ஒரு கேள்வி - ஒரு பதில்

கேள்வி : பத்து வருடங்களுக்கு முன்பு, ஒரு நேர்-காணலின் போது,
இயக்குனர் பாலுமகேந்திரா, தமிழ் பத்திரிக்கைகளைப் பற்றி
பின்வரும் அபிப்ராயயத்தை வெளியிட்டார். " பெரும் பத்திரிக்கைகளான
ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் ஆகிய பத்திரிக்கைளின் அட்டைப்
படத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால், ஒன்றுக்கொன்று எந்த வித்தியாசமும்
இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. அட்டைப் படத்தை நீக்கி
விட்டால் எல்லா பத்திரிக்கையும் ஒன்றுதான் ".

இது ஒரு மேம்போக்கானகுற்றச்சாட்டா அல்லது ஏதேனும் உள்ளார்ந்த அர்த்தம்
இருக்கிறதா? உங்கள் கருத்து என்ன? ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில்,
பத்திரிக்கைகளின் தற்போதைய நிலைமை என்ன?


பதில் :


பா.ராகவன்

அட்டைப்படத்தை நீக்கினால் எல்லா பத்திரிகைகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன என்றொரு கருத்து இருப்பதை அறிவேன். அதைச் சொன்னது பாலுமகேந்திராவா, பத்து வருஷங்களுக்கு முன்னரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

என்னளவில் இந்தக் கருத்து மிகவும் தவறானது. எதற்காக அட்டைப்படத்தை நீக்கவேண்டும்? லோகோவை மட்டும் நீக்கினால் போதும். எல்லாம் ஒன்றேதான். அதாவது இடம்பெறும் விஷயங்கள். பயன்படுத்தப்படும் பேப்பர்,அச்சுத்தரம், விலை உட்பட.

ஆனால் கையாளப்படும் மொழிநடையில் ஒவ்வொரு பத்திரிகைக்கும் கணிசமான வித்தியாசங்கள் உண்டு.குமுதத்தின் மொழி நடையில் ஒரு இயல்பான இளமை வாசனை இருக்கும். எக்கச்சக்கமாக இங்கிலீஷ் கலந்தாலும் பேச்சுமொழி மாதிரியே மனத்தில் ஒலிக்கும். இதுவே விகடன் மொழியில் கையாளப்படும் இளமை நடையில் வலுவான செயற்கைத்தனம் தென்படும். அதிகம் புழக்கத்தில் இல்லாத, ஆனால் கேள்விப்பட்ட கல்லூரிக்கொச்சைகள்அதிக அளவில் திணிக்கப்படுவதை கவனிக்கலாம். குங்குமம் போன்ற பத்திரிகைகள் மொழிக்காக மெனக்கெடுவதில்லை. கிடைக்கிறதைப் போடுகிறார்கள். அவ்வளவுதான்.

கரண்ட் அ·பேர்ஸ் என்று சொல்லப்படும் உடனடி விஷயங்களைப் பொறுத்தமட்டில் அனைத்துத் தமிழ்ப்பத்திரிகைகளின் அணுகுமுறை, பார்வை, மதிப்பீடு எல்லாமே ஒரே மாதிரிதான் இருந்துவருகின்றன.தலையங்கங்களில் மட்டும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். இதில் காரம் சேர்க்கலாம், கொஞ்சம் புளிப்பு குறைக்கலாம், ஒரு துளி சர்க்கரை வைக்கலாம் என்று அவ்வப்போது தலையங்கம் எழுதுவோர் எடுக்கும் முடிவுகளின்படி சிறு மாறுதல்கள் உண்டாகுமே தவிர, டோட்டல் சேஞ்ச் என்பது கிடையாது. சம்பந்தப்பட்ட பத்திரிகையின் அப்போதைய அரசியல் நிலைபாடு என்ன என்பதைப் பொறுத்து, ஆளும் கட்சியைத் திட்டுகிற/பாராட்டுகிற விஷயத்தில் மட்டும் கூடுதல் குறைச்சல் ஏற்படும்.

முன்பெல்லாம் (90களின் பாதிவரை) சிறுகதைகளைக்கொண்டு பத்திரிகையை இனம் காணலாம் -
அட்டைப்படத்தைக் கிழித்துவிட்டபோதும். இப்போது அதுவும் சாத்தியமில்லை. எல்லா பத்திரிகைகளிலும் இருபது வரிகளுக்கு மேல் போகாத கோவண சைஸ் கதைகள் தான் வெளியாகின்றன. அரைப்பக்க, கால்பக்கக் கதைகளுக்கு சுஜாதா மூலம் புனர்வாழ்வு கிடைத்திருக்கும் இத்தருணத்தில் யாரும் நல்ல சிறுகதை வெளியிட்டு தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது. (உட்னே அரைப்பக்கத்தில் நல்ல சிறுகதை கிடையாதா என்று கேட்கவேண்டாம். தமிழ்ப் பத்திரிகைகள் ஆறு பக்கங்களில் சிறுகதை போட்ட காலங்களில் என்ன தரம் சாத்தியமாக இருந்தது என்பதை ஒப்புநோக்கி இதை அணுகவேண்டும்.)

சினிமா, அரசியல் புள்ளிகள் பெரும்பாலும் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தவுடன் காலை, மதியம், மாலை, இரவு என்று ஷெட்யூல் போட்டு எல்லா பத்திரிகையாளர்களையும் தனித்தனியே வரவழைத்து Exclusive பேட்டி அளித்துவிடுவதால் அந்தந்த வாரம் அனைத்துப் பத்திரிகைகளிலுமே சம்பந்தப்பட்டவர்களின் நாலைந்து Exclusive பேட்டிகள் வந்துவிடுகின்றன. பெரும்பாலும் lead மேட்டர்கள் கூட ஒரே மாதிரி அமைந்துவிடுவதை சமீபகாலமாக கவனிக்கிறேன். பிரபலங்கள் கொஞ்சம் மனச்சாட்சியுடன் நடந்துகொண்டால் இந்த விபத்தைத் தவிர்க்கமுடியும். இதில் பத்திரிகையாளர்களைக் குறை சொல்லமுடியாது. பவிழம் நகைக்கடைக்கு பப்ளிசிடி கொடுத்தே தீருவது என்று எம்பெருமானும் ரம்பாபெருமாட்டியும் தீர்மானித்துவிட்ட பிறகு ரிப்பொர்ட்டரையும் ஜூவியையும் நக்கீரனையும் குறைசொல்லி என்ன புண்ணியம்?

சமீபகாலமாக வாலியைக்கொண்டு தொடர்ந்து புதுக்கவிதை வடிவில் பக்தி இலக்கியங்களை எழுதவைப்பதன் மூலமும் எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற நவீன இலக்கியவாதிகளுக்கு மூன்று பக்கங்கள் ஒதுக்குவதன் மூலமும் விகடன் தன் "இளமை கலாட்டா"க்களுக்கு நடுவில் கொஞ்சம் இலக்கிய சேவை செய்துவருகிறது. குமுதம் உள்ளிட்ட வேறெந்த இதழ்களில் இத்தகைய பகுதிகள் இல்லை. குங்குமத்தின் தனித்துவம் என்று பார்த்தால் வாரம் ஒரு வாசகரைக் குலுக்கிப் போட்டு மோட்டார் சைக்கிள் கொடுப்பதைத் தான் சொல்லவேண்டும். (ஒரே சமயத்தில் கலைஞரின் இரண்டு தொடர்களை இப்பத்திரிகை வெளியிடுகிறது. ஆனால் இதைத் தனித்துவத்தில்
சேர்க்கமுடியாது.) குமுதத்தின் தனித்துவம் குறித்துக் குறிப்பிட்டுச் சொன்னாலும் புரியுமா என்று
தெரியவில்லை. தம் தனித்துவத்தை வாரம் தோறும் imprintல் அவர்கள் ிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்புறம் ஜங்ஷன். இதன் தனித்துவம் அடிக்கடி தன் பீரியாடிஸிடியை மாற்றிக்கொண்டிருப்பது. முதலில் நான் ஆரம்பித்த காலத்தில் மாதம் இருமுறையாக வெளிவந்தது. அப்புறம் வார இதழானது. பிறகு நேற்று மாத இதழ். இன்றைக்கு ஒரு விளம்பரத்தில் பார்த்தேன். "டூ இன் ஒன் இதழ் - தேவிபாலா நாவல்" என்றிருந்தது. ஒரு கணம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு வேறுகாரியம் பார்க்கப் போய்விட்டேன்.

மற்றபடி இந்த வம்புகள் எதிலும் தலையிடாமல் எப்போதும்போல் கல்கி ஒரு தனி டிராக்கில்
போய்க்கொண்டிருக்கிறது. கொஞ்சம் பழமை, கொஞ்சம் இளமை என்கிற ·பார்முலா. தீவிர ஜெயலலிதா எதிர்ப்பு, கலைஞர் ஆதரவு என்கிற நிலை. ஐடியலிஸ்டிக் அரசியல் பார்வை. மாறுதல் ஏதுமில்லை. கல்கியின் சைஸ், அதன் பிரதான தனித்துவம். அதன் மொழி இப்போது கொஞ்சம் இளகியிருக்கிறது. கொஞ்சம் விட்டால் விகடனைத் தொட்டுவிடுமோ என்று என்னைப்போன்ற வெகுநாள் கல்கி வாசகர்களுக்கு சிறு கவலை இல்லாமல் இல்லை. ஆனால் நெருக்கியடித்தாவது ரெண்டு நல்ல சிறுகதைகள் வெளியிடுவது, ஆணித்தரமான தலையங்கங்கள்
எழுதுவது, ப.சிதம்பரம் போன்ற விற்பன்னர்களை எழுதவைத்து வெளீயிடுவது, முக்கூர் லக்ஷ்மி
நரசிம்மாச்சாரியாரும் காஞ்சிப்பெரியவரும் செத்துப்போன பிறகும் வாத்ஸல்யம் மாறாமல் அவர்களது
படைப்புகளைத் தொடர்ந்து தருவது எனச் சில விடாப்பிடிகளை வைத்துக்கொண்டிருப்பதன்மூலம் ஏனைய தமிழ் வார இதழ்களுடன் ஒப்பிட்டால் இன்றளவும் தனித்துவம் பேணுகிற ஒரே பத்திரிகை கல்கிதான். அட்டையைக் கிழித்தாலும் தனித்துத் தெரியும். அட்டையோடு சேர்த்தால் அதிகமே தெரியும்.

பாரா

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I