Eelakanthan

ஈழகாந்தன்

நான் பள்ளியில் படித்த காலத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சனை உச்ச கட்டத்தில் இருந்தது. இலங்கைத் தமிழர் மீதும், விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதும், தமிழக மக்கள் இயல்பான, ஒரு அனுதாபம் கொண்டிருந்த காலகட்டம் அது. புலிகளைப் பற்றிய செய்திக் குறிப்பு அடிக்கடி தேவி வார இதழில் அடிக்கடி செய்தி வரும். பிரபாகரன் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் கூட அதிலே படித்ததாக நினைவு. ஆனாலுm, என் வயது காரணமாகவும் அனுபவமின்மை காரணமாகவும், இலங்கைப் பிரச்சினை என்றால் என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் என்னை பெருமளவில் ஈர்த்தது, அந்த சமயத்தில், எங்கள் பள்ளியில் சாரி சாரியாக வந்து சேர்ந்த இலங்கைத் தமிழ் மாணவர்கள்தாம்.

ஈழகாந்தன், அவனுடைய அண்ணன் வேழவேந்தன், சதானந்தம், அவன் தம்பி முருகானந்தம், லதாங்கினி, நித்யா வாமதேவன், தனுஜா, ரஜனி ( பெண்) , humpty கிருஷ்ணகுமார், எனக்கு சீனியராக சேர்ந்த கிறிஸ்ரி தம்பிராஜா புவனேந்திரன், என்று பலர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் மிகுந்த வசதி படைத்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால், அவர்களுடைய சகோதர சகோதரிகள் , பெற்றோர் கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற தேசத்தில் வசித்தனர்.

இதிலே எனக்கு மிக நெருங்கிய தோழனாக விளங்கியவன், ஈழகாந்தன். ஏழாம் வகுப்பு படிக்கும் போது, என் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்த நாள் முதலாக என் நண்பனானவன். ஏழாம் வகுப்பு என்பது அப்படி ஒன்றும் விடலைத் தனமான வயது இல்லை. சோகம், துயரம் போன்ற உணர்ச்சிகளை எல்லாம், அப்போதைய ஒற்றை அலைவரிசைத் தொலைக்காட்சியின் செவ்வாய்க்கிழமை நாடகங்களும், ஆவணக்காப்பகம் தேடிக்கொண்டிருக்கும் சில ஆதிகால சினிமாப் படங்களும் கற்றுத் தந்திருந்தன. எனவே, அவன் சில பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருந்தான் என்று என்னால் கண்டு பிடிக்க முடிந்தது. ஆனாலும் அது என்னவென்று நான் கேட்கவில்லை. ஏற்கனவே துயரத்தில் இருப்பவனை மறுபடியும் ஏன் கேள்வி கேட்டு நோண்டவேண்டும் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டாலும், அது உண்மையான காரணம் இல்லை. அவன் தன் பிரச்சினையை பற்றிச் சொன்னால், அதற்கு நான் எந்த மாதிரி ரீயாக்ட் செய்ய வேண்டியிருக்கும் என்று குழப்பமாக இருந்தது. அந்தப் பேச்சினைத் தவிர்த்து, மீதி அனைத்தையும் பேசுவோம். ராதாகிருஷ்ணன் தெருவில் இருந்த ஒரு ·ப்ளாட்டில் வசித்தான். ஒருமுறை அவனுடைய வீட்டிற்கு சென்றிருந்த போதுதான், அவன் தன் பாட்டியுடன் மட்டும் வசித்து வருகிறான் என்று தெரியவந்தது. அப்பா அம்மா எங்கே என்று கேட்ட போது, அவர்கள் இல்லை என்றான். நான் மேலே ஏதும் கேட்கவில்லை.

சிறுவர்கள் நட்பு பாராட்டுவதற்கும் பகை கொள்வதற்கும் காரணமே தேவையில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களானோம். நாங்கள் நண்பர்களாகிவிட்டோம் என்றே எனக்கு முதலில் தெரியாது. ஒரு முறை, இன்னொருவன் என்னிடம் வந்து . எங்கேடா, உன் ·ப்ரெண்டு காந்தன் என்று கேட்ட போது தான் நாங்கள் நண்பர்களான சேதியே எனக்கு தெரியவந்தது. ஆஹா என்று சிலிர்த்துக் கொண்டேன். வீட்டிற்கு அழைத்துச் செல்ல மட்டும் பயம். பாட்டி ஏதேனும் சொல்வார்களோ என்று.(ஒரு அடல்ட் ஆகும் வரை பாட்டிமார்களின் கண்காணிப்பில் வளர்பவர்களின் உள இயல் பற்றி எனக்கு சில கருத்துக்கள் இருக்கின்றன. அது போன்ற ஒரு நாலைந்து பேரை எனக்கு நேரடியாக அறிமுகம் உண்டு. அது பற்றி பிறகு ஒரு நாள்..)

பொறாமை வரும் அளவுக்கு நேர்த்தியாக அவன் உடை இருக்கும். முகமெங்கும் லேசான வடுக்கள். ( அம்மைத் தழும்புகள் ) ஆனால், அது பார்க்க விகாரமாக இருக்காது. சில பெண்களுக்கு முகப்பருக்கள் கூட அழகாக இருக்கும் இல்லையா , அது போல அவனும் வசீகரமாகத்தான் இருந்தான். அவன் பேச்சும் வசீகரமாக இருக்கும். ஆனாலும் பல வார்த்தைகள் புரியாது. வார்த்தைகள் புரியாவிட்டாலும் விஷயம் புரியும்.

ஏழாம் வகுப்பில் இருந்து எட்டாவது வகுப்புக்கும் ஒரே செக்ஷனுக்கு சென்றோம். காலாண்டுப் பரீட்சை முடிவு நடந்தது. லீவு முடிந்து ஸ்கூலுக்கு சென்ற முதல் தினம் வரவில்லை. எனக்கு அவனிடம் சொல்ல வேண்டிய விஷயங்களும் காட்ட வேண்டிய சில படங்களும் நாணயங்களும் இருந்தன.

அவன் பெயர் ரோல் காலிலும் அழைக்கப் படவேயில்லை. நாலைந்து நாட்கள் அதைப் பற்றியே நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தோம். என் வகுப்பில் இருந்த இன்னொரு இலங்கை மாணவியான லதாங்கினி, ஈழகாந்தன் டீசி வாங்கிக் கொண்டு ஊருக்கு சென்று விட்டான் என்று சொன்னாள். எந்த ஊருக்கு என்று கேட்ட போது, ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்து விட்டு, தெரியாது என்று சொன்னாள். ( அவள் எதற்காக என்னை அப்படி
உற்றுப் பார்த்தாள்? )

யோசித்து பார்த்த போதுதான், அவனுடைய பெயர் தவிர, அவனைப் பற்றி வேறு எதுவுமே தெரியாது என்பது எனக்கு தெரிந்தது. புத்தகம் வாங்க லஸ் வித்யா விஹாருக்கு செல்கிறேன் என்று பேர் பண்ணி விட்டு, ஒரு நாள் அந்த ·ப்ளாட்டுக்கு சென்றேன். அனைத்து வீடுகளும் ஒரேமாதிரி இருந்ததால், எந்த வீடு என்று கண்டுபிடிக்க இயலவில்லை. அங்கே இருந்த வாட்ச்மேனிடம் கேட்ட போது, அவர்கள் காலி செய்து கொண்டு
போய்விட்டதாகக் கூறினார்.அதற்கு மேல் எந்த முயற்சி செய்வது என்று தெரியவில்லை.

எங்கேதான் போனான் ?

Comments

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Mani Ratnam's Guru - Review

வரைவின் மகளிர் from பாண்டவபுரம்