23 பேர்...

கடற்கரை மணலில் வட்டமாக உட்கார்ந்திருப்பது, சட்டசபையை நினைவு படுத்துகிறது என்று நக்கலடித்த நாராயண், முக்கியமான வேலைகளையெல்லாம் தள்ளிப் போட்டு விட்டு, உற்சாகமாகக் கலந்து கொண்ட மாலன், தமிழர் பாரம்பரிய உடையாம் எட்டுமுழ வேட்டியிலே வந்து, கூட்டத்தின் இறுதி வரை இருந்து, ஒருங்குறி, ஆடியோ ப்ளாகிங், விக்கிபீடியாவின் அவசியங்கள் பற்றி சுவாரசியமாக லெக்சர் கொடுத்த பத்ரி, காந்தி சிலை என்று நினைத்து உழைப்பாளர் சிலை அருகில் காத்திருந்து விட்டு, பின் லேட்டாக வந்து கலந்து கொண்ட தமிழ்மார்கெட்டிங் வஸ்தாது-கம்-ரஜினிரசிகர் மீனாக்ஸ், குறித்த நேரத்த்தில் வந்து, சைக்கிள் கேப்பில் கமண்ட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருந்த
நாலாவது கண் சந்திரன், தமிழ்க் கவிதை உலகுக்கு லேட்டஸ்ட் வரவான, இன்னும் ப்ளஸ்டூ படிக்கிற பையன் தோற்றத்தில் இருக்கும் வா.மணிகண்டன், வலைப்பதிவு, பின்னூட்டம் போன்ற ஆத்மசுத்தி தரும் காரியங்களைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு, விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தில், கண்டெண்ட் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சந்தோஷ், வந்ததில் இருந்து சரியாக பதினாலு வார்த்தைகள் மட்டுமே பேசிய தமிழ் சசி, வலைப்பதிவு இல்லாவிட்டாலும், தொடர்ந்து வாசகராக இருந்து வரும் கவிஞர் மதுமிதா, மற்றொரு வலைப்பதிவு வாசகர் ஸ்ரீதர் சிவராமன், கிரேசி மோகன் நாடகப் பாத்திரம் போல, சட் சட்டென்று டைமிங்காக பஞ்ச் வசனம் பேசி, அவ்வப்போது சிரிப்பலை மூட்டிய சுரேஷ் கண்ணன் அமுதசுரபி ஆசிரியர் அண்ணா கண்ணன், வலைப்பதிவை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, தீவிரமாக வாசிப்பில் ஈடுபட்டிருக்கும் வெங்கடேஷ், ஆர்ப்பாட்டமான பதிவுகளுக்கு நேர்மாறாக, ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசிய டோண்டு ராகவன், வலைப்பதிவுகள் அடையப்போகும் வளர்ச்சிகள் பற்றி கலகலப்பாகவும், தமிழ்மணம் சேவை வெற்றிகரமாக தொடந்து நடைபெறத் தேவையான வலைப்பதிவாளர்களின் பங்களிப்பு பற்றி சீரியசாகவும் பேசிய எஸ்.கே, ஆங்கில வலைப்பதிவாளரும், கிழக்குப் பதிப்பகத்தின் இயக்குனர்களில் ஒருவருமான சத்யா, தமிழ் வலைப்பதிவுகளின் துவக்க காலத்தில் இருந்தே , தமிழில் பதியும் அருணா, "இன்னும் வலைப்பதிவு செய்யறது எப்படின்னே தெரியலை " என்று புலம்பிய உஷா, இரவு ஊருக்குப் பயணம் செய்யும் முன்பாக, அவசர அவசரமா வந்து கலந்து கொண்டு விட்டுப் பறந்த நாமக்கல் ராஜா, கோயிந்த சாமி கிளப் உறுப்பினர்களான ரஜினிராம்கி & ஷங்கர், எப்போதும் போல ஆரம்பத்தில் அமைதியாக இருந்து, பின்னர் கலக்கிய அருள்செல்வன், பிறமொழிக் கலப்பின்றி தமிழில் பேச வேண்டிய /எழுத வேண்டிய அவசியத்தை, சுவாரசியமாக எடுத்துச் சொன்ன இராம.கி அய்யா ஆகிய, இருபத்து முன்று பேர் கலந்து கொண்ட முதல் வலைப்பதிவாளர் சந்திப்பு, நேற்று மாலை ஐந்து மணிக்கு துவங்கி, இரவு ஒன்பதரை மணிக்கு முடிந்தது.

ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகப்படுத்திக் கொள்ளுதல், வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் பற்றிய விவாதம், லேட்ட்ஸ்ட் அசோகமித்திரன் விவகாரம், ராம்கியின் ரஜினி பற்றிய புத்தகம், தமிழ்மணத்தின் சேவையில் காசிக்கு ஏற்படும் நடைமுறைச் சிரமங்கள், அதற்காக வலைப்பதிவாளர்களின் contribution, தமிழ் விக்கிபீடியா, சுதேசமித்திரனின் காக்டெயில், என்று பல விஷயங்களும் அரட்டையில் அடிபட்டன.

சந்திப்பு நடக்க உதவிய வருணபகவானுக்கு நன்றி.

புகைப்படங்கள் விரைவில்....

Comments

தமிழக சட்டசபைப் போல பேச வாய்ப்பளிக்காமல் யாரும் வெளிநடப்பு செய்யவில்லை ;-) 23 பேர், கொஞ்சமாய் யோசித்துப் பார்த்தால், பாரதியின் இறுதிஊர்வலத்துக்கு வந்த தொகையை விட அதிகம் தான், கவலைப் படாதீர்கள் பிரகாஷ், அடுத்தமுறை வட்டம் கண்டிப்பாக பெரிதாக வரையப்படும் என்கிற நம்பிக்கையுடன்.
Boston Bala said…
கலக்கறிங்க... நேரடி ஒளிபரப்பு, வீடியோ கானஃபரன்சிங் என்று அடுத்த தபா இணைய சந்திப்பாக்கிடுங்க!
இப்படிப் பட்ட அருமையான கூட்டத்தில் கலந்துக் கொள்ள முடியவில்லையே என்று ஏங்கினேன். எதிர் காலத்தில் நிச்சயம் கலந்துக் கொள்ள ஏங்குகிறேன். சிக்கன் பிரியாணி மற்றும் சிலோன் பரோட்டா என்றுப் போட்டு மண்டை காய வைத்துவிட்டீர்கள்!!! சீக்கரம் புகைப் படத்தை வலைப் பூவில் பதியுங்கள். பிரகாசுக்கு வலைப் பூக்கள் இயக்கத்தின் சார்பாக எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
நன்றி!!!
மயிலாடுதுறை சிவா...
Vijayakumar said…
ஏன்யா வயித்தெறிச்சலை கிளப்புறீங்க. இப்பொல்லாம் எங்கெங்கே கூட்டம் நடக்குதோ அங்கெல்லாம் கலந்துக்கிடனும் போல கிடக்கு. என்ன செய்ய, கூடிய சீக்கிரம்...ஏன்? அடுத்த மீட்டிங்ல கூட நான் அங்கிருக்கலாம்.... எல்லாரையும் ஒன்னா சந்திக்கிறதுல்லேயே மகிழ்ச்சி தலைக்கேறி விடும்....
Kasi Arumugam said…
பிரகாஷ், கை குடுங்க. அசத்தலா நடத்தியிருக்கீங்க. பெரிய பெரிய ஆளுங்கள் எல்லாம் தவறாம கலந்திருக்காங்கன்னா உங்க ஆர்வமும் ஈடுபாடும் அதில் தெரியுது. ஹும் அடுத்த சென்னை வலைப்பதிவர் சந்திப்புக்கு நானும் வந்துடுவேன்னு நினைக்கிறேன். ('எப்படியும் 3 மாசமாகாது?'ன்னு ஒரு ஹேஷ்யம்)

விக்கிப்பீடியா கவனம் பெற்றது மிகவும் சந்தோஷமான விஷயம். அதற்கு எதாவது தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால் (இயங்கு எழுத்துரு போல) நான் தயார். மேலும் அதன் செய்தியோடையையும் தமிழ்மணத்தில் காட்டுவதை முயற்சிக்கலாம். இதன்மூலம் அங்கே எழுதுபவருக்கு ஒரு கவனம் கிட்டவும், மேம்படுத்தலுக்கு மற்றவர் பங்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

'தமிழ்மணம்', 'காசி' என்று பேச்சு அடிப்பட்டது தெரிகிறது. முழுவிபரம் தெரிந்தால் என் கருத்துக்களைச் சொல்வேன். மற்றபடி எல்லாவற்றுக்கும், பங்கேற்ற எல்லாருக்கும் என் நன்றி.

படம் காட்டுங்க சீக்கிரமா.
காசி, நன்றி. தமிழ்மணம் பற்றி ஒரு ரவுண்ட் விவாதம் ஓடியது.

வலைப்பதிவுகள் அதிகரிக்க, அதிகரிக்க, தமிழ்மணம் திரட்டி செய்ய வேண்டிய கூடுதலான வேலையும், அதற்காகும் நேரமும், செலவினங்கள் பற்றியும் , எஸ்.கே. முன்மொழிந்தார். குறிப்பாக, மென்னிதழ் உருவாக்குதல் போன்ற value addion களால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள். தமிழ்மணம் திரட்டிகள் மூலம் பயன் பெறுபவர்கள், உங்களுக்குக்கு ஆகும் செலவினை, பங்கு போட்டு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொன்னார். அங்கு கூடியிருந்த அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டனர். மாலன் இதனை வழிமொழிந்தார். paypal போல ஏதாவது, கட்டண சேவை மூலம் விரும்புகிறவர்கள் பணம் கொடுக்கலாம் என்றும் பேச்சு வந்தது. இந்த பணப் பரிமாற்று விவகாரங்கள் பற்றிய விவாதம் உங்களுக்கு சங்கடம் ஏற்படுத்தலாம் என்றாலும், இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளாத மற்ற வலைப்பதிவாளார்களுக்கு , இதனைத் தெரிவிப்பது என் கடமையாகின்றது.

செலவினத்தை வலைப்பதிவாளார்கள் பங்கு போட்டுக் கொள்வதைத், தற்காலிகமாகவும், நீண்ட காலத் திட்டமாக, ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் பத்ரி சொன்னார். உதாரணமாக நான்கு பதிவுகள், நானூறு பதிவுகளாக அதிகரிக்க ஆன காலம் ஒன்றரை வருடங்கள். நானூறு பதிவுகள் நாலாயிரமாக அதிகரிக்க ஒன்றரை வருடங்கள் தேவைப் படாது. குறைந்த காலமே போது. தமிழ்மணம் திரட்டி ஓவர்டைம் வேலை செய்ய வேண்டி இருகும். அப்படி இருக்கும் போது, கொஞ்சம் நிதானமாக யோசித்து, நீண்டகாலத் திட்டமாக, எதையாவது செய்தாகவேண்டும் என்றும் பத்ரி சொன்னார்.

எனக்கென்னமோ, வலைப்பதிவில் கட்டுரையைப் போட்டு, வரும் எதிர்வினைகளை வைத்து முடிவுக்கு வருவதைக் காட்டிலும், இந்த உள்விவகாரங்கள், தொழில்நுட்ப ஜிகிடிகளில் ஆர்வமும் நேரமும் இருக்கிற அனைவரும், ஏதாவது ஒரு நாள், யாஹ¥ கான்·பரன்ஸ் போல எங்காவது சந்தித்துப் பேசினால், ஒரு தெளிவு பிறக்கும். என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவும். உருப்படியாக வேலை செய்யாவிட்டாலும், வேடிக்கை பார்க்க ஆசை.
மிக மிக மிக மன்னிக்கவும்.

அத்யாவசியமான பணியகப்பிரச்சனை ஒன்றின் காரணமாக குறித்த நேரத்தில் வரமுடியவில்லை. எனவே இந்தியநேரப்படி (தாமதமாக) வரும்படி ஆகிவிட்டது. பணியகத்திலிருந்து கிளம்பி, கிழக்கு பதிப்பக வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு பேருந்தில் ஏறி, காந்திசிலை அருகில் வந்து சேர்ந்த பொழுது மணி கிட்டத்திட்ட 6.15க்கும் மேலும் ஆகிவிட்டது. (கையில் கடிகாரம் இல்லை, கைத்தொலைபேசியும் பழுதடைந்து விட்டது). யாரும் அங்கே காணப்படாததால், சரி, எல்லாம் முடிந்து இருட்டும்முன் எல்லாரும் கிளம்பிவிட்டார்கள் என்று நினைத்திருந்தேன். வந்தவழி வீணாகாமல் இருக்க கடற்கரைஅலைகளில் நனைந்துவிட்டு, அண்ணா சமாதிவரை மிளகாய் பஜ்ஜி, மாங்காய், சோளம் எல்லாம் சாப்பிட்டுவிட்டு பேருந்தில் ஏறி சைதை வந்து சேர்ந்து....

ரஜினி ராம்கியின் அறைக்கதவைத் தட்டினால், ராம்கி இன்னும் வரவேயில்லை என்ற தகவல் கிடைத்தது! எல்லாரையும் மிஸ் பண்ணிவிட்டதும் புரிந்தது.

நாமக்கல் ராஜாவை பார்க்கறதும் போச்சு. :-(

மன்னிக்கவும்.
Raj Chandra said…
If you're planning a meeting during this September, count me in :).
Mahamaya said…
@காசி:

ஆர்.எஸ்.எஸ் (இது வேற அய்யா! வந்திட்டுதுடா சண்டை, இறக்கிவை மூட்டையைன்னு ஆரம்பிச்சுடாதீங்கப்பா!) மூலம் திரட்ட ஆரம்பித்து மேல்மேலும் பற்பல சேவைகளை சேர்த்துக் கொண்டே போகிறீர்கள். அத்தனையும் உங்கள் தளத்தின் hosted service - ஆகவே இயங்குகின்றன. அதுவும் சமீபத்தில் நீங்கள் தொடங்கியுள்ள export to pdf என்ற value added service மிகவும் resource-intensive.ஆகையால் இது ஒரு தனிமனிதர் தன் கைக்காசைசெலவழித்து தொடர்ந்து செய்வது என்பது சரியல்ல. அதனால் அந்த சேவையால் பயன்பெறுவோர் அனைவரும் செலவிலும் பங்கெடுக்க வேண்டும் அன்று சொன்னேன். அதற்கு உடனே அங்கு எழுந்த பின்வினை என்ன தெரியுமா? "எவ்வளவு கொடுக்க வேண்டும், சொல்லுங்கள். நாங்கள் ரெடி" என்பதுதான். நான் துகையைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தால் அங்கிருந்த பலர் பர்ஸைத் திறந்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்!அந்த அளவுக்கு காசியின் மகத்தான சேவையின்பால் எல்லோரும் மதிப்பு வைத்துள்ளனர்.

கூகிள் விளம்பரங்கள் இதற்குத் தீர்வாகாது என்பது என் கருத்து. காசி இந்த விஷயத்தை practical-ஆக அணுகி இதற்கு ஒரு நிலையான ஏற்பாடு செய்வார் என்று நம்புகிறேன்!
Kasi Arumugam said…
எஸ்.கே.
//அதுவும் சமீபத்தில் நீங்கள் தொடங்கியுள்ள export to pdf என்ற value added service மிகவும் resource-intensive.//

இல்லை... இதனால் கூடுதலாக எந்த செலவும் இல்லை. நான் பிரகாசிடம் பிடிஎஃப் பற்றிப் பேசுங்கள் என்று சொன்னது வேறு, பேசப்பட்டதாக நான் புரிந்துகொள்வது வேறு. தமிழ்மணம் தளத்தில் இப்போது இருக்கும் எதுவும் எந்தப் பதிப்புரிமையையும் பாதிக்காது. இப்போது சோதனைமுறையில் இயங்கும் பிடிஎஃப் சேவையும் அப்படியே, ஏனென்றால் அது சம்பந்தப்பட்ட வலைப்பதிவிலிருந்தே அளிக்கப்படுகிறது. ஆனால் இதையே தமிழ்மணம் தளத்திலிருந்து அளிக்கவேண்டும் என்றால் பதிப்புரிமை பிரச்னை வருகிறது. எனவே க்ரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் அளிப்பது பற்றி நான் எழுதியதைப் பற்றியும் பேசுங்கள் என்று பிரகாசைக் கேட்டேன். அதைப்பற்றிப் பேசப்பட்டதா? ஏற்கனவே பத்ரி தன் வலைப்பதிவில் உரிமத்தை மாற்றியமைத்திருக்கிறார். நன்றி. அதுபோல மற்றவரும் செய்வதில் ஏதும் தடை இருக்கிறதா?

தமிழ்மணம் செலவுகளைப் பொறுத்தவரை இயன்றவரை அதை முகமற்ற(impersonal) வகையில் கொண்டு செல்வதே அனைவருக்கும் நல்லது. எனவே பணம் பங்களிப்பு இந்த என் எண்ணத்துக்கு மாறானது. அதை நான் வேண்டவில்லை. இதை நண்பர்கள் புரிந்து அப்படியே விட்டுவிடுங்கள். உங்கள் அன்புக்கு நன்றி.
prakash,

could you please mail me at

mathygrps at yahoo dot com

mails sent to you are bouncing. :(

-Mathy
கூட்டத்தைப் பற்றிய செய்தியை வாசிக்கும்போதே மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் மெனக்கெட்டது வீண்போகவில்லை என்று நினைக்கிறேன். அசத்திட்டீங்க.
SnackDragon said…
வலைப்பதிவு சந்திப்பு பற்றி வாசிக்க இதமாக இருக்கிறது. எதிர்காலத்தில் வந்து கலந்து கொள்ள இப்போவே ஒரு உடைஞ்ச பக்கெட்டோ அல்லது அரைச்செங்கல்லோ சீட் ரிசர்வ் செய்ய போட்டு வைக்கவேண்டும் போல இருக்கு.

-பழைய சென்னைவாசி

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்