மத்தளராயர் , வெங்கட் சாமிநாதன் & காசி

காசி

ந்த வார திண்ணை இதழில் காசி அவர்கள் எழுதியிருந்த கடிதம் ஒன்றைப் படித்தேன். முந்தைய வாரம் வந்த யூனிகோட் விவகாரம் தொடர்பான ஒரு நேர்காணலுக்கான மறுமொழி அது. திண்ணையில் எழுதியவர், தன் கருத்துக்களின் கூடவே, காசியின் பிரபலமான "என் கோடு உன் கோடு தனி கோடு யூனிகோடு" என்ற கட்டுரையில் இருந்து அப்படியே 'சுட்டுப்' போட்டிருக்கிறார். நானும் பார்த்தேன். சொற்கள், எண்கள் கூட மாற்றமில்லாமல் அப்படியே அப்பட்டமான காப்பி. கூகிள் வந்த பின்னால், தகவல்கள் பெறுவது ரொம்ப எளிமையாகிவிட்டது. நமக்கு வேண்டும் என்ற தகவல்களை மேற்கோள் காட்ட, கூகிளில் தேடி எடுத்துப் பயன் படுத்திக் கொள்கிறோம். ஆனால், அப்படி எழுதும் போது, மூலத்தையும் குறிப்பிடுவது தான் முறை. திண்ணையை வாசித்தவர்கள் அனைவருக்கும் இந்த விவகாரம் தெரிந்திருக்கலாம். இந்த விவகாரத்தில் , மிகச் சிறப்பானதாக நான் கருதுவது, காசியின் அணுகுமுறையைத் தான். இணையத்தில் வலைப்பதிவுகள் வந்த பின்னால், யாருடைய தயவும் இல்லாமல், நம்முடைய கருத்துக்களை நாமே பதிவு செய்து, அதை பிறர் படித்து, கருத்துகள் சொல்லவும் வழி வகை இருக்கிறது. இது போன்ற விஷயத்தை, வலைப்பதிவாளர்கள் ( என்னையும் சேர்த்துத்தான்), முதலில் தன் வலைப்பதிவில், எழுதி, ஆதரவு திரட்டி, விஷயத்தை ஊதிப் பெருசாக்கி விடுவதுதான் மரபு. தேர்ந்தெடுத்த சொற்களைப் போட்டு, நக்கலாக எழுதினால், பொறி பறக்கும். நாலு பேர் திண்ணை ஒழிக என்றும், இன்னும் நாலு பேர் திண்ணைக்கு வக்காலத்து வாங்கியும் கிளம்புவார்கள். எனக்கும் நன்றாகப் பொழுது போகும். ஆனால் அது போல அல்லாமல், வேறெங்கும் பேசாமல், புலம்பாமல், சூளுரைக்காமல், நேரடியாக, திண்ணை ஆசிரியரை அணுகிய விதத்துக்கு ஒரு சபாஷ்.

வெங்கட் சாமிநாதன் பெற்ற 'காலம்' விருதும் , அதனைத் தொடர்ந்த சர்ச்சைகளும்

இந்த விஷயத்தை எத்தனை பேர் ·பாலோ செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. முதலிலே, வெங்கட் சுவாமிநாதனுக்கு, கனடாவில் இருந்து வெளியாகும் காலம் இதழ் பரிசு கொடுத்ததில் இருந்து துவங்கியது. அதை ஒட்டிய விவாதங்களும், வசைகளும், தனிமனிதத் தாக்குதல்களும், திண்ணை, பதிவுகள் இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. சென்ற வருட நாச்சார் மடத்துக்குப் பிறகு, அதிக பரபரப்பை ஏற்படுத்துகின்ற விவகாரம் இது. இதைப் பற்றிய அபிப்ராயங்கள் சொல்ல வயசும் அனுபவமும் பத்தாது. இணையத்தில் பதிவான விஷயங்களை வரிசைக் கிரமமாக இங்கே தருகிறேன்.

1. கனடா ' காலம்' இதழ் , வெங்கட் சுவாமி நாதனுக்கு விருது வழங்க முடிவு செய்தது. அதை, வெ.சா அவர்களும் ஏற்றுக் கொள்ள சம்மதித்தார். இதை விமர்சித்து, நு·மான் காலச்சுவடு இதழில் எழுதிய கட்டுரை ஒன்று பிரசுரமானது. அதை விமர்சித்து, அமுதசுரபியில் வெளியாகி, பிறகு திண்ணையில் வெளியானது " தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள் என்ற கட்டுரையை. அவருக்கே உரிய நகைச்சுவையுடன், தன்னை விருது வாங்க அழைத்தது, இந்த விருதை வாங்க வெளிநாட்டுக்கு கட்டாயமாகப் போகவேண்டும் என்று சக எழுத்தாளர்கள் வற்புறுத்தினது, விருது வாங்கிய நாள் அன்று வாசகர்களுடன் நடந்த சந்திப்பு என்று விலாவரியாகச் சொல்லிவிட்டு, இந்த விருது வாங்கல் விழாவை, கொச்சைப் படுத்தி நு·மான் எழுதிய கட்டுரையை பிரசுரித்த காலச்சுவடையும், சு.ராவையும் ஒரு பிடி பிடிக்கிறார். வெ.சா பற்றியும், சு.ர. பற்றியும் முன்னபிப்ராயம் இல்லாதவர்கள், திறந்த மனதுடன் படித்தால், வெ.சாவின் நையாண்டியுடன் கூடிய எழுத்து நடையை நன்கு ரசித்துப் படிக்கலாம். அந்தக் கட்டுரை இதோ..

2. இந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாக, நீண்ட நாளாக மோனத்தில் இருந்த எழுத்தாளர் சுந்தர.ராமசாமி, மீண்டும் திண்ணைக்கு வந்தார். வெங்கட் சாமிநாதனுக்கும் தனக்கும் இடையில் இருந்த நட்பு, துவக்க காலங்களில் நடந்த சம்பவங்கள், ஒருவர் நூலுக்கு மற்றவர் வைத்த விமர்சனங்கள், காலச்சுவடு பத்திரிக்கையின் நோக்கங்கள், அது செல்ல விரும்பும் உயரங்கள் என்று சொல்லி, காலச்சுவடு அனுசரிக்கும் கருத்துச் சுதந்திரத்தினால் தான், நு·மானின் கட்டுரை பிரசுரமானது என்று சொல்கிறார்.

3. விருது வழங்கிய விழாவின் , வாசகர் சந்திப்பு மிகுந்த ஏமாற்றம் அளித்தது என்று டி.சே.தமிழன் என்பவர் எழுதிய கட்டுரை. ' வெங்கட் சாமிநாதனுடன் ஒரு வெற்று மாலைப் பொழுது'

4. டி.ஜே தமிழனின் கட்டுரைக்கு எதிர்வினையாக, ஜெயமோகன் உள்ளே புகுந்து, வெ.சாவுக்கு ஆதரவாகச் சொல்லும் கருத்துக்கள்

5. வெ.சா வின், பெண்ணியம், படைப்பிலக்கியங்களில் தென்படும் ஆபாசம் பற்றி,
சுமதி ரூபனின் ஆவேசம்

6. வெ.சா வுக்கு வக்காலத்து வாங்கி, சுமதி ரூபனுக்கு ஜெயமோகன் எழுதிய பதில் ஒன்று மற்றும் பதில் இரண்டு

7. வெங்கட் சாமிநாதனின் தன்னிலை விளக்கம்

8. சுமதி ரூபனின் அந்தர் பல்டி

9. மாலன், வெங்கட் சாமிநாதனுக்கு விடுக்கும் கேள்விகள்

10. மாலனுக்கு வெ.சா வின் பதில்

11. சூர்யா என்பவரது கருத்துக்கள்

12. சுந்தர.ராமசாமியின் கட்டுரைக்கு பதில் தரும் வெங்கட் சாமிநாதனின் 'காற்றினிலே வரும் கீதங்கள்' இனி இந்த விவகாரத்தை தொடர விரும்பவில்லை என்று வெ.சா முடித்துக் கொண்டு விட்டார். பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இரா.முருகன் என்கிற மத்தளராயர்

இந்த வாரம் , மத்தளராயரை மீண்டும் திண்ணையில் பார்க்க முடிந்ததில் ரொம்ப சந்தோஷம். பெரும் பகுதியை, அருண் கொலட்கர் ஆக்கிரமித்துக் கொண்டார். அருண் கொலட்கர் விளம்பர உலகில் பெரிய ஆள் என்று மத்தளராயர் மூலமாகக் கேள்விப் பட்டிருந்தாலும், ஒரு மஞ்சள் ( கலர் ) பத்திரிக்கையில் , அவருக்காக வந்திருந்த நினைவஞ்சலிக் கட்டுரையைப் படித்த போதுதான், இந்த கொலட்கர் எத்தனை பெரிய ஆள் என்று புரிந்தது. அவர் செத்துப் போன பின்புதான், அவருடைய அருமை பெருமைகள் பேசப் படுகின்றது. இது போல, கொஞ்ச நாட்களுக்கு முன்பு posthumous புகழ் பெற்ற இன்னொருத்தர், எழுத்தாளர் கோபி கிருஷ்ணன். கொலட்கர் இருக்கட்டும், ஜிக்கி பற்றிய நினைவுக் குறிப்பின் இறுதியில்

"......ஜிக்கி என்ற ஜி.கிருஷ்ணவேணி அண்மையில் காலமானபோது தொலைக்காட்சியில் அரை நிமிடச் செய்தியானார்.
தொலைக்காட்சி காமிராவின் பார்வையில் ஜிக்கி வீட்டு முன்னறையில் சவப்பெட்டியில் அவர் உடலை வைத்திருப்பதும், சூழ்ந்த சுற்றமும் நட்பும் தவிர அவர் கால்மாட்டில் ஒரு டெலிவிஷன் பெட்டி தட்டுப்பட்டது. அதில் ஓடிக் கொண்டிருந்த விளம்பரப்படமும். வீட்டில் உயரும் அழுகைக்கு நடுவே அமிதாப் பச்சன் காட்பரீஸ் சாக்லெட்டையோ வேறு எதையோ விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்.

நகர வாழ்க்கைக் காட்சிகளின் அபத்தங்களைக் கவிதையாக்கிய அருண் கொலட்கர் திரும்ப நினைவு வருகிறார்...."

என்று முடித்திருந்தார்.

மூணு மாசமா காணாமல் போய், இப்ப வரும் போது அண்ணன், ·புல் ·பார்மிலே வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். நேர்ல பார்த்து பேசணும் போல இருந்தது.

Comments

Kasi Arumugam said…
பிரகாஷ்,

உண்மையில் அந்தக் கடிதத்தைப் பதிப்பிக்கவேண்டி அனுப்பவில்லை. அது ஒன்றும் 'யுனிகோடு இடஒதுக்கீட்டில் அநீதி' என்ற கட்டுரையின் பொருள் பற்றிப் பேசவில்லை. முக்கியக் கருத்துக்கு வெளியே என் தனிப்பட்ட பிரச்னையை நான் அவர்கள் பார்வைக்கு எடுத்துச்செல்ல எழுதப்பட்டது. அத்ற்கு அந்தக் கட்டுரை ஆசிரியர் அசுரன்கூட சரியான பதில் கொடுத்திருந்தார். எனவே அது பொதுவில் வெளியிடப்படவேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற விஷயமில்லை.

ஆனால் திண்ணை இன்னும் தன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவேண்டியது அவசியம். இன்று வெளியான கடிதத்திலேயே கூட உரலில் எழுத்துப்பிழை தெரிந்தது. அதை சுட்டியாக கொடுப்பது இன்னும் அவர்கள் பாவிக்கும் தொழில்நுட்பத்தில் இயலுவதில்லை. அது கவனிக்கப்பட்டால் நல்லது. இதை நான் முன்பே ஒருமுறை அவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். அவர்களின் மனிதசக்தியையும் பார்க்கவேண்டும். விளம்பரம் இல்லாமல் அதை நடத்துவது எளிதானதல்ல.
நன்றி காசி...

எனக்கு இந்த யூனிகோட் விவகாரம் அத்தனை லேசில் புரிந்து தொலைக்காது. உங்கள் கட்டுரையில் இருந்து ஒருத்தர் 'சுட்டதை', நீங்கள் எடுத்துக் கொண்ட விதமும், அந்தக் கடிதத்தின் தொனியும் ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது. அதைத்தான் குறிப்பிட்டேன். உடன் பாடு இல்லாத விஷயத்தை, முகமூடி போட்டுக் கொண்டு பதில் எழுதுபவர்களையும், ஏதோ ஒரு வரியை பிடித்துக் கொண்டு மேலும் மேலும் ஊதி, பெரிசாக்குபவர்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். போட்டுத் தாக்குவதற்கு செம்மையான ஸ்கோப் இருக்கிற ( அட்லீஸ்ட் நம்ம வலைப்பதிவாளர் கோஷ்டியிலேயாச்சும் ) ஒரு விஷயத்தை, ஒரு லெட்டர் போட்டு சரி செய்ய முயற்சி செஞ்சது என்னை ஈர்த்தது. அதைத்தான் எழுதினேன். மற்றபடி திண்ணை, தொழில் நுட்பத்தில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்பதிலே மாற்றுக் கருத்தே இல்லை. சில சமயம் content , மத்த தொழில்நுட்பக் குறைகளை கண்டு கொள்ளாமல் போகச் செய்து விடுகிறது. :-)
.:dYNo:. said…
Prakash

The link 'Sumathy Rupanin aavesam' starts with a '.', hence gives a syntax error.

-dyno
thanks dyno. link corrected

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்