ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே.....

இந்த வார 'நேசமுடன்' இதழிலே, செல்லம்மா பாரதி எழுதிய நூல் பற்றி
ஆர்.வெங்கடேஷ் எழுதியிருந்ததைப் படித்ததும், ரா.காகியில் நடந்த பழைய கருத்துப் பரிமாற்றம் நினைவுக்கு வந்து விட்டது.
நடந்தது, 2003 மார்ச்சில்.

கேள்வி:

அது சரிங்க ஹரி சார்,

பாரதி , செல்லம்மா மீது மாறாக் காதல் கொண்டிருந்தான்
என்பது சரி? இதிலே செல்லமாவோட பார்வை என்ன?

படிச்சதிலேயும் , கேள்விப்பட்டதிலேயும் , பாரதி வாழ்ந்த கால
கட்டத்துலே, எல்லாரும் அவரை, 'என்ன ஓய் ன்னு எகத்தாளமா
கூப்பிட்டவங்கதான் அதிகம்ன்னு தெரிய வரது .

அப்படிப்பட்ட சூழ்நிலையிலே, செல்லம்மா என்ன நெனைச்சாங்க?
என் புருஷன் ஒரு மகாகவிங்கறஒரு பெருமிதம்? இன்னா
ஒரு எக்செண்ட்ரிக் மாதிரி இருக்கானேங்கற ஒரு மிரட்சி?
கட்டிக்கிட்டோம், இனி இவன் தான் எனக்கு எல்லாம் என்கிற
ஒரு மரபு வழிவந்த ஒரு கட்டுப்பாடு? என் மேல இவ்ளோ
அன்பான்னு ஒரு வியப்பு ?

அப்படியே அவங்களுக்கும் இது மாதிரியே அன்பு காதல் இருந்ததுன்னா
அதை அவங்க reciprocate செஞ்சாங்களா?

what is chellamma's perspective?

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளின் துவக்கத்தில் இருந்த
சமூக கலாசார அரசியல் பின்னணியிலே, அந்த காலகட்டத்துல
வாழ்ந்த ஒரு பிராமணன், எப்படி இருக்கணுமோ, அப்படி என் ஊட்டுக்காரர் இல்லையே ங்கற ஆதங்கம் துளிக்கூட செல்லம்மாவுக்கு இல்லன்னுஉங்களால சொல்ல முடியுமா ஹரி சார்? மகாகவியின் அருமை பெருமைகளை உலகம் உணர்ந்த பின் செல்லம்மாவோட கருத்து மாறுபட்டிருக்கலாம், அதாவது இப்பேர்பட்ட மனுசனை, உப்பு புளி மெளகாய், பொண்ணு கல்யாணம், நகை நட்டுன்னு போட்டு தொந்தரவு பண்ணிட்ட்மேன்னு.

ஆனா, பாரதியும், செல்லம்மாவும் ஒன்றாக வாழ்ந்த அந்த காலகட்டத்துலே?

எல்லார் மாதிரியும் தரையில நடக்காம, இவர் மட்டும் ஏன் இப்படி
வானத்துல பறக்கறார் ன்னு அவங்க செல்லம்மா நெனைச்சிருக்க
துளி கூட வாய்ப்பே இல்லீங்களா?

ப்ளீஸ், தெளிவு படுத்துங்கள்.

அன்புடன்
ப்ரகாஷ், சென்னை

பதில் :

வாங்க பிரகாசரே.

[இன்னா ஒரு எக்செண்ட்ரிக் மாதிரி இருக்கானேங்கற ஒரு மிரட்சி? கட்டிக்கிட்டோம், இனி இவன் தான் எனக்கு எல்லாம் என்கிற ஒரு மரபு வழிவந்த ஒரு கட்டுப்பாடு? என் மேல இவ்ளோ அன்பான்னு ஒரு வியப்பு]

திருமணம் நடந்த அன்று மாலை நலங்கு. செல்லம்மாள் சொல்கிறார். "அக்காலத்தில் விவாகம் முடிந்தவுடன், கணவன்
மனைவி பேசுவதில்லை. கணவனைக் கண்டால் ஓடி ஒளிய வேண்டும். பாரதியார் மட்டும் இதற்கு விலக்காக நடக்க வேண்டுமென்பார். எல்லோருக்கும் எதிரில்

தேடக் கிடைக்காத சொன்னமே! - உயிர்ச்
சித்ரமே! மட அன்னமே - அரோ
சிக்குது பால் தயிர் அன்னமே - மாரன்

சிலைமேல் கணை
கொலைவே லென
விரிமார் பினில்
நடுவே துளை

செய்வது கண்டிலை இன்னமே - என்ன
செய்தேனோ நான்பழி முன்னமே.... (இன்னும் சில அடிகள் இருக்கின்றன. பாடலின் கடைசியில் இப்படி வருகிறது:)

இனியாகிலும்
அடிபாதகி

கட்டியணைத்தொரு முத்தமே - தந்தால்
கைதொழுவேன் உனை நித்தமே

என்று என்னைப் பார்த்துக் காதல் பாட்டுகள் பாடுவார். நான் நாணத்தினால் உடம்பு குன்றி, எல்லோரையும் போல் சாதாரணமான ஒரு கணவன் கிடைக்காமல், நமக்கென்று இப்படி ஓர் அபூர்வமான கணவர் வந்து வாய்க்க வேண்டுமா என்று எண்ணித் துன்புறுவேன்."

இவ்வளவு விலாவாரியா, 'எல்லாரையும் போல ஓடி ஒளியவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை என் புருஷன்' என்று கோடி காட்டிவிட்டு, 'முத்தம் கொடடி கண்ணே' என்றெல்லாம் சொன்னதை விவரித்துவிட்டு, 'சாதாரணமாய் இல்லாமல் அபூர்வமாய் ஒன்று' என்று பெருமிதப்பட்டுவிட்டு, 'துன்புறுவேன்' என்று சொல்வது, ஒரு ஒளஒளாக்காட்டிக்குத்தான்,இல்லையா? சந்தோஷம் இல்லாமயா இவ்வளவு தூரம் சொல்றாங்க? எந்தப் பெண்ணுக்கு இவை துன்பத்தை விளைவிக்கும்,
கொஞ்சம் சொல்லுங்க பாப்போம். 'என் புருஷன் இப்படியாக்கும்' என்று ஆரம்பிப்பார்கள். சட்டென்று திசையை மாற்றுவார்கள். 'அதுக்கு ஒண்ணும் தெரியாது' என்பார்கள். 'அவருக்குத் தெரியாததில்லை' என்று பொருள். 'ஒரு நிமிசம் தூஉங்க விட மாட்டான் மனுசன்' என்று சிரிப்பார்கள். தலையில் கூட அடித்துக் கொள்வார்கள்.
அவங்களுக்கு இது தங்களோடைய சந்தோஷத்தைத் தெரியப்படுத்தும் வழிங்கண்ணே. (நீரு பிரம்மச்சாரியோ?)

மரபு வழி வந்த கட்டுப்பாடு என்று அன்பை நாம் எடை போடக் கூடாதுங்க பிரகாசரே. அப்புறம் எதுதான் உண்மை?
கோபமும், ஆதங்கமும், வருத்தமும், இயலாமையும் மட்டுமா? அப்படி நினைக்கும் மனசு ஆரோக்கியமான மனசா?

[அப்படியே அவங்களுக்கும் இது மாதிரியே அன்பு காதல் இருந்ததுன்னா அதை அவங்க reciprocate செஞ்சாங்களா?]

அவங்க என்ன மரமா, கல்லா, ஜடமா, பாறையா, தனக்குக் கிடைத்ததைத் திரும்பத் தராமல் இருப்பதற்கு? அவங்களும் மனுஷிதானே? அன்பை அன்பால்தானே ஈடுகட்ட முடியும்? அதைச் செய்யாமல் இருந்திருப்பாங்க என்று எப்படிச் சொல்றது பிரகாசா? ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி வெளிப்படுத்துவாங்க. இவங்க கொஞ்சம் வெளிப்படையாச் சொல்லாம
இருந்திருக்கலாம். அல்லது சொல்லியிருக்கலாம். நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவங்களைப் பற்றி யாரும் அதிகம் எழுதவில்லை. கிடைத்திருக்கும் துணுக்கு வாசகங்கள், சம்பவங்களை வைத்துத்தான் நாம் அவங்களுக்கு ஒரு வடிவம் கொடுக்க வேண்டியிருக்கிறது. But, there is no evidence on her not reciprocating his love. அதை மட்டும் சொல்ல முடியும். அப்படித் திரும்பக் கிடைத்திருக்காவிட்டால், தொடர்ந்து ஒரு பாறையை,மரத்தைக் காதலித்துக் கொண்டிருக்க பாரதியால் மட்டும் முடிந்திருக்குமா?

[ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளின் துவக்கத்தில் இருந்த சமூக கலாசார அரசியல் பின்னணியிலே, அந்த காலகட்டத்துல வாழ்ந்த ஒரு பிராமணன், எப்படி இருக்கணுமோ, அப்படி என் ஊட்டுக்காரர்
இல்லையே ங்கற ஆதங்கம் துளிக்கூட செல்லம்மாவுக்கு இல்லன்னு உங்களால சொல்ல முடியுமா ஹரி சார்?]


அப்படி ஒரு ஆதங்கம் இருந்தது என்று உங்களால் உறுதியாச் சொல்ல முடியுமா பிரகாசா? :-) (ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூறு என்று சொல்ல வருகிறீரோ?) இருந்திருக்கும். நான் மறுக்கவில்லை. அது அவர்களுடைய வாழ்க்கையில்,அன்புப் பரிமாற்றத்தில் குறுக்கே வரவில்லை. இல்லையா? இல்லாவிட்டால் அந்தப் புருஷனோடு பாண்டிச்சேரியில்
எப்படிக் குப்பை கொட்டியிருப்பாள் அம்மணி? அதுதானே ஒரு வாழ்வின் பூரணத்தைத் தீர்மானிப்பது பிரகாசா?

நிறைய சொல்ல வேண்டும் சாமி இதில். கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய்விட்டாள் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். பிறகு சமாதானமானதைக் காட்டினார்கள். பாரதி, அவளிடம் கோபித்துக் கொண்டு
போவதையும், பாரதிதாசன் ரயில் நிலையத்துக்கு வந்து யாரோ ஒருத்தருடைய கூத்து நடக்கப் போகிறது என்று சொல்லி மனசை மாற்றி அழைத்து வந்ததையும் காட்டினார்கள்.

அன்பிருக்கும் இடத்தில் கருத்து வேறுபாடுகளே இருக்காது என்று நினைப்பது மடமை. அன்றாட வாழ்வில் கோபம் வரும்,சண்டை வரும், உணர்ச்சிகள் கொப்புளிக்கும், ஒருவரை ஒருவர் ஏசலும் நடக்கும். இது வாழ்வின் ஒரு பகுதி. இது இல்லாமல் ஒரு வாழ்க்கை இருக்கவே முடியாதுங்கணே! ராமர் காட்டுக்குக் கிளம்பும் போது சீதை போடாத சண்டையா? நாஞ் சொல்றது வால்மீகியில. மூணு சர்க்கம் நீளத்துக்கு அவங்க வாதிக்கிறாங்க. கடைசில சீதை இராமனைத் திட்றாங்க. 'டேய்! நீயெல்லாம் ஒரு ஆம்பிளையாடா!' என்றே கேட்கிறாங்க. 'எங்கப்பன் ஒரு பொம்பளையை (அலியை) எனக்குத் தேடிப்பாத்துக் கல்யாணம் பண்ணி வச்சுட்டான்' என்று பொருமறாங்க. (இதெல்லாத்தையும்
இங்கிலீஷ்ல எழுதி சென்னை ஆன்லைனில் வந்தது. அங்கே ஆவணத்தில் இருக்கின்றன. படிக்கலாம்.)

ஆனால் அப்படித் திட்டினாங்களே அது உண்மையா, அப்படித் திட்டிய பிறகு அவனை இறுகத் தழுவிக் கொண்டு அவன் மார்பைக் கண்ணீரால் நனைச்சாங்களே அந்தக் கண்ணீர் உண்மையா பிரகாசா?

[மகாகவியின் அருமை பெருமைகளை உலகம் உணர்ந்த பின் செல்லம்மாவோட கருத்து மாறுபட்டிருக்கலாம், அதாவது
இப்பேர்பட்ட மனுசனை, உப்பு புளி மெளகாய், பொண்ணு கல்யாணம், நகை நட்டுன்னுபோட்டு தொந்தரவு பண்ணிட்ட்மேன்னு. ஆனா, பாரதியும், செல்லம்மாவும் ஒன்றாக வாழ்ந்த அந்த காலகட்டத்துலே?]


உங்களுக்கும் எனக்கும் பாரதி மகாகவி. அவங்களுக்கு, 'அவங்களுக்கே அவங்களுக்கான ஒரு மனுசன்'. அதை நாம உணரணும். திருச்சியில் ஒரு பாரதி விழா நடந்தது. அந்தச் சமயத்தில் செல்லம்மாவை ஒரு வீட்டில்
அமர்த்தியிருந்தாங்க. பாரதிதாசன் அவங்களைப் பார்க்கப் போனார். கூடவே திருலோக சீதாராம் போன்ற பெரியவங்க எல்லாம் இருந்தாங்க. கவிமாமணி மஹி (எங்க ஊரு இப்போ) கூட இருந்தார். எண்பத்தியோரு
வயசாகிறது. பக்கத்தில்தான் இருக்கிறார். அவர் எங்களுக்குச் சொன்னது இது. பின்னால் சில புத்தகங்களிலும் படித்திருக்கிறேன். திருச்சியில் ஸ்டோர்னு சொல்வாங்க பாருங்க அந்தமாதிரி ஒண்டுக் குடித்தனம். வாசலில்
கால் வச்சார் பாரதிதாசன். செல்லம்மா ஹாலில் (அதாவது கையகலம் அறை) அமர்ந்திருக்கிறாங்க. வாசல் படிக்கு முன்னால் சாக்கடை. அதற்கு மேல் ஒரு பலகை. அதைத்தாண்டி ஹாலுக்குள் நுழைய வேண்டும். அப்படியே, அந்த சாக்கடை மேல் போட்டிருந்த பலகை மேலேயே விழுந்தார் பாரதிதாசன். செல்லம்மாவை வணங்கினார். பக்கத்தில்
இருந்தவங்க பதறினாங்க 'என்ன இப்படிச் செஞ்சுட்டீங்க' என்று. 'எங்க அய்யிரோட திருமேனி தரிசனம் பண்ணினவங்க இல்லியா அவுங்க' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாராம் பாரதிதாசன். ரொம்ப நுட்பமான ஒரு
உணர்வு இது. விரிவாச் சொன்னா கொச்சையாகிப் போகும்.

அப்படிப்பட்ட 'அவங்களுக்கே அவங்களுக்கான' ஒரு மனுசனை இல்லாமல் வேற யாரை உப்பு, புளி, மொளாகாவுக்கு அவங்க
படுத்துவாங்க? அவங்க என்ன வேலைக்கா போயிட்டு இருந்தாங்க? அவனைத்தான் கேட்க வேண்டும். ஆகாயத்தில் பறந்தாலும், இது உன் பொறுப்பு, நீதான் நடத்தணும்னு சொல்ல அவங்களுக்கு உரிமை இருக்கு. அவங்க அப்படிப் பண்ணாம போயிருந்தாதான் தப்பு.

அதெல்லாம் இருக்கட்டும். பாரதி உப்பு, புளி, மொளகா கவலையெல்லாம் படவே இல்லையா? பொறுப்பான புருஷனாக இருக்கவே இல்லையா? பொறுப்பான தகப்பனாக நடந்துகொள்ளவே இல்லையா? 'திமிங்கில உடலும்
சிறுநாய் அறிவும் கொண்ட ஒருவன்' என்று தூக்கி எறிந்துவிட்டு வந்த ஜமீந்தாரரைக் கூட, திரும்பப் போய் அணுகினானே, அது எதனால்? என்ன காரணத்தால்? அவனுடைய உயரத்திற்கு இப்படி ஒரு காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ள முடியுமா? பண்ணிக் கொண்டானே, எதற்காக?

[ப்ளீஸ், தெளிவு படுத்துங்கள்].

படுத்திட்டேனே பிரகாசா. ரொம்பவே! படுத்தினது தெளிவா இல்லயாங்கிறதுதான் தெரியாது. செல்லம்மா மேல் எனக்கு எப்பவும் ஒரு பிரமிப்பு உண்டு. சொம்பு நிறைய காப்பியும், வெற்றிலை பாக்கும் கொண்டுவந்து எழுத்து மேசைக்குப் பக்கத்தில் வைத்து, கட்டுக் காகிதத்தையும், பேனாவையும், மசிக் கூட்டையும் கொண்டு வந்து
வைப்பாங்களாம். 'பணம் வேண்டும். சுதேசமித்திரனுக்கு ஏதாவது எழுதி அனுப்பு' என்று மெளனமாக அவங்க சொல்ற விதம் அப்படி. அவங்க அப்படிச் செய்யாம இருந்திருந்தா, எந்தெந்தக் கவிதையை, கட்டுரையை நாம இழந்திருப்போமோ தெரியாது. அவங்க அப்படிச் செய்தது பாரதிக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்குமா, 'என்னாடா இவ, இப்படி வேலை வாங்கறா' என்ற அலுப்பை ஏற்படுத்தியிருக்குமா பிரகாசா?

திருவல்லிக்கேணி வீட்டில், பின்னால் ஓர் அரசமரம் இருக்கிறது. அதன் அடியில் உட்கார்ந்து கொண்டு எழுதுவானாம். கடைசியாக அங்கே போயிருந்த போது கூட, அந்த மரத்தைச் சுற்றியிருக்கும் மேடைக்கருகில் நின்று, தொட்டுப் பார்த்துவிட்டு வந்தேன். (அதன் மேல் உட்காருவதா! மூச்! தெய்வம் உட்கார்ந்த இடமாக்கும். நான் போய் அதை
அசுத்தப்படுத்துவதா!)

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

Comments

SnackDragon said…
நான் பாரதியின் கவிதைகளை படித்த அளவுக்கு(அதுலயும் பெரிசா கிழிக்கல :)) அவரது வரலாறை படித்ததில்லை. இந்த பதிவு எனக்கு மிகவும் சுவையாக இருந்தது. எனக்கு என்றுமே பாரதி தன் குடும்பத்தை கவனிக்கவில்லை என்ற வருத்தம் இருந்து கொண்டே இருந்து வருகிறது.
எத்தனைத்தான் அன்பு இருந்தாலும், வறுமைப் பிடி கொடுமையானதுதான், அதற்கு அவர் ஏதாவது செய்திருக்கதான் வேண்டும் எனபது என் எண்ணம், அவன் நன்கு வாழ்ந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நலமாய் வாழ்ந்திருப்பான், இன்னும் நிறைய கவிதைகள் எழுதியிருப்பான். இன்னும் சில காலம் அதிகமாய் வாழ்ந்திருக்கலாம்(யாருக்குத் தெரியும் :-)). எனக்கு இந்த கோணம்தான் பிடித்துள்ளது. :-)
SnackDragon said…
பாரதிக்கு கணக்கு பிடிக்காது என்று எங்கோ படித்தவுடன் தான் எனக்கு பாரதியைப் பிடிக்க ஆரம்பித்தது. :-)
அது சரி , உங்கள் பெயர் 99 ல் இருந்தே பிரகா"சர்" தானா? ஏதோ நான் மட்டும்தான் அப்படி அழைப்பதாய் நினைத்திருந்தேன்.
Sorry for posting in English. I just do not have the wherewithal for Tamil typing.
I remember to have read this in the year 1961. Bharati's neighbor in Pondichery was approached by Ananda Vikatan to tell a few words about the Poet. He just shrugged his shoulders and said that he was not impressed by him in those days and he never dreamt that he would achieve this much fame afterwards.

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Chennai Tamil Bloggers Meet - 2005

ரா.கி.ரங்கராஜன் - நாலு மூலை