Just turn the table around...

சபாபதி ( டி.ஆர்.ராமச்சந்திரன்) , பொங்கல் பண்டிகைக்காக, தன்னுடைய வேலைக்காரன் சபாபதியுடன் ( காளி.என்.ரத்தினம்) தன் மாமியார் வீட்டுக்கு வருகிறான். மைத்துனன், அவர்களைக் கலாட்டா செய்வதற்காக, தங்கைக்காக ( சபாபதியின் புது மனைவி) வாங்கி வந்திருக்கும் புடவை, நகைகளை, கவர்ந்து , அதற்கு பதிலாக துடப்பத்தையும், கிழிந்த செருப்பையும், வைத்து விட்டு, " உன் புருஷனிடம் சொல்லாதே" என்று தங்கையையும் எச்சரிக்கை செய்து விடுகிறான். புதுப் புருஷன் அவமானப்படக் கூடாது என்பதற்காக, நகை புடவைகள் ஒளித்து வைத்திருக்கும் இடத்தை, ஒரு துண்டுச் சீட்டில் ஆங்கிலத்தில் எழுதி , வேலைக்காரனிடம் கொடுத்து அனுப்புகிறாள். ஆனால் நம்ம ஹீரோ சபாபதி, பியுசியில் கோட் அடித்து விட்டு, படிப்பு வரலை என்ற காரணத்தால். கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகவேண்டும் என்று நினைப்பவர்.

மை டியர் ஹஸ்பெண்ட் என்று துவங்கும் கடிதத்தை, அவர் படிக்கும் அழகும், அவற்றை வேலைக்காரனிடம், அனர்த்தமாக மொழிபெயர்த்துச் சொல்வதும், இறுதியில் புரிந்து கொண்டு நகை புடவையை மீட்கின்ற காட்சியும், கிச்சு கிச்சு மூட்டும் இரகம் என்றால், கடிதத்தின் இறுதியிலே, " just turn the table around " மனைவி முடித்திருக்க, அதைத் idiom ஐத் தவறாகப் புரிந்து கொண்டு, மேஜையைத் திருப்பிப் போட்டு, அதன் மேலே மேஜை விரிப்பையும் போட, அங்கே வந்த மைத்துனன், மேஜை ஒழுங்காக இருக்கிறதாக்கும் என்று நினைத்து மேலே விழ... இந்தத் தொடர் நகைச்சுவைச் சங்கிலி, hilarity இன் உச்ச கட்டம் என்று சொல்லலாம்.

பம்மல் சம்மந்தமுதலியாரின் நாடகத்தை, அதே பெயரில் இயக்கியவர், ஏவி.எம்.மெய்யப்பச் செட்டியார். 1941 இலே வெளி வந்தது. இன்று பார்த்தது, எத்தனையாவது முறை என்று நினைவில்லை.

சென்னைப் பட்டணத்தில் வசிக்கும் உயர் வகுப்பு முதலியார் சமூகத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை. ஒழுங்காகப் படிக்காத பையன், முழு முட்டாளான வேலைக்காரன், அவனுடைய தமிழ் வாத்தியார் ( சாரங்கபாணி ), வாத்தியாரின் நச்சரிக்கும் இளம் மனைவி, சபாபதியின் புதுமனைவி, அவளுடைய வேலைக்காரி ( எம்.எஸ்.எஸ்.பாக்கியம் என்று நினைக்கிறேன்), சபாபதியின் நண்பர்கள், சபாபதியின் கண்டிப்பான அப்பா, என்கிற சில பாத்திரங்களை மட்டும் வைத்து வந்த நகைச்சுவையான திரைப்படம்.

சபாபதி, ஒரு அலட்டலான, ஆனால், முட்டாள் ஆசாமி. அவனுடைய வேலைக்காரன் அதை விடவும் முட்டாள். ஜாலியாக நண்பர்களுடன் சீட்டாடிக் கொண்டு, தப்புத் தப்பாக ஆங்கிலம் பேசிக் கொண்டு, ஒழுங்காக படிக்காமல், சுற்றி வரும் அவன், இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தின் தென்னிந்தியாவின் ராவ்பகதூர் கலாசாரத்தின் அடையாளம். கோட் சூட், டென்னிஸ் ராக்கெட், டைனிங் டேபிள், வால்வு ரேடியோவில் ஆங்கில சங்கீதம் இத்தியாதி.. இப்படி இருக்கும் அவனுக்கு, கல்யாணம் செய்து வைத்தாலாவது உருப்படுவான் என்று செய்து வைத்து விடுகிறார்கள். ஆனாலும், அவனுடைய அப்பா, பியுசியை ஒழுங்காக முடித்தால் தான் சோபனம் என்று சொல்ல, இவன் மட்டும் பண்டிகை அது , இது என்று ரகசியமாகப் போய் மாமியார் வீட்டில் டேரா போட்டுவிடுகிறான். சபாபதியின் அப்பா, அவனைக் கண்டபடித் திட்ட, சூட்டிகையான அவனது மனைவி, நிலைமையைப் புரிந்து கொள்கிறாள். சபாபதியை, ஒழுங்காகப் படிக்க வைத்து, கஷ்டமான கணக்கை யெல்லாம் சொல்லித் தந்து, பாஸ் பண்ண வைக்கிறாள். வேலைக்காரன் சபாபதியும், வேலைக்காரியும் கல்யாணம் செய்து கொள்வது ஒரு தனி நகைச்சுவை டிராக். பெண்தான் எல்லா வெற்றிக்கும் காரணம் என்ற மெஸ்ஸேஜுடன் , இப்படியாகப் படம். சுபம்.

பின்னாட்களில், ஏவி.எம் படங்களில், தேசிய வாசனை அதிகமாக அடித்தாலும், இந்தப் படத்தில் ராவ்-சாகிப், ராவ் பகதூர் வாசம் அதிகமாக வீசுகின்றது. இன்னும் ஆறு வருடத்தில் சுதந்திரம் கிடைத்து விடும், என்று அப்போது செட்டியார் நினைத்திருக்க மாட்டார்.

நகைச்சுவை என்ற அம்சத்திலே, திரைப்படம் கொடி கட்டிப் பறக்கிறது என்று ( அப்போதைய கால்கட்டத்தை ஒப்பு நோக்கும் போது ) நினைக்கிறேன். பாகவதரும், சின்னப்பாவும், சரித்திர புராணக் கதைகளிலே, புகுந்து விளையாடிக் கொண்டிருந்த சமயத்திலே, இந்தப் படம், ஒரு புதிய அலையைத் தோற்றுவித்திருக்க வேண்டும். இதற்கு அடுத்த வருடமே, என் மனைவி ( 1942) என்ற மற்றொரு நகைச்சுவைப் படத்தை ஏவி.எம் செட்டியார் எடுத்தார். இவ்வகை, ஹை-சொசைட்டி காமெடிப் படங்கள் தொடர்ந்து வராமல் போனதற்கு, அப்போது பொங்கி வளர்ந்த தேசிய உணர்வு, காரணமாக இருந்திருக்கலாம். என்.எஸ்.கேவின் நகைச்சுவைப் பிரச்சாரப் படங்களுக்குக் கிடைத்த பெரு வரவேற்பும், இதை நிரூபிக்கின்றது.

தமிழில் வந்த முக்கியமான திரைப்படங்களில், சபாபதி குறிப்பிடத்தக்கது.

Comments

கொடை அலைவரிசையில் எப்போதோ பார்த்தது இப்படம். பதிவை வாசிக்கும் போது சில காட்சிகள் மங்கலாக நினைவிற்கு வருகின்றன.
அண்ணே, ஹொங்ஹொங் ஸுங்கின் மன்ஸன் இரண்டாம் மாடியிலேயிருக்கும் விழியக்கடையின் வெளியேயிருந்த பத்து கிங்கொங் டொலர்களுக்கு ஒரு படம் என்று தேய்ந்த படங்களிலே, அதையும் அடுத்த வீட்டுப்பெண்ணையும் வாங்கிக்கொண்டு போனேன். ஓடும் கோடுகளின் பின்னாலே படத்தைப் பார்த்து முடித்தேனா இல்லையா என்பதைக்கூட மறந்துவிட்டேன் ;-) ஆனால், அடுத்தவீட்டுப்பெண்ணைப் பார்த்தே தீர்த்தேன். தங்கவேலு+ ராமச்சந்திரன் மறக்கமுடியாத இணைப்பு... சாதாரண ரோஜாவா, சரோஜாவாச்சே :-)

முட்டைக்கண் ராமச்சந்திரன் வாழ்க்கையிலே சரோஜாதேவியுடனாகட்டும் பின்னாலே அன்பே வாவிலே நாகேஷின் மாமாவாகட்டும்... ஒரு வித்தியாசமான நகைச்சுவை நடிகர்.
சரோஜா தேவியில்லை பெயரிலி அவர்களே. வைஜயந்தி மாலா. நாகேஷின் மாமா இல்லை, சரோஜாதேவியின் அப்பா, புண்ணாக்கு வியாபாரி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு நீங்கள் சொல்வது சரி; வையந்திமாலா என்றுதான் சொல்லவந்தேன். என் கண் என்னை ஏமாற்றினால், உன் மேல் கோபம் உண்டாவதேன்? :-(
ஆஹா... எத்தனை முறை பார்த்தாலும், அலுப்பு தட்டாத படம். "இன்னாபா" என்று காளி.என்.ரத்தினம் சொல்லும் ஸ்லாங்கிற்கு தரலாம் காசை. காவிய புதனிலும், கே.டி.வியிலும் போட்டு தேய்த்திருந்தாலும், சில படங்களைப் போல எவ்வித கவலையும் இல்லாமல் பார்க்க கூடிய படம். அதேப் போல ரசித்த எப்போழுதுப் போட்டாலும் பார்க்கக் கூடிய சில படங்கள் "அடுத்த வீட்டு பெண்", "காதலிக்க நேரமில்லை" "காசேதான் கடவுளடா" "பூவா தலையா"

போய்யா.. பழைய படங்கள் பார்க்கும் ஆசையினை கிளப்பிவிட்டீர். எங்கே போய் நான் டிவிடி தேடுவது. [விசிடி No Chance. விசிடியில் எந்த படமும் பார்க்க பிடிக்கவில்லை, டிவிடி வந்த பிறகு ;)]
era.murukan said…
'சபாபதி' சமூகவியல் அடிப்படையிலும் முக்கியமான நாடகம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி - இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் நிலவிய சென்னை நகர் வாழ் முதலியார் சமூகத்தின் கலாச்சார, மொழி அடையாளங்களை வலுவாகப் பதிகிற படைப்பு இது.

'வாப்பா, போப்பா, வந்துக்கினே, போய்க்கினே' போன்ற பிரயோகங்களில், சென்னையில் இன்று பேசுதமிழின் வேர்களைக் காணலாம்.
// ஆனால், அடுத்தவீட்டுப்பெண்ணைப் பார்த்தே தீர்த்தேன். தங்கவேலு+ ராமச்சந்திரன் மறக்கமுடியாத இணைப்பு... சாதாரண ரோஜாவா, சரோஜாவாச்சே :-)//

அஞ்சலிதேயிவியின் ஊட்டுக்காரர், ஆதிநாராயணராவ் தயாரித்து இசை அமைத்த படம். இந்தப் படத்தின் கதையை, முழுசாகவும், பகுதியாகவும் சுட்டு பின்னாளில் எத்தனையோ படங்கள் வந்தன. ( ஆமாம், உங்களுக்காவது தெரியுமா? முதலில் எது வந்தது, இதுவா இல்லை, படோசனா? ). சமீபத்தில், கன்னடத்திலே இந்தப் படம் வந்தது. வீரப்பப்புகழ் ராஜ்குமார் சீமந்த புத்திரனும், அனந்த்நாகும் ( தங்கவேலு ரோல்) நடித்து வந்தது. நன்றாக ஓடியது என்று நினைக்கிறேன். முட்டைகண் ராமச்சந்திரன் சினிமா பாரம்பரியம் மிகப் பெரிது ( அனேகம் பேருக்குத் தெரியாது). அன்பே வாவில் , புண்ணாக்கு வியாபாரியாக, தங்கவேலுவைப் போடலாம் என்று எம்ஜிஆர் ரெக்கமண்டு செய்த பின்பும், அதை ஏற்றுக்கொள்ளாமல், டி.ஆர்.ஆர் ஐப் போட்டார்களாம். இப்படங்கள் வந்த வெகுகாலம் பின்னர், டி.ஆர்.ஆர் ஹீரோ வாக நடித்த படம் ஒன்று வந்தது. " சாது மிரண்டால்". கொலை செய்து விட்டதாக அஞ்சும் பயந்தாங்குள்ளி , உண்மையைக் கண்டுபிடிக்கும் த்ரில்லர் கதை. காகா ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கமலஹாசனும், குலதெய்வம் ராஜகோபாலுக்கு ஒரு பாக்யரஜும் கிடைத்த மாதிரி, டி.ஆர்.ஆருக்கு யாரும் கிடைக்கவில்லை, அவர் செத்துப் போகிற வரையிலும்.
டோண்டு சார், நன்றி.

நாராயண்: நான் பார்க்கிற படங்கள் எல்லாம் டிவிடியில் கிடைப்பதில்லை என்பதால், இன்னும் விசிடியில் தான் ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
//சென்னை நகர் வாழ் முதலியார் சமூகத்தின் கலாச்சார, மொழி அடையாளங்களை வலுவாகப் பதிகிற படைப்பு இது.//

இராமு : மிகச் சரி.

//'வாப்பா, போப்பா, வந்துக்கினே, போய்க்கினே' போன்ற பிரயோகங்களில், சென்னையில் //

அண்ணாத்தை என்கிற பிரத்யேகமான விளி கூட, " அண்த்தே" என்று இப்போது சென்னைத் தமிழாகிவிட்டது.


இராதாகிருஷ்ணன், பின்னூட்டத்துகு நன்றி

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I