Book Fair 2005 - first round

சென்னை புத்தகக் கண்காட்சி - 2005

ஞாயிறு அன்று, கண்காட்சியில் கூடின கூட்டம் கேள்விப்பட்டு, மக்கள் குறைச்சலாக வரும் திங்கள் பின் மதியப் பொழுதினைத் தேர்ந்தெடுத்தேன். ஏமாந்தேன்.

எதிர்ப் புறம் இருக்கிற எத்திராஜ் கல்லூரி, வாசலில் விற்கும் அப்பளம், மக்காச் சோளக் கொண்டை, இலவசமாகக் கிடைக்கும் அரட்டை எதிலும் கவனம் செலுத்தாமல், போகவேண்டியது புத்தகம் வாங்க வேண்டியது , திரும்பி வந்து விடவேண்டியது என்ற தீர்மானமான முடிவுடன் சென்று இருந்தேன். நல்ல வேட்டை. கண்காட்சிக்கு வெளியே இருக்கும் நடைபாதை கண்காட்சியிலும் நல்ல நல்ல புத்தகங்கள் சிக்கின.

வழக்கமான நடைபாதைக் கடைகளுக்கும் இவற்றும் நிறைய வித்தியாசங்கள். புத்தகங்கள் எண்ணிக்கையிலும், விலையிலும். நகரில் இருக்கும் நடைபாதைக் கடைகளில் , ஆளைப் பார்த்து விலை சொல்லுவார்கள். சில புத்தகங்களைப் பார்த்ததும் கண்களில் ஒரு பல்பு எரியும். அதைப் பார்த்து விட்டால் விலை கூடும். பேரம் பேசுவதும் கடினம். இங்கே வசதியாக, புத்தகங்களை, ஐம்பது, நூறு, இருபது, முப்பது , பத்து என்று பல ரகங்களில் கூறு போட்டு வைத்திருக்கிறார்கள். flat rate. நாலைந்தை பொறுக்கினேன்.

புத்தகங்களின் அதிக விலை பற்றியும் , படிக்கலாம் என்று நினைத்து வாங்கி, பின் படிக்காமல் அப்படியே போட்டுவிடுவதில் உள்ள குற்ற உணர்ச்சி பற்றியும், சுரேஷ், தன் வலைப்பதிவில் எழுதி இருந்தார். அவரைப் போலவே நானும் சிந்தித்திருக்கிறேன். ஒரு காலத்தில் நல்ல நூல்களைத் தேடித் தேடி வாங்கிக் கொண்டிருந்தோம். இவை அனைத்தும் ஒரே தொகுப்பில் கிடைத்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று எண்ணி இருக்கிறோம். இவை அனைத்தும் கைகூடு கின்ற இந்த நேரத்தில், அதிலும் நமக்கு சில குறைகள் இருக்கின்றன. இது நம்முடைய மனப்பாங்கை கொஞ்சம் காட்டுகிறது என்று நினைக்கிறேன். புத்தக விலை சற்று அதிகமாக இருப்பது உண்மைதான் என்றாலும், சந்தை பெரிதானால், வாங்குகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் விலை குறையும் என்ற அடிப்படையை எண்ணி, தமிழ் பதிப்புத் துறை வயசுக்கு வரும் வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். புத்தகங்களை வாங்கிக் குமித்து விட்டு, பின் படிக்க முடியாமல் போவது பற்றி வருத்தம் கொள்ள நேர்ந்ததில்லை. என்றைக்காவது படிக்கலாம் என்று நினைக்கிற புத்தகங்களை வாங்குவதை பெரும்பாலும் தள்ளிப் போட்டு விடுவேன்.

இம்முறையும் அது போல நிறைய நல்ல நூல்களைக் கழித்துக் கட்ட வேண்டியதாயிற்று.

உயிர்மை ஸ்டால் நல்ல strategic location. கண்காட்சிக்குள் நுழைபவர்கள், அங்கே புகுந்து பர்ஸை பாதியாவது காலி செய்துவிட்டு வரும் படி, நுழைவாயிலுக்கு வெகு அருகிலேயே இருக்கிறது. அதைத் தவிரவும் நல்ல டைட்டில்கள். சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுதியைப் புரட்டிய போது, அதிலிருக்கும் சில சிறுகதைகள் தவிர அனைத்தும் என்னிடம் இருக்கும் வெவ்வேறு தொகுப்புகளில் இருக்கிறது என்று நினைவுக்கு வந்தது. வாங்க மனசு வரவில்லை. நேர்த்தியான அத்தொகுப்பினை விட்டுப் பிரியவும் மனமில்லை. புத்தகம் சேர்க்கும் ஆசைக்கும், கடனட்டைகளின் சுமைதாங்கும் சக்திக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது என்பதால், தியோடர் பாஸ்கரனின் ஒரு நூலை மட்டும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்

தீம்தரிகிட ஸ்டாலில் ஞாநி நின்று கொண்டிருந்தார். அரசியல் வாதிகள் யாரைப் பார்த்தாலும், கை தூக்கி வணக்கம் போட்டு வைப்பார்களே, அது போல, ஞாநியைப் பார்த்து , அலோ சார் என்றேன். பதிலுக்கு அவரும் சிரித்தார். ( அலோ சொல்லவில்லை) உள்ளே போய், " கண்டதைச் சொல்லுகிறேன்' என்ற புத்தகத்தை வாங்கினேன். இது இந்தியா டுடே இதழில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு. எஸ்.ராமகிருஷ்ணன் கண்ணில் பட்டார். பேசலாமா வேண்டாமா என்று யோசித்து வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

சமையல், வாஸ்து, சிக்கன் சமையல், லி·ப்கோவின் நிகண்டுகள் போன்றவற்றில் நீந்தி , கிழக்குப் பதிப்பகத்தில் கரை ஒதுங்கினேன். எட்டு மாசத்துக்கு முன்புதான் துவங்கியது என்ற மாதிரியே இல்லாமல், பழந்தின்னு கொட்டை போட்டவர்களுக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தது. புத்தகம் வாங்கி, பில் போட்ட உடன், கேரமில்க் சாக்லேட்டு சைசில் இருந்த காட்ஜெட்டில், பெயர் முகவரி எல்லாம் சொல்லச் சொல்லி, பதிந்து கொள்கிறார்கள். ( customer profiling?). சொக்கனின் கிரிக்கெட் நாயகர்களின் புத்தகங்களும், அள்ள அள்ளப் பணம் என்ற சோம. வள்ளியப்பனின் நூலும், டாலர் தேசமும் பரபரப்பாக விற்பனை ஆவதைப் பார்க்க முடிந்தது. அல்லையன்ஸில் வாங்கின சுதாங்கனின் புத்தகத்தைப் பார்த்து விட்டு, "அடுத்த பதிப்பு நாங்க கொண்டு வரோம்" என்று பத்ரி சொன்னார். நான் சொன்னேன்.. - edited- .

கொஞ்ச நேரம் நின்று உரையாடிக் கொண்டிருந்த போது, இராம.கி . அய்யா தென்பட்டார்.

அவருடன் கொஞ்ச நேரம் உரையாடிவிட்டு, வாங்கிய புத்தகங்களை, அங்கே இறக்கி விட்டு, காலச்சுவடு பதிப்பகத்துக்கு சென்ற போது, அங்கே, சிறப்பு விருந்தினர், சல்மா யாருடனோ, உரத்து விவாதித்துக் கொண்டிருந்தார். இரண்டாம் ஜாமங்களின் கதை பற்றி பரவலாகப் பேச்சு இருக்கிறதே என்று நினைத்து, முதல் இரண்டு பக்கத்தை அவசரமாக மேய்ந்தேன். என் வாசிப்பு அனுபவத்துக்கு, அது கட்டுபடியாகாது என்று புரிந்தது. உட்கார்ந்திருந்த சல்மாவிடம், " ரொம்ப சாரிங்க மேடம் " என்று மானசீகமாகச் சொல்லி விட்டு, ஆல் டைம் ·பேவரைட் சுந்தர.ராமசாமி யின் கட்டுரைத் தொகுதி ஒன்றை எடுத்துக் கொண்டு நகர்ந்தேன்.

ஒளித்து வைத்த புத்தகங்களை எடுத்துக் கொள்ள கிழக்குப் பதிப்பகத்துக்கு வந்த போது, திங்கட்கிழமை விருந்தினர் சன் டீவி வீரபாண்டியன் என்று தெரிந்தது. . ஒரே நேரத்தில் இரண்டு பிரபலங்களை கிழக்குப் பதிப்பகத்தின் நூற்று சொச்ச சதுர அடிகள் தாங்காது என்று தோன்றியதால் உடனே கிளம்பினேன்.

வாங்கிய புத்தகங்கள்

நடைபாதை கண்காட்சி
 • The Spirit of Chepauk - The MCC Story - S.Muthiah
 • My Years with General Motors - Alfred P Sloan
 • Godrej , A Hundred Years - B.K.Karanjia
 • Brief History of Time - Stephen Hawking
 • வெட்கம் தொலைத்தது, கவிதைத் தொகுப்பு - நா.விச்வநாதன்

மெயின் கண்காட்சி

 • எம் தமிழர் செய்த படம், சினிமாக் கட்டுரைகள் - தியோடர் பாஸ்கரன் - உயிர்மை
 • இரவுக்கு முன்பு வருவது மாலை, சிறுகதைகள், குறுநாவல் - ஆதவன் - கிழக்கு பதிப்பகம்
 • வானகமே இளவெயிலே மரச்செறிவே, கட்டுரைத் தொகுதி - சு.ரா.- காலச்சுவடு பதிப்பகம்
 • காமராஜை சந்தித்தேன், நினைவஞ்சலி கட்டுரைத் தொடர் - சோ - அல்லயன்ஸ்
 • திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன், அனுபவக் கட்டுரைகள் - சோ - அல்லையன்ஸ்
 • தேதியில்லா டைரி, தினமணி நாளிதழில் வந்த பத்திகளின் தொகுப்பு - சுதாங்கன் - அல்லையன்ஸ்
 • Builders of Modern India, Indira Gandhi - B.N. Pande - Publications Division, Govt.of India
 • கண்டதைச் சொல்லுகிறேன், இந்தியா டுடே இதழில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு - ஞாநி - விழிகள் பதிப்பகம்
 • சத்திய சோதனை - ரா.வேங்கடராஜுலுவின் தமிழாக்கம் - சர்வோதய இலக்கியப் பண்ணை
 • காந்தி கொலைக்குப் பின்னணி - சு.வைத்யா ( தமிழாக்கம் - மு.மாரியப்பன்) - சர்வோதய இலக்கியப் பண்ணை

[ பெரும்பான்மையான அரங்குகளில் இருந்து விலைப்பட்டியல்களைச் சேகரித்துக் கொண்டு வந்திருக்கிறேன். முக்கியமான தலைப்புகள், விலை, பதிப்பகத்தின் பெயர் ஆகியவ்ற்றை தொகுத்து அடுத்த பதிவில் எழுத உத்தேசம். யாரையாவது அனுப்பி வாங்க நினைக்கும் வெளியூரில்/வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனேகமாக நாளைக்கு எழுதுவேன்.]


Comments

ஒரே நேரத்தில் இரண்டு பிரபலங்களை கிழக்குப் பதிப்பகத்தின் நூற்று சொச்ச சதுர அடிகள் தாங்காது என்று தோன்றியதால் உடனே கிளம்பினேன்.
>>>>>
ரொம்பத்தான் :-)
ஏன்.. ப்டாதா? :-)
Balaji-Paari said…
Raasaa,
Neenga nadathunga raasaa...
ROSAVASANTH said…
அய்யா பிரகாசு, ஏதோ பட்டியல் பொடறேன்னு சொன்னீங்களே? செய்யப்படாதோ?
ROSAVASANTH said…
//யாரையாவது அனுப்பி வாங்க நினைக்கும் வெளியூரில்/வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனேகமாக நாளைக்கு எழுதுவேன்//

உங்களால உதவ முடியுமா? இது என்னடா வம்புன்னு நினைகவேண்டாம். முடிந்தால் மட்டும் எழுதவும்.
>>>
ஒரே நேரத்தில் இரண்டு பிரபலங்களை கிழக்குப் பதிப்பகத்தின் நூற்று சொச்ச சதுர அடிகள் தாங்காது என்று தோன்றியதால் உடனே கிளம்பினேன்.
>>>>>

:P

nadaththunga nadaththunga.

appadiyae, naaLaikku pattiyal pOda maRanthuraatheenga. aamaa...

-Mathy

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Chennai Tamil Bloggers Meet - 2005

ரா.கி.ரங்கராஜன் - நாலு மூலை