போர்னோகிரா·பி

அண்ணா பல்கலைக்கழக விடுதியில் ரெய்ட் நடந்த போது, போர்னோகிரா·பி படங்களை, கணிணியில் பார்த்துக் கொண்டிருந்த நான்கு மாணவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டார்கள். அவர்கள் நால்வரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இது இன்று ஹிந்துவில் வந்திருக்கும் செய்தி.

போர்னோகிரா·பி பார்ப்பது, படிப்பது போன்றவை, அண்ணா பல்கலைக்கழக விடுதியின் விதிமுறைகளுக்கு உட்படாததாக இருக்கலாம். ஆனால், அந்தத் தவறுக்கு சஸ்பெண்ட் செய்வது, அந்த மாணவர்களின் வாழ்க்கையில் எத்தனை மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் சரியாக உணரவில்லை. தமிழகத்தைப் பொறுத்த மட்டில், அண்ணா பல்கலைக்கழகம், ஒரு முதன்மையாக கல்வி கேந்திரம். தொழில்நுட்பக் கல்வியை எடுத்துப் படிக்க நினைக்கிற பெரும்பான்மையானோர் தேர்ந்தெடுப்பது கிண்டி செல்கிற பாதையைத்தான். அப்படிப்பட்ட ஒரு கல்விக்கூடத்திலே சேர, சிரமப்பட்டுப் படித்து,இரவு பகல் பாராது உழைத்து, நுழைவுத்தேர்விலே தேர்ச்சி பெற்று, வருங்காலத்தில் ஒரு பொறியாளராகலாம் என்று எண்ணத்துடன் இருக்கும் இருபதின் ஆரம்பத்தில் இருக்கும் இளைஞர்களை, ஆபாசப்படம் பார்த்த காரணத்துக்காக, தற்காலிகமாக நீக்கி, அந்தச் செய்தியை, ஹிந்துவுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டி, அந்த மாணவர்களின் தாய் , தகப்பன், சகோதரி, சுற்றத்தினர் அனைவரிடமும் அவர்கள் பெயரை ரிப்பேர் செய்து எந்த வகையில் நியாயம் என்று சுத்தமாகப் புரியவில்லை.

மாணவர்கள் செய்தது சரி என்று நான் சொல்ல வரவில்லை. அவர்கள் செய்தது தவறுதான். ஆனால், அந்த தவறுக்கான தண்டனை இதுவா என்பதுதான் கேள்வி.

அண்ணா பல்கலைக்கழக் நிர்வாகம், மாணவர்களுடைய கல்வித்தேவையை பூர்த்தி செய்வது, வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து நல்ல பொறியாளர்களை உருவாக்குவது, ஆராய்ச்சிகளில் ஈடுபட உற்சாகம் அளிப்பது போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து, மாணவர்களில் நன்னடத்தைக்கு காவல்காரர்களாக மாறிவருவது வேதனையான விஷயம்.

இதே மாணவர்கள், விடுதியில் தங்கிப் படிக்காமல், தன் வீட்டில் தங்கிப்படித்துக் கொண்டு, ஓய்வு நேரத்தில்,போர்னோகிர¡·பி பார்ப்பதும் படிப்பதுமாக இருந்திருந்தால், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஒன்றும் செய்யாது. ஆக, நிர்வாக

த்துக்கு மாணவர்கள் மீதான அக்கறையை விடவும், பல்கலைக்கழகத்தின் வளாகம் புனிதமாக இருக்க வேண்டும் என்ற பிரயாசைதான் அதிகமாக இருந்திருக்கிறது. இல்லாவிட்டால், ஓட்டல் பாணியில் ரெய்டு நடந்திருக்காது. மேடையில் ஏற்கிற போதெல்லாம் டிசிப்ளின், டிசிப்ளின் என்று கர்ஜனை செய்யும் பல்கலை துணைவேந்தருக்கு, போர்னோகிரா·பி பார்க்கிறதுக்கும், தனி மனித ஒழுக்கத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பது தெரியாமல் போனதில் ஆச்சர்யமில்லை.

இந்திய குடும்ப அமைப்பில், பாலியல் விஷயங்களை முறையாகத் தெரிந்து கொள்ள நடைமுறை ஏதும் இல்லை. அனேகம் பேர் இலை மறை காய் மறையாகத் தெரிந்து கொள்ளுபவர்களும், இப்படி புத்தகம் படித்து, போர்னோகிரா·பி படம் பார்த்து, தெரிந்து கொள்ளுபவர்கள் தான். இன்றைக்கு இணையத்தில் இதை பார்க்கிறவர்கள், அன்றைக்கு இருந்திருந்தால் பின் அடிக்கப்பட்ட கொக்கோகப் புத்தகங்களைப் படித்திருப்பார்கள். இந்த பாலியல் தொடர்பான பிரச்சனைகளை, குடும்பத்தினரிடமும், சில சமயம் வாழ்க்கைத் துணையுடன் கூடவும் விவாதிக்க முடியாத, ஒரு மூடி மறைக்க வேண்டிய விஷயமாகத்தான் இருக்கிறது. இந்த சூழ்நிலைகளை, மாணவர்களின் வயது, அனுபவமின்மை, இயற்கையான ஆர்வம், அவர்களுடைய உளவியல் ஆகிய எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஒரு K-4 போலீஸ் ஸ்டேஷனின் சப்-இன்ஸ்பெக்டர் மாதிரி, விடுதிகளுக்கு ரெய்டு போவதும், மாணவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து, உடனடியாக பத்திரிக்கைகளுக்கு செய்தி அளிப்பதும், கல்வியாளர்கள் செய்யக் கூடாதது.

இதை வாசிப்பவர்களில் எத்தனை பேர் சேதன் பகத் எழுதிய five point someone என்ற புதினத்தை வாசித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அது, CGPA என்ற நாலெழுத்து மந்திரத்தை மட்டுமே உச்சரிக்கும், IIT என்ற புண்ணிய ஷேத்திரதில் நடக்கும் கதை. வெவ்வேறு வாழ்க்கைப் பின்னணியைக் கொண்ட மூவர் அந்த IIT விடுதியில் வாழும் நான்குவருடங்களில், நிகழும் சம்பவங்களை, ஆசிரியர் மிக அழகாக விவரித்திருப்பார். உள்ளே வருகிற மாணவர்களின் வயதுக்கும், அங்கே சொல்லித் தரும் ஆசிரியரின் வயதுக்குமான இடைவெளி, அம்மூவரின் வாழ்க்கையை எப்படி எல்லாம் திசை திருப்புகிறது என்பதையும், படித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். ஹரி. அலோக், ரயன் ஆகிய மூவரின் வாழ்க்கயை நல்லவழிக்கு திசை திருப்பிய, prof Veera போல, மாணவர்களைக் காப்பாற்ற அண்ணா பல்கலையிலும் ஒருவர் இருந்தால்
எத்தனை நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். இல்லை.

மாணவர்கள் சஸ்பெண்ட் ஆன இந்தச் செய்திக்கு நேர் மேலே, பல்கலையின் campus interview வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துச் சிரிக்கிறார், துணைவேந்தர். வளர்ந்து வரும் இந்தியத் தொழில் துறைக்குத் தேவையான அளவு மாணவர்களைத் தயார் செய்வது, ஆய்வுப்பணிகளில் ஈடுபட நினைப்பவர்களை ஊக்கப்படுத்துவது , entrepreneur ஆக நினைத்தால், அதற்கு வேண்டிய ஆலோசனைகளைத் தருவது ஆகியவற்றை விடவும் மூன்று மென்பொருள் முதலைகளுக்கு, ஆள்பிடித்துக் கொடுப்பது அவருக்குப் பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது.

மாணவர்களை அந்த அந்த வயதுக்கு ஏற்ற இயற்கையான சுபாவத்தோடு இருக்க விடவில்லை என்றால், அந்த அழுத்தம் அவர்களுடைய பிற்கால வாழ்க்கையில் பிரதிபலிக்கும். மிக மிக அழுத்தப்பட்ட சூழ்நிலையில் இருந்து வெளிவந்ததில் இருக்கும் உற்சாகம், இனி சீருடை அணியவேண்டாம் என்பதில் இருக்கும் உற்சாகம், வெளியுலகை முதன் முதலாக அருகில் பார்ப்பதில் இருக்கு உற்சாகம், அலாதியானது. அந்த ஆனந்தத்தை அனுபவித்து விட்டு, அதே சமயம் வெற்றிகரமாகப் படித்து முடித்து இன்று தத்தமது தொழில்களில் கொடிகட்டிப் பறக்கும் முன்னாள் மாணவர்களும் இதே போல சில்லறைச் சந்தோஷத்தில் ஈடுபட்டிருப்பார்கள். அதனால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை.

மாணவர்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கையை அவர்களுக்கு அமைத்துக் கொள்ளத்தெரியும் என்கிற போது, இந்த மாதிரி ரெய்டு நடத்துவது, மிகவும் அராஜகமான செயல்.

அந்த மாணவர்களுக்கு என்னுடைய அனுதாபங்கள்.

Comments

Pavals said…
//வளர்ந்து வரும் இந்தியத் தொழில் துறைக்குத் தேவையான அளவு மாணவர்களைத் தயார் செய்வது, ஆய்வுப்பணிகளில் ஈடுபட நினைப்பவர்களை ஊக்கப்படுத்துவது , entrepreneur ஆக நினைத்தால், அதற்கு வேண்டிய ஆலோசனைகளைத் தருவது ஆகியவற்றை விடவும் மூன்று மென்பொருள் முதலைகளுக்கு, ஆள்பிடித்துக் கொடுப்பது அவருக்குப் பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது//

well said, most of the institutions behave in the same way.
Santhosh said…
பிரகாஷ் ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க அனேகமாக எல்லோரும் அந்த பருவத்தில செய்யும் தவறு தான் அது. அதற்கு இது பெரிய தண்டனை என்பது தான் என்னுடைய கருத்தாகும்.
//அண்ணா பல்கலைக்கழக் நிர்வாகம், மாணவர்களுடைய கல்வித்தேவையை பூர்த்தி செய்வது, வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து நல்ல பொறியாளர்களை உருவாக்குவது, ஆராய்ச்சிகளில் ஈடுபட உற்சாகம் அளிப்பது போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து, மாணவர்களில் நன்னடத்தைக்கு காவல்காரர்களாக மாறிவருவது வேதனையான விஷயம்.//


இகாரஸ், உண்மையான் வார்த்தைகள். அவர்களை நம்பி தமது வாரிசுகளை அனுப்பிய பெற்றோருக்கு என்ன ஆறுதல் கூறப் போகிறார்கள்?

நல்வழி படுத்தினால் துணைவேந்தரை யாரும் நினைவுகொள்ளப் போவதில்லை. இப்போதோ முளையும் பயிரைத் தீய்த்தாலும், தனக்கு பேரும் புகழும்.:(
rajkumar said…
ஒரு பல்கலைக் கழக துணைவேந்தருக்கும், பள்ளிக் கூட தலைமை ஆசிரியருக்கும் இடேயே நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆனால் துணைவேந்தர் தலைமையாசிரியர் போல நடந்தால் அது அல்பமான விசயம்.

அண்ணா பல்கலை கழக தரத்தை உலகளவிற்கு உயர்த்துவேன் என்ற நோக்கத்தை வகுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தால் பாராட்டியிருக்கலாம். ஆனால் கலாச்சாரக் காவலர்களாக மாறி, இளைஞர்களை துன்புறுத்துவது ஏற்றுக் கொள்ளக்கூடிய செயலே அல்ல.

வெகு விரைவில் இவரை எதிர்த்து ஒரு மாணவர் போராட்டம் நடக்கலாம்.

சேட்டன் பகத்- புது பத்தகம் போர் ( One night @ call centre)

ராஜ்குமார்
பிரகாஷ்,

நீலப்படம் பார்ப்பது மாணவ பருவத்தில் எல்லோரும் செய்வதுதான். ஏன், அப்பருவத்தை தாண்டிய பின்னும் நம்மில் பலர் செய்வதுதான். இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. என்னை பொருத்தவரை அது தவறுமில்லை. ஆனால் இங்கு எது தவறு என்பதை சரிவர பார்க்க வேண்டும்.

கல்லூரிக்கு சொந்தமான கணினிகளையும், LANனையும் இவர்கள் இதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர். கல்லூரியாகட்டும், அலுவலகமாகட்டும், அங்குள்ள பொருட்களை வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மாத்திரமே உபயோகப்படுத்த வேண்டும் என்பது விதி. இவ்விதியை இவர்கள் மீறித்தான் இருக்கிறார்கள். இங்கு (அமெரிக்காவில்) எத்தனையோ முறை அலுவலகத்தில் ஆண்கள் ஆபாச படங்கள் பார்க்கிறார்கள், வேண்டுமென்றே ஆபாச வலைத்தளங்களை திறந்து வைக்கிறார்கள். இது பாலியல் தொல்லை என்று நீதிமன்ற படியேறும் பெண்கள் எத்தனையோ பேர். இதில், இவர்களை சரியாக கண்காணிக்கவில்லை என்று அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தையும் குற்றவாளிகளாக சேர்த்துவிடுகிறார்கல். இதனால் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக வேலையை விட்டு நீக்கும் அதிகாரத்தை பல நிறுவனங்கள் நடைமுறையில் வைத்துள்ளார்கள். இதானால் வேலையிழந்த சிலரையும் நானறிவேன். இம்மாணவர்கள், படித்து முடித்த பின் வேலைக்கு சேரும் சூழல் இதுதான்.

//அப்படிப்பட்ட ஒரு கல்விக்கூடத்திலே சேர, சிரமப்பட்டுப் படித்து,இரவு பகல் பாராது உழைத்து, நுழைவுத்தேர்விலே தேர்ச்சி பெற்று, வருங்காலத்தில் ஒரு பொறியாளராகலாம் என்று எண்ணத்துடன் இருக்கும் இருபதின் ஆரம்பத்தில் இருக்கும் இளைஞர்களை,....// இவ்வளவு கஷ்டப்பட்டு கிடைத்த இடத்தின் அருமை தெரிய வேண்டாமா? எதோ நண்பர்களின் வீட்டில் சென்று சத்தமில்லாமல் செய்திருக்கக்கூடியதை கல்லூரி வளாகத்திலே செய்து, இது போன்ற அவஸ்தைகளுக்கு உள்ளாக வேண்டுமா?

//மாணவர்கள் செய்தது சரி என்று நான் சொல்ல வரவில்லை. அவர்கள் செய்தது தவறுதான். ஆனால், அந்த தவறுக்கான தண்டனை இதுவா என்பதுதான் கேள்வி.// என்ன தண்டனை? தற்காலிக நீக்கம் செய்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு பின் ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு மீண்டும் வகுப்பிற்கு செல்லத்தானே போகிறார்கள். ஆனால் நாளை இவர்கள் வேலைக்குச் சென்ற பின் இது போலச் செய்து வேலையையே இழந்தால் அது எவ்வளவு பெரிய தண்டனை.

//ஆபாசப்படம் பார்த்த காரணத்துக்காக, தற்காலிகமாக நீக்கி, அந்தச் செய்தியை, ஹிந்துவுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டி, அந்த மாணவர்களின் தாய் , தகப்பன், சகோதரி, சுற்றத்தினர் அனைவரிடமும் அவர்கள் பெயரை ரிப்பேர் செய்து எந்த வகையில் நியாயம் என்று சுத்தமாகப் புரியவில்லை.// மாணவர்களின் பெயரை போடவில்லையே. பின் எங்கிருந்து வந்தது இந்த விவாதம். மற்ற மாணவர்களுக்கு இது பற்றி ஒரு விழிப்புணர்வு வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்யப்பட்டுள்ளாதாக எனக்கு தோன்றுகிறது.

//அண்ணா பல்கலைக்கழக் நிர்வாகம், மாணவர்களுடைய கல்வித்தேவையை பூர்த்தி செய்வது, வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து நல்ல பொறியாளர்களை உருவாக்குவது, ஆராய்ச்சிகளில் ஈடுபட உற்சாகம் அளிப்பது போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து, மாணவர்களில் நன்னடத்தைக்கு காவல்காரர்களாக மாறிவருவது வேதனையான விஷயம்.// மேற்கூறிய காரணங்களுக்காக இம்முறை நிர்வாகம் செய்தது சரியென்றே தோன்றுகிறது. செல்போன் மற்றும் உடை பற்றிய தடைகளை பொருத்தவரையில் எனக்கு இது போன்ற முழு சம்மதம் கிடையாது.

//இதே மாணவர்கள், விடுதியில் தங்கிப் படிக்காமல், தன் வீட்டில் தங்கிப்படித்துக் கொண்டு, ஓய்வு நேரத்தில்,போர்னோகிர¡·பி பார்ப்பதும் படிப்பதுமாக இருந்திருந்தால், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஒன்றும் செய்யாது. ஆக, நிர்வாகத்துக்கு மாணவர்கள் மீதான அக்கறையை விடவும், பல்கலைக்கழகத்தின் வளாகம் புனிதமாக இருக்க வேண்டும் என்ற பிரயாசைதான் அதிகமாக இருந்திருக்கிறது.// பாருங்கள், எது தவறு என்ற தெளிவு இல்லையென்றால் இப்படித்தான் ஆகும். மீண்டும் ஒரு முறை நான் மேலே எழுதியிருப்பதை படியுங்கள். இம்மாணவர்கள் வெளியுலகில் நன்றாக இருக்க தயார் செய்வதும் கல்லூரியின் கடமை. அதில் ஒரு பகுதியாகவே இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்நீண்ட பின்னூட்டதிற்கு மன்னிக்கவும். ஆனால் தாங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லாததால், எனக்கு தோன்றியதை எழுதும் ஆர்வம். அதனால்தான். உங்களின் பதில் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
செய்தியை ஊடகங்களுக்குத் தந்ததுதான் மிகப் பெரிய தவறாகத் தெரிகிறது. ஆனால் இதைப் படித்தால் பிற கல்லூரிகளிலும் இந்தப் பழக்கத்தைத் தடுக்கலாம் என்று சொல்வார்கள்.

சீரியஸாகப் பேசினால் இன்னும் அதிகம் இது குறித்துப் பேசலாம்..நேற்று அமீர்கான் என்.டி.டி.வி.யில் பேசியதைப் பார்த்தீர்களா என்ற கேள்வியுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஜாலியாக ஒரு கேள்வி:
//ஒரு K-4 போலீஸ் ஸ்டேஷனின் சப்-இன்ஸ்பெக்டர் மாதிரி,// என்கிறீர்களே,
நீங்கள் அண்ணா நகரில் இருக்கிறீர்களா?
G.Ragavan said…
பத்திரிகைகளுக்கு இந்தச் செய்தி வரவேண்டிய தேவையே இல்லை. சஸ்பெண்டு செஞ்சாச்சி. அப்புறமென்ன பத்திரிகைக்குச் செய்தி சொல்றது. ராமனோட பொண்டாட்டி சீதை ரொம்ப உத்தமீன்னு சொல்லிக்கிற மாதிரி.
ராசா, சந்தோஷ், மணியன் : பின்னூட்டத்துக்கு நன்றி.

ராஜ்குமார் : தலைமை ஆசிரியர்களே இப்ப தேவலாம். ON@TCC தானே? அது என்ன அவ்வளவு பாலீஷாகச் சொல்கிறீர்கள். மகா கேவலம். FPS நன்றாக இருந்தது என்றால் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஏத்தி விட்டது தான், இதற்குக் காரணம். என்டிடீவியில், சேதன் பகத், ஸ்ரீனிவாசன் ஜெயின் நேர்காணல் பாத்தீங்களா?
தெருத்தொண்டன் : அமீர்கான் நிகழ்ச்சியை பார்க்கவில்லை. என்ன சொன்னார்? [ நான் முந்தி வேலை பாத்த நிறுவனத்தின் அலுவலகம், K-4 போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் இருந்தது :-)]
இலவசகொத்தனார் : இந்த விஷயத்தில், பல்கலையின் நடவடிக்கையை விட, அவர்களது attitude தான் கவலைக்குரியதாக இருக்கிறது. பல்கலைக்கழக கணிணியில், ஆனால், யாரும் இல்லாத போது திருட்டுத்தனமாகப் பார்த்தது தவறு. தண்டனைக்குரிய குற்றம். ஆனால், அந்த தண்டனை, மாணவர்களைத் திருத்துவதாக இருக்க வேண்டுமா அல்லது அவர்களது வாழ்க்கையை பாதிப்பதாக இருக்க வேண்டுமா?

அவர்கள் பெயர்கள் வெளியிடப்படவில்லை. அது ஹிந்து காட்டிய நாகரீகமாகத்தான் இருக்கும். பெயர்கள் வெளியாகாமல் இருந்ததால் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், பல்கலைக்கழகம் போன்ற ஒரு closed network இல் இருப்பவர்களில் பெரும்பான்மையானோருக்கு அவர்கள் யார் என்ற விஷயம் இப்போது தெரிந்திருக்கும். HOD, அந்த மாணவர்கள், பெற்றோர், முதல்வர் (அ) துணைவேந்தர் ஆகியோருடன் நான்கு சுவருக்குள் நடந்திருக்க வேண்டிய விஷயம் இது. நாளைக்கு, நடவடிக்கைக்குப் பிறகு, சக மாணவியுடன், அந்த மாணவர்கள் நோட்ஸாவது பரிமாறிக்கொள்ள முடியுமா? சக
மாணவிகளிடம் போய், இந்த மாதிரி ஆபாசப்படம் பார்ப்பது, வயசு காலத்தில் சகஜமானது என்று தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்க முடியுமா?

துணைவேந்தரின், செல்போன், உடை ஆகிய விஷயங்களில் கட்டுப்பாடு நடவடிக்கைகளின் நீட்சியாகத்தான் இதனை நான் பார்க்கிறேன்.

பி.கு : பின்னூட்டத்துக்கு நன்றி.. என்னங்க இப்பல்லாம் வார்த்தை விளையாட்டு போட்டி நடத்தறதில்லையா? :-)
என்ன இப்படி கேட்டுபுடீக? நம்ம பக்கம் வந்து கொஞ்சம் பாக்கறது...
பிரகாஷ் அநியாயமான நிகழ்வு. பாலியல்சார்படங்களை அப்படியே கெடுதலான விடயமென்று காண்பதை ஒத்துக்கொள்ளமுடியாவிட்டாலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பண்பாட்டுக்கோலங்களிலே அடங்காதென்பதாலே விட்டுவிடுவோம். ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுவிட்டார்களென்பதாலே பத்திரிகைகளிலே செய்தி வரமுடியாதென்பது சரியெனப்படவில்லை. அதைப் போடலாமா இல்லையா என்பதைப் பத்திரிகைகள்தான் தீர்மானிக்கவேண்டும். பெயர்களில்லாமல் ட ஹிண்டு போட்டதைப் பாராட்டவேண்டும். ஆனால், வருவதைத் தடுக்கமுடியாது. கொலையாளிகள் தண்டிக்கப்பட்டதால்மட்டும் கொலை பற்றிய செய்தி வராமலிருக்கமுடியுமென்றால், பத்திரிகை நடக்காது.

ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் முதன்முறை என்பதாலே எச்சரிக்கையோடு விட்டிருக்கலாம். இதற்கெல்லாம் இடைநிறுத்தவேண்டுமா? இப்படியாகப் பார்த்தால், குமுதம், ஆனந்தவிகடன் வாசிக்கின்றவர்கள் நியூ, இன்னோரன்ன தமிழ்ப்படங்களைப் பார்க்கின்ற மாணவர்களையும் இடைநிறுத்தியிருக்கவேண்டும் ;-)
rv said…
ஹூம். அநியாயமாத்தான் இருக்கு. எச்சரிக்கையோட விட்டிருக்கலாம்.

இ.கொ,
LAN மூலமா பயன்படுத்துனாங்கன்னு தெளிவா சொல்லப்படலையே. பசங்க ரூமுக்குள்ள இருக்கற கணினினா அநேகமா சொந்தமாகத் தான் இருக்கணும்.

இகாரஸ்,
ஒரு வேண்டுகோள். font size அ பெருசு பண்ணுங்களேன். Largest வச்சாலுமே தக்கனூண்டுக்குத்தான் தெரியுது. :)
ரமணி : ஹிந்து மட்டும் தான் செய்தி வெளியிட்டது என்று நினைத்தேன். பிறகுதான், தினத்தந்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களும் இதே செய்தியை வெளியிட்டது தெரிந்தது.

சஞ்சிகைகள், நீலவண்ண திரைப்படங்களுடன், சில வ.பதிவுகளையும் சேர்த்திருக்கலாமோ? :-)

ராமநாதன் : அவர்கள் உபயோகித்தது சொந்தக் கணிணிதான். ஆனால், LAN மூலம் இணைத்தது பல்கலைக்கழகம். எழுத்துருவை பெரிசு பண்ணியாச்சு..
"......Basanthi" படம் பெயர் முழுதாகத் தெரியவில்லை..அமீர்கான்,மாதவன்,குணால் கபூர் போன்ற நடிகர்கள் வந்தார்கள்..கல்லூரி மாணவர்கள் கூட்டத்தில் பேசினார்கள்..சினிமா பார்த்து இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் என்ற வாதத்தை மறுத்துப் பேசினார்..எதைப் பார்த்தும் யாரும் அப்படியே செய்து பார்க்க முயற்சிக்க மாட்டார்கள் என்றார்கள்..இத்தனை வருஷமா மரத்தைச் சுத்தி டூயட் பாடறாங்களே சினிமாவுல, யாராவது ரோட்டில் செய்கிறார்களா என்ற ரீதியில் போனது பேச்சு. (அவர்கள் சொன்னது அண்ணா பல்கலைக் கழக நடவடிக்கை குறித்தல்ல..அன்புமணியின் புகைபிடித்தல் காட்சி தடை குறித்த கேள்விக்கு அளித்த பதில் அது)
பிரகாஷ்
வயதுவந்த ஒருவர் தான் எடுக்கும் முடிவுகள், பார்க்கும் விஷயங்களில் யாரும் தலையிட முடியாது.(respect an adult's decision) ஆனால் பல்கலை கழகம் இவற்றை தடுத்த விரும்பினால், கொள்கை அளவில் தங்கள் இணைய தொடர்பை இதுபோன்ற பாலியல் படங்கள் பார்க்க உபயோகிக்க கூடாது என்று விரும்பினால் அதை தெளிவாக சொல்லி இருக்க வேண்டும். இல்லை எனில் அவற்றிற்கு இங்கே அலுவலகங்களில் உள்ளது போல தடை செய்திருக்க வேண்டும். என்னுடைய அலுவலகத்தில் பணி தொடர்பு அல்லாத கேளிக்கைகள் websense கொண்டு தடை செய்யப்பட்டுள்ளன.மற்றபடி இடைநிறுத்தம் செய்வதும், ஊடகங்களுக்கு செய்தி தருவதும் தவறு.பல்கலை கழகங்களில் சேரும் முன் மாணாவர்களுக்கு கொள்கை சம்பந்தப்பட்ட கையேடுகள் தருகிறார்களா? ஆம் என்றால் அதில் குறிப்பிட்டு இருக்கிறதா? இல்லை என்றால் இனியாவது அத்தகைய கொள்கைகள் கொண்ட கையேடுகள் தரலாமே. விதிகளை மீறினால் என்ன நடவடிக்கை என்பதையும் முன்கூட்டியே சொல்லலாமே?
பெயரிலி: நீங்கள் சொன்னபடி பாலியல் படங்கள் பார்ப்பது, அதுவும் வயது வந்த ஒருவரின் செயல் தவறாகாது, பிறரை பாதிக்காதவரையில். ஆனால் கொள்கை அளவில் பலகலை கழகம் தங்கள் கணிணி, இணயதொடர்பை கட்டுப்படுத்துவதற்கும், திரைப்படங்கள் பார்ப்பதை தடை செய்வதற்கும் வேறுபாடு உண்டென்று நினைக்கிறேன். இங்கே மாணவர்களின் நல்வழிப்படுத்துதலைவிட தங்கள் பெயரில் நிர்வாகம் அதிக ஆர்வம் காட்டியதாக நினைக்கிறேன். "எவ்வளவு கட்டுபாடான நிறுவனம்" போன்ற நற்சான்றிதழ்.
தருமி said…
வெகு விரைவில் இவரை எதிர்த்து ஒரு மாணவர் போராட்டம் நடக்கலாம்"//- எப்போதோ இது நடந்திருக்க வேண்டிய விஷயம் இது. சுத்தமாக போராட்ட குணமே அற்றுப்போன இன்றைய மாணவர்களைப் பார்த்து கோபப்படுவதா, வருத்தப்படுவதா என்று தெரியவில்லை
//சுத்தமாக போராட்ட குணமே அற்றுப்போன இன்றைய மாணவர்களைப் பார்த்து கோபப்படுவதா, வருத்தப்படுவதா என்று தெரியவில்லை//
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே மேற்கண்ட வருத்தம் உண்டு. CGPA முறையால் மாணவர்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளதால் எல்லோரும் சகித்துக்கொண்டுப் போகிறார்கள். அதுவுமில்லாமல் தனக்கென்ன நேர்ந்தது என்ற சுயநலப்போக்கில் பெரும்பாலான மாணவர்கள் ஒதுங்கிப் போவதும் ஒரு காரணம். நான் படித்த போது விடுதிக் கழிவறை சுத்தமாக இல்லை என்று துணிந்து புகார் செய்தததற்காக அடுத்த ஆண்டு விடுதியில் இடம் கொடுக்க மறுத்து விட்டார்கள். அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், விடுதி நிர்வாகம் எல்லாம் உலுத்துப் போன சட்டாம்பிள்ளை மனப்பான்மை உள்ளவர்களால் நடத்தப்படுகிறது. மாணவர்கள் அநேகமாக தங்கள் சொந்தக் கணினியில் சொந்த சி.டி.யில் தான் படம் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அப்படியே LANல் பார்த்திருந்தாலும் இடைநிறுத்த வேண்டிய அளவு பெரிய குற்றமில்லை இது. அவர்கள் தங்கியிருக்கும் விடுதி அவர்கள் வீடு போன்றது தான். இதற்காக எல்லாம் ஒவ்வொரு முறையும் அவர்கள் ஒளிந்து ஒளிந்து நண்பர்கள் வீட்டுக்கு செல்வது இயலாத காரியம். ஆனால், பிரகாஷ் வருத்தப்பட்டிருப்பது போல, மாணவர்கள் சக மாணவிகள் முகத்தில் முழிப்பது குறித்து எல்லாம் வெட்கப்படவேண்டாம். இன்றைய மாணவிகளும் இது குறித்து அறிந்து புரிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். (மாணவிகள் விடுதி மர்ம நடவடிக்கைகள் யாராவது பதிவு போட்டால் நன்றாக இருக்கும் :))வெறும் மன்னிப்பு கடிதம் கொடுப்பதோடு முடியும் விடயமில்லை. இடைநிறுத்தல் காலத்தில் மாணவர்கள் அடையும் மன உளைச்சல் கொஞ்சம் நஞ்சம் இல்லை. என்னத்த சொல்றது..பல்கலைக்கழக நடவடிக்கை குறித்து என் வலைப்பதிவில் தனியாகப் புலம்பியிருக்கிறேன்.
பார்க்கவும்:http://thamizhthendral.blogspot.com/2005/08/blog-post.html
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவன் என்ற முறையில் இந்த நடவடிக்கை வெட்கத்தைத் தருகிறது. அதீதக் கட்டுப்பாட்டை திணிக்கும் நடவடிக்கை இந்தத் துணைவேந்தரின் கீழ் நடந்ததென்னவோ ஆச்சரியமாக இல்லை. (அவர் நடத்திய ஒரு வகுப்பில் இருந்திருக்கிறேன்!).

கல்லூரியின் வசதிகளை முறைகேடாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று கொள்கை விளக்கங்கள் கொடுக்கப்பட்டு அதனை மாணவர்கள் மீறிச் செயல்பட்டிருந்தால், அந்தத் தவற்றைக் கண்டிப்பதில் நியாயம் உள்ளதென்று சொல்லியிருக்கலாம். அப்போதும் இடைநிறுத்தம் சற்று அதிகப்படி தான். அநேகமாகச் சொந்தக் கணினியில் தங்கள் அறையில் இரவில் அவர்கள் பார்த்ததில் தவறு என்று பெரிதாகச் சொல்லிவிட முடியாது. கணினி வசதி இல்லாத காலங்களில் கோட்டூரில் கிலோக்கணக்கில் வாங்கி வந்த பழைய திரைச்சித்ரா போன்ற புத்தகங்கள் பரவிக்கொண்டிருக்குமே. அதையும் கைப்பற்றி எல்லோரையும் இடைநிறுத்தம் செய்துவிடுவார்களோ?

தனிமனித சுதந்திரத்தை மதியாத இந்தத் தலையீட்டை யார் எப்படிப் புரிய வைப்பது?
Mookku Sundar said…
மாட்டிக்காம இதெல்லாம் பண்ணத் தெரீலையே பசங்களுக்கு..?!!! :-)

பாக்கறதுக்கு முன்னாடி, அந்த சிடி ஒரு காப்பி போட்டு துணைவேந்தருக்கு கொடுத்திருக்கலாம்.
அதைப் பண்ணியிருந்தா மாட்டி இருக்க மாட்டானுங்க. :-)

முதல் பத்து நிமிஷத்துக்கு மேல நீலப்படமும், வருவான் வடிவேலனும் ஒண்ணுதான்னு துணைவேந்தருக்கு தெரியாதாமா..?? அது சரி..பாத்திருந்தா ஏன் தண்டிக்கப்போறாரு :-).
SnackDragon said…
//ஆக்கபூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து, மாணவர்களில் நன்னடத்தைக்கு காவல்காரர்களாக மாறிவருவது வேதனையான விஷயம்.//
What the...ll

I think the same too.
prakash
antha manavarkalukku mattumillai
UNGALUKKUM UNKAL PETRORUKKUM UNGAL PILLAIKALUKKU AAZNDHA ANUTHAPANGAL
Muthu said…
மடத்தனமாக இருக்கு பிரகாஷ்...என்ன கொடுமைடா இது? இதுக்கு கூடவா சுதந்திரம் இல்லை?

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I