Monday Magic - விருந்தினர் பக்கம்.

ஒரு கேள்வி - ஒரு பதில்

கேள்வி :

நடந்து முடிந்த அடிலேய்ட் டெஸ்ட் போட்டியில், திராவிட் மைதானத்தில் கடவுள் போல தோற்றமளித்தார் என்று கங்குலி சொன்னதில் இருந்து என்பது துவங்கி, பலரும்,இந்திய அணி பெற்ற வெற்றியை தலையில் தூக்கி வைத்து ஆடினர். சுனில் கவாஸ்கர் மட்டும்தான், " வெற்றி பெற்றது சந்தோஷம் தான், ஆனால், தொடரை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று சொன்னதாக மீடியாவில் செய்தி வந்தது. இரண்டாவது டெஸ்ட் நடந்து கொண்டிருக்கும் போக்கையும், கவாஸ்கர் சொன்னதையும் வைத்துப் பார்க்கும் போது உங்களுக்கு இப்போது என்ன தோன்றுகிறது?


பத்ரி சேஷாத்ரி:

ஆஸ்திரேலியா உலகிலேயே நம்பர்-1 அணி. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்தத் தொடரின்போது அவர்களது முன்னணிப் பந்து வீச்சாளர்கள் இருவர் அணியில் இடம் பெற முடியவில்லை. ஒருவர் தடைசெய்யப்பட்ட ஒரு மருந்துப் பொருளைப் பயன்படுத்தியதற்காக என்று அணியிலிருந்து நீக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். மற்றொருவர், காயம் பட்ட வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ரா. மழையால் பாதிக்கப்பட்ட முதல் டெஸ்டிலேயே இந்திய அணி எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு மானத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இதற்கு நாம் இதற்கு முந்தைய ஆஸ்திரேலியப் பயணத்தை நினைவுகூர வேண்டும். ஒரு டெஸ்டில் கூட ஆட்டத்தை டிராவுக்குக் கொண்டுசெல்லும் திறமை கூட நமக்கு அப்பொழுது இருக்கவில்லை. அதனால் முதலாம்
டெஸ்ட் டிராவில் முடிவடைந்த போதே ஆஸ்திரேலியாவின் செய்தித்தாள்கள் முதல், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வரை இப்பொழுது ஆட வந்திருக்கும் இந்திய அணி, 'திறமை எப்படியானாலும், தன்னம்பிக்கை வாய்ந்தது. தோற்பதானாலும், போராடிவிட்டுத்தான் தோற்கப் போகிறார்கள்' என்பதனைப் புரிந்து கொண்டனர்.

இந்த டெஸ்ட் தொடரில் பார்க்கும்போது, இந்தியா, ஆஸ்திரேலியா இருவருக்குமே பேட்டிங்தான் வலுவானது. ஆஸ்திரேலிய சொந்த மண்ணில் விளையாடுவதாலும், இந்திய பவுலிங் புதிய களத்தில் விளையாடுவதாலும், ஆஸ்திரேலியாதான் தொடரை ஜெயிக்கும் என்று அனைவருமே முடிவு செய்திருந்தனர். இந்தியா ஜெயிக்க வேண்டுமானால் யாராவது ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ அசாதாரணமான முறையில் விளையாட வேண்டும். ஆஸ்திரேலியர்கள் அவர்களது சாதாரண முறையை விட சற்றே கேவலமாக விளையாட வேண்டும்.
இதுதான் அடிலெய்டில் நடந்தது. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்,
சாதாரணமாக இருந்தது - அதாவது 500 ரன்களுக்கு மேல் எடுப்பது என்பது அவர்களுக்கு சாதாரணம். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் அசாதாரணம். திராவிட், லக்ஷ்மண் ஆகியோர் செய்தது அசாதாரணம். இந்த அசாதாரணங்கள் போதவில்லை, இந்தியா ஆஸ்திரேலியாவுடைய ரன்களை விடக் குறைவாகவே எடுத்திருந்தது முதல் இன்னிங்ஸில். அடுத்து
ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த இரண்டாவது இன்னிங்ஸ் அசாதாரணம், இந்தியாவின் பவுலிங்கும் அசாதாரணம். ஆஸ்திரேலியா படு மோசமாக பேட்டிங்கும், அகர்கார் படு சிறப்பாக
பவுலிங்கும் செய்தனர். தொடர்ந்து இந்தியா விளையாடுகையில் இந்தியாவின் பேட்டிங் அசாதாரணம், முக்கியமாக திராவிட். ஆஸ்திரேலியாவிற்கு கில்லெஸ்பியினால் பந்து சரியாகப் போட முடியாதுகால் நரம்பு இழுத்துக் கொண்டதும் ஒரு காரணம்.

ஆக, பல காரணங்களும் ஒன்று சேர்ந்து ஆஸ்திரேலியாவை விடக் குறைந்த திறமை உள்ள இந்திய அணியை வெல்லச் செய்தது. அதற்காக நாம் வெற்றிக் களியாட்டத்தில் ஈடுபட்டிருக்கக்
கூடாது என்பதில்லை. நிச்சயமாக நாம் சந்தோஷ வெள்ளத்தில் குதித்தது தவறேயில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஒரே அணி இந்தியாதான்.உலகமே கொண்டாடியது இந்த தினத்தை.

ஆனால் இதனால் நாம் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் கண்ணை மூடிக்
கொண்டோ, அல்லது, கஷ்டப்பட்டோ, எப்படியாயினும் ஜெயித்து விடுவோம் என்றால் அது நடக்காது என்பதுதான்காவஸ்கரின் சொல்லில் தென்படுகிறது.அதை, மெல்போர்ன் போட்டியின் முதல் மூன்று நாள் ஆட்டங்கள் நிலைநிறுத்திவிட்டது. இந்த டெஸ்ட் போட்டியிலும் இந்தியா ஜெயிக்க இப்பொழுதும் வாய்ப்புள்ளது. ஆனால் அதுநடந்தால் இந்தியாவின் மூன்று/நான்கு ஆட்டக்காரர்கள் தங்கள் வாழ்நாளின் மிகச் சிறந்த விளையாட்டினை விளையாடியிருப்பர்.

ரிக்கி பாண்டிங் இரண்டு டெஸ்டிலும் இரட்டை சதம் அடித்துள்ளார். அதற்காக
அவரொன்றும் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டமாதிரியே தெரியவில்லை. அவரிடம் கேட்டால், அவர்இதைப்போல பல செய்துள்ளேன், இனியும் செய்வேன் என்றுதான் சொல்லியிருப்பார். ஆனால் திராவிட்டிடம் கேட்டால் அவரே சொல்வார் தனது அடிலெய்ட் இன்னிங்ஸ் வாழ்நாளிலேயே மிக முக்கியமானதொரு ஆட்டம் என்று.

( வலைப்பூக்களில் நமக்கு பரிச்சயமான பத்ரி , தொழில் முறையில் ஒரு கிரிக்கெட்நிறுவனத்தை நடத்தி வருபவர். மரத்தடி, ராயர்காபிகிளப், தமிழோவியம் போன்ற இடங்களில் கிரிக்கெட் சம்மந்தமான கட்டுரைகள் பலவற்றை எழுதி இருக்கிறார்.)

Comments

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Mani Ratnam's Guru - Review

வரைவின் மகளிர் from பாண்டவபுரம்