North Madras பசங்க

இந்தப் பெயரிலே ஒரு திரைப்படம் வருகிறது என்று இன்று தினத்தந்தியில் விளம்பரம் பார்த்தேன். GV Films தயாரிக்க, Harris ஜெயராஜ் இசை அமைக்கிறார். விளம்பரத்தைப் பார்த்த உடனே புரிந்து விட்டது. முன்பெல்லாம், ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால், அதன் பாதிப்பில், பல திரைப்படங்கள் வெளிவரும். பல வருடங்களுக்கு முன்பு வந்த எண்ணற்ற ராமராஜன் படங்களும், விஜயகாந்த் படங்களும் இதில் அடக்கம். இப்போதெல்லாம், ஒரு திரைப்படம் உருவாக்கத்தில் இருக்கும் போதே, அதன் கதையை, களத்தை ஒட்டி திரைப்படங்கள் வரத் துவங்கிவிட்டன.

சந்தேகமில்லாமல், வடசென்னை, திரைப்படத்துக்கு ஏற்ற வசீகரமான பின்புலம். இந்த வாழ்க்கையை ஒட்டி புதினங்களோ, திரைப்படங்களோ அதிகமாக இல்லை. இந்த வாழ்க்கை குறித்து, நாராயண் அருமையான பதிவு ஒன்றை எழுதியிருந்தார். [ இந்தப் பதிவை படித்துவிட்டு, ஒரு பிரபல தமிழ் நாளிதழ் ( தினமலர் அல்ல) தங்களுடைய பதிப்பில், இதனை மறுபிரசுரம் செய்யக் கேட்டது என்றும், 'உருப்படாதவர்' மறுத்துவிட்டார் என்று ஒரு வதந்தி உலவுகிறது தெரியுமா? :-) ]. தென்சென்னையில், குறிப்பாக, மயிலைப் பகுதியில் இளவயது முழுவதையும் கழித்த எனக்கு வடசென்னை வாழ்க்கை என்பது ஆவலைத் தூண்டுகிற விஷயம் தான். என்னுடன் கூடப்படித்தவர்களில் சிலர், வடசென்னைப் பகுதியில் இருந்து வந்தாலும், பெரும்பாலும் அவர்கள், அசோக் லேலண்ட், கேசிபி, போன்ற வடசென்னையில் அமைந்திருக்கும் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளே. ஆக கேள்வி ஞானம் மட்டும் தான்.

' தலீவா... அது சிட்டி ஆ·ப் காட் படத்தின் உல்டா என்று நாராயண்' சொல்கிற, 'புதுப்ப்பேட்டையின்' புகைப்படங்களும், பாடல்களும், திரை முன்னோட்டங்களும், படத்தை பார்க்கத் தூண்டும் படி தான் இருக்கின்றன. பொங்கல் பண்டிகையை ஒட்டி, தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில், 'பட்டியல்' என்ற திரைப்படத்தின் முன்னோட்டத்தையும், அந்தப் படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்[ விஷ்ணுவர்த்தன், அறிந்தும் அறியாமலும் படத்தை இயக்கியவர். நல்ல நினைவாற்றல் கொண்டவர்கள், சத்ரியன் படம் பார்த்திருந்தால், அதிலே இளவயது விஜயகாந்த் ஆக வரும் சிறுவனை நினைவு படுத்திப் பாருங்கள். அவர் தான் இவர்] அளித்த பேட்டியை பார்த்த உடன், இதுவும் ஒரு தென் சென்னை தாதாக்களைப் பற்றிய படம் என்று புரிந்து போனது.

விளம்பரத்தைப் பார்த்தால், North Madras பசங்க திரைப்படமும் அது போலத்தான் என்று நினைக்கிறேன்.

மும்பாய் தாதாக்கள் பற்றி, ராம்கோபால் வர்மா, பெயர், நடிகர்களை மட்டும் மாற்றி படங்களாகச் சுட்டுத் தள்ளும் போது, இங்கே வேறு வேறு இயக்குனர்கள், வேறு வேறு கதைகளைத்தானே எடுக்கிறார்கள் என்று திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

வட சென்னை, இன்னும் எத்தனைப் படங்கள் வரை தாங்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments

Boston Bala said…
Lot of folks are getting inspired it seems. Anyway, Arinthum Ariyaamalum was an enjoyable, well presented movie.

நாராயண் ஏன் தினமலருக்கு வழங்க மறுத்தார் என்று அவரிடம் விசாரிக்கிறேன்.
பாலாஜி, தினமலர் அல்ல ன்னு பதிவிலேயே சொல்லி இருக்கிறேனே? :-)
இந்த மாதிரியெல்லாம் வதந்திகள் வேறு உலாவுகிறதா? தினமலர் என்னை எதுவும் கேட்கவில்லை. கேட்டது "தினகரன்" அதையும் நான் மறுக்கவில்லை. நேற்றைய (ஞாயிறு (22/1) - தினகரன் - வசந்தம்)கவர் ஸ்டோரியாக இடம் பெற்றிருக்கிறது என்று தினகரன் நிருபர் சொன்னார். இன்னமும் நான் பார்க்கவில்லை.

அந்த விளம்பரத்தினைப் பார்த்தவுடனேயே தோன்றியது, வடசென்னை வாழ்க்கைமுறை கிளிஷேவாகப் போகிறது என்றுதான். துள்ளுவதோ இளமை வந்தவுடன் எப்படி அரை டஜன் விடலைக்காதல் படங்கள் வந்து டப்பாக்குள் போனதோ, அதே நிலையினை எதிர்ப்பார்க்கலாம்.

நிற்க. வடசென்னை வாழ்க்கை முறையினை அடிப்படையாக வைத்து வந்த படம் "பெருசு", இப்போதைக்கு அந்த லிஸ்டில் ரஞ்சித் நடிக்கும் "டான் சேரா"வும் சேர்க்கலாம்.
தலைவரே... ராங்கா ரப் பண்ணிட்டனோ?

நீங்க விளக்கமா எழுதணுங்கறதுக்காக விட்ட டீசர் அது :-)
Badri Seshadri said…
தினகரன் வசந்தம் இதழில் வந்துவிட்டது. நாராயண் பதிவின் ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாவற்றையும் திருத்தி நன்றாக வந்துள்ளது:-)

அட்டையில் "புதுப்பேட்டை exclusive" என்று போட்டிருக்கிறார்கள். எல்லோரையும் மொத்தமாகக் குழப்பியிருக்கும்.

(இதே பின்னூட்டம் நாராயண் பதிவிலும்...)
போட்டாச்சுப்பா - http://urpudathathu.blogspot.com/2006/01/update.html

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்