Exclusive - an interview with Asokamithran.

கிழக்குப் பதிப்பகமும் கடவு இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய ' அசோகமித்திரன் 50 ' விழா முடிவடைந்ததும், விழாவில் சிறப்புரை ஆற்றிய பால் சக்கரியாவையும், விழா நாயகர் அசோகமித்திரனையும் அவரவர்கள் இடத்திற்கு பத்திரமாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தி.நகரில் பால் சக்கரியா இறங்கிக் கொள்ளும் வரையிலும், அவரும் அசோகமித்திரனும் , இதமான ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். இலக்கியக்கூட்டங்கள், இரவு ஒன்பது மணிக்கு மேல் நீடிப்பதில் இருக்கும் சங்கடங்கள் பற்றி, நகைச்சுவையாக , அசோகமித்திரன் ஏதோ சொல்ல, சக்கரியா, விழாவுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை பற்றி வியந்தார். " the gathering was amazing. I think lot of people in chennai read you" என்று சக்கரியா புகழ்ச்சியாகச் சொல்ல, அதற்கு அ.மி, " it is not like that. todays crowd was not for me but for sundara.ramasamy. such a writer...commands a huge following in here... like your MT in kerala ( சிரித்தார்).

விழாப் பேச்சில், சுந்தர.ராமசாமியின் ஜனரஞ்சகமான மிமிக்ரி நாடகம் பற்றி என் அதிருப்தியைத் தெரிவிக்கலாம் என்று நினைத்ததை அப்படியே துடைத்தெறிந்தேன்.

சற்று நேரத்தில் பால் சக்கரியா, இறங்கிக் கொள்ள, அசோகமித்திரன் மொத்தமாக நாற்பத்து ஐந்து நிமிடங்கள் தனியாக மாட்டினார். அப்போது நடந்த உரையாடலின் உத்தேசமான வரிவடிவம். ( குறிப்பறிந்து காரை மெதுவாகச் செலுத்திய ஓட்டுநர் ரவிக்கு நன்றி).

[disclaimer : இந்த உரையாடலை, எழுதப்போகிறேன் என்பதை, அசோகமித்திரனிடம் முன் கூட்டியே தெரிவிக்கவில்லை]

நான்: சுமார் எத்தனை ஆண்டுகள் ஜெமினியில் பணியாற்றினீர்கள்? இருபது முப்பது வருஷம்?

அவர் : இல்லை. 14 வருஷம் இருந்தேன்.

நான் : பதினாலு வருஷம் ஒரே திரைப்பட கம்பெனியில் சம்பளத்துக்கு வேலை செய்தீர்கள் என்றால், ஜெமினி நிறுவனம் , கார்ப்பரேட் கல்ச்சரில் இயங்கிய நிறுவனமா?

அவர் : அப்படிச் சொல்ல முடியாது. ஜெமினி, ஒரு ப்ரொபரைட்டரி கன்சர்ன் போலத்தான் இயங்கி வந்தது. வாசன் தான் அங்கே பாஸ். திறமையாகத் தான் நடத்தி வந்தார் என்றாலும், சினிமாவுக்கு உரிய அநிச்சயங்களால், தோல்விகளும் நிகழத்தான் செய்தன. படத்தின் வெற்றி தோல்வியை மட்டும் சொல்லவில்லை. human errors என்று சொல்வோமே, சிலர் மீது நம்பிக்கை வைத்து, அதனால் ஏற்படும் இழப்புக்கள்.. என்னிடம் உள்ள பலவீனம், நீண்ட நாள் தொடர்பை சட்டென்று அறுத்துக் கொள்ள முடியாது.அதனால், அங்கே அவ்வளவு காலம் அங்கே இருந்தேன், இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் வெளியே வந்துவிட்டேன். அக்காலத்தில் சினிமாவிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை இருந்தது. உதாரணமாக, மிஸ்.மாலினி படம் தயாரிக்கப்பட்ட போது, அதிலே கிருஷ்ணமூர்த்தி என்றொரு, நகைச்சுவை நடிகர் அதிலே நடித்தார். கிட்டதட்ட செகண்ட் ஹீரோ போன்ற வேஷம் அது. படம் முடியும் தருவாயில், படம் முடிவடைந்துவிட்டால் , சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற கவலையுடன் தான் அவர் இருப்பார். கம்பெனி ஆர்ட்டிஸ்ட், மாச சம்பளம் எல்லாம் நிரந்தரமாக இருக்கும் என்று நினைத்தவர்கள் எல்லாம் பின்னால் அவஸ்தப்பட்டார்கள். முழுநேர இலக்கியவாதிகளின் நிலைமையும் கிட்டதட்ட அது போலத்தான்.

நான் : கரைந்த நிழல்கள், my years with boss மற்றும் சில கட்டுரைகள் தவிர, திரையுலகம் தொடர்பான விஷயங்களை அதிகமாக எழுத வில்லையே? ஜெமினியை விட்டு வெளியே வந்துவிட்டாலும், அப்போது இருந்த திரைப்படங்கள் , திரையுலகம் குறித்து விமர்சன ரீதியில் ஏதாவது எழுதி இருக்கிறீர்களா?

அவர் : அதிலே எனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை. ஜெமினியை விட்டு வெளியே வந்ததும், இலக்கியத்தில் முழுமையாக ஈடுபடத் துவங்கிவிட்டேன். இலக்கியத்தை முழுநேரப் பணியாக வைத்துக் கொள்வது கூடாது என்பது லேட்டாகத்தான் புரிந்தது. இப்போது யாரும் அப்படி இல்லை என்று நினைக்கிறேன்.

நான் : இப்போது யாரும் அப்படி இல்லை. ப்ரெட் & பட்டருக்கு ஒரு வேலை. ஆத்மதிருப்திக்காக இலக்கியம் என்பதாகத்தான் பலர் இருக்கிறார்கள். நீங்கள் முழுநேர இலக்கியவாதியான பிறகு , எண்பதுகளின் துவக்கத்தில் , கமல்ஹாசனுடன் சேர்ந்து, ஒரு திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதவிருந்ததாக செய்தி படித்திருக்கிறேன். தண்ணீர் என்று நினைக்கிறேன். அது என்ன ஆயிற்று?

அவர் : எங்கே படித்தீர்கள்?

நான்: கணையாழி கடைசிப்பக்கம். சுஜாதா எழுதினது.

அவர் : ஓ அதுவா? மறந்து விட்டது. அப்போது அந்தப் பேச்சு கிளம்பியது. ஆனால், அதிலே எனக்கு பெரிதாக ஈடுபாடில்லை. இப்போது கூட, தண்ணீரை, படமாக்கலாம் என்று சிலர் வந்தார்கள். சினிமாவின் மொழிக்கு, என் கதை ஒத்துவருமா என்று தெரியவில்லை.

நான். மிகச் சரி. அதிலே ஹீரோ என்ற பாத்திரமே இல்லை...அப்புறம் எப்படி?

அவர் : அதற்காக மட்டும் சொல்லவில்லை. நாவல்களைப் படமாக்குவதில், பெரிய சிக்கல் இருக்கிறது.. நான் மனசுக்குள்ளே நினைத்து உருவாக்கும் பாத்திரங்களை திரையில் பார்ப்பது வாசகர்களுக்கு சரியாக வருமோ என்னமோ
என்றுதான்....

நான் : அப்படி பொதுப்படையாகச் சொல்லிவிட முடியாது. நூலை எழுதிய உடன், படைப்பாளியின் வேலை முடிந்து விடுகிறது. வாசகன் அதை எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம். அந்தக் கதையை மனசுக்குள்ளேயே ஒரு சினிமாவாக ஒட்டிப் பார்த்து, நாயகன் பாத்திரத்துக்கு சிவாஜி கணேசனைப் பொருத்தி கற்பனை செய்வதை நீங்கள் தடுக்க முடியாது இல்லையா?

அவர்: ஒத்துக் கொள்கிறேன். அதுவும் ஒரு வகையான வாசிப்புத்தான்.

நான் : கணையாழிக்கு, நீங்கள் வாலண்டியர் போல சில வருஷங்கள் இருந்தீர்கள் இல்லையா?

அவர் : ஆமாம். பார்த்துக் கொள்ள வேறு ஆள் இல்லை. எனக்கும் விட மனசில்லை. அப்போது நிறைய புதிய எழுத்தாளர்கள், நிறைய எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் சிறந்தவையாக இருக்கும். கணையாழி இல்லை என்றால், புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்திருக்கும். இந்தக் காரணங்களினால், கணையாழி தொடர்ந்து வெளிவந்தே தீரவேண்டும் என்று தோன்றியது.. அதிலிருந்து நல்ல எழுத்தாளர்கள், தமிழ் இலக்கிய உலகத்துக்குக் கிடைத்தார்கள்.

நான் : கணையாழியின் வடிவம், உள்ளடக்கம் ஆகியவற்றை வைத்து, அதை ஒரு 'first-of-its-kind' magazine என்று சொல்லலாமா?

அவர் : ஓரளவுக்கு. சிற்றிதழ்கள் என்று பார்த்தால், அந்தக் காலத்தில் எழுத்து, மணிக்கொடி போன்றவை வந்தன. அவை முழுமையான இலக்கிய இதழ்கள். பின்னால், கசடதபற போன்ற இதழ்கள் வந்தன. ஆனால், கணையாழி இலக்கியப் பத்திரிக்கை அல்ல. அது ஒரு current affairs magazine. இன்றைக்கு ( 12.02.05) ஆர்த்தர் மில்லர் செத்துப் போய்விட்டான். மிக அருமையான ப்ளேரைட். அவனுடைய இருப்பு குறித்தோ, இறப்பு குறித்தோ, நம்முடைய பத்திரிக்கைகளுக்கு அக்கறை இருக்கப் போவது இல்லை. மிஞ்சிப் போனால் ஹிந்துவில், இரங்கல் கட்டுரை வரும். ஆனால் கணையாழியில் அவனைப் பற்றிய விரிவான நினைவுக் கட்டுரை நிச்சயம் வந்திருக்கும். அவனுக்கும் மர்லின் மன்ரோவுக்குமான விவகாரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நான் : மன்னிக்கவும். இல்லை

அதைப் பற்றி கொஞ்ச நேரத்துக்கு விரிவாகப் பேசுகிறார். பிறகு சிறிது நேரம் மௌனம். வயது காரணமாக, அவருக்கு நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க இயலவில்லை என்பது புரிகிறது. காலை நல்ல வாகாக நீட்டிக் கொண்டு, ஏசியைத் தணிக்கச் சொல்கிறார். திடுமென்று நினைவுக்கு வந்தவர் போல, " புறப்படும் போது, வெங்கடாஜலபதி ( ஆ.இரா.வேங்கடாசலபதி) கிட்ட சொல்லிக்காம வந்துட்டேன். தப்பா நினைச்சுக்கப் போறார்..." என்கிறார். எனக்குச் சொல்கிறாரா அல்லது தனக்குள் சொல்லிக் கொள்கிறாரா என்பது புரியவில்லை. வண்டி கிண்டி சாலையில் நுழைந்ததும், நேரம் அதிகமில்லை என்று நினைத்து இன்டராகேஷனை :-) தொடர்ந்தேன்.

நான் : நீங்கள் சென்னையைப் பற்றி நிறையக் கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள்..

அவர் : ஆம். சென்னைஆன்லைன் என்ற இணையத்தளத்தில் எழுதியிருக்கிறேன்.

நான் : இன்னும் விரிவாக சென்னையைப் பற்றி பதிவு செய்திருக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். எஸ். முத்தையா போல...

அவர் : முத்தையா விஷயம் வேறு. அவருக்கு என்று ஒரு ·போரம் இருக்கிறது. நல்ல விளம்பரதார்கள். தமிழ் எழுத்தாளர்களுக்கு அந்த வசதி எல்லாம் இல்லை.

நடுவே ராண்டார்கை பற்றி பேச்சு வர, உற்சாகமானார்.. ஏதோ சுவாரசியமாகச் சொல்லத் துவங்குவதற்குள், கார் வேளச்சேரியில் அவர் வீட்டுக்கு முன் வந்து நின்றது.

கணையாழியில் அவரது பங்களிப்பு, கசடதபற, ஞானக்கூத்தனுடனான நட்பு, 18 ஆவது அட்சக்கோடு, புலிக்கலைஞன், ரிஷ்கா :-), கணையாழியின் குறுநாவல் போட்டிகளின் மூலம் கண்டெடுத்த பல திறமையான படைப்பாளிகள், சிற்றிதழ் சூழலின் அரசியலில் சிக்காமல் தனித்து இயங்குவது, எளிமை போலத் தோற்றமளிக்கும் குழப்பமில்லாத நடை, ஜெமினி வாசனுடனான அனுபவங்கள் என்று கேட்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருந்தது.

இருப்பினும் வேறு சந்தர்ப்பத்தில் பேட்டியைத் தொடரலாம் என்று நினைத்து விடை கொடுத்தேன். ஒரு பவ்வியமான தூரத்தில் நின்று, nice talking to you sir... என்றபோது, என் கையைப் பிடித்துக் குலுக்கி, its my pleasure என்றார்.

Comments

//இன்றைக்கு ( 12.02.05) ஆர்த்தர் மில்லர் செத்துப் போய்விட்டான்.//
http://dystocia.blogspot.com/2005/02/blog-post_12.html
தமிழ்பாம்பு : முன்னாடியே பாத்துட்டனே
OK....ஆர்த்தர் மில்லர் பற்றிச் சொன்னதால் கொடுத்தேன்....
np :-). அவர் சுவாரசியமாகச் சொன்ன பல விஷயங்களை என்னால் ரீகலக்ட் செய்ய முடியவில்லை. அதனால், அதை அப்படியே விட்டுவிட்டேன்.
Mookku Sundar said…
பிரகாஷ்,

செவ்விக்கு நன்றி. கேட்க நினைத்தை எல்லாம் ஒரு பகல் வேளையில் மறுபடி சந்தித்து, கேட்டு எழுதுங்கள்.

நீங்கள், தமிழ்ப்பாம்பு, எல்லாம் எழுதுவதைப் பார்த்தால் எனக்கெல்லாம் எழுதவே பயமாக இருக்கிறது. மூக்கைப் பொத்திக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

வாங்கிய புத்த்கங்கள் எல்லாம் மாயவரத்தில் இருக்கிறது. அடுத்த முறை ஊருக்கு போகும்போது எடுத்து வரவேணும். அது வரைக்கும் மறுபடி மறுபடி "சக்கை" யாக எழுத அலுப்பாக இருக்கின்றது
//மூக்கைப் பொத்திக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். //
அவ்வளவு நாத்தமா? ;-) காசியிடம் நிஜமாகவே மணம்வீசும் வலைப்பதிவு ஏதானும் உருவாக்க வழியிருக்கிறதா வேண்டுமானால் கேட்டுப் பார்க்கிறேன்!!
மிஸ் பண்ணிட்டேன் பிரகாஷ்..... அமெரிக்க கிளெயண்ட் ஒழிக!! (ஆர்டர் மட்டும் தந்து வாழ்க ;-) )
சக்காரியா கிட்ட ஏதும் பேசலையா பிரகாஷ்ஜி? இணைய தமிழ் பற்றி அசோகமித்தரன் எந்தளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்பதையும் அடுத்த முறை செவ்வி கண்டு சொல்லுங்க
கருத்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

ராம்கி : சக்கரியாவிடம் எதுவும் பேசவில்லை. அ.மியிடன் இணையம் பற்றியும் வலைப்பதிவுகள் பற்றியும் கொஞ்ச நேரம் பேசினேன். கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் பங்கு பெறத் தேவையான கணிணி அறிவும், உடல்நலமும் இல்லை என்று சொன்னார்.
பிரகாஷ்,

வயசுக்கு வந்துட்டீங்க போலிருக்கே? :-)
புரியலையே சுரேஷ்...
ரவியா said…
//. அவனுக்கும் மர்லின் மன்ரோவுக்குமான விவகாரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?// மற்றது தெரியுதோ இல்லையோ இவ்விஷயம் மட்டும் தெரியும். death of a salesman படித்து/பார்திருக்கிறீர்களா?

//18 ஆவது அட்சக்கோடு// ???

5 ஆவது அட்சக்கோடு தானே?
ரவியா said…
சாரி, பிராகாஷ். 18 வது அட்சக்கோடு தான். மன்னிக்கவும்.
அட ரவியா.... சென்னை வந்தப்ப பாண்டிசெர்ரிக்கு கூட்டிக் கொண்டு போய், 'தீர்த்த' விருந்து தரேன்னு சொல்லிட்டு அப்ஸ்காண்ட் ஆன ஆசாமிதானே நீங்க... :-). வாங்க.வாங்க விற்பனையாளனின் மரணம் படித்ததும் இல்லை. பார்த்ததுமில்லை.
ரவியா said…
//'தீர்த்த' விருந்து தரேன்னு சொல்லிட்டு அப்ஸ்காண்ட் ஆன ஆசாமிதானே நீங்க//
நானா? நீங்க தான் காணோம். சரி அதனாலென்ன இந்த மாதம்/அடுத்த மாதம் சந்திப்போமா? உங்க email-id கொடுங்க அ எனக்கு ஒரு மெயில் போடுங்க..ravithan@hotmail.com
அவர் எழுதினதுல சென்னை areaக்களைப் பற்றிய புத்தகம் மட்டும் படித்திருக்கிறேன். அப்பா! சான்ஸே இல்லை. இதுவே இப்படின்னா மிச்சதெல்லாம் இன்னும் எப்படி இருக்குமோ.
நன்றாக இருந்தது பிரகாஷ் இருந்தும் போதவில்லைப் போல்ப்பட்டது. தொடர்ந்து கேட்டுப் பெற்று எழுதுங்கள்.

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I