கோர்ட்டுக்குப் போயிருக்கீங்களா?

சினிமாவில் பார்த்த கோர்ட்டுக்கும் , நிஜ கோர்ட்டுக்கும் எத்தனை வித்தியாசம் இருக்கிறது என்பதை நேரிலே பார்த்தால் தான் உணர்ந்து கொள்ள முடியும்.

எழும்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில், மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட்டிடம், ஒரு சின்ன வேலை. ஒண்ணும் பெரிய காரியமில்லை. கூண்டில் நின்று ( குற்றவாளிக் கூண்டல்ல, சாட்சிக் கூண்டு என்பதை சொல்லிவிட்டால், உயரப்பரக்கும் கற்பனைப் பறவையின் சிறகை முன்னமேயே முறித்து விடலாம் பாருங்கள்) கேட்கிற கேள்விக்கெல்லாம் ஒழுங்காக பதில் சொல்லி, சில ஆவணங்களில் ( அலுவலகம் தொடர்பானது) நீதிபதியின் கையெழுத்தைப் பெற்று விட்டால் வேலை முடிந்தது.

வளாகத்துக்குள் நுழைந்த உடனே, வழியெங்கும் கருப்புக் அங்கிகள். நாளிதழ்களில் அடிபடுகிற ஹை-ப்ரொ·பைல் வக்கீல்களுக்கும், அ·பிடவிட் தாக்கல் செய்யணுமா, நோடரி கையெழுத்து வேணுமா என்று வந்து கிராக்கி பிடிக்கிற இந்த வக்கீல்களும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜாமீன் வாங்குவதற்கு என்றே சில பேர் இருக்கிறார்களாம். என் ஹிட் லிஸ்ட்டில் நிறையப் பேர் இருக்கிறார்கள். 'வேலையை' முடித்து விட்டு வந்து அவர்களிடம் க்ளையண்ட் ஆகிவிடலாம் என்று நினைத்து, விவரங்கள் மட்டும் வாங்கி வைத்துக் கொண்டேன்.

இன்றைய வேலை, ஓரிரு நிமிடங்களில் முடிந்து விடும் என்று முன்னமேயே தெரிந்திருந்ததால், ரொம்பவெல்லாம் அலட்டிக் கொள்ளாமல், நேரத்துக்குப் போய்விட்டேன். என் பெயரை அழைக்கும் வரை, கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்த போதுதான், அங்கே ஒரு வழக்கு நடந்து கொண்டிருப்பதே புரிந்தது.

இன்னாடா இது அராஜகம்...?

நீளமான., வார்னீஷ் ஊத்தி பளபளப்பாக்கிய horse shoe டைப் மேஜையை காணோம். இருபுறமும் அமற்ந்திருக்கும் வக்கீல் பட்டாலியனும் இல்லை. ஜட்ஜு தலைமாட்டிலே காந்தி படம் இல்லை. சீலீங்குக்கு கீழே இல்லாமல், தரையில் இருந்து சில அடிகள் உயரத்தில் அமர்ந்திருந்த ஜட்ஜு முகத்தில் கண்ணாடி இல்லை. ஓங்கி ஒலிக்கும் " மை லார்ட்டும்" இல்லை. யாரும், "அப்ஜக்ஷன் மைலார்ட்" என்று மேஜையை ஓங்கிக் குத்தவும் இல்லை. இரு தரப்பு வக்கீல்களும், ஜட்ஜுக்குப் வெகு அருகே நின்று கொண்டு, குசுகுசுவென்று பேசிக் கொண்டார்கள். கேஸ் நடக்கிறதாம்.

சில நிமிடங்களில், அந்த வழக்கு முடிவடைந்து, என் பெயரை கூப்பிட்டு சாட்சிக் கூண்டில் போய் நின்றதும், ஜட்ஜுக்கு ஒரு வணக்கம் போட்டேன். அவர் ஏற இறங்கப் பார்த்தார். கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் ஒழுங்காக பதில் சொல்லி விட்டு வந்து, காத்துக் கொண்டிருந்த போது, போன வேலை, லஞ்சம் கொடுக்காமல், நாலு ரூபாயில் ( ஆமாம், வெறும் நான்கு ரூபாயில்) நல்லபடியாக முடிந்தது என்று தெரிந்தது.

சினிமாக்கள் ஏற்படுத்துகின்ற பிம்பங்கள் உடைவது எனக்கு புதிதல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு, கல்லூரி ஸ்டரைக்கின் போது, நிஜமான போலீஸ் ஸ்டேஷன் எப்படி இருக்கும் என்று தெரிந்தது. இந்த முறை நீதிமன்ற வளாகம்.

Comments

ROSAVASANTH said…
//நிஜமான போலீஸ் ஸ்டேஷன் எப்படி இருக்கும் என்று தெரிந்தது. ..//

நிஜமாவே நிஜமான போலீஸ் ஸ்டேஷன் நிஜம்மா எப்படி இருக்குன்னு தெரியுமா?
RV : புரியலையே (:
Kasi Arumugam said…
அட.. அந்த கண்ணுக்கு கறுப்புத்துணி கட்ட, கையில் தராசு பிடிக்கும் நீதிதேவதை சிலை? அதை விட்டுட்டீங்களே:-)
kasi: நீதிதேவதையும் , நியாயத்தராசும் கிடக்கட்டும். இப்பத்தான், தமிழ்மணத்தின் சமீபத்திய value addition எல்லாத்தையும், நிறுத்தி நிதானமா, கவனமாப் பார்த்தேன்.. எங்கியோ போய்ட்டீங்கண்ணே... வாழ்த்துக்கள்
அன்புள்ள பிரகாஷ்,

கோர்ட்டுக்குப் போயிருக்கேன். அதைபத்தி ஒரு பதிவு போடற எண்ணம் இருக்கு!

என்றும் அன்புடன்,
துளசி.
SnackDragon said…
நிஜமான போலிஸ் ஸ்டேஷன் என்றால் குப்புற படுக்க வைத்து லாடம் கட்டுவாங்களாமே அது உணமையா? :)
பிரகாஷ்ஜி,

சேலம் கோர்ட்டில் மாஜிஸ்ட்ரேட் முன்னே நின்று சாட்சி சொன்ன அனுபவம் ஒன்று உண்டு. மின்சாரவாரியத்தில் இருந்தபோது நடந்த யூனியன் பிரச்ச்னை ஒன்றிற்காக.

வாரியத்தின் தரப்பு சாட்சியம் என்பதால் மேட்டூரிலிருந்து சேலம் கோர்ட்டிற்குச் சென்றுவர ட்ராவலிங் அலவன்ஸ்ஸெல்லாம் வாரியத்திலிருந்து வாங்கியிருக்கிறேன்.

நிழல் வேறு; நிஜம் வேறு.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I