pazhaiya sarakku - nalabhagam

எழுத்தாளருக்கு அவ்வப்போது வருவது writer's block என்றால் வலைப்பதிவாளருக்கு வருவது bloggers block. வார இறுதி. சாவகாசமாக உட்கார்ந்து இணையத்தை மேய்ந்து கொண்டிருந்தாலும், என்ன எழுத என்று தெரியவில்லை. அதுக்காக கையையும், விசைப்பலகையையும் வெச்சிகிட்டு சும்மா இருக்க முடியாதில்லையா? அதனால், பழைய சரக்கு ஒண்ணு...

நளபாகம்.

மங்களா கபே ஓனரின் அம்மா செத்துபோனதுக்கும் , என் மனைவி என் முதுகிலும், என் மச்சினன் முதுகிலும் டின்கட்டினதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கக்கூடுமா என்றால்,

இருக்கும். சர்வ நிச்சயமாய் இருக்கும்.

ரம்யாவின், சித்தி பெண்ணுக்கு வளைகாப்பு என்று அவள் திருவாரூருக்கு புறப்பட்டபோது, அவள் சொன்னதில், முக்கியமானது, சமையல் அறைக்குள் நான் நுழையவே கூடாது என்பதுதான். எனக்கு தெரிந்த சமையல் வென்னீர் வைப்பதும் தயிர் தோய்ப்பதும் தான் என்று நண்பர்களிடம் பீற்றிக்கொள்ளும் போது ரகசியமாக தலையில் அடித்துக்கொள்வாள். காபி வைக்க கொஞ்ச நேரம் சமையல் அறைக்குள் புகுந்தால், அதை சரி செய்ய அவளுக்கு அரை நாள் ஆகும். என் கைவண்ணத்தில் அவ்வளவு களேபரம் உறுதி .

" ஒழுங்கு மரியாதையா, ஆபீஸ் விட்டவுடன், வீட்டுக்கு வந்து சேருங்க, பாச்சாவும் வீட்ல தான் இருப்பான், ஹோட்டல்ல வாங்கி சாப்பிடுங்க, ரெண்டே நாள்லே வந்துடுவேன்" என்று சொல்லி விட்டு ரம்யா, ஊருக்கு பஸ் ஏறியதில் ஆரம்பித்தது வினை.

" கேஸை தொடாதீங்க, அப்படியே, பால் கீல் காச்சினாலும், சிலிண்டரை ஆ·ப் பண்ண மறந்துடாதீங்க, பால் காச்சும் போது சிம்லே வைச்சு காச்சுங்க, என்றெல்லாம் அவள் தந்த அறிவுரைகளை, பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ,

அவளை பஸ் ஏற்றிவிட்டு நானும் பாச்சாவும் வந்த அன்று ப்ரச்சனை ஏதும் இல்லை.

அடுத்த நாள் தான் விவகாரமே

இவனை சிம்ரன் படம் ஏதாவதுக்கு துரத்தி விட்டு, தீர்த்தம் சாப்பிட எங்காவது ஒதுங்கிவிடலாமா என்ற யோசனையின் குறுக்கே, ரம்யாவின் நினைவு வந்து பயமுறுத்தியது. ராட்சசி. எப்படியாவது கண்டுபிடித்து விடுவாள். சன்னல் ஓரத்தில் அமர்ந்து, கை கட்டைவிரலை, வாய்க்கருகே கொண்டு சென்று, ஒற்றை விரல் காட்டி எச்சரித்து நினைவுக்கு வந்தது.

நாளை மறுநாள் வரை அவள் சென்னையில் இருக்க மாட்டாள் என்றாலும், அவளுக்கென்று யாராவது அகப்படுவார்கள்.

" ஏண்டி, பஸ்ஸ¤ல போறச்ச, ஒன் ஆம்படையானை, அந்த ஒயின் ஷாப்புலே பாத்தேனே, " ஏதாவது ஒரு மாமி சொல்லிவைக்கும். சில்லரை வாங்கத்தான் போனேன் என்றாலும் நம்ப மாட்டாள்.

கூட்டி கழித்து பார்த்து, தீர்த்தம் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

" என்ன, அத்திம், சைலண்டா, வண்டி ஓட்டறேள்?"

இவன் ஒரு வினை. வரதட்சணையாக பணம் கொடுப்பார்கள். எனக்கு இவனை சீர்வரிசையில் வைத்து கொடுத்துவிட்டார்கள். சோடா புட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு, இந்த சேட்டுக்கடைகளீல் எல்லாம், உருளையாக ஒரு சமாசாரம் இருக்குமே,சாய்ந்து கொள்வதற்கு, அது மாதிரி மொத்தமாக இருப்பான்.

"எனக்கு ஹாஸ்டலில் இவனை விடறது அவ்வளவா சரியாப் படலே. நீங்க பாத்துக்குங்க மாப்பிள்ளை, " என்று சொல்லிவிட்டு, என்னிடம் தள்ளி விட்டார்.

முடியாது என்று சொல்லிருக்கலாம். புதுப்பொண்டாட்டி, குழல் கேசம் , காதருகில் பறக்க, சற்றே அருகாமையில் வந்து சைட் ப்ரொ·பைலில் சொன்ன போது, மறுக்க முடியாது, ஒருகணம் மயங்கி, சரி யென்று தலையாட்டினேன்.முடிவில்லாத தொல்லைகள் எல்லாம், அரை வினாடி மயக்கத்தினால் வருபவை என்ற தத்துவத்துக்கு சரியான உதாரணம் பாச்சா.

பாலசுப்ரமணியம் என்ற பெயரை பாலு என்று கூப்பிடலாம். பாச்சா என்பார்களோ ? கேட்டால். அது எங்க தாத்தா பேர். கிண்டல் பண்ணாதேங்கோ" என்று இவள் முறைப்பாள்.

மொபசலில் இருக்கும் ஒரு இஞ்சினியரிங் காலேஜில் படித்தான். சமர்த்து போதாது. சிம்ரன் பட போஸ்டரை எல்லாம் ஆவென்று பார்த்துக் கொண்டே , வீட்டுக்கு வருவான். இவெனல்லாம், இஞ்சினியரிங் படிச்சி, என்னத்த கிழிச்சி என்று வியப்பாக இருக்கும்.

பெட்டி நிறைய பணம் எடுத்துக்கொண்டு, கரை வேட்டி போட்ட காலேஜ் சேர்மனிடம் மொத்தத்தையும் கொடுத்து, ஒரே நாளில் அட்மிஷன் முடிந்து விட்டது. துணைக்கு நானும் போயிருந்தேன்.

" ங்கொப்பன் கிட்ட, இவ்வளவு பணம் இருக்கா, கல்யாணத்தன்னிக்கு, சொத்தை கார், சூட்டு பணத்துலே ரெண்டாயிரம் பாக்கின்னு, பரதேசிக் கோலம் போட்டுட்டு, இன்னிக்கு, லட்சக்கணக்கில, ரூவா குடுத்து,புள்ளயை, இஞ்சினியரிங் சேத்தாறது" என்று கிண்டலாக சொல்ல, மூன்று நாள் என்னுடன் பேசவில்லை." ஆமா, படிக்க வெச்சா, கடேசி காலத்துலே, வெச்சி சோறு போடுவான், பாத்து பாத்து கல்யாணம் பண்ணிவெச்சாளேன்னு நீங்க ஏதானும் துரும்பை தூக்கிப்போடப்போறேளா என்ன? என்று ஒரு குதி குதித்து, கணக்கை நேர் செய்து விட்டுத்தான், திரும்பவும் என்னுடன் பேசினாள்.

உபரியாக, கல்யாணத்தன்னிக்கு, என் அக்கா, செய்த அடாவடிகள் பற்றியும் ஒரு பாட்டு கிடைத்தது.

" என்ன அத்திம், கேட்டுக்கிட்டே இருக்கேன், பேசாம வரேளே? "

" டேய் பாச்சா, அத்திம் கித்திம்னு கூப்பிட்டே, வண்டியிலேந்து புடிச்சி தள்ளி விட்டுடுவேண். அங்கிள்னு கூப்பிடுன்னு எத்தன தரம் சொல்றது? , "

" சரி, அங்கிள். ஏதாவது படத்துக்கு போலாமா? " அக்காதான் வீட்ல இல்லியே"

" கொன்னுடுவேன், ஸ்டடி ஹாலிடேஸ்னா, அது படிக்கறதுக்கு. சிம்ரன் எங்கயும் ஓடிப்போயிடமாட்டா, லீவ்ல மெதுவா பாத்துக்கலாம். மணி ஏழுதான் ஆகுது. இங்கியே ஏதானும் ஓட்டல்ல சாப்பிட்டு போயிடலாமாடா?

" வேணாம் பசிக்கலே , பார்சல் வாங்கிகிட்டு, வீட்டுக்கு போயிடலாம். " கண்ணில் பட்ட ஒரு சரவண பவனில், வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்ற போது, சன் ந்யூஸ் மணி சரியாக எட்டு என்றது.

இவனை புத்தகங்களுடன் அறைக்குள் தள்ளி விட்டு, ஸ்டார் மூவிஸில் படம் பார்த்துக்கொண்டே தூங்கி விட்டிருக்கிறேன். டைமர் செட் பண்ணாததால், எழுந்த போதும், வேறு ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது.

0

எழுந்து, லீவ் போட்ட்டு விடலாம என்ற யோசனைய தள்ளி விட்டு, குளித்து அலுவலகத்துக்கு கிளம்பும் போது, பாச்சா அவன் அறையில் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்.

குவிந்து கிடந்த புத்தகங்கள் நடுவே தூங்கிக்கொண்டிருந்தான்.எழுப்புவதற்காக, அவனை தட்டியபோது அவன் மார்மேல் இருந்த , டிஸ்க்ரீட்மேதமேடிக்ஸ் என்ற புத்தகம் சரிந்து விழ, அதில் இருந்தது, சிம்ரனின் போட்டோ.

வந்த ஆவேசத்தில், அந்த புத்தகத்தாலேயே, அவனை ஒரு நெத்து நெத்தலாமா என்று யோசித்து, நேரமின்மையால், அதை கைவிட்டேன். சாயந்திரம் வந்து பார்த்து கொள்ளலாம் என்று கிளம்பி விட்டேன்.

மத்தியான டப்பவுக்காக காத்திருந்த போதுதான், ரம்யா ஊருக்கு போனது, நினைவுக்கு வந்தது. இன்று ஓட்டல்தான். ¨பயனை அனுப்பி, வாங்கி வரச் சொல்லி சாப்பிடும் போது தான் , பாச்சாவின் நினைவு வந்தது.

அவனை போனில் அழைத்தேன்.

" பாச்சா, நாந்தான்டா, சாப்பிட்டியா?"

" என்ன அத்திம்பேர், காலையிலே எழுப்பாமலேயே, போய்ட்டிங்க? நைட்டு பூரா படிச்சதிலே, அசந்து தூங்கிட்டேன். எழுந்து இப்பத்தான் குளிச்சேன். "

" நீ என்ன படிச்சி கிழிச்சேன்னு எனக்கு தெரியும், நா, சாயங்காலம் வந்து பேசிக்கிறேன், ஹாங்கர்ல.என்னோட க்ரீம் கலர் சட்டை பாக்கெட்டுலே, நூறு ரூபா இருக்கு, எடுத்துட்டு போய், மங்களாவுலே சாப்பிட்டு வந்துரு. நைட் நா வரதுக்கு எட்டு மணிக்கு மேலெ ஆவும். வரப்ப, ராத்திரிக்கு சாப்பிட வாங்கிகிட்டு வந்துடறேன். "

இந்த தொல்லையெல்லாம் நாளையோடு சரி. ரம்யா வந்து விடுவாள்.

நான் வரைவு செய்திருந்த, டெண்டர் ஒரு ரிஜக்ட் ஆகிவிடவே, எம்டி கூப்பிட்டு அனுப்பி, பேசி, காரணத்தை கண்டுபிடி என்று சொல்ல, நேரம் 8 மணிக்கு மேல் ஆகிவிட்டது.

அடுத்த நாள் வேலைக்கு ஒழுங்கு படுத்தி விட்டு, கிளம்பினேன். இந்த பயல் வீட்டில் இருக்கிறானோ அல்லது எங்காவது ஊர்மேய போயிருக்கிறானோ என்று தெரியவில்லை.
நான் இருக்கும் புதூரில், ஊர்மேய அவ்வளவாக இடம் இல்லை என்றாலும், சில தோஸ்துகள் வீட்டுக்கு செல்வான்.

பாடிக்கு அருகே, பிரிட்டானியாவை கடக்கும் போதுதான், இரவு சாப்பாடு வாங்க மறந்து போனது நினைவுக்கு வந்தது. அம்பத்தூரில் ஓடியில் ஓட்டல்கள் இருக்கும்.

உடல் அசதியாக இருந்தது. பேசாமல் மங்களாவிலேயே ஏதாவது பார்த்துக்கொள்ளலாம் என்று வழியில் நிறுத்தாமல் வீட்டுக்கு வண்டியை விரட்டினேன். இரவு பத்து மணிவரை திறந்திருக்கும் என்று தெரியும்.

பாச்சா, ஸ்டீரியோவில் பாட்டை வைத்து விட்டு, படித்துக் கொண்டிருந்தான்.

என்ன, அத்திம், இவ்வளோ லேட் என்றவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் டேப்பை நிறுத்தினேன்.

" படிக்கறச்சே, என்ன பாட்டு? சரி, என் வண்டியை எடுத்துட்டு போய், மங்களாவுலே, ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வந்துரு, நான் மறந்துட்டேன்."

"அச்சச்சோ. மங்களா கே·ப் இன்னிக்கு லீவாச்சே!, ஓனரோட அம்மா, செத்துப் போய்ட்டாங்களாம்" என்றான்

என்னடா இது தலைவலி, மறுபடியும் ஓடணுமா.

" அப்ப, மத்யானம் எங்க சாப்பிட்டெ? "

" நான், ·ப்ரெண்டை பாக்க அம்பத்தூர் போனேன், அவன் வீட்டிலேயே சாப்பிட்டுட்டேன். "

இந்த இரண்டும் கெட்டான் பிரதேசத்தில் வேறு ஓட்டல் வேறு இருக்காதே.

" காந்தி சிலை கிட்ட ஒரு ஓட்டல் இருக்கில்லே? அது தொறந்துருக்குமா? "

" அது, முனியாண்டி விலாஸ் அத்திம்பேர். "

"ப்ரிஜ்ஜிலே, தோசை மா ஏதாச்சும் இருக்கான்னு பாரு"

" காலையிலேயே பாத்துட்டேன். இல்ல. சமையல் அறையும் சுத்தம், நேத்திக்கு அரைச்சிட்டு வந்த கோதுமை மாவுதான்

இருக்கு" என்றவன் கண்ணில் திடீர் பல்ப் ஒளிர்ந்தது.

" அத்திம், ஒரு ஐடியா , பேசாம நாமே சப்பாத்தி பண்ணிடலாம். ஜாம் கூட இருக்கு. சீப் அண்ட் பெஸ்ட்,என்ன சொல்றேள்"

" டேய் எனக்கு அதெல்லாம் தெரியாதேடா? "

" சப்பாத்தி செய்யறது என்ன, பெரிய வித்தையா? ரெண்டு தம்ளர் கோதுமை மாவு கூட கொஞ்சம் உப்பு சேத்து, தண்ணி விட்டு பெசைஞ்சு, கல்லுல போட்டா, சப்பாத்தி,"

சப்பாத்தி என்பது அவ்வளவு ஈசியானதா? இந்த பயலுக்கு இதெல்லாம் தெரியுமா என்று ஆச்சரியமாய் இருந்தது. செய்து பார்த்தால் தான் என்ன என்று தோன்றியது. இந்த இரவு நேரத்தில், உடம்பு அசதியுடன் மறுபடி ஓட்டலை தேடியலைய முடியாது என்பது உறைக்க, சரி என்று சொன்னேன்.இவன், வாய் கிழிய பேசினாலும், ஏதாச்சும் சொதப்பி விட்டால் என்ன செய்வது என்றும் தோன்றியது.

" பாச்சா, ரம்யாவோட , நெறைய மங்கையர் மலர் இருக்கும். எதுலயாச்சும், சப்பாத்தி க்கு ரெசிபி ஏதாவது இருக்கா, கொஞ்சம் தேடேன் "

" கொஞ்சம் சும்மா இருங்க அத்திம், நான் இதுக்கு முன்னாடியே சப்பாத்தி செஞ்சிருக்கேன். இன்னும் அரை மணியிலே, சப்பாத்தி ரெடியாயிடும். பாத்துட்டே இருங்க. "

அவன், மும்முரமாக, கொஞ்சம் மாவை தம்ளரில் அளந்து, தண்ணீர் விட்டு பிசைந்து கொண்டிருந்தான். ஒரு தேர்ந்த குக் போல அவன் செயல் பட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் போல பாலையும் விட்டான்.

" டேய், எதுக்குடா பால்? "

" பால் விட்டு பிசைஞ்சா, சா·ப்டா இருக்கும் அத்திம்பேர் "

நான் எதற்கும் இருக்கட்டும் என்று , மங்கையர் மலர் புத்தகத்தை தேடினேன். ஒவ்வொரு இதழிலும், ஏதோ புது புது பலகாரங்கள் பெயரெல்லாம் இருந்தது. சப்பாத்தி செய்வது எப்படி என்று ஒருத்தரும் எழுதவில்லை. எல்லாருக்கும் சப்பாத்தி செய்வது எப்படி என்று தெரிந்திருக்கும் என்பது ம.மலரின் எண்ணமாக இருக்கலாம். விடாமல் தேடிய போது, , விடாமல்

தேடிய போது ஒரு முத்து, கிடைத்தது.

" சப்பாத்தி செய்யும் போது, அதில் வாழைப்பழம் போட்டு பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்" என்று திருத்துறைப்பூண்டி சாந்தி என்கிற ஒரு அம்மணி எழுதியிருந்தார்.

செயல் படுத்தி விட வேண்டியதுதான்.

" டேய், பாச்சா, இங்க பாரேன் " என்று அதை காட்டினேன்.

" வேணாம், அத்திம்பேர், ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா, அப்பறம் ஒண்ணும் பண்ண முடியாது"

" போடா, புக்குலேயே போட்டிருக்கான், அப்பறம் என்ன" சொல்லிவிட்டு, ·ப்ரிட்ஜில் இருந்து இரண்டு பச்சை வாழைப்பழங்களை எடுத்து வந்தேன். "

நன்றாக ஊறியிருந்த மாவு, மெதுவாக, சப்பாத்தி இடும் பதத்தில் இருந்தது.

"இதை போட்டு பிசை சொல்றேன்" என்று வாழைப்பழத்தை உரித்துக்கொடுத்தேன்.

அவன் போட்டி பிசைந்ததும், கெட்டியாக இருந்த சப்பாத்தி மாவு தளர்ச்சியானது.

" சொன்னேன் இல்ல, மாவு லூசாயிருச்சு, இனிமே, எப்படி, தெரைக்கிறது? "

" இருடா, திருவாழத்தான், வாழைப்பழத்துலே, தண்ணி இருக்கில்லியா, அதான்,மாவு இளகிடுச்சி. கொஞ்சம் மாவு போட்டு பெசைஞ்சா, மறுமடியும் கெட்டியாயிட்டுபோறது, மாவுதான் வேண்டிய மட்டும் இருக்கே"

" அவன் மாவு போட்டு பிசைய, கெட்டியாகவே இல்லை. இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று வைத்திருந்த மாவில், முக்கால் வாசி குறைந்த பின் தான், செய்த காரியத்தின் விபரீதமே புரிந்தது"

முக்கால் வாசி மாவை சேர்த்த பின்தான், மாவு, சப்பாத்தி இடும் பக்குவத்துக்கு வந்தது.

" என்ன அத்திம், இப்படி ஆயிடுச்சி, இவ்வளவு சப்பாத்தியையும் , எப்படி இட்டுமுடிக்கிறது? அப்படிய்யே இட்டாலும், யாரு சாப்பிடுறது? " என்று அவன் கேட்ட போது மௌனமாக இருந்தேன்.

நாளைக்கு அக்கா வந்தா, டின்னு கட்டப் போறா"

0

வந்து கட்டினாள். செமத்தியாக. பாச்சாவுக்கு, முதுகில் நாலு வைத்தவள், எனக்கு மட்டும் சலுகையாக அதை செய்யவில்லை. என்ன இருந்தாலும் கட்டின புருஷன் இல்லியோ?

" அதெல்லாம், ஒண்ணும் இல்லே, ஒங்க முதுகிலே அடிச்சா, எனக்குத்தான் கை வலி க்கும்." பழிகாரி.கர்ம சிரத்தையாக அதை எண்ணினாள். மொத்தம், நாங்கள் சாப்பிட்டது போக, எண்பத்து ரெண்டு சப்பத்திகள் இருந்தன.

" ஒரு நாள், உங்களை விட்டுட்டு வெளிய போ முடியறதா? இந்த மாசத்துக்குன்னு வாங்கி வெச்சிருந்த மாவு மொத்த¨தயுமா இப்படி சப்பாத்தியா செஞ்சி அடுக்குவா? "இது காலியார வரை, நோ டிபன். "

மங்கையர் மலர்லதான், வாழைப்பழம் போடுன்னு போட்டிருந்தான், அதான்... என்று முணுமுணுத்தேன். "

நல்லவேளையாக அவள் காதில் விழவில்லை.

நாலு நாளைக்கு அதே சப்பாத்தியை சூடு பண்ணி சூடு பண்ணி நானும், பாச்சாவும் சாப்பிட்டோம்.

திருத்துறைப்பூண்டி சாந்தி என்கிற அம்மையாரின், முழுவிலாசத்தை கேட்டு, மங்கையர் மலருக்கு கடிதம் எழுதுயிருக்கி§றன். அட்ரஸ் கிடைத்தால், எனக்கு 12 ஆண்டு செயிலும், உங்களுக்கு ஒரு கொலை கதையும் நிச்சயம் கிடைக்கும்.

-07.03.2003

Comments

கதையைத் திருப்பிப் படிக்கலை பிரகாஷ். பழைய நினைப்பே இருக்கட்டும்னு விட்டுட்டேன். சில வேளை படிச்சுட்டு பிரகாஷ் இதைவிட நல்லா எழுதுவார்னு நினைச்சேனேன்னு நினைக்க வேணாமேன்னு... :)

ஏன்னா, அன்னிக்கு இதைப்படிச்சுட்டு அன்னிக்கே பிரகாஷ் வாழைப்பழ சப்பாத்தி பண்ணியாச்சேன்னு நினைக்க முடியாமப்போனா எனக்குத்தானே கஷ்டம்.

:P

அந்த மனநோயாளி கதை அடுத்ததா வருமா?


-மதி
Vaa.Manikandan said…
நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரியவில்லை.
மணிகண்டன், இதுக்கு எப்படி ரீயாக்ட் செய்யறதுன்னு தெரியலை.. கமலஹாசன் சொல்ற அதே டெக்னிக் தான்.. " ஆராயக்கூடாது, அனுபவிக்கணும்"
//இதைவிட நல்லா எழுதுவார்னு நினைச்சேனேன்னு //

மதி, படிச்சுப் பார்த்தா வேற மாதிரி தோணலாம். 'ஒழுங்காதானே எழுதிட்டு இருந்தான்.. இப்ப என்ன ஆச்சு' அப்படின்னு.. :-)

//அந்த மனநோயாளி கதை அடுத்ததா வருமா?//

அதுக்கென்ன போட்டா போச்சு..
//திருத்துறைப்பூண்டி சாந்தி என்கிற அம்மையாரின், முழுவிலாசத்தை கேட்டு, மங்கையர் மலருக்கு கடிதம் எழுதுயிருக்கி§றன்//

ம்ம், சில கதைகளை எவ்வளவு வருடம் ஆனாலும் மறக்க முடியாது. அதில் இதுவும் ஒன்று :-))))
பிரகாஷ், கதை நல்லா இருக்கு. நான் இப்போ தான் படிக்கிறேன். மறுபதிவுக்கும் ஒரு பயன் இருக்குது. உங்கள் blogger's block வாழ்க என்றாலும் விரைவில் அது நீங்கிப் புது சரக்கோடு வரவும் வாழ்த்துக்கள்.
குலுங்கச் சிரித்து முடித்தேன். இது போன்ற கூத்துக்களை அவ்வப்பொழுது எழுதுங்கள்.

அன்புடன்,
இராம.கி.
உஷா, செல்வராஜ், இராம.கி அய்யா, பின்னூட்டங்களுக்கு நன்றி
பிரகாஷ் இதை நான் மரத்தடியில் படித்திருக்கிறேன். சில நல்ல கதைகளுக்குகான என்னோட விமர்சனம் கொடுக்காம இருக்குறோமேன்னு நினைப்பேன்.

இப்போ அதுக்கு ஒரு நல்ல ஆப்பர்ட்யூனிடி ஏற்படுத்தியிருக்கீங்க. நல்லா மனதுக்குள் சிரித்து படித்தக்கதை. ரொம்ப நல்லாயிருந்தது.

இது மாதிரி இன்னும் நிறைய எழுதுங்க.
Anonymous said…
Hilarious!

P.S.:- Is there a way I can read the tamil blogs in mozilla in which, say, வெச்சிகிட்டு appears as வெச்சிகிட்டு (picked from ur blog) and not like some wierd chinese word starting with வ, then செ, then a lone dot on top, something close to சிகி, then a ட, another lone dot on top, and ending with an unidentifiable character. I am quite tired of opening each page in a new IE window.
Zero, thanks.

I'm not familiar with mozilla.. so i dont know how to rectify the problem.. i guess lotsa tamil bloggers use mozilla. will forward this msg and get back to you..
dvetrivel said…
பிரகாஷ்,
சமையல் என்பது எவ்வளவு கஷ்ட்டம் அல்ல. ஊருக்கு புதுசுனா ஆட்டோக்காரன் ஏமத்துவது போல் பெண்கள் ஆண்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்....

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I