தகவல் vs தொழில்நுட்பம் - I நண்பர் காசியின் மறுமொழி

அன்புள்ள நண்பர் பிரகாஷ்,

உங்கள் வலைப்பதிவு சுவாரசியமாக இருக்கிறது. பாராட்டுகள்.

நீங்கள் கேட்டிருந்த சில கேள்விகளுக்கு எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

>>>
1. ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும் என்று கோவையில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறீர்கள். அவருடைய அலுவலகப் பெயர் தெரியும். தொலைபேசி எண் , முகவரியைத் தொலைந்துவிட்டது. அவருடைய அலுவலக எண் டெலிபோன் டைரக்டரியில் இல்லை. ஒரு பிரவுசிங் மையத்துக்கு சென்று, அவருடைய நிறுவனத்தின் பெயரை கூகிளில் தேடினால் ச்சீப்போ என்று துப்புகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவரை அவருடைய அலுவலகத்தில் பார்த்தே ஆகவேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் ?
>>>

ஒரு வேளை அவரின் அலுவலகப்பெயர் முழுதாய் தெரியாத்தால் அல்லது பிழையின்றி சரியான பெயர் தெரியாததால் டெலிபோன் டைரக்டரியில் கண்டுபிடிக்கமுடியாது போயிருந்தால், அச்சடிக்கப்பட்ட டைரக்டரியில் இல்லாத தேடும் வசதிகள் இணையம் வழியாகக் கிடைக்கும் மின்வடிவத்தில் உள்ளன, அதை வைத்து கொஞ்சம் முயற்சி செய்தால் கண்டுபிடிக்கலாம். ஒரு பெயரின்/முகவரியின் தெரிந்த பகுதியை மட்டும் இட்டுத் தேடினால் கிடைக்கும் விடைகளிலிருந்து நமக்கு சரியாகத் தோன்றுவதை பொறுக்கி எடுக்கலாம். அதற்கான சுட்டி:

http://chennai.bsnl.co.in/newdq/dq.asp?URLname=ResName.htm

அப்படியில்லாமல் அவர் நிறுவனம் ரகசியமாக தன் பெயரை வைத்திருந்தாலோ, அல்லது வேறு யார் பெயரிலோ உள்ள டெலிபோனை தாங்கள் பயன் படுத்திக்கொண்டிருந்தாலோ இது நடக்காது. இப்படி ஒருவேளை அந்த நிறுவனமோ உங்கள் நண்பரோ ஒளிந்துகொண்டிருந்தால், யார் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்? தம்பு செட்டி தெருவில் கணேஷ்&வசந்த்தை பார்த்தால் ஒருவேளை அவர்கள் உதவக்கூடும் :-)))

>>>
2. கிளாரிந்தா என்ற நாவலை எழுதியவர் அ.மாதவையாவா அ.மாதவையரா என்ற சந்தேகம் திடீரென்று வந்து விட்டது . அந்த தகவல் அவசியம் இப்போது வேண்டும். கூகிளில் கிடைக்காது. ஒரு சுலமான வழி, மாலனுக்கு போன் செய்து கேட்கலாம். அவர் லைனில் மாட்டவில்லை என்றால்? எப்படி கண்டுபிடிப்பது?
>>>

ஆங்கிலம் மட்டுமன்றி அனைத்து மொழியினரும் தங்கள் மொழியில், தங்கள் சமூகம் பற்றிய தகவல்களை, தேடும் இயந்திரங்கள் அறியும் வண்ணம் பொதுவில் ஏற்றிக்கொண்டிருந்தால் ஒரு நாள் இது சாத்தியமே. இது இன்று வளர்ந்துவருகிறது, ஒரு நாள் சாத்தியப்படலாம். அதற்கு நானும், நீங்களும் உதவப்போகிறோம், நம் வலைப்பதிவுகள் கூட இந்த முயற்சியில் ஒரு அங்கமே.

>>>
4.(sic) முதன் முதலாக இணையத்துக்குள் வந்து தமிழில் புழங்க நினைக்கும் ஒருவர், தமிழ் தொடர்பான, வலைப்பூக்கள், இணையத்தளங்கள், இணையக் குழுக்கள், விவாத மையங்கள், தமிழ் எழுத்துருக்கள், தமிழ் செயலிகள், உலாவிகள் கிடைக்கும் இடங்கள் போன்றவற்றை ஏதேனும் ஒரே ஒரு இடத்தில் ( தளத்தில்) பார்க்க வேண்டும் என்றால் தற்போதைக்கு அது முடியுமா?
>>>

"tell me one or two sites, where i can get all the information about the latest developments in tamil computing" இப்படிக்கேட்பவர் ஒரு பத்திரிகையாளரா அல்லது மொழிபெயர்ப்பாளரா என்பதை நான் மற்றவர்கள் தீர்ப்புக்கு விடுகிறேன். நீங்கள் அவ்வளவு விவரம் கொடுத்ததே அதிகம். அதையெல்லாம் ஒரே சைட்டில் ஒரே பக்கத்தில் காண்பித்தால், இவர் அதைப் பற்றி ஒரு 'மேட்டர்' செய்து பதிப்பிப்பாராமா? அட ராமா? நம் பத்திரிகையாளர் நிலை இவ்வளவு கேவலமாய் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ராய்ட்டர், பிபிசி, பிடிஐ, சிஎன்என் போன்ற நிறுவனங்கள் கொடுப்பதை அப்படியே மொழிபெயர்த்து, எது நம் மக்களுக்கு முக்கியத்துவம் மிக்கது என்பதை அறிந்து வரிசைப்படுத்தத் தெரியாத நம் தொலைக்காட்சி செய்திகள் மாதிரியே இருக்கிறது, உங்கள் பத்திரிகை நண்பரின் நிலை. கடவுள் அவரையும், அந்தப் பத்திரிகையையும், அதைப் அதைப்படிக்கும் வாசகரையும் காப்பாற்றட்டும்.

நிற்க, நீங்கள் கேட்ட அத்தனை தகவல்களுமே *ஒரே* இடத்தில் கிடைக்கத்தான் செய்கின்றன. 'மொசில்லா' தமிழா உலாவியைத்திறந்தால், அத புத்தக்கக் குறிப் பட்டியலில், கிட்டத்தட்ட நீங்கள் குறிப்பிட்ட அத்தனைக்கும் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் காண்பியுங்கள், அவர் அதை வைத்து ஒப்பேற்றட்டும்.

என்றும் அன்புடன்,
-காசி

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I