9 weird things about prakash

பிரேமலதாவுக்காக...., பாலாஜியைத் தொடர்ந்து....

இந்தப் பதிவை எழுதுவது, பிரகாஷின் மனசாட்சி

உணவு : தமிழர்களின் பாரம்பரிய உணவு இட்லி. இவன் வீட்டிலும் அப்படித்தான். ' தினமும் இட்லிதானா? " என்று சலித்துக் கொண்டே சாப்பிடுவான். இரண்டு நாள் தொடர்ந்து இட்லி இல்லை என்றால், " ஏன் இட்லி செய்யறதுக்கு என்ன? " என்று கோபித்துக் கொண்டு, ஓட்டலுக்குப் போய் இட்லி சாப்பிட்டு விட்டு, 'ச்சே.. வீட்ல செய்யற மாதிரியே இல்லை" என்று மீண்டும் சலித்துக் கொள்வான். முருகன் இட்லி கடைக்குப் போய், தோசை சாப்பிடுவதையும், அண்ணா நகர் 'சுக்சாகருக்கு' ( அக்மார்க் வட இந்திய உணவகம்) போய் அடை அவியல் ஆர்டர் கொடுப்பதையும், சரவண பவனில், மெனு கார்டில் எங்கேயோ தேடிப் பிடித்து ஸ்வீட் கார்ன் ஸூப் வித் அவுட் க்ரீம் ஆர்டர் செய்து விட்டு, டேபிளில் தாளம் போடுவதைப் பார்த்து விட்டு, நண்பர்கள், அவனை, ருத்ரனிடமோ அல்லது பீட்டர் ஃபெர்ணாண்டஸிடமோ( நகரத்தின் பிரபல மனநல மருத்துவர்கள் ) நைசாகத் தள்ளிக் கொண்டு போக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பிடி கொடுக்க மாட்டேன் என்கிறான்.

இசை : திரை இசை பிடிக்கும். ஆனால் கே.ஜே.யேசுதாஸ் குரல் பிடிக்காது. இரு மாதங்களுக்கு முன்பு, ஒரு முன்னிரவில், 'ரெண்டாவது ரவுண்டு' தீர்த்தவாரியில் இதைச் சொன்ன போது, ரோசா வசந்த், அவனை அப்படிப் பார்த்தார். எப்படி? 'செத்துப் போன எலியை பார்ப்பது போல'. உஷாராக, மூன்றாவது ரவுண்டில், பிரகாஷ் பேச்சை மாற்றிவிட்டான். ஏன் யேசுதாஸின் குரல் பிடிக்காது? ரொம்ம்ம்ம்ப ஸ்வீட்டாக இருக்கிறதாம்... அதனால் பிடிக்காதாம். கேனப்பய...

இலக்கியம் : உலகத்திலேயே தலைசிறந்த நாவலாசிரியர் இரா.முருகன் என்பது அவனது கணிப்பு. இதிலே என்ன வினோதம்? இருக்கிறது. ஏனென்றால், அப்படிச் சொல்வதை, முருகனே ஒத்துக் கொள்ள மாட்டார். புத்தக வாசிப்பில் கொட்டை போட்ட அவர் சொல்வதற்கும், அரசூர் வம்சத்தை மட்டும் வாசித்து விட்டு, இவன் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா? அதே போல சிறுகதை எழுதுபவர்களில் அவனுக்கு பிடித்தவர், சித்தார்த்த சே குவாரா என்ற புனைப்பெயரில் எழுதுபவர்தான். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மௌனியில் துவங்கி, ஜேபி சாணக்கியா, பெருமாள் முருகன் வரை எத்தனையோ பேர் சிறப்பாக எழுதுகிறார்கள் என்று சொன்னாலும் கேட்கமாட்டான். பிடித்த எழுத்து என்பதற்கும், சிறந்த ஆக்கம் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஆனால் அது அவனுக்குப் புரியாது. கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.

திரைப்படம் : நடிகையர் திலகம் சாவித்திரிக்கு ரசிகர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஜெமினி மாமா கோபித்துக் கொள்ளப் போகிறாரே என்று இத்தனை நாள் சும்மா இருந்தான். அவரும் இல்லை. ஆகவே, இப்போது மீண்டும் வேலையை ஆரம்பித்திருக்கிறான். அப்படித் துவங்கி பாதியிலேயே நிற்கிற வேலைகள் பல. ஆகையால், சாவித்திரிக்கு இப்போது விடிவுகாலம் கிடையாது. எம்.ஆர்.ராதா என்றதும் உங்களுக்கு என்ன படம் நினைவுக்கு வரும்? ரத்தக்கண்ணீர்? பலே பாண்டியா? இருவர் உள்ளம்?பாகப்பிரிவினை? ஆனால், அவர் தன் இறுதி நாட்களில் நடித்த பஞ்சபூதம் என்ற திரைப்படம் தான் இவனுக்கு நினைவுக்கு வரும். அதே போல, அவனைப் பொறுத்தவரை, தமிழில் தலைசிறந்த சிறந்த நகைச்சுவை நடிகர், தேங்காய் சீனிவாசன்.

நகரம் : வேலைகளை முடித்து விட்டு அமைதியாக செட்டில் ஆகவேண்டும் என்றால் எந்த நகரத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? சென்னை? கோவை? சான்ஃப்ரான்ஸிஸ்கோ? மும்பை? சிங்கை? பிறந்து வளர்ந்த ஊர்? இப்படியாக ஏதோ ஒன்றுதானே? இவன் கொல்கத்தா அல்லது விசாகப்பட்டினம் என்று சொல்வான். ஏன்? அந்த வழியாகப் போகும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது காதலா? அப்படி எல்லாம் இல்லையாம். பின்னே? ' ஒரு ஊரை ஏன் பிடிக்காதுங்கறதுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனால் ஏன் பிடிக்குங்கறதுக்கு ஒரு காரணம் கூட சொல்ல முடியாது ' என்று டயலாக் அடிக்கிறான். இயக்குனர் விக்ரமனின் அசோசியேட்டுகள் யாராவது இந்த வலைப்பதிவைப் படித்தால், வசனம் எழுதச் சான்ஸ் வாங்கிக் கொடுங்கள்.

தத்துவம் : 80/20 rule கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தத் தத்துவத்தை, ஆளுக்காள் தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்வார்கள். அதே போல, இவனும் அதனடிப்படையில் ஒரு தத்துவத்தைக் கண்டுபிடித்திருக்கிறான். அந்தத் தத்துவம் சொல்வதாவது, "ஒரு சமூகத்திலே, 80 விழுக்காடு ஆசாமிகள் 'இருட்டிலேயே' இருப்பதற்கு முக்கியமான காரணம், அந்தச் சமூகத்தில், 'வெளிச்சத்தில்' இருக்கும் 20 விழுக்காடு ஆசாமிகள் தான்'.

நண்பர்கள் : அவனது ஆஃப்லைன் நண்பர்கள் யாருக்குமே, அவனது ஆன்லைன் பர்சனாலிடி தெரியாது. சொல்லப் போனால், பிரகாஷ் என்றாலே யார் என்று தெரியாது. அவர்களுடன் பரிச்சயமானது வேறு பெயரில். ஐந்து வருடங்களாக, இப்படி 'டபுள் ஆக்ட்' கொடுத்துக் கொண்டு வருகிறான்.

அரசியல் : தலைசிறந்த அரசியல்வாதி யார் என்று கேட்டால் சோனியா காந்தி தான் என்று சொல்வான். அடுத்த பொதுத் தேர்தலில், விஜயகாந்த் முதல்வராக வேண்டும் என்றும் சொல்வான்.

இன்ன பிற : ஒரே புத்தகத்தை நூறாவது தரம் படிப்பது, கல்லூரிக் காலத்தில் ஒரு முறை நள்ளிரவில் 'புகை' பற்ற வைக்க நெருப்புப் பெட்டி இல்லாமல், அயர்ன் பாக்ஸை திறந்து காயிலை சூடு செய்து பற்ற வைத்தது, கடந்த ஒரு மாசமாக, இந்தப் பாட்டை தினமும் மூன்றுதரமாவது கேட்டுவிட்டே தூங்குவது, தன் வலைப்பதிவை கிட்டதட்ட டெலீட் செய்யப் போய், கடைசி நேரத்தில் மனசு மாறியது, இத்தரணியிலே ஏகப்பட திரைப்படங்கள் இறைந்து கிடக்க, ஆக்சிடெண்ட் என்ற ஒரு கன்னடத் திரைப்படத்தின் விசிடிக்காக அலைந்து கொண்டிருப்பது, என்று ஏகப்பட்ட வினோதங்கள் இருக்கிறது. எதைச் சொல்ல, எதை விட?

Comments

// இந்தப் பதிவை எழுதுவது, பிரகாஷின் மனசாட்சி //

இப்படியெல்லாம் சொன்னா உமக்கு மனசாட்சி இருக்குன்னு நாங்க நம்பிடுவோமா :)
Anonymous said…
// ' தினமும் இட்லிதானா?

// இப்படி 'டபுள் ஆக்ட்' கொடுத்துக் கொண்டு வருகிறான்.

Doubt cleared ;-)

Jus' kidding :-)

Overall its a very interesting tag and post
ரவி said…
எங்களை போன்ற புதிய பதிவர்கள் உங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு வழி செய்தது...உங்கள் பதிவை முதல் முறை படிக்கிறேன் என்று நினைக்கிறேன்.
Anonymous said…
ஓஹோ!!

அப்ப நீர்தான் அந்த "இட்லி"யா?
அப்படின்னா "வடை" யாருவே?

யேசுதாசு குரலு எனக்கும் புடிக்காது. சும்மா வெண்ணெயில் செஞ்ச வெங்கலக் குரலு :-)

சாத்தான்குளத்தான்
தோடா!

ரிங்கு ரிங்கா காயிலு சுத்தி நடுவுல வெள்ள சொக்கா போட்டுக்குனு யாரோ பேசர மாதிரி இருக்கு.

நம்ம ருத்ரன் கிளினிக்கு கோடம்பாக்கத்துலதான இருக்கு பிரிட்ஜு கீழ...இல்ல கேக்குறன் :)))

அன்புடன்
ஆசாத்
முகமூடி : வேற வழி, நம்பித்தான் ஆகணும்....அப்பறம் என்னாங்கோ ஆளையே காணோமே ரொம்ப நாளா?

விக்னேஷ் : அடப்பாவியளா, இதுல இவ்ளோ உள்குத்து இருக்கா ? :-)
ரவி : பரவாயில்லை.. நீங்க அப்படி ஓண்ணும் பெரிசா மிஸ் பண்ணிடலை :-) வருகைக்கு நன்றி
சாத்தான் குளம், சம்பவம் நடந்த அன்னிக்கு நான் ஊர்லயே இல்ல வேய்.. வேணும்னா, மரவண்டு கிட்டக் கேட்டுப் பாரும்...

இப்படி மல்லு கட்டறதுக்கு பேசாம நாந்தான் இட்லிவடைன்னே ஒத்துக்கலாம் போலிருக்கு :-) பப்ளிசிட்டியாச்சும் கிடைக்கும்
மீனாக்ஸ் : நன்றி.

ஆசாத் : ருத்ரன் தானே? இப்ப அங்கே இல்லை... இடம் மாத்திட்டாராம் . வந்ததுக்கு நன்றி
மறுபக்கமா?

தெரிஞ்சுக்கிட்டேன்:-)
//ஆக்சிடெண்ட் என்ற ஒரு கன்னடத் திரைப்பட//

சங்கர் நாக் இன் படத்தை ஐஐஎஸ்ஸி ஜிம்கானாவில் இரண்டாவது காட்சி பார்த்துவிட்டு நள்ளிரவு தேநீர்வேளையில் படத்துக்கு கரு சஞ்சய் காந்தியின் வாழ்க்கையிலிருந்து பெறப்பட்டிருக்குமோ என்று ஒரு குட்டிவிவாதம் நடந்தது. அரசியல்வாதியின் மகன், அதிகார துஷ்பிரயோகம், அப்பாவி மக்களின் மரணங்கள், குற்றங்களை மறைத்தல், அன்று கொல்லாத அரசன், நின்று கொன்ற தெய்வம் இப்படி....

படத்தைப் பார்த்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றியது?
Mookku Sundar said…
ஜூப்பரா கீதுபா...அடிக்கடிக்க இப்டி எதுனா கிறுக்கு :-)

பாட்டு உடனே கேட்டேன். நமக்கும் ரெம்ப பிடிக்கும். சீக்கிரம் ஒரு அம்மிணிய புடிங்க. சேந்து பாட்டு கேக்கலாம். ;-)
சுந்தரமூர்த்தி : இன்னும் தேடிக்கிட்டேதான் இருக்கேன். பெங்களூர்லே தான் கிடைக்குமாம். இதுக்காக ஒரு ட்ரிப் அடிக்கணுமான்னு பார்க்கிறேன். பார்த்துட்டு சொல்றேன்.

சுந்தர் : :-):-):-)

யக்கா : தப்பா ஒண்ணும் தெரிஞ்சுக்கிடலையே :-)
Premalatha said…
நன்றி ப்ரகாசு.

நிறய கேட்க/எழுத நினைச்சாலும், ஒரு :-)யோட நிறுத்திக்கிறேன்.
Divya said…
உங்கள் மனசாட்சியின் மூலம் உங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள வகை செய்தது இந்த பதிவு

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I