Bulls & Bears....
பங்கு சந்தை பற்றி பத்ரி எழுதி இருந்தார். சிறுமுதலீட்டாளர்கள் கணிப்பொறி மற்றும் இணையத்தின் மூலம் விரைவாகவும் புத்திசாலித்தனமாகவும், பங்குகள் விற்கலாம் வாங்கலாம், மேலதிக விவரங்களைப் பெறலாம் என்று கூறியிருந்தார்.
சென்னையில் இருக்கும் இளவயதினரிடம், பங்கு சந்தை பற்றிய விஷயஞானம் குறைச்சலாகத்தான் இருக்கிறது. இந்த விஷயத்தை எழுத உட்கார்ந்ததுமே, என் நண்பர்கள் , மற்றும் வயதை ஒத்தவர்கள் சுமார் இருபத்து ஐந்து பேருடன் பேசினேன். அவர்களில் ஒரே ஒருத்தர் தவிர வேறு யாரும் பங்குசந்தையில் முதலீடு செய்பவர்களில்லை. அதில் ஒருத்தர், " சேச்சே... அது காம்ப்ளிங்க்னா... " என்று எனக்கு பதிலடி கொடுத்தது வேடிக்கை.
ஓரிரு வருடங்களுக்கு முன்பு, என் நண்பன் ஒருவன், கையில் தன் வருடாந்திர ஊக்கத் தொகையை வைத்துக் கொண்டு எங்கே முதலீடு செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அப்போது பொதுப் பங்குகள் வெளியிட்ட ஒரு தேசிய வங்கி பங்குகளை வாங்கச் சொன்னேன். நானே சென்று விண்ணப்பத்தையும், குறிப்பிட்ட தொகைக்கான, கேட்பு ஓலையை வாங்கி, அவன் சார்பில் விண்ணப்பித்தேன்.
அந்த பங்குகள் விலை ஏறும் இறங்கும். அதை விற்று, வாங்கி, மறுபடி விற்று, வேறு நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் வாங்கி, விற்று, ஓரளவுக்கு இந்த பங்கு சந்தையின் நடைமுறைகளைக் கற்றுக் கொள்ளுவான் என்று நினைத்திருந்தேன். கிட்டதட்ட, இரண்டு ஆண்டு காலம் கழித்து, எனக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்து, தற்போது கோவையில் இருக்கும் அவனிடம் அந்த பங்குகள் பற்றி விசாரித்த போது, " அட, ஆமாம், வாங்கினேன் இல்லை. மறந்தே போச்சு, அதை எப்படி விற்கணும்னு கூடத் தெரியலே. வாங்கின புதுசுலே, அதை விக்கலாம்னு ஒரு பங்கு தரகர் கிட்டே போனேன், என்ன என்னமோ போட்டு குழப்பினான், ஒண்ணும் புரியலை, அதை அப்படியே வெச்சுட்டேன். தேடிப் பார்க்கிறேன் " என்றான்.
அந்த நண்பன் அப்படி ஒன்றும் விவரம் தெரியாதவனில்லை. தின்சரி செய்தித்தாள் படித்து, அவனுடைய தொழில் தொடர்பான விஷயங்களில் தேர்ச்சி பெற்று, தினசரி பிபிசி செய்தி பார்க்கிற, ஒரு முதுநிலை அறிவியல் பட்டம் பெற்ற ஒரு கணிணி விற்பன்னன். வணிக இதழ்களிலும் பங்கு சந்தை நிலவரங்கள் பற்றி புரிந்து கொள்ளுகிற மாதிரி செய்திகள் வருவதில்லை. என்றான்.
அப்படியானால், இளைஞர்களில் யாராருக்கு இந்த பங்கு சந்தை பற்றிய விவர ஞானம் இருக்கிறது என்று பார்த்தால், தணிக்கையாளர்கள், நிதி/வர்த்தகம்/பொருளாதாரம் படித்தவர்கள், பங்குத் தரகு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் போன்றவர்கள் தான். அவர்களிலும், நடுத்தர வயதைத் தாண்டியவர்கள், கணிணியுடன் பெரும்பாலும் நேரடித் தொடர்பு இல்லாதவர்கள். இணையத்தை உபயோகிப்பவர்களாக இருந்தாலும், மின்னஞ்சல், அரட்டைக்காகத்தான் அவற்றைப் பயன் படுத்துகிறார்கள்.
தமிழ் செய்தி ஊடகங்களிலும் பங்கு சந்தைக்கென்று உருப்படியான நாளிதழ் வார இதழ் வருகிறதா என்று தெரியவில்லை. அடிப்படை தெரியாதவர்கள், ஆங்கில வணிக இதழ்களைப் படித்து எளிதில் புரிந்து கொள்ள இயலாது.
ஒரு பத்திரிக்கை ஒன்றில் ஒரு செய்தி படித்த நினைவு இருக்கிறது. மறைந்த ஜீ.வி. அவர்களின் நேர்காணல் ஒன்று. அவருடைய நிறுவனம், ' GV Films Ltd' என்ற நிறுவனம் தான், முதல் முதலில் பங்குசந்தைக்குள் நுழைந்த திரைப்பட நிறுவனம். அமிதாபச்சன் செய்வதற்கு ஏழெட்டு வருடங்களுக்கு முன்பாகவே, இதனை வெற்றிகரமாகச் செய்து காட்டியவர். அவரைப் பற்றி அந்த நேர்காணலில் குறிப்பிடும் போது, அவர் பங்குகளை வெளியிட்ட போது, பொது மக்கள், பங்குகளை முண்டி அடித்துக் கொண்டு வாங்க, அவரருடைய தேவையை விட ஐந்து மடங்கு அதிமாக வசூல் ஆனதாம். எவளவு தேவையோ அதை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டாராம், ஆகா எப்பேர்பட்டவர் என்ற ரீதியில் எழுதி இருந்தது.
உண்மையில், பொதுப்பங்கு வெளியீட்டின் போது, தேவைக்கு அதிகமாக பணம் வசூலாவதும் ( oversubscription) அதை அந்த நிறுவனம், விண்ணப்பித்தவர்களுக்கு திருப்பித் தருவதும் இயல்பான ஒரு நடவடிக்கை. இல்லாவிட்டால் SEBI என்கிற சட்டாம்பிள்ளை அமைப்பு, பங்கு வெளியிடும் நிறுவனத்தை சுளுக்கு எடுத்து விடும். இது தெரியாததால், அந்த இயல்பான விஷயத்தை செயற்கரிய செயல் போல அந்த பத்திரிக்கை செய்தியாளர் எழுதுகிறார்.
இது போல பங்கு சந்தை பற்றிய தவறான கற்பிதங்கள், நம் ஊரில் இருக்கின்றன.
பத்ரி குறிப்பிட்டுருந்ததைத் தவிரவும், இன்னும் பல நிறுவனங்கள் பொதுப் பங்குகளை வெளியிடுகின்றன. பல மருந்து நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், செய்தி நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு தயார் செய்து வருகின்றன. [ ஒருக்கால், அவருடைய நிறுவனமும் தயாராகிறதோ? :-) இருக்கலாம். இருந்தாலும் உறுதியாகாதவரை மூச்சு காட்டமாட்டார் என்று நினைக்கிறேன். பிஸினஸ்லைன் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட வர்த்தகம் ஒப்பந்தம் பற்றிய தகவலை கேட்ட போது , சொல்லமாட்டேன் என்று சொன்னவர்தானே அவர் :-) ]
இவற்றை, பங்குத் தரகு நிறுவனங்கள், பெருமுதலீட்டாளர்கள், நிதிநிறுவனங்கள், அயல்நாட்டு நிதி நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள் (Mutual Funds) போன்றவை ஆர்வமாக வாங்கிக் குவிக்கும். இதன் கூடவே, குறைந்த வட்டி விகிதத்துக்கு பணத்தை வங்கியில் சேமித்து வைப்பதை விடுத்து, சிறு முதலீட்டாளர்களும் ஆர்வமாக முதலீடு செய்யவேண்டும். பங்கு சந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கு, பொதுமக்களின் ஈடுபாடும் முக்கியமாக இருக்கவேண்டும். அந்த ஆர்வம் தான், பொதுமக்களுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற கடமைதான் (accountability) தான் நிறுவனங்களை திறம்பட நடத்தி, நல்ல லாபம் ஈட்ட முடியும். அந்த லாபத்தை பொதுமக்களும், ஈட்டுப்பணம் ( dividend), உரிமைப் பங்குகள் (rights issue) ஊக்கப் பங்குகள் ( bonus shares) மற்றவர்களுக்கு ஈடாக அனுபவிக்க முடியும்.
இரண்டு மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட நானும் அதிலே தீவிரமாக ஈடுபட்டு, பின் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டேன். 9/11 க்கு முந்தைய பொற்காலங்கள் அவை. அன்றைக்கு வந்த வணிக இதழ்களில் இருந்து குறிப்பு எடுத்துக் கொண்டு, நாலந்தை மனதிலே குறித்துக் கொண்டு, பங்குத் தரகு அலுவலகத்திலே, BOLT ( BSE OnLine Trading) என்ற திரையில் உட்கார்ந்து கொண்டு, விற்று வாங்கி, துரிதமான கணக்குகள் போட்டு, தீவிரமான ஆராய்ச்சி செய்து, நாம் குறித்திருந்த விலைக்கு கிடைத்தால், ஓவென்று கத்தி ஆரவாரம் செய்து, கொஞ்சம் போல பணத்தை இழந்ததும், ஈட்டியதுமான தருணங்கள் அவை. அப்போது இணையத்தில் இவை எல்லாம் கிடைக்குமென்று தெரியாது. வலை மேய்ச்சல் மைதானங்கள்,. மணிக்கு நாற்பது ஐம்பது ரூபாய்கள் வசூலித்த காலம் அது.
நான்கு மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க தேசத்தில் இருந்து வந்த நண்பன் ஒருவன், ஆன் இருக்கும் ஊரின் பிரபலமான சூதாட்ட மையங்களைப் பற்றியும், அவை தரும் போதை பற்றியும், ஒரு ஞாயிறு பின்னிரவில், நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருந்தான். என்றாலும், அவை, தி.நகர் அபிபுல்லா சாலையில் இருந்த என் பங்குத் தரகரின் அலுவலகம் எனக்கு அளித்த மகிழ்ச்சிக்கு ஈடாக இருக்குமா என்று நினைத்துக் கொண்டேன், என்றாலும் அவனிடம் சொல்லவில்லை.
Comments