கல்வி பற்றி பத்ரி

கல்வி பற்றி
பத்ரியின் வலைப்பதிவு உண்மை நிலையை எடுத்து வைப்பதாக இருப்பினும் அதிலே ஒரு 'உடோபியத்தனம்' தெரிகிறது என்பதை மறுக்க முடியவில்லை.

let us be little more pragmatic.

ஆரம்பக் கல்வி உயர்நிலைக் கல்வி, கல்லூரிப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, வேலை வாய்ப்பு என்பவை அனைத்தும் வெவ்வெறு தளங்களில் இயங்குபவை. ஒன்றை முடித்தவுடன் தான் மற்றொன்றிற்கு, வரிசைக்கிரமமாக மாணவர்கள் வருகிறார்கள் என்றாலும், அவை சந்திக்கும் பிரச்சனைகள் வெவ்வேறானவை. இவை அனைத்திற்கும் ஒட்டுமொத்தமான ஒரு தீர்வை சொல்ல முடியாது.

1. ஆரம்பக் கல்வி : இது அரசாங்கத்தின் பாலிசி சம்மந்தப்பட்டது. புள்ளிராஜாவுக்கு செலவு செய்த விளம்பரப்பணத்தில் பாதி அளவை, எல்லோருக்கும் கல்வி என்ற நோக்கத்துக்காக விளம்பரம் செய்வதற்குக் கூட ஒருத்தருக்கும் தோன்றாது. கட்டாய, இலவசக் கல்வி என்ற ஒரு சட்டத்தை கொண்டுவந்தால், கொஞ்சமாவது உருப்படும் . தற்போது எட்டாம் வகுப்பு வரை, பரீட்சை இல்லை என்று பேசுகிறார்கள். மைய அரசு அப்படி சொல்வதால், மத்திய அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகளில் மட்டுமா, அல்லது இந்தியா முழுக்க உள்ள பள்ளிகளிலுமா என்று தெரியவில்லை.

2. உயர்நிலைப் பள்ளிகள்: உயர்நிலைப் கல்வியின் ஒரு முக்கியப் பிரச்சனை, கல்வி முறையில் ஒரு uniformity இல்லாமல் இருப்பதுதான். state boarn, CBSE, ICSE, OSLC, Anglo-Indian, Matriculation மெனுக்கள் பலவிதம். அதில் ஐட்டங்களும், i mean the syllabi ,பலவிதம். ராஜீவ் காந்தி, நவோதயா என்ற மாடலைப் கொண்டுவந்தார். அதுவும் தோல்வி. இந்தக் குறைபாட்டினை முதலில் நீக்கவேண்டும். அடுத்தது கல்வித்தரம்.. பாடதிட்டத்தினை யார் உட்கார்ந்த்து வடிவமைக்கிறார்கள் என்பது பிரம்ம சூத்திரம். அப்படியே படித்து , பரீட்சைத்தாளில், வாந்தி எடுத்தால் தான் மார்க்கு வரும். மார்க்கு வந்தால் தான் கல்லூரியில் சீட்டு. இவை, இயல்பாகவே புத்திகூர்மையும், கிரியேட்டிவிடியும் கொண்ட ஒரு மாணவனின் மூளையை மழுங்கச் செய்கிறது. ஒரு அறிவியல் வினாவுக்கு, தனக்கு தெரிந்தவற்றை வைத்து, சுயமாக யோசித்து, பாடத்தில் இல்லாதவகையில் ஒரு ( சரியான ) தீர்வைக் கண்டுபிடித்து எழுதினால், அவனுக்கு முழு மார்க்கு வரும் என்று உத்தரவாதமில்லை. அவன் எழுதியது அந்த பரீட்சைப் பேப்பரை திருத்தும் ஆசிரியருக்கு புரியவேண்டுமே?

பதின் வயதுகளில் இருப்பவர்களுக்கு புத்திகூர்மையும், கிரகிப்புத் தன்மையும் அதிகம். இன்றைக்கு ஒரு முப்பது வயது வாலிபன், கணிணியில் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்வதற்கும், அதே விஷயத்தை, ஒரு 13 வயது சிறுவன் கற்றுக் கொள்வதற்கும் கால இடைவெளி அதிகம். ( முன்னவர் தடவிக் கொண்டிருக்கும் போது, பின்னவர் சடுதியில் முடித்து விடுவார்). ஆனால், இதை 'நாற்காலியில்' உட்கார்ந்து கொண்டு பச்சை மசியில் கையெழுத்து இடுபவர்கள் அங்கீகரிக்கத் தயாராக இல்லை. ஆகவே, அவன் தன் புத்திசாலித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு, ஒரோண் ஓண்ணு, ரெண்டோண் ரெண்டு என்று டப்பா அடிக்க ஆரம்பித்து விடுகிறான். ஆக, இந்த அமைப்பு மாறவேண்டும் ? எப்படி? என்னை யாராவது கல்வித்துறை அமைச்சர் ஆக்கினால் சொல்கிறேன் :-)

கல்லூரிகள் : இந்தக் கல்லூரிகளைப் பற்றிய விஷ்யத்தில் நான் தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. என் கவனத்தைக் கவர்வது, BA, B.Sc, B.Com போன்ற இளநிலைப் பட்டப் படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடுபவர்கள் தான்.

இப்போது இந்த பட்டதாரிகளில் பெரும்பாலானவர்களை, சென்னையில் தெருக்களில் சந்திக்கலாம். டை கட்டிக் கொண்டு, ஆங்கிலம் பேசிக் கொண்டு, வாக்குவம் க்ளீன, கடன் அட்டை, செல்போன், ஆங்கில அகராதி, மென் பொம்மைகள், டப்பர்வேர் சாமான், ஆம்வேயின் உருப்படாத வஸ்துக்கள், என்று பலதும் கூவிக் கூவி விற்கிறார்கள்.

ஆங்கிலேயர்களின் காலத்தில் அவர்களுக்கு உதவியாளர், குமாஸ்தா, தட்டச்சர் போன்ற பணிகளைச் செய்வதற்கென ஏற்படுத்தப்பட்ட இந்த படிப்புக்களை இன்னும் கட்டிக் கொண்டு அழுவதே அபத்தம். any degree என்று விளம்பரம் செய்யும் இடங்களில் அனுமதிச் சீட்டாகத்தான் இவை பயன் படுகின்றன. ஒரு வேலை விளம்பரம் செய்யப் படும்போது, அவை எந்தப் பட்டப்படிப்பு என்றாலும் பரவாயில்லை என்று சொன்னால், அப்புறம் எதற்காக இத்தனைப் பிரிவுகளை வைத்திருக்க வேண்டும்? ஒரு எலிஜிபிலிட்டிக்காகத்தான், பெரும்பாலும் இந்தப் பட்டங்களை விரும்பி வாங்கி சுமந்து , பின் வேலை கிடைக்கவில்லை தீவிரவாதிகள் ஆகிறார்கள் அல்லது பணக்காரப்பெண்னை கல்யாணம் கட்டிகினு மாமனார் தயவில் செட்டில் ஆகிறார்கள் :-)

இன்றைக்கு பட்டப் படிப்புகள் எத்தனை தூரம் irrelevant என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். பட்டப்படிப்பில் தமிழ் என்று ஒரு துறை இருக்கிறது. இப்போதுள்ள கல்லூரிகளில், பி.ஏ.தமிழ் என்ற வகுப்பை இழுத்து மூடிவிடலாமா என்று யோசித்து வருகிறார்கள். ஆனால், தமிழுக்கு, வேலைவாய்ப்புச் சந்தையில் எவ்வளவு இடம் இருக்கிறது என்று பார்க்கலாம். பத்திரிக்கைத்துறை, சின்னத் திரை, விளம்பரத்துறை, மொழிபெயர்ப்பு, interpretation (இதற்குத் தமிழ் என்ன? ), தமிழை ஒரு சானலாகக் கொண்டிருக்கும் இணையத்தளங்கள் என்று தமிழ் மூலமாகப் பிழைப்பை நடத்தும் வர்த்தக நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த இளைநிலை பட்டப்படிப்பில், சங்ககால இலக்கியம், தமிழ் இலக்கியவரலாறு,காப்பியங்கள் இவற்றை எல்லாம் ஒரு ஓரமாக வைத்து விட்டு, இன்றைக்கு தமிழ் தேவைப் படும் அந்த வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்ற மாதிரி மாணவர்களை தயார் படுத்த முடியாதா? முடியும். ஆனால் அதைச் செய்வதற்குத்தான் ஆளில்ல்லை. இதைப் போல எத்தனையோ கல்வித் துறைகள், முறையாக அப்டேட் செய்யப் படாத பாடதிட்டத்துடன் இருக்கின்றன.

அது போல, இன்றைக்கு sunrise sector என்று சொல்லக் கூடிய, பலபுதிய துறைகள் உருவாகி வருகின்றன. Teleworking ( BPO, Medical Transcription, Specialized Data enty Serivces) , IT enabled services, Capital Market, content management services, Information Services, event management, tourism, hospitality services, Adverstising என்று பல புதிய துறைகள் வருகின்றன. இளநிலைப் பட்டம் நாடுபவர்களை , இந்த வேலைகளுக்கு தேவையான மாதிரி உருவாக்கலாம். பிரபல இன்·போசிஸ், விப்ரோ, போன்ற நிறுவனங்கள் கூட, இடை நிலை தொழில்நுட்ப வேலைகளுக்கு, இளநிலை பட்டதாரிகளை, வரவேற்கத்துவங்கி இருக்கின்றார்கள், விப்ரோ நிறுவனம், WASE ( Wipro Academy of software Excellence) என்ற ஒரு திட்டத்தின் மூலம், இளநிலை அறிவியல் பட்டதாரிகளைத் தேர்ந்தெடுத்து, தகுதியானவர்களை, வேலைக்கு எடுத்து, அவர்களை மேல் படிப்புக்கும் அனுப்புகிறார்கள்.

படிப்புக்கும் வேலைக்கும் சம்மந்தமில்லை . முன்னது படிப்பு அறிவு விருத்திக்கு, பின்னது பூவாவுக்கு என்கிற சித்தாந்தம் நம் நாட்டுக்கு ஒத்து வராது. படிப்பும் வேலையும் நேரடித் தொடர்பு கொண்டது.


Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

9 weird things about prakash

மிக்ஸர் - I