Reunion

30 வருடங்கள் கழித்து எழுதப் போகும் சுயசரிதையில் இருந்து முன்னதாகவே ஒரு சில பக்கங்கள்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு, மணிகண்டன் என்ற நண்பன் ஒருவனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால் மணிகண்டன் என்ற பெயரிலே எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது.

" எக்ஸ்க்யூஸ் மீ.... உங்களுக்கு எந்த நம்பர் வேணும்...? "

" அடப்பாவி ஜேபி, ஞாபகம் இல்லியா? நாந்தாண்டா மணி. டாம்கேட். ஞாபகம் வரலே? "

டாம்கேட் என்றதும் சட்டென்று நினைவுக்கு வந்துவிட்டது. கல்லூரியில் கூட படித்தவன். பூனைக்கண்ணன். நெய்வேலிக்காரன். இவன் எப்படி இங்கே? என் நம்பர் எப்படிக் கிடைத்தது? என்ன செய்து கொண்டிருக்கிறான்?

எங்கெங்கோ அலைந்து திரிந்து நம்பரைப் ப்டித்திருக்கிறான். பிறகு நீடித்த அந்த முக்கால் மணிநேர தொலைபேசி உரையாடலிலே, என் கூடப் படித்த நண்பர்கள், நண்பர்கள் அல்லாதவர்கள், நண்பர்களாக இருந்து முறைத்துக் கொண்டு போனவர்கள், லட்டர், வாலன்டைன் கார்டு வாங்க மறுத்தவர்கள் , வாங்கி விட்டு பிரின்ஸியிடம் போட்டுக் கொடுத்தவர்கள் என்று அத்தனை பேரும் இப்போது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரங்களைப் புட்டு புட்டு வைத்தான்.

மூன்று மாதங்களாக இந்த வேலையைச் செய்து, முக்கால்வாசிப் பேரை ட்ரேஸ் செய்து கண்டு பிடித்திருக்கிறான்,. வெளிதேசங்களில் இருக்கிறவர்கள் தவிர்த்து மற்ற அனைவரும், அவர்தம் மனைவி மக்களுடன் ஒரிடத்தில் கூடி சந்திக்க முடிவு செய்திருப்பதாகவும், நானும் வரவேண்டும் என்றும் சொன்னான். அடுத்து வருகிற சனி மாலை என்று முடிவானது.

" அதுலே சின்ன சிக்கல் மணி... குழந்தையை எல்லாம் கூட்டிட்டு வர முடியாது. ஏன்னா குழந்தை இல்லை"

" ஓ.. ஸாரிடா... அப்ப ஒய்·பை கூட்டிட்டு வந்து இரு... "

" அதுலேயும் ஒரு சின்ன சிக்கல் மணி. ஒய்·பை கூட்டிட்டு வர முடியாது. ஏன்னா இன்னும் கல்யாணம் ஆகலே "

" பரதேசி... இன்னும் நீ மாறவேயில்லியாடா.... ஒழுங்கு மரியாதையா வந்து சேரு. இடம் தாபா எக்ஸ்பிரஸ், டைம், ஆறு மணி. "

சனிக் கிழமை .6.30 PM

மொத்தம் பதினெட்டு பேர்தான் தேறினார்கள். நிறையப் பேர், பிற மாநிலங்கள், பிற தேசங்களில் சிதறிக் கிடந்தார்கள். அதில் பலரை, கிட்டதட்ட பத்து வருடங்கள் கழித்து சந்திக்கிறேன்.

" ஹாய் கண்ஸ். எப்பிடிரா இருக்கே? சி·பிலேயா இருக்கே? வேற ஏதோ சொன்னாங்களே? "

" தலையா? சிந்திச்சு சிந்திச்சு, தல முடிய தாராந்துட்டேன் மச்சி. பாக்க ஜீனியஸ் லுக் இல்லே? "

" குண்டூஸ் மீனாவா நீ? ஆள்லே பாதிய காணோமேடி? "

" லக்ஷ்மண், நீ இருக்கிறது மெல்போர்னுக்கு பக்கத்திலேயாடா? "

" நீ எப்பத்துலேந்துடா தம் அடிக்க ஆரம்பிச்ச? தீபாவுக்கு தெரியுமா? "

" கோமா... கானா ஒண்ணு எடுத்து உடு மச்சி... இஞ்சினியரிங் கம்பெனி மானேஜர்னா கானா
பாட்டு எல்லாம் பாடக் கூடாதா என்ன? சும்மா பாட்றா..."

" மகி, பொண்ணு பேரு என்ன? பாக்க அழகான ராட்சசி மாதிரி இருக்கா"

" மனோஜ் செத்துப் போய் இன்னையோட 11 வருஷம் ஆகுது.. ஞாபகம் இருக்கா? "

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசையில் இருந்தார்கள். எலக்ட்ரானிக்ஸ் படித்தவன், தமிழ் நாடு போலீஸில் சப்.இன்ஸ்பெக்ட்டராக இருக்கிறான். பிஎச்டி செய்ய ஆசைப்பட்டவள், ஹோம் மேக்கராக இருக்கிறாள்.
கம்ப்யூட்டரே வேணாம் என்று ஓடி, எம்பிஏ செய்தவன், ஸா·ட்வேர் கம்பனி வைத்திருக்கிறான். வருஷா வருஷம் முதல் மார்க்கு வாங்கும் தீனா, சூரியன் எ·ப்எம்மிலே ரேடியோ ஜாக்கி. இன்னொரு கேஸ், ஏபிஎன் ஆம்ரோவிலே எக்ஸிக்யூட்டிவ்,. என் கதையைக் கேக்கவே வேணாம் :-)

ஹாஸ்டலில் ஆடிய ஆட்டங்கள்,. கலாட்டாக்கள், சண்டைகள், மறக்க முடியாத சினேகிதன் மரணம், திருமணத்தில் முடிந்த காதல் கதை, கல்லூரி ஸ்டிரைக் என்று பழசை எல்லாம் பேசிப் பேசி மாய்ந்து, பலமான விருந்து சாப்பிட்டு, டான்ஸ் ஆடி, பாட்டு பாடி, 'தீர்த்தவாரி' தவிர்த்த மற்ற அட்டூழியம் அனைத்தும் செய்து கழிந்த அந்த மறக்க முடியாத சனிக்கிழமைக் கொண்டாட்டம், இரவு 10.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.

அடுத்த வருடம் மீண்டும் சந்திக்க வேண்டும். யாஹ¥விலே க்ரூப் ஒன்று தொடங்கி,ஒருத்தருடன் ஒருத்தர் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும், எடுத்த புகைப்படங்களையெல்லாம் வலையில் ஏற்றி வைக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானம் போட்டு விட்டுப் பிரிந்தோம்.

கிடைத்த புகைப்படங்களையெல்லாம் வலையிலே ஏற்றி எல்லாருக்கும் நைவேத்தியம் செய்து, ஆன்லைன் அரட்டை அடித்து முடித்து விட்டு, பொறுமையாக இங்கே எழுதலாம் எழுதலாம் என்று தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இன்றைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைத்தது.

Comments

writerpara said…
டெம்ப்ளேட்டை மாற்றினால் போதாது. ஒழுங்காக, விடாமல் எழுதவேண்டும்.
SnackDragon said…
Ada aniyaayamee?
Where is my comment :-(
Template looks good.

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்