என் நைனாவும், சாருநிவேதிதாவும்

நாலைந்து நாட்களாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். வீட்டிலே விநோதமாக ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.

கோணல் பக்கங்கள் மூன்றாம் பாகம், என் அப்பாவின் புத்தகங்களூடாக இறைந்து கிடக்கிறது . நடைமுறை என்ன என்றால் என்றால், நான் வாங்கி வரும் அல்லது திருடிக் கொண்டு வரும் அல்லது இரவல் வாங்கி வரும் புத்தகங்கள்/சஞ்சிகைகளை, செத்துப் போன எலி, நிஜமாகவே செத்துப் போய்விட்டதா அல்லது கடுக்காய் கொடுக்கிறதா என்று சோதித்துப் பார்க்கிறார் போல, ஒரு முறை பார்த்து, தூக்கி எறிந்துவிட்டு , சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் அம்மாத 'ஞானசம்பந்தம்' இதழிலோ அல்லது ஜூனியர் விகடனின் ரத்தந்தோய்ந்த முகப்புப்படக்கதையிலோ மூழ்குவதுதான் வழக்கம்.

ஆனால், இப்போது நடப்பது என்னமோ வழக்கத்துக்கு மாறாக இருக்கிறது.

என் வீட்டிலே அனைவருமே தமிழ்ப்புத்தகங்கள் வாசிக்கின்ற பழக்கம் இருந்தாலும், ஓவ்வொருவரும் தனியான ரசனையைக் கொண்டவர்கள். யாரும் யாரையும், குறிப்பிட்ட புஸ்தகத்தை ஏன் வாசிக்கிறாய் என்றொ ஏன் வாசிக்கவில்லை என்றோ கேட்டுக் கொள்வது கிடையாது. சற்றேறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு, ஒருமுறை , இரவுச்சாப்பாட்டுக்கடையின் போது, பிடித்த/பிடிக்காத எழுத்தாளர் குறித்து எழும் சகோத்திரர்களுடனான வழக்கமான
விவாதம், மயிர்பிடிச்சண்டை வரை போய்விட்டபின்பு, இனி இந்த நேரத்தில் இங்கே வர வேண்டியதில்லை என்று அம்மா, சுஜாதாவுக்கும் பாலகுமாரனுக்கு, லட்சுமிக்கும் , வாசந்திக்கும், அனுராதாரமணனுக்கும் தடை உத்தரவு போட்டு விட்டார்.சாண்டில்யனுக்கு மட்டும் விதிவிலக்கு ( அவரைப் பற்றி பேச்சு வந்தால், அம்மா மட்டும் தனக்குத் தானே பேசிக் கொள்ள வேண்டும். சாண்டில்யனால் சண்டை சச்சரவு ஏதும் வராது).

சகோதரிகள், திருமணம் ஆகி அவரவர் புகுந்த வீட்டிற்குச் சென்ற பின்னாலும் கூட, அந்த diplomacy ஐ கடைபிடிக்க வேண்டும் என்ற காரணத்தினாலே, , " ஏன் சாருநிவேதிதா புத்தகத்தை எல்லாம் வாசிக்கிறீர்கள் ? " என்று அப்பாவைக் கேட்க மனசு வரவில்லை.

வேறொரு விஷயமும் உறைத்தது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு வரையிலும், எழுத்து விடாமல் வாசித்த வாரயிதழ்குப்பைகளை, இரு விரல்களால் ஒரேயொரு முறை flip செய்து விட்டு தூக்கிப் போடுகிற என் சமீபத்திய பழக்கமும், கடல்புறாவையும் யவனராணியையும் பாராயணம் செய்து கொண்டிருக்கும் அம்மாவைக் கிண்டல் செய்வதும்,சிற்றிதழ்களில் வரும், தாடி வைத்த அயல்நாட்டுக்கார்களுடைய
மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை சன்ம்யூசிக்கில் பாட்டு கேட்டுக் கொண்டே படிப்பதும், நான் ஏதோ ஒரு தேவையற்ற ஹோதாவைக் காட்டுகிறேன் என்று அவருக்கு கோபம் வந்திருக்கலாம். அல்லது அது ஹோதா அல்லடா மடையா , ஹோதா இன்மைதான் என்பதை நிரூபிப்பதற்காக அவரும் அந்த புத்தகத்தை நாலைந்து நாட்களாகத் தொடர்ந்து படித்து முடித்திருக்கலாம்.

எதுவாக இருப்பினும், இரவு பதினோரு மணிக்கு மேல், உஷே டிவியிலே பாட்டு கேட்டு/பார்த்துக் கொண்டிருக்கும் போது

, சாரு நிவேதிதா குறித்த உரையாடலை நான் எதிர்பாக்கவில்லை. குறைந்த பட்சம் என் அப்பாவிடம்..

ஜொதெயலி ஜொதெ ஜொதெயலி....
இருவெனு ஹீகே எந்து...
ஹொச ஹருஷ வதருவெனு எந்து எந்து...


"ஆமா, யாருப்பா இவர்?" என்றார் முகத்துக்கு நேராகப் புத்தகத்தை நீட்டி..

நான் ஒலியளவைக் குறைத்து விட்டு, ' அதான் போட்டிருக்கேப்பா... சாரு நிவேதிதா..' என்று அவசரம் அவசரமாகச்

சொல்லி விட்டு டீவியின் ஒலியளவை ஏற்றினேன்.

ப்ரீதி எந்தரேனு எந்து ஹீகா அரிதெனு...
சவி நுடியலி தனு அரளிது
சவி கனசலி மன குனியது..
ஒலவினா ஈ மாத்திகே..


அவர் சமாதானமாக வில்லை.

'இது என்ன? படிச்சு முடிச்சேன்.. ஏன் படிக்கவே ஒரு மாதிரியா இருக்கு? சாதாரண கட்டுரைத் தொடர் மாதிரியே இல்லையே? '

'அவர் அப்படித்தான் எழுதுவார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்தப் பாட்டைக் கேட்டுட்டு வந்து பொறுமையாச் சொல்றேன்..'

ஹகலு இருளு ஒந்தாகி ஹாடுவா
ஜொதெயலி ஜொதெ ஜொதெயலி....
இருவெனு ஹீகே எந்து...
ஹொச ஹருஷ வதருவெனு எந்து எந்து...


டிவீயை அணைத்து விட்டு... 'இப்ப சொல்லுங்க..'

' இதுல வரது எல்லாம் அவரோட சொந்த அனுபவங்களா... இல்லே குண்டு விடறாரா?"

' நெஜம்னுதான் நெனைக்கிறேன்... என்ன, அங்க இங்க கொஞ்சம் exaggerate செஞ்சிருக்கலாம்.."

' இல்லே, வெலை 200 ரூபாய்னு போட்டிருக்கே, இதையெல்லாம் அவ்வளவு பைசா கொடுத்து யாராச்சும் வாங்குவாங்களா?'

அவருக்கு என்னுடைய spending habits , குண்ட்ஸாகத் தெரியும். அதனால் இதனை யாரிடமோ கைமாற்றாகத்தான் பெற்றிருப்பேன் என்பது அவரது நம்பிக்கை.
நாராயண் இதை எனக்கே எனக்கென்று அன்பளிப்பாகத் தந்தார் என்று சொன்னேன்.

' வாங்குவாங்களாயிருக்கும்.. எனக்குச் சரியாத் தெரியலை...வாங்காட்டி, இவ்வளவு வெலை வெச்சு விப்பாங்களா? அதுவும் மூணாம் பாகம்?"

சற்று நேரம் மௌனம்.

விசாரணை முடிந்து விட்டது என்று நினைத்து சங்கர்நாகையும் அருந்ததி நாகையும் விட்ட இடத்தில் இருந்து துரத்த எண்ணி தொலைக்காட்சியை ஆன் செய்த போது....

" என்ன வேலை பாக்கறார்? எழுதறதுதான் அவருக்கு முழு நேர வேலையா? கட்டுப்படியாகுமா? "

மறுபடியும் அணைத்தேன்.

" ஆமாப்பா ஆமாம்...எழுதறதுதான் அவரோட முழுநேரத் தொழில்... புஸ்தகம் வித்து வர ராயல்ட்டிலே தான் சாப்பிடறார்னு நெனைக்கிறேன்.."

அதுதவிரவும் ஆன்லைன் நண்பர்கள் உதவி செய்வார்கள் என்றும், அதற்காக அவர்
பணம் கேட்டு எழுதிய சமீபத்திய கட்டுரையை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுக்கலாமா என்று யோசித்து வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

" ஆமா....இதுல சீரோ டிகிரி சீரோ டிகிரின்னு அடிக்கடி வருதே... அது என்ன?"

" அது அவரோட நாவல்.. ரொம்ப பிரபலமானது..."

" அந்த புக் வெச்சிருக்கியா? "

" இல்லை. அதல்லாம் உங்களுக்குப் புரியாது.. கம்முனு கெடங்க..."

Comments

இதுல வரது எல்லாம் அவரோட சொந்த அனுபவங்களா... இல்லே குண்டு விடறாரா?"

இல்லே, வெலை 200 ரூபாய்னு போட்டிருக்கே, இதையெல்லாம் அவ்வளவு பைசா கொடுத்து யாராச்சும் வாங்குவாங்களா?

ஆமா....இதுல சீரோ டிகிரி சீரோ டிகிரின்னு அடிக்கடி வருதே... அது என்ன?

அது அவரோட நாவல்.. ரொம்ப பிரபலமானது... (இதை இப்படித்தான் சொன்னீங்களா... அல்லது அவரு எழுதுன ஒரேயொரு நாவல்.. பிரபலமானதுன்னு சொல்றாங்கன்னு சொன்னீங்களா)

இல்லை. அதல்லாம் உங்களுக்குப் புரியாது.. கம்முனு கெடங்க...

;-))))))))
//இல்லை. அதல்லாம் உங்களுக்குப் புரியாது.. கம்முனு கெடங்க...//


எரிச்சல் அல்லது சலிப்பு சாரு மேலயா அல்லது அப்பா மேலயா?
திரைப்படத்துறைக்கு ஒரு தங்கர்பச்சானும் எழுத்துத்துறைக்கு ஒரு சாருநிவேதிதாவும் இல்லாமலிருந்தால், பதிவிடும் பாதிப்பேர் பதிவுப்பசியால் செத்திருப்போம் ;-))
-/ மாசக்கா... குசும்பு huh...
Mookku Sundar said…
நைனா அதி சீக்கிரம் உங்களுக்கு கண்ணாலம் பண்ணிவைக்கப் போறாஹன்னு பட்சி சொல்லுது :-)
அவருக்கு என்னுடைய spending habits , குண்ட்ஸாகத் தெரியும். அதனால் இதனை யாரிடமோ கைமாற்றாகத்தான் பெற்றிருப்பேன் என்பது அவரது நம்பிக்கை.
நாராயண் இதை எனக்கே எனக்கென்று அன்பளிப்பாகத் தந்தார் என்று சொன்னேன்

ada narayana :)
ரமணி : ஏன் ரெண்டு பேரோட நிறுத்திட்டீங்க? லிஸ்ட் போட்டா ரொம்ப பெருசா இருக்குமே? :-)

மூக்கரே, ஓரளவுக்கு நீங்க சொல்றது கரக்ட்டுதான். நடந்துட்டுதான் இருக்கு...சிக்கல் என்னனா, கிட்டுமணி மாதிரி எட்டு கண்டீசன் இல்லாட்டியும், ஒரே ஒரு கண்டிஷன் போட்டிருக்கேன். டிவீ சீரியல் பார்க்கும் பழக்கம் இருக்கப்படாதுன்னு.. சவுத் இந்தியாவிலேயே அப்படிப் பட்டவங்க யாரும் கிடையாதாமே... :-)

ravi, வாணாம்... உங்க கடுப்பை நாராயணன் மேலே காட்டாதீங்க.. அவரே பயங்கர பிசியாச் சுத்தீட்டு இருக்கார்... போனாப்போவுது உட்டுடுங்க... :-)

பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கு நன்றி
அட நாராயணா, நீங்கள் இருநூறு ரூபாய் கொடுத்து புத்தகம வாங்க மாட்டீர்கள் என்று அவர் ஊகித்ததை அப்படிச் சொன்னால் நீங்கள் இந்த நாராயணனை....,
அட நாராயணா :-)
சவுத் இந்தியாவிலேயே அப்படிப் பட்டவங்க யாரும் கிடையாதாமே... :-)

ஐயா இது ஒரு நிபந்தனஎயே அல்ல, சீரியல் பார்க்காத பெண்ணாக நான் பார்த்துத் தருகிறேன், ஆனால் திருமணத்திற்கு அப்புறம் பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல, எப்படி வசதி :)
அரசியலுக்கு ராமதாசு, கல்விக்கு அண்ணாபல்கலைக்கழகம், சாமிக்கு மதுரையாதீனம் அப்பிடியே பட்டியலை நீட்டீட்டாபோச்சு ;-)
SnackDragon said…
/ சீரியல் பார்க்காத பெண்ணாக நான் பார்த்துத் தருகிறேன்,/
முதலிலே வந்தவர்களுக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு, பிறகு பிரகாசுக்கு பார்க்கலாம். பிரகாஷ் இவர் பேச்சல்லாம் நம்பாதீங்க. அனுபவத்தில சொல்றன். :-)
இதே கதை என் நைனாவுடனும் நடந்திருக்கிறது!! என்னதான் இருந்தாலும், புத்தகங்களைத் திறந்து இரண்டு பக்கமாவது படிக்கிறார்களே என்று பார்க்கையிலேயே ஒரு மகிழ்ச்சி வருவதென்னமோ நிஜம்!!
ரவி : உங்க profile இலே தொழில் non-profit என்று போட்டிருக்கிறது. ஆக, இது சைட் பிசினஸா? நல்லா இருங்க :-)

ரமணி : இன்னும் நம்ம ரூட்டுக்கே வரலை. பரவாயில்லை..

கார்த்திக் : சற்றும் தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமன் கதையை அம்புலிமாமாவிலே வாசிச்சதில்லையா? சும்மா ஜாலியா சின்னப் பயன் மூச்சா போற படத்தை எல்லாம் தேடிப் புடிச்சு போட்ட்டு இருக்கார்... உடாதீங்க அமுக்கிப் புடிங்க..

பாம்பு : என்னடா நமக்கு இந்த விஷயத்திலே கம்பெனியே இல்லையோன்னு நினைச்சேன். நன்றி.
எனக்கு சாருநிவேதிதா புத்தகம் எல்லாம் கண்ணுல படறமாதிரி வைக்கற தைரியம் கிடையாது! ;)

எங்க அப்புச்சி, ஊர்ல இருந்து வந்ததும் வராததுமா 'அற்றம்' முதல் இதழை ஒருவாரமா கைல வச்சு படிச்சுட்டு இருந்தார். யாரார் எழுதுறாங்க. யாரார் ஆசிரியர் குழுவில் இருக்காங்கன்னு விசாரிச்சுட்டு இருந்தார்.

இப்ப ஹரியண்ணா புத்தகத்தையும் ஐயர் கொண்டு வந்துகொடுத்த வெங்கட்டின் குவாண்டன் கணினியையும் அவர் பக்கம் நகர்த்திட்டு தேமேன்னு இருக்கேன்.

கொடுத்த பாட்டுக்கு நன்றி. நல்லாருந்துச்சு.

-மதி
எல்லோரும் அவரவர் நைனாவைப் பற்றிக் கதைக்கின்றதாலை நானும் என்ரை நைனாவைப் பற்றிக் கதைக்கப்போறன :-). நைனாவிடம் நான் வாசிக்கும் எந்தப்புத்தகத்தையும் மறைத்ததில்லை, அவரும் தான்.

அண்மையில் 'Rape Me' என்று பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கும்போது நைனா காண்கையில் என்ன நினைத்திருப்பார் என்று மட்டும் ஒருகணம் யோசித்திருக்கின்றேன். புத்தக்கடைக்குப் போனால் தான் அவ்வளவாய் வாசிக்காவிட்டாலும், உயிர்மை, தீராநதி, காலச்சுவடு புதிதாய் வந்திருந்தால் எனக்காய் வாங்கிக்கொண்டு வந்து தருவார். மற்றப்படி, கருத்துப் பரிமாற்றம் எல்லாம் எங்களுக்கிடையில் பெரிதாய் நடைபெறுவதில்லை. நேற்றைக்கு, மியா பாட, ரொரண்ரோவுக்கு வருகின்றா பார்க்கப்போவோம் என்று கஸினொடு கதைத்துக்கொண்டிருக்கும்போது,நைனாஇடைநடுவில் வந்து சொன்னார்; மியா குறித்து இந்தப்பேப்பரில் ஒருத்தர் கட்டுரை எழுதியிருக்கின்றார் வாசித்திருக்கின்றியளோ என்று. அந்தக்கட்டுரையை நைனாவின் சன் தான் எழுதியிருந்தார். ஆனால் நைனாவுக்கு இந்த உண்மை தெரியாது. எத்தனை இரகசியங்கள் மனதோடு இருக்கிறது என்று பீலாவாய் சன்னும் யார் எழுதியது என்ற உண்மையைக் கூறாது மெளனித்து மியா பாடுகின்றதை பற்றி கனவுகாணத் தொடங்கிவிட்டார்.
.....
சாருவின் 'சீரோ டிகிரி' பற்றி எனது பதிவொன்றில் எழுதியதை தோழி ஒருத்தி வாசித்துவிட்டு தானும் வாசிக்கப்போறன் புத்தகத்தைத் தாவென்றாள். தாறன் பிரச்சினையில்லை; பிறகு இரத்தக்கொதிப்பு ஏறி என்னோடு சண்டைபிடிக்கக் கூடாது என்று முன்னுக்கே எச்சரிக்கை செய்துவிட்டுத்தான் புத்தகத்தைக் கொடுத்தேன். கொஞ்சம் வாசிக்கத்தொடங்கிவிட்டு எனக்குத் தொலைபேசியில் எடுத்து நல்லாய் திட்டினார். என்ன செய்வது புத்தகம் கொடுத்தாலும் திட்டு; கொடுக்காவிட்டாலும் திட்டு. புத்தகம் வாசிகின்றவன் பிழைப்புக்கூட இப்ப நாயபட்ட பிழைப்பாய்ப் போச்சுது :-).
//எனக்கு சாருநிவேதிதா புத்தகம் எல்லாம் கண்ணுல படறமாதிரி வைக்கற தைரியம் கிடையாது! ;)

எங்க அப்புச்சி, ஊர்ல இருந்து வந்ததும் வராததுமா 'அற்றம்' முதல் இதழை ஒருவாரமா கைல வச்சு படிச்சுட்டு இருந்தார்.//

இந்த ஆட்டத்தின் போது அம்மா அருகிலே இல்லை என்பதை சொல்ல மறந்து விட்டேன்.

//இப்ப ஹரியண்ணா புத்தகத்தையும் ஐயர் கொண்டு வந்துகொடுத்த வெங்கட்டின் குவாண்டன் கணினியையும் //

ஹ¥ம்ம்ம் ரெண்டும் ரொம்ப ரொம்ப சைவம்...:-)

//பாட்டுக்கு நன்றி. நல்லாருந்துச்சு.//

வெல்கம். கன்னடத்திலே ரொம்ப பிரபலமான பாட்டு இது. பின்னாளில் இதே பாட்டை தமிழில் இளையராஜா கொடுத்தார் ஆனால், ஒரிஜினல் மாதிரி இல்லை என்று சொல்லி சில தமிழ்த்தீவிரவாதிகளிடம்:-) அடி வாங்கியிருக்கிறென்.
//அண்மையில் 'Rape Me' என்று பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கும்போது நைனா காண்கையில் என்ன நினைத்திருப்பார் //

பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் புத்தகத்தை எல்லாம் brown cover போட்டு படித்தது ஞாபகத்துக்கு வருகிறெது.. பின்னூட்டத்துக்கு நன்றி டி.சே

//கொடுத்தாலும் திட்டு; கொடுக்காவிட்டாலும் திட்டு. புத்தகம் வாசிகின்றவன் பிழைப்புக்கூட இப்ப நாயபட்ட பிழைப்பாய்ப் போச்சுது :-). //

:-):-):-)
/அண்மையில் 'Rape Me' என்று பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கும்போது நைனா காண்கையில் என்ன நினைத்திருப்பார்/

இதுக்கு ப்ரோவுக்கு நல்ல பதில் சொல்லுவன்; இடம் சரியில்லை ;-)

பிரகாஷ் நீங்கள் சொல்கிற ரூட்டுக்கு இந்த இடத்திலே போவதில்லை என்ற பிடிவாதத்திலே இருப்பதாலேதான் போகவில்லை. எல்லாம் அந்த அவன் புண்ணியம்; அவன் பாத்துப்பான் ;-)
" இல்லை. அதல்லாம் உங்களுக்குப் புரியாது.. கம்முனு கெடங்க..."//

நைனாமார் புத்திசீவிகளாக வ(ள)ர விரும்பாதவர்களது சதி இது..
தருமி said…
"மயிர்பிடிச்சண்டை வரை போய்விட்டபின்பு, "...இதற்கும் உங்கள் படத்திற்கும் ஏதும் தொடர்புண்டோ??!!
பிரகாஸ் நல்ல அனுபவம் உங்கள் நைனாவுடன்.நானும் என் நைனாவைப் பற்றிச் சொல்லலாம் தான் வேண்டாம் பிறகு அவர் கிழித்தெறிந்த ராணிகாமிக்ஸ்தான் நினைவுக்கு வரும்

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I