aayitha ezuththu - much ado about nothing

படத்தைப் பற்றி மணிரத்னம், வழக்கத்துக்கு மாறாக, டிவி, ரேடியோ பேட்டி, வலைத்தளம், பத்திரிக்கை நேர்காணல் என்று ஏகப்பட்டது சொன்னார். ஆனால், அலைபாயுதே படத்தில் லேசாக தொட்ட அந்த திரைக்கதை உத்தியைத்தான், ஆயுத எழுத்து திரைப்படத்திலே விரிவாகச் செய்திருக்கிறார் என்று எங்கும் சொல்லவில்லை. அலைபாயுதே படத்தின் ஆரம்பக் காட்சி, இரு வேறு கோணங்களில் இரண்டு முறை வரும் . ஆய்த எழுத்திலே மூன்று முறை.

ஆனால் கதைதான் ரொம்ப இடிக்கிறது. அயோக்கிய அரசியல் வாதிகளுக்கு எதிராக கொடி பிடிக்கும் மாணவர் பட்டாளத்தைப் பற்றிய கதை.

இன்பசேகர்( மாதவன்) பாத்திரம் highly unrealistic. நடிப்பும் எதிர்பார்த்த மாதிரியேதான் இருக்கிறது. இன்னொரு பிரகாஷ்ராஜ் உருவாகிக் கொண்டிருக்கிறார்?

மைக்கேல் வசந்த் ( சூர்யா ) பாத்திரமும் ரொம்ப மிகை. அழகாக இருப்பார். ரௌடிகளை துவம்சம் செய்வார். ·ப்ரெஞ்ச் மொழி பேசுவார். ஜீனியஸ். லாக்கப் சுவற்றில் பூச்சி பூச்சியாய் தியரம் போட்டு நண்பர்களுக்கு பாடம் எடுப்பார். பொதுப்பணித்துறை அமைச்சரிடம் சவால் விடுவார். அமெரிக்காவில் பிஎச்டி படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தாலும் போகாமல் தமிழ்நாட்டிலேயே இருப்பேன் என்று சொல்வார். மாணவர்களையெல்லாம் ஒன்று திரட்டி எலக்ஷனில் நின்று ஜெயிப்பார். இதற்கு இடையில் ஈஷா தியோலுடன் காதல் செய்வார். யதார்த்ததுக்கு கொஞ்சம் கூட அருகில் இல்லாத , ஹீரோயிசம் தூக்கலான இந்தப் பாத்திரம் தான் பரவலான பாராட்டைப் பெறும். அதற்குக் காரணம், சூர்யாவின் நடிப்பு. அவருடைய கண்களில் தெரியும் தீவிரம், பாத்திரத்துக்கு ஏற்ற உடல் மொழி., வசன உச்சரிப்பு, பாத்திரத்தின் மீதான கன்விக்ஷன் என்று படம் முழுக்க சூர்யாவின் ராஜாங்கம் தான்.
அர்ஜுன் ( சித்தார்த்) பாத்திரப்படைப்பு தான் கொஞ்ச மாவது யதார்த்தத்துக்கு கிட்டே வருவது. எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் படித்து விட்டு, ஐஏஎஸ்ஸா? ச்சீ த்தூ என்று ஒதுக்கிவிட்டு, அடுத்த வாரமே அமெரிக்கா போக ஆசைப்பட்டு , ஜெமினி ·ப்ளைஓவர் கீழே கான்ஸலேட் வாசலில் , க்யூவில் நிற்கிற இன்றைய தலைமுறையின் பிரதிநிதி. சந்தர்ப்ப சூழ்நிலைகளினால், அவரது மதிப்பீடுகள் மாறுகின்றன. நடிப்பு ஓகே ரகம்.

ஏசி ரூமில் உட்கார்ந்து கதை செய்வதில் ஏற்படுகின்ற சிக்கல் படத்தில் தெளிவாகத் தெரிகிறது. இன்றை தேதிக்கு தேர்தல் என்றால், துட்டு, பிரச்சாரம், எலக்ஷன் கமிஷன், கள்ள ஓட்டு, லஞ்சம், மூலைக்கு மூலை மைக் , கட்சிகளின் வாக்கு வங்கி, சின்னங்களின் மீதான லாயல்ட்டி, என்று ஏகப்பட்டது இருக்கிறது. அதையெல்லாம் தூக்கி கடாசி விட்டு, ஜன கன மண என்று ஊர் ஊராக, ஊர்வலமாக பாடிக் கொண்டு ஓட்டு கேட்டு ஜெயிக்க முடியுமா? லாஜிக்கே இல்லை.

நாயகிகளில் ஹேமமாலினி மகளும் த்ரிஷாவும் வழக்கமான மணிரத்னம் பட ஹீரோயின்கள். bubbly and talking strange. கொழு கொழு பொம்மை மாதிரி இருந்த மீரா ஜாஸ்மின் இத்தனை நன்றாக நடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. புடவைத் தலைப்புதான் தோளில் நிற்காமல் ஒரே இம்சை :-)

சாதாரண வில்லத்தனமான அமைச்சர் கேரக்டருக்கு பாரதிராஜா ஏன் என்று படம் பார்த்த பின்பு தான் புரிகிறது. டீவிக்களில் எப்படி பேசி பார்த்திருக்கிறோமோ அதே போல உணர்ச்சி வசப்பட்டு பேசும் பாத்திரம் அவருக்கு. நிஜ மனிதர்களின் சாயல் வரக்கூடாது என்பதற்காக , கருப்பு பேண்ட், கருப்பு சட்டையில் வந்து , மனிதர் தூள் கிளப்பி இருக்கிறார்.

மணிரத்னம் படங்களிலே, அங்கங்கே, ரசிக்கிற மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் நிறைய இருக்கும், படம் பார்த்துவிட்டு வந்து மெதுவாக அசை போட்டு பார்க்கிற மாதிரி. அதல்லாம் இதிலே மிஸ்ஸிங். கதை சொதப்பல் என்றாலும், சொன்ன விதத்துக்காக, மணிரத்னத்தின் technical prowess உக்காக படத்தை ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.

என்ன தான் குறை சொன்னாலும், நீண்ட நாள் காத்திருந்து மணிரத்னம் படத்தை பார்ப்பதிலே ஒரு கிக் இருக்கத்தான் செய்கிறது. நம்ப இயலாத காட்சி என்றாலும், அந்த ஜெட்வேகத்தில் , தீப்பொறி பறக்கும் அந்த கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிக்கு மட்டுமே கொடுத்த டிக்கட் காசு சீரணமாகி விட்டது.

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I