வரைவின் மகளிர் from பாண்டவபுரம்

முன் ஜாமீன் : சுஜாதா மன்னிக்க

முன்குறிப்பு : ***** ***** எழுதிய ****** ** ***** என்கிற ஆங்கிலச் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு செய்த புனைவு. இது ஒரு தொடர். முடிவிலே என்ன கதை என்று சொல்கிறேன். முன்னாலேயே சொன்னால், ஒரிஜினலைப் படித்து விட்டு என் சரக்கை டீலிலே விட்டு விடும் அபாயம் இருக்கிறது.

முன் எச்சரிக்கை : எங்கேயிருந்தாவது 'பிரஷர்' வந்தால், தொடர் பாதியில் நிறுத்தப்படும்.

*********************


ஸ்ரீவத்சன் அறிமுகமாகும் படலம்

ஒரு டிசம்பர் மாத மழை நாள். கணவன்மார்களை அலுவலகத்துக்கும், பிள்ளைகளைப் பள்ளிக்கும் துரத்திவிட்டு, குடும்பஸ்த்ரீகள், சற்று நேரம் மூக்கைச் சிந்தலாம் என்று தொலைக்காட்சிக்கு முன் அமரும் அசந்தர்ப்பமான முற்பகல் பொழுது. கோடை விடுமுறைக்காலம் என்பதால், ஹைகோர்ட் வளாகம் ஈயடித்துக் கொண்டிருந்தது.

தம்புச் செட்டித் தெரு அலுவலகம்.

கணேஷ் வார் அண்ட் பீஸ் நாவலை, எட்டாவது தரமாக, முதல் பக்கத்தில் இருந்து வாசிக்கத் துவங்கி இருந்தான். உள்ளறையில், அப்போதுதான் உறை பிரிக்கப்பட்டது போல இருந்த லாப்டாப்பை, வசந்த் நோண்டிக் கொண்டிருந்தான்.

" ஏமாத்திட்டான் பாஸ்.. எலிக்குட்டியே தரலை"

" உளறாதே... லேப்டாப்புக்கு ஏதுடா தனியா மவுசு?"

" காசு கம்மின்னு இதைப் போய் வாங்கிட்டு வந்திருக்கீங்களே? வயோ ன்னு சோனில ஒண்ணு போட்டிருக்கான்... சேப்புக் கலர்ல, ஈரான் தேசத்து குட்டி மாதிரி வழவழன்னு..."

அப்போது காலிங் பெல் சத்தம் ஒலித்தது.

"யெஸ் கமின்..."

தயக்கத்துடன் உள்ளே ஒருவன் வந்தான். மன்னிக்கவும், வந்தார். ஐடி கம்பெனி ஒன்றின் ஹெச்.ஆர் மேனேஜர் போன்ற தோற்றம், நடை, உடை பாவனை. முகத்தில் கொஞ்சம் பரபரப்பு. கொஞ்சம் கிலி.

" எக்ஸ்யூஸ்மீ... இங்கே கணேஷ்ங்கறது...."

" சொல்லுங்க.. நான் தான்..."

" ஹலோ மிஸ்டர் கணேஷ்... என்பேர் ஸ்ரீவத்சன். இதோ என்னோட விசிடிங் கார்ட். நான் ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட். ஈக்காட்டுத் தாங்கல்ல, தெர்மாஸ்·ப்ளாஸ்க் பண்ற ஒரு யூனிட் வெச்சிருக்கேன்.. கடந்த சில வாரமா எனக்கு ஒரு பிரச்சனை. ஒரு சின்ன சிக்கல்லே மாட்டியிருக்கேன்.. நீங்கதான் கொஞ்சம் ஹெல்ப் செய்யணும்..."

வந்தவர் மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே போக, கணேஷ் அவரை பார்வையாலேயே அளந்தான். ஆறடி உயரம். வயது நாற்பதுக்குள்ளாகத்தான் இருக்கும். உயர்ரகபாண்ட். சட்டையின் மணிக்கட்டில் லூயி பிலிப் தெரிந்தார். பெல்ட்டும், ஷ்யூவும் அசலான சீமைச் சரக்கு. தங்கக் கலரில் விசிடிங் கார்ட். ஏற்கனவே எங்கோ பார்த்த முகம்..சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

"நிதானமாச் சொல்லுங்க ஸ்ரீவத்ஸன். முதல்ல யாரு என்னை உங்களுக்கு ரெ·பர் செஞ்சது? சட்டப் பிரச்சனைங்கள்ளாம் ஆமை மாதிரி. நிதானமாத் தான் நடக்கும்.. மேலும் இப்ப வெகேஷன் டைம் வேற... பரபரப்புக்கு அவசியமே இல்லை.."

" ஆக்சுவலா, ஜிகே க்ரூப் ராமநாதன் தான் உங்களைப் பத்திச் சொன்னார். சட்டம் மட்டுமில்லாமே, வேற சில முறைகளிலேயும் நீங்க பிரச்சனைகளைத் தீத்து வெப்பீங்கன்னு சொன்னார்... நான் ரொம்ப அபாயகரமான சூழ்நிலையிலே இருக்கேன் மிஸ்டர் கணேஷ்..ப்ளீஸ்....

" நல்ல ஃப்ரெண்டு பாஸ் உங்களுக்கு... அந்த ராமநாதன் கூட சகவாசம் வெச்சுக்காதீங்கன்னா கேக்கறீங்களா? ....சமயம் பார்த்து.... "

திடீரென்று பிரசன்னமான வசந்தை, அவர் சந்தேகமாக பார்க்க..

" இது வசந்த்... என் ஜூனியர்... நீங்க வந்த விவரத்தை, இன்னும் கொஞ்சம் விளக்கமா ஆனால் சுருக்கமாக சொல்லுங்க.. எங்களுக்குக் கொஞ்சம் வேலை இருக்கு "

" ஆமா பாஸும் நானும் சினிமா போகணும்...மோட்சம் ஷோ டைம் தெரியுமா சார் உங்களுக்கு? "

" டேய்...."

" சாரி பாஸ்... சார் ரொம்ப கலவரமா இருக்கார்...அதான் கொஞ்சம் கூல் பண்ணலாமேன்னு..."

அவர் இதை எல்லாம் சுத்தமாகக் கண்டுகொள்ளாமல், " கணேஷ், என்னை ஒருத்தி பயமுறுத்தறா... அவ கிட்டேந்து என்னை நீங்கதான் காப்பாத்தணும்" என்றார் மொட்டையாக..

வசந்த் விசிலடித்தான்... "பாஸ்.. இது ப்ளாக்மெயில் கேஸு"

" காப்பாத்தணும்னா ? புரியலை.. நாங்க போலீஸ் இல்லை சார்.... வி ஆர் ஆஃப்டரால் லாயர்ஸ்...எங்க சண்டை எல்லாம் கோர்ட்டுக்கு உள்ளேதான்"

" பாஸ் எனக்குப் புரிஞ்சு போச்சு... அந்த ஸ்ரீலேகா கேஸ்ல இன்வால்வ் ஆனோமில்லையா? அத வெச்சு...ராமநாதன் ரொம்பவே ஏத்தி விட்டுருக்கணும்.. சார் அத நம்பிண்டு இங்க வந்து... மிஸ்டர் ஸ்ரீவத்சன்...இது ஆகாது... நீங்க போலீஸ் கிட்டே போங்க "

" மிஸ்டர் வசந்த்... ப்ளீஸ் டிரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ... போலீஸ் கிட்டே போனா விஷயம் ரொம்ப சிக்கலாகிடும். நான் இந்தச் சிக்கல்லேர்ந்து வெளியே வர எவ்வளவு பணம் செலவு பண்ணவும் தயாரா இருக்கேன்.."

" அப்புறம் என்ன பாஸ் பிரச்சனை? சார் தான் சொல்றாரே துட்டு பிரச்சனை இல்லேன்னு.. ஒரு கை பாத்திருவோம்...எவ்ளோ நாள் சான்ட்ரோவையே ஓட்டறது? தள்ளி விட்டுட்டு இன்னோவா வாங்கிடலாம்.."

" அட... இவன் வேற சும்மா... சார்... நீங்க கிளம்புங்க... போலிஸ் கிட்ட போய் சொல்லுங்க.. ஏதாச்சும் கேஸ் போடணும்னா இங்க வாங்க..."

சோகமாக எழுந்தார்... விட்டால் அழுதுவிடுவார் போலிருந்தது... " மிஸ்டர் கணேஷ், நீங்க என் கேசை எடுத்துக்கக் கூட வேண்டாம்.. நான் மொத்தப் பிரச்சனையையும் சொல்றேன்., அதுக்குப் பிறகு நீங்க எப்படிச் சொல்றீங்களோ அப்படியே செய்யறேன்.."

கணேஷ் ஒரு நிமிடம் யோசித்தான். வாட்சைப் பார்த்தான். வசந்தைப் பார்த்தான். மதியம் நான்கு மணிக்கு காஸ்மாபலிடன் கிளப் போகவேண்டும். அது வரை, ஒன்றும் வேலை இல்லை... கேட்டுத்தான் பார்ப்போமே.. என்ன போச்சு..

" சரி... உக்காருங்க...உங்க பிரச்சனை என்னன்னு சொல்லுங்க.... என்ன செய்யலாம்னு சொல்றேன்.."

"பாண்டவபுரத்திலே ஒரு பொண்ணுகிட்டே வசமா சிக்கிகிட்டு இருக்கேன் கணேஷ். எக்கசக்கமா மிரட்டறா.."

உய்....

பாண்டவபுரம் என்று கேட்டதுமே, வசந்த் அரையடி உயரத்துக்கு எம்பிக் குதித்தான்.

( அடுத்த பகுதி அடுத்த வாரம் வெளிவரும் )

Comments

Anonymous said…
//சேப்புக் கலர்ல, ஈரான் தேசத்து குட்டி மாதிரி வழவழன்னு//

கிட்டத்தில் சுஜாதா தெரிகிறார். கலக்கல் ஆரம்பம். பெயர் தான் புரியவில்லை.
Anonymous said…
>>ஒரு டிசம்பர் மாத மழை நாள்.

>>கோடை விடுமுறைக்காலம் என்பதால்

???????
long time, no see. ;)

மீள் வருகை சந்தோஷமாயிருக்கு.

சரி, அடுத்த பகுதி எப்ப?

அங்க, உங்கூருகாரரு ஒருத்தர் அறிவியல் புனைவு ஒண்ணைத் தொடங்கிட்டு தேவுடு காக்க வச்சுகிட்டு இருக்காரே. அதுமாதிரி பண்ணிரமாட்டீங்களே? ;)

-மதி
Anonymous said…
டிசம்பர் ?? கோடை விடுமுறைக்காலம் ??
lazygeek :

கிட்டத்தில் தெரிகிறாரா? அதான் வேணுங்கறது :-)

வரைவின் மகளிர்னா, politically correct language ல, பாலியல் தொழிலாளர் என்று அர்த்தம்..
பரி : அது எப்படிங்கய்யா.. படிக்கும் போதே பக்கத்துல வெளக்கெண்ணையை வெச்சுகிட்டு உக்காருவீங்களோ :-)

விடுமுறைக்காலம் என்பதற்கு பதிலா கோடை விடுமுறைன்னு எழுதிட்டேன்.
//long time, no see. ;)//

வந்துட்டம்ல..

அடுத்த பகுதி எழுதிகிட்டே இருக்கேன். இந்தக் கதையை எழுதினதே, முக்கியமான ஒரு மேட்டருக்காகத்தான்.. அதனாலே கண்டிப்பா முடிச்சுடுவென் :-)

//அங்க, உங்கூருகாரரு ஒருத்தர் அறிவியல் புனைவு ஒண்ணைத் தொடங்கிட்டு தேவுடு காக்க வச்சுகிட்டு இருக்காரே//

அவர் இப்ப எங்கூர்காரர் இல்லை.. வேற இஸ்டேட்டுக்குப் ஜாகையை மாத்திகிட்டார்.
சரவ் : குதுர வீரருக்குச் சொன்னதுதான் உங்களுக்கும் :-)
SP.VR. SUBBIAH said…
சுஜாதா எதற்கு மன்னிக்க வேண்டும்?
எல்லோருமே ஒரு இன்ஸ்பிரேசனில்தான் எழுதுகிறோம்.
இளையராஜாவிற்கு இன்ஸ்பிரேசன்
எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி!
நீங்க கலக்குங்க!
Anonymous said…
//
முன்குறிப்பு : ***** ***** எழுதிய ****** ** ***** என்கிற
//

என்கோடிங் வைத்த பிறகும், ஐ.ஈ, ஃபயர்பாக்ஸ் எல்லாவற்றிலும் பூச்சி பூச்சியாகத் தான் தெரிகிறது. :-))

கதை நன்றாகச் செல்கிறது ...
Sud Gopal said…
அடுத்த பகுதி ???
////அது எப்படிங்கய்யா.. படிக்கும் போதே பக்கத்துல வெளக்கெண்ணையை வெச்சுகிட்டு உக்காருவீங்களோ :-)///

அதானே:))

"அது ஒரு மழைக்காலம்" னு கவிதையா ஆரம்பிக்கிறமாதிரியில்ல ஆரம்பிச்சிருக்காருன்னு நான் நெனைச்சிட்டிருக்கேன்:))

நல்லா எழுதரீங்கல்ல? அப்பறம் அடிக்கடி எழுதினா என்ன இப்படி? தீர்த்தவாரி நேரத்தைக் கொஞ்சம் மிச்சம் பிடிச்சாத் தீந்துது:)) எப்படித் தெரியும்னு பாக்காதீங்க:)) பிரேமலதாவுக்காக எழுதுன உங்களப்பத்தின பதிவிலிருந்து புடுச்சுட்டம்ல:)) அவங்களுக்காக நானும் என்னப்பத்தி எழுதவேண்டியது ஒன்னு கெடப்புல கெடக்குது:))
Frederick Forsythஇன் ஒரு சிறுகதையின் ஜாடையும், Jeffrey archer-இன் கதை அமைப்பும் லேசாகத் தென்படுகின்றன. உறுதியாகச் சொல்லமுடியவில்லை. நீங்க போங்க.. நாங்க மேலே வந்து ஜாயின் பண்ணிக்கறோம்;-))

எத்தனை பாகம்??
Sp.Vr : மன்னிப்பு, ஸ்டைலை திருடியதற்காக அல்ல. அவரது டிரேட்மார் கதா பாத்திரங்களைத் திருடியதற்காக :-)

இன்பா : நன்றி.

பூச்சி பூச்சி? எல்லாம் என்னோட ஃபையர்ஃபாக்ஸ்ல ஒழுங்கா வருதே.. என்ன பிரச்சனைன்னு பார்க்கிறேன்..

சுதர்சன் : அடுத்த வாரம் :-)
செல்வநாயகி : இதுக்கு வித்திட்டதே, சமீபத்தில் நடந்த 'தீர்த்தவாரி'ன்னா நம்ப மாட்டீங்க :-). வந்ததுக்கு நன்றி.
சுரேஷ் : ஜெஃப்ரி ஆர்ச்சரா? இல்லே , இது சுத்தமா வேற டிராக் :-)

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Chennai Tamil Bloggers Meet - 2005

ரா.கி.ரங்கராஜன் - நாலு மூலை