ஏற்பாடுகள் செய்து, முதலீடு பெற்று நிறுவனத்தை துவங்குவது முதற்கொண்டு, அந்த நிறுவனத்தை இயக்குவது, விற்பனை உத்திகள், மனித வள மேம்பாடு, நிதிநிர்வாகம், லாபம் ஈட்டுதல் வரை, அதுவரை இயங்கி வந்த நிறுவனங்களின் வழிமுறைகளில் பற்பல மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.

தன்னுடைய ஐடியா என்பதாலே, அது தனக்கு மட்டும் சொந்தம், கஷ்டம் நஷ்டங்கள், லாபங்கள் அவை அனைத்தும் தனக்குத்தான் என்ற குறுகிய மனப்பான்மை இல்லாமல், [ ஒரு முறை நான் சந்தித்த ஒரு சுமாரான விஐபி , it is better to have 0.001% stake in microsoft than to own 100% stock in a good for nothing company என்றார். அது நான் இன்றைக்கு வரை நினைவில் வைத்திருக்கும் வேதம் ] திறந்த மனத்தோடு மற்ற முதலீட்டாளர்களுக்கும் வெளி ஆசாமிகளுக்கும் நல்ல விலையில் பங்குகளை விற்று , அவர்களூக்கும் நிர்வாகத்தில் ஒரு இடம் அளிப்பது போன்ற விஷயங்களை செய்து வருகிறார்கள். பணிபுரிபவர்களுக்கு பங்குகள் ( esop) , நல்ல வசதிகள், ஊக்கத்தொகைகள், பதவி உயர்வுகள் எல்லாம் இந்த புதிய தலைமுறையினர் வந்த பின்னால் ஒரு புதிய பரிமாணம் எடுத்துள்ளது. எந்த அளவுக்கு இந்த இயங்குமுறைகள் வெற்றி பெற்றிருக்கின்றன என்றால், பழைய தலைமுறை நிறுவனங்கள் கூட, இவற்றை தங்கள் நிறூவனங்களில் அமுல் படுத்தத் துவங்கியுள்ளன.

( உதாரணமாக, மிக conservative என்று கருதப்படும் முருகப்பா குடும்பத்தினர் நடத்திவரும் நிறுவனங்களில் ( family run business) பொதுவாக தலைமைப் பொறுப்பில்,. அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களூம், உறவினர்களூம் தான் இருப்பார்கள். தற்போது அவர்களின் நிர்வாகத்தின் போர்ட் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி, தலைமைப் பொறுப்ப்புக்கு, குடும்பத்தை சாராத, துறை விற்பன்னர்கள் ( professionals) தான் இருக்கலாம். அதே போல, மற்ற குடும்ப நிறுவனங்களிலும், நிர்வாக போர்டில் வெளியாட்களுக்கு பொதுவாக அனுமதி கிடையாது. ஆனால், தற்போதைய நிலைமை அப்படி இல்லை. விற்பனை, மேலாண்மை நிபுணர்களூம், வெற்றிகரகமாக நடக்கும் புதிய/பழைய தலைமுறை நிர்வாகங்களில், தனி இயக்குனர்களாக பொறுப்பு ஏற்று ஆலோசனை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.

இந்த மாற்றம், இந்திய தொழில் துறையில் ஒரு மிக முக்கியமான மாற்றமாகும். இந்த மாற்றத்துக்கும், புதிய தலைமுறை தொழில்கள் பெருகியதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை, தொழில் தொடங்க, லைசன்ஸ், அமைச்சகத்தின் அனுமதிகள், உரிமக்கட்டணாம், என்று சிவப்பு நாடா கொடி கட்டி பறந்து கொண்டிருந்த தொழில்துறையில், திறமை இருந்தால் போதும், நடுத்தர வர்க்கத்தினரும், புதிய தொழில் துவங்கி, வெற்றிக் கொடி நாட்டலாம் என்ற நிலைமை எப்போது உருவானது? அந்த transition நிகழ்ந்து எங்கனம்?

சிறு தொழில் என்றால் பீடி சுற்றுதல், லேத் பட்டறை வைப்பது, ஊறுகாய்/அப்பளம்/ஊதுவத்தி போன்றவற்றை தயாரிப்பது, பெருந்தொழில் என்றால், சிமிண்ட், எ·கு ஆலைகள் கட்டுவது, கல்வி, மருத்துவமனை போன்ற சேவை நிறுவனங்கள். ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் ஆகியவை மட்டும் தான் என்று இருந்த இந்திய தொழில் சூழலிலே , தகவல் தொழில்நுட்பம் ( IT) , தகவல்தொழில்நுட்பம் சார் சேவைகள் ( IT enabled services), அறிவுசார் நிறுவனங்கள் ( knowledge based industries), உயிர்தொழில்நுட்பம் ( bio-technology) போன்ற புதிய வாய்ப்புகள் பெருகி வருவதற்கும், நடுத்தர குடும்பத்து இளைஞர்களிடம் தொழில் முனைப்பு அதிகமாக இருப்பதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ?

அப்படியே தொழில் முனைவோர்கள் அதிகமாக இருந்தாலும், இந்த ஆர்வத்தை ஒழுங்குமுறை படுத்த ஏதாவது அமைப்புகள் அல்லது அரசுவாரியங்கள், அமைச்சகங்கள் இருக்கின்றனவா? சிறு தொழில் செய்பவர்களுக்கு உதவ, பாரதிய யுவ சக்தி டிரஸ்ட் என்ற லாப நோக்கற்ற அமைப்பு போல, இந்த புதிய பொருளாதார நிறுவனங்களுக்கு என்று ஏதாவது இருக்கிறதா? வங்கிகள் எத்தனை தூரம் இதிலே ஆர்வத்தை காட்டுகின்றன?

mentoring எனப்படும் ஆலோசனைகள் வழங்குபவர்களையும், பெருமுதலீட்டாளர்களையும் வங்கிகளையும் எப்படி அணுகுவது? மற்ற வழிகளில் பணத்தை 'உஷார்' செய்வது போன்றவற்றை சொல்லித் தரவும் யாராவது இருக்கிறார்களா? how to find out a benevolent lender , who subscribes to your concept and believe in your capability?

முன்னே நின்ற கம்பனுக்குப் பின்னால், ஓரங்கட்டப்பட்ட ஒட்டக்கூத்தர்கள் எத்தனை பேர் இருந்தார்களோ என்று ஒருத்தர் எழுதி படித்திருக்கிறேன்,. அதைப் போல, வெற்றி பெற்றவர்கள் பத்து பேர் என்றால், தோல்வி அடைந்தவர்கள் யார் யார்? அவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து என்ன பாடத்தை கற்றுக்கொள்ளலாம்?

ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும், மற்ற பல்கலைகளின் தயாரிப்புகளுக்கும், இந்த தொழில் முனைப்பின் அடிப்படையில், என்ன வித்தியாசம்? மற்ற பல்கலைகக்கழகங்களின் மாணவர்களுக்கு ( who does not have their names suffixed with fancy degrees) எந்த அளவுக்கு ஊக்கம் கிடைக்கின்றன?

இதைப் போல ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன.

இவற்றில் பாதி கேள்விகளுக்கு எனக்கும் பதில் தெரியாது. ஆகையால் கண்டு பிடிக்கப் போகிறேன்.

watch out for more updates

அன்புடன்
பிரகாஷ்

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I