பெரியோர்களே தாய்மார்களே......

ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லேன்னு பிரபுதேவா பாடினது எத்தனை தூரம் உண்மைன்னு, இன்னிக்குத்தான் புரிஞ்சது. தாய்க்குலங்கள் எல்லாம் கட்டையைத் தூக்கிக் கொண்டு வருவதற்கு முன்னால், கையைத் உயர்த்தி விடுகிறேன். பசுமை என்று சொன்னது, நிஜமான பசுமையைத்தான். ஸ்பரைட்டுகளுக்கும், கோக் - க்கும் அடங்காத வெயில், நயன்தாரா அட்டைப் படம் போட்ட சினிமா பத்திரிக்கையை வாங்கி, வைத்துக் கொண்ட பின்புதான் அடங்கியது என்றால் பாருங்கள்.

இந்த ஏப்ரல் வெயிலிலே ஊர் சுற்ற வேண்டி வந்ததற்கான சொந்தக் காரண காரியங்களில் அத்தனை சுவாரசியம் கிடையாது.

கானாக்கவிஞர்களால் புகழ் பெற்ற தலமான, ராயபுரம் ஏரியாவிலே, மோட்டுவளையை பார்த்த வண்ணம், 3 ரோசஸ் தேனீரைப் பருகிக் கொண்டிருந்த போதுதான், ரசினிகாந்து பற்றி நேற்று ராத்திரி போட்ட சண்டையை, பாதியிலேயே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வந்தது.

பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்து, கன்னித்தீவை, நாலாவது முறையாக ரசித்துப் படித்துக் கொண்டிருந்தவனை, உலுக்கினேன்.

" அடேய்.... இன்னும் எத்தனை பேரைப் பாக்கணும்? எப்ப வேலை முடியும்? எனக்கு அர்ஜண்டா வீட்டுக்குப் போகணும், இப்பவே..."

" ரொம்ப அர்ஜெண்டா? தெருமுக்குலே, ஒரு கட்டணக் கழிப்பிடம் இருக்கு பார்... அங்க வேணா....."

" அறிவு கெட்ட முண்டம்....அதில்லை. அர்ஜண்டா எனக்கு நெட்டுக்குப் போகணும்...முக்கியமான மேட்டர் ஒண்ணு. பார் கை விரலெல்லாம் நடுங்குது..." என்றேன். விரல்களில் நடுக்கம் ஏற்பட்ட மாதிரி பிரமை.

" அதுக்கேண்டா... பிரசவ வலியெடுத்தவன் மாதிரி குதிக்கிறே... வீட்டுக்குப் போனாத்தானா? எதுத்தாப்புலே, தெரியுது பார், குமரன் பிரவுசிங் செண்டர்... அங்க போய்... ஒன் வேலையை முடிச்சுட்டு வா..., நான் வெயிட் செய்யறேன்...."

நீண்ட நாட்கள் கழித்து மேய்ச்சல் மைதானத்துக்குள் நுழைகிறேன். கணிக்கு எதிரில் உள்ள மரத்தடுப்பில், ஆபாச இணையத்தளங்களுக்குப் போகக்கூடாது என்று எச்சரிக்கை ஒட்டி இருக்கிறது. தமிழ்மேட்ரிமோனி.காம், ஷாதி.காம் விளம்பர ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதுக்கெல்லாம் இப்போ சமயமில்லை.

முதலில் தலைவர். அதுக்குப் பிறகுதான் மற்றதெல்லாம்.

ரஜினிகாந்த் விவகாரத்தின் லேட்டஸ்ட் நிலவரத்தைத் தெரிந்து கொண்டதும், இனி இந்த விவகாரத்திலே, எதுவும் எழுதுவதில்லை என்று முடிவு செய்ததும் இந்த குறிப்பிட்ட பதிவுக்குத் தொடர்பில்லாதவை.

நான் உண்மையில் சொல்ல வந்தது, தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய நெருடலாக உணர்ந்த விஷயத்தை.

எல்லா செட்டிங்குகளையும், அமைத்துக் கொண்டு, வீட்டிலே, அகலப்பாட்டை வசதியுடன் உட்கார்ந்து மேயும் போது, சுகமாக இருக்கிறது. ஆனால் வெளியே போய், ஒரு பொதுக்கணியில் உட்கார்ந்து கொண்டு மேயும் போதுதான் நிஜமான அவஸ்தை தெரிகிறது. இன்றைக்கு நான் படிக்க நினைத்த பல வலைப்பதிவுகள், சதுரம் சதுரமாகத்தான் காட்சியளித்தன. சில பதிவுகளில், எழுத்தும் கொம்பும் தனித்தனியாகக் இருக்கின்றன. வேறு வழியில்லாமல், சில முக்கியமான பதிவுகளை, சுரதாவின் பொங்குதமிழில் ஒட்டி, வெட்டி, வெட்டி, ஒட்டி, வெட்டி ஒட்டி...... alt + tab அடிச்சே, விரலெல்லாம் தேய்ந்து போய்விட்டன.

இயங்கு எழுத்துரு என்று ஒரு அத்தியாவசியமான சமாசாரத்தை, யாரும், தங்கள் வலைப்பதிவின் டெம்ப்ளேட்டுகளில் சேர்ப்பதே இல்லையா?

பொதுக்கணியில், எந்த ஏற்பாடும் செய்யாமல், வலைப்பதிவுகளைத் தன்னிச்சையாக படிக்கும் வண்ணம், எத்தனையோ எளிய செயல்பாடுகளை, சுரதா போன்ற நண்பர்கள் செய்து வைத்திருந்தும், அதை ஏன் இவர்கள் கண்டு கொள்வதில்லை என்று புரியவில்லை. அதிலும் வலைப்பதிவு நண்பர்களில் முக்கால்வாசிப் பேர், கணித்துறையில் இருப்பவர்கள் என்று எண்ணும் போது வியப்பாக இருக்கிறது.

நம்முடைய டெக்ஸ்ட் எடிட்டரில், எழுதி, ப்ளாகரில் அஞ்சல் செய்து, நம் கணித்திரையில், ஒழுங்காகத் தெரிந்தால், அது எல்லாருக்கும் ஒழுங்காகத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி அல்ல என்று இன்றுதான் புரிந்தது.

இப்படித்தான், ஒரு முறை ( ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால்) , வலைப்பதிவுகள் பக்கமெல்லாம் வராத, கவிஞரும் நண்பருமான ஒருவருக்கு, ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவின் சுட்டியை அனுப்பி இருந்தேன். மிகவும் சுவாரசியமான பதிவு அது. அஞ்சல் கிடைத்த பத்து நிமிடத்தில் இப்படிப் பதில் வந்தது.

" .....வின் கவிதைகள் பற்றிய விவாதம் என்றதும் ஆவலுடன் நீங்கள் தந்த சுட்டியை தட்டினேன். ......ரைப் பற்றி கிரேக்க லத்தீன் மொழிகளில் கூட பேசிக் கொள்கிறார்கள் என்று உள்ளம் பூரித்தது. மிக்க மகிழ்ச்சி. ஆனால், எனக்கு கிரேக்கம், லத்தீன் தெரியாது என்பதால், அடுத்த முறை, தமிழில் ஏதாவது செய்தி வந்தால், அனுப்புங்கள். நன்றி. "

நான் விடுவேனா? உடனே தொலைபேசியை எடுத்து... " அதாவது, உங்க பிரவுசர்லே, சில சிலுமிசம் செய்யணும். நான் சொல்ற மாதிரி செய்யுங்க" என்று கீதோபதேசம் துவங்கியதும்... அவ்ர் இடைமறித்து..." அதல்லாம் எனக்குத் தெரியாது.. வேணா நீ வந்து செஞ்சு குடுத்துட்டுப் போ" என்றார்.
இன்னும் போகப் போகிறேன்.

எதுக்குச் சொல்றேன்னா, நாம நம்ம விருப்பத்துக்காகவும், வசதிக்காவும் தான் எழுதுகிறோம். ஆனால், ஆர்வத்துடன் சிலர் படிக்க வரும் நேரத்தில், முடியாமல் போனால், கடுப்பாக இருக்கும் இல்லையா?

என்னடா இது, இவன் திடுதிப்புனு, இந்தமாதிரி உபதேசத்துலே இறங்கிட்டானேன்னு நினைக்க வேண்டாம். இதிலே கொஞ்சம் சுயநலம் இருக்கிறது. அடுத்த மாதம் முழுக்க வெளியூர்ப் பயணம் இருக்கிறது. கிடைத்த இடத்திலே தான் தமிழ்மணத்தை முகரணும். அந்த சமயத்துலே, ரொம்ப லொள்ளாக இருக்கும் .

ஏறக்குறைய நானூறு பதிவுகள் தமிழ்மணம் திரட்டியில் தொகுக்கப் படுகின்றன. என்னுடைய கவலை, நான் தொடர்ந்து வாசிக்கும், சில வலைப்பதிவுகள் பற்றி மட்டும் தான்.

இன்னும் கொஞ்ச நாள் பார்ப்பேன். இல்லாவிட்டால், எப்படியாவது, ப்ளாகரை, hack செய்து, நானே சரி செய்துவிடப் போகிறேன்.

இது, ethical hacking என்ற கணக்கில் சேருமா?

Comments

Wordsworthpoet said…
ஓ, தாராளமா செய்யலாம் !
ஏன்னா...
"நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா...
தப்பில்லே, எதுமே தப்பில்லே" -னு
நம்ம வேலுபாய் சொல்லிருக்காரு.;-)
SnackDragon said…
இயங்கு எழுத்துருக்கு என்ன செய்யவேண்டும் என்ற ஒரு பொது பதிவு இருப்பவர்கள் இங்கே சுட்டி கொடுக்கலாம்.
நானும் (முயற்சி )பண்றேன்
Kasi Arumugam said…
பிரகாஷ்,

சங்கை ஊதினதுக்கு நன்றி. விரைவில் எளிய தீர்வு வரப்போகிறதென்று பட்சி சொல்கிறது.
வலை உலா மையத்தில் இருந்தால், "பொறம்போக்"கை ஒரு தடவை ரன் பண்ணினால் எழுத்துரு கணிணியில பதிக்கப்பட்டுவிடும் தானாகவே. இதையும் நிறுவவேண்டாம். அப்பறம் usual browser settings அப்ளை பண்ண முடியும்.

அதனால அங்க எல்லாம் போனா மொதல் வேலையா ஈமெய்ல் லாக்-இன் பண்ணும்போதே இந்த font மேட்டரை கவனிச்சு முடிச்சுட்டா (ப்ரௌசிங்க் செண்டர்) போற வழிக்குப் புண்ணியம். இல்லாட்டி ப்ரௌசரை ரீஸ்டார்ட் பண்ண நேர்ந்து மீளாத்துன்பத்தில் ஆழணும்.

Sify centersலன்னா அனேகமா எல்லா கணினியுமே windows NTதான். அதனால அங்க மட்டும் கொஞ்சம் மக்கர் பண்ணும். கொஞ்சம் உருட்டி மெரட்டிதான் தேத்தணும்.
என்ன பதினேழாந்தேதி எழுதின இந்தப் பதிவும் 'ஏப்ரல் மேயிலே'னு பாடிட்டு இருக்கிறமாதிரி இருக்கு!

;)

:(

நம்ப மக்கள்! வேற என்ன சொல்லச் சொல்லுறிய!!!
சட்டுன்னு பொறம்போக்கு நினைவுக்கு வரலே. அதை விட, ப்ளாக் எழ்தறவங்க, டெம்ப்ளேட்டுலே, இயங்கு எழுத்துரு போட்டுக்கறது வசதி இல்லியா?
ரவியா said…
//ஒரு பொதுக்கணியில் உட்கார்ந்து கொண்டு மேயும் போதுதான் நிஜமான அவஸ்தை தெரிகிறது. இன்றைக்கு நான் படிக்க நினைத்த பல வலைப்பதிவுகள், சதுரம் சதுரமாகத்தான் காட்சியளித்தன. //

அதை ஏன் கேக்குறீங்க !!! :((

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Chennai Tamil Bloggers Meet - 2005

ரா.கி.ரங்கராஜன் - நாலு மூலை