Lasting Legacies

[ இந்த போஸ்ட்ல சொல்ல வர மேட்டர் கடைசிப் பத்தியில் இருக்கிறது. அவசரமாக இருந்தா ஸ்கரால் செய்து கொள்ளுங்கள்]

ஹௌரா மெயிலிலில் இருந்து ஒரு டாக்ஸி பிடித்து, அந்த மெகா cantilever ஐக் கடந்தால், முதலில் சென்று முட்டுவது எஸ்பளேனேட். எதுத்தாப்பல பெங்காலீ பிரபல நடிகர் உத்தம் குமார் வேலை செஞ்ச தியேட்டர் இருக்கும். (பேரு மறந்து போச்சு) அது அங்க இன்னும் இருக்குதான்னு பாத்து வெச்சிகிடுங்க. அதுதான் சௌரங்கி ரோட் என்றும் அப்பவும், ஜவஹர்லால் சாலைன்னு இப்பவும் அழைக்கப் படுகிற பிரபலமான சாலை. தியேட்டருக்குள் நுழையாமல், ரோட்டில் கடைபரப்பி சல்லிசாக விற்கப்படும் டெபொனேர், ·பாண்டஸி பழைய இதழ்களையெல்லாம் கண்டுக்காமல், அப்படியே போய்கினே இருந்தா இடது கைப் பக்கம் ம்யூசியம் வரும் அதை உடுங்க. [ குழப்பமாக இருந்தால், எதிர்ப்படுகின்ற யாராவது பெண்ணிடம் சென்று ' ஹமி துமாக்கே பாலோ பாஷே? " என்று விசாரித்தால் நீங்க போகவேண்டிய இடத்துக்கு 'கரக்டாக' கூட்டிக் கொண்டு போய் விடுவார் :-) ] அப்புறம் அமெரிக்க தூதரகம் வரும், அதையும் தாண்டுங்க. கொஞ்ச தூரம் போனப் பின்னாலே, ஐடிசி பில்டிங் வரும். அங்கிருந்து நாலைஞ்சு கட்டடம் தள்ளி ஒரு கோயில் இருக்கு. கார்ப்பரேட் கோயில். பேரு டாடா சென்டர். ( இலக்கம் 46-C)

இப்ப எதுக்கு இந்த மேட்டர்? இருங்க சொல்றேன்....

இந்தியா மாதிரி தேசத்துலே பிறந்து, கெடுபிடிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கு இடையிலே, புதிய தொழில்களையும், ஆலைகளையும் உருவாக்கி, பின்னாட்களில் பலப் பல புதிய தொழிலதிபர்கள் தோன்றுவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு உந்து சக்தியாக இருந்த ஜே.ஆர்.டி டாடா, நிறையப் பேருக்கு சாமி மாதிரி.

1991 க்குப் பிறகு தொழில் துவங்கியவர்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள். இன்றைக்கு புதிய தொழில் துவங்குபவர்களுக்கு என்று நிறையச் சலுகைகள், கடன் வசதிகள், tax holiday, அரசின் இலவச ஆலோசனை மையங்கள், ஊக்குவிப்புகள், ஒற்றைச் சாளர அப்ரூவல்கள் என்று சௌக்கியமாக இருக்கிறது. இது சாத்தியமானது, 1991 இல் அமைந்த நரசிம்மராவ் ஆட்சியால் தான்.

ஆனால் அதற்கு முன்பு தொழில் துவங்குவதென்பது அத்தனை லேசானது அல்ல. சிவப்பு நாடாக்களும், லைசன்ஸ்களும், லஞ்சமும், ஏகப்பட்ட காலவிரயமும், தொழில் துறையில் தலைவிரித்தாடிய காலம் அது. ஏகப்பட்ட அனுமதிகள் பெற வேண்டும். லைசன்ஸ் வாங்க நாயாய் பேயாய் அலையவேண்டும். நீங்கள் ஒரு புதிதாக ஒரு தொழிற் சாலை துவங்க வேண்டும் என்றால், அந்தத் தொழிற்சாலையின் உறப்த்தி அளவு, அதற்குத் தேவைப் படும் கச்சா பொருட்கள், தயாரிக்கப் படும் பொருட்களின் விலையைக் கூட அரசாங்கம் தான் நிர்ணயம் செய்யும். இந்த நடை முறைகளை உருவாக்கி செயல்படுத்தியவர்கள், சுதந்திரத்துக்குப் பின்பு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசும், குறிப்பாக பிரதமர் நேருவும். இந்திய தொழில் துறையின் இருண்ட காலம் என்று அவற்றைச் சொல்லலாம். [இது ரொம்ப விரிவாகப் பேசவேண்டிய விஷயம் . ஆனால் சொல்ல வந்த விஷயம் திசை திரும்பிவிடும் ]ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளையும் மீறி, தொழில் துறையில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஜே.ஆர்.டி. டாடா. முதல் எ·குத் தொழிற்சாலை, முதல் விமான சர்வீஸ், என்று பல துறைகளில் வெற்றிகரமாக சாதித்து, இன்றைக்கு சாதனை செய்யும் பல இந்திய நிறுவனங்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர்.

அதற்கு மரியாதை செய்யும் விதமாக டாடா குழுமம், Lasting Legacies என்ற ஒரு நினைவு மலரை, கொஞ்ச நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. டாடா குழுமத்தை தோற்றுவித்த ஜாம்செட்ஜி டாடா, மற்றும் ஜே.ஆர்.டி டாடா , நேவல் டாடா ஆகிய மூவரைப் பற்றிய நினைவஞ்சலிக் கட்டுரைகள் கொண்ட நூல் அது. பத்திரிக்கையில் வந்த ரீவ்யூவைப் படித்து விட்டு, புஸ்தகத்தை தேடி அலைந்து கிடைக்கவில்லை. சமீபத்தில் இணையத்தில், மொத்த புத்தகத்தையும் அத்தியாயம் வாரியாக பிரசுரம் செய்திருக்கிறார்கள்.

அதிலே எனக்குப் பிடித்த கட்டுரை

http://www.tata.com/0_b_drivers/lasting_legacies/20040810_sudha_m.htm

நீங்களும் படிச்சுப் பாருங்க.

Comments

Boston Bala said…
எத்தனை காலம் கல்கத்தாவில் இருந்தீர்?
பர்மனண்டால்லாம் இல்லை. வருஷத்துக்கு நாப்பது-நாப்பத்தஞ்சு நாள் வீதம், 1995-1999 வரைக்கும் கல்கத்தாவுல டேரா. சூட்கேஸ் வாழ்க்கை. சென்னைக்கு அப்புறம் ரொம்ப பிடிச்ச மாநகரம் கல்கத்தா. புடிக்காதது.... obviously, மும்பை
Boston Bala said…
நீங்க சொன்ன இடம் எல்லாம் கல்கத்தாவின் பந்தா இடங்கள் :-) வேறு ஏதாவது கட்டுரையில் மிச்ச கல்கத்தா குறித்து பதிந்து இருக்கிறீர்களா?
பாலாஜி, என் வேலை அந்த மாதிரி. நான் பாக்க வேண்டிய ஆசாமிகள் எல்லாம் அந்த மாதிரி 'அல்டாப்பான' இடத்தில் தான் இருந்து தொலைத்தார்கள். கல்கத்தாவின் பிசினஸ் டிஸ்ட்ரிக்ட் தவிர, உள்ளே ரொம்ப தூரம் எல்லாம் போனது கிடையாது. அடியில் ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ டிரெயினை எப்படி பூமிக்கு மேலே கொண்டு வருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள்வதற்காக ஒருமுறை, இந்தக் கோடியில் இருந்து அந்தக் கோடிக்கு ( டம் டம் டு டோலி கஞ்ச்) போய் பார்த்தேன். கல்கத்தாவின் ரெசிடென்ஷியல் ஏரியாவெல்லாம் சுத்தமாகத் தெரியாது. ரொம்ப நாள் முன்னாலே கல்கத்தா பத்தி எழுதினது ஒண்ணு இருக்கு . உபயோகப் படுமான்னு பாருங்க :-)

http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/3698
Badri Seshadri said…
பிரகாஷ்: நேற்று சுதா மூர்த்தியுடன் நடந்த 'தொலைபேசி கேள்வி-பதில்' நிகழ்ச்சி (பொதிகையில்) பார்த்தீர்களா? அதிகம் தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை... மக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கேள்வி கேட்க, அம்மா ஆங்கிலத்தில் பேசினார்.

அதிருக்கட்டும். ஜே.ஆர்.டி கட்டிய ஏர் இந்தியாவை நேரு அமைச்சரவை நாட்டுடமையாக்கியது. பின் மொரார்ஜி தேசாய், ஜே.ஆர்.டியை கவுரவ சேர்மன் வேலையை விட்டுத் சொல்லாமல் கொள்ளாமல் துரத்தியது. பின் நாள்களில் (பிற அரசுகளும்கூட) விடாமல் டாடாவை விமானப் போக்குவரத்தில் நுழையவே விடாது செய்தனர் பார்த்தீர்களா?

நம் நாட்டில் உங்கள் மனதுக்குப் பிடித்த திருபாய் அம்பானி போல சட்டத்தைப் பார்த்து நகைக்கும் வல்லவனாக இருக்க வேண்டும். ஜே.ஆர்.டி போல நல்லவனாக இருந்தால் போதாது - என்றிருந்தது. இன்று நிலைமை நிறையவே முன்னேறியுள்ளது.
பத்ரி : அந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. பார்த்தவர்கள் , உருப்படியாக ஏதும் இல்லை என்று சொன்னார்கள்.

ஏர்லைன்ஸ் மட்டுமல்ல. எல்லாவற்றிலும் தான் மூக்கை நுழைத்து, பீதியை உண்டாக்கினர். இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில், டிஸ்கோ ( டாடா ஸ்டீல்) நிறுவனத்தை அரசுடமை ஆக்க முயற்சி செய்தார் அப்போது அமைச்சராக இருந்த மோகன் குமாரமங்கலம். பின்னாட்களில், டாடா நிறுவனம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஏர்லைன்ஸ் திட்டத்தை கொண்டு வர முயன்ற போதும், அப்போது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த இப்ராஹீம், வேரிலேயே வென்னீர் ஊற்றினார். அம்பானி விஷயம் வேற மாதிரி. படு பயங்கரமான துணிச்சல். காசு குடுத்து அப்பாயிண்ட் செய்த ஆலோசகர் குடுத்த ரிப்போர்ட்டை கிழிச்சு தூர எறிந்து விட்டு [ ரி·பைனரி எல்லாம் இந்தியாவில் வேலைக்காவாது என்பது எக்ஸ்பர்ட் அட்வைஸ்], சொல்லி வைத்தமாதிரி முப்பத்தாறு மாதங்களில், மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலையை நிறுவிக் காட்டியவர். லாபியிங் உண்டு தான் என்றாலும், அந்த ரிஸ்க் எடுத்த தைரியம் அபாரமானது. டாடாக்கள் வேறு வகை. இந்த மாதிரி தடாலடி வேலை எல்லாம் செய்ய மாட்டார்கள். நம்நாட்டுக்கு ரெண்டு வகையான ஆட்களுமே தேவை.

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I