கோவை குறும்படப் பயிற்சிப் பட்டறை - முதல் நாள்

சேரன் எக்ஸ்பிரஸில் அடுத்த இருக்கையில் இருந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு, குறும்படம் என்றால் என்ன என்று விளக்க முயற்சித்து தோற்றமையும், கோவையில் இறங்கியதுமே, எதிர்ப்படுகிறவர்களின் முகத்திலேயே தெரியும் hospitality உம், பட்டறை நடக்கும் கணுவாய் என்கிற கிராமத்துக்குச் சரியாக வழியைக் காட்டி, பேருந்தில் ஏற்றிவிட்டு, சிக்கல் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்று செல்பேசி எண்ணைக் கொடுத்த Gangotri Textiles என்ற நிறுவனத்திலே பணிபுரியும் அன்பர் ஒருவரின் இன்ஸ்டண்ட் நட்பும், இன்னபிற விஷயங்களும் இந்தக் வியாசத்துக்கு அநாவசியம். ஆகவே நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.

தமிழ்நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட படைப்பாளிகள் சங்கமும், குறும்பட ஆர்வலரும் இயக்குனருமான திருநாவுக்கரசு அவர்களின் நிழல் பத்திரிக்கையும் இணைந்து, ஒரு குறும்படப் பயிற்சிப் பட்டறையை, செப்டம்பர் 30, அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில், கோவைக்கு அருகே கணுவாய் என்கிற இடத்திலே நடத்தியது. குறும்படங்களில், ஆர்வமிருந்து, ஆனால், அனுபவமில்லாதவர்களை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சியை, குறைந்த கட்டணத்திலே ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள் எடுப்பது பற்றிய அறிமுகக் குறிப்புக்கள் தருதல், பயிற்சி வகுப்புக்கள் நடத்துதல், அடிப்படையான தொழில்நுட்ப விவரங்கள் பற்றி விளக்கங்கள் தருதல், பிற புகழ் பெற்ற இந்திய , வெளிநாட்டு குறும்படங்களையும், முழுநீளத்திரைப்படங்களைத் திரையிடுதல், பயிற்சிப் படங்களை எடுக்க வைத்தல் போன்றவை.

தமிழ்நாட்டில் இருந்து அனேகமாக அனைத்து மாவட்டங்களில் இருந்தும், சுமார் நூற்று நாப்பது பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, நான் எதிர்பார்த்தைவிடவும் அருமையாக நிகழ்ந்தது. ராஜபாளையம், குமரி மாவட்டம், தஞ்சை மாவட்டம் போன்றவற்றில் இருந்து அதிகமானோர் கலந்து கொண்டனர். சென்னையில் இருந்து Chennai Film School என்ற பயிற்சிப் பள்ளியில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. வந்திருந்தவர்களில், பெரும்பான்மையானோர், ஏதேனும் ஒரு திரைப்பர சங்கங்களில் தொடர்புடையவராகவே இருந்தனர். காட்சி ஊடகம் பயிலும் மாணவர்களும் ஒரு கணிசமான அளவில் வந்திருந்தனர். சும்மா வேடிக்கை பார்க்கப் போன என்னைப் போன்ற சிலரும் இருந்தனர். தங்கும் வசதி பற்றாக்குறை காரணமாக, பெண்கள் விண்ணப்பங்களை, இம்முறை ஏற்க இயலவில்லை என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பாரதி வாசன் அவர்கள் தெரிவித்திருந்த போதிலும், தங்கள் பொறுப்பிலேயே, சுமார் பத்துப் பெண்கள் வந்திருந்தனர்.


முதல் நாள் நிகழ்ச்சியில், வாழ்த்துரை, வரவேற்புரை ஆகியவை முடிந்த பின்னர் முதல் அமர்வு துவங்கியது. இந்த அமர்விலே, நிழல் திருநாவுக்கரசு அவர்கள் குறும்படங்கள் வரலாறு பற்றிய ஒரு உரை நிகழ்த்தினார். அதன் பின்னர் கேள்வி நேரம். பங்கு பெற்றவர்கள், குறும்படங்கள் , ஆவணப்படங்கள் எடுப்பது பற்றி நிறைய கேள்விகள் கேட்டனர். குறிப்பாக, ஒரு ஏழெட்டுப் பேர் மட்டுமே அதிகமாகக் கேள்விகள் கேட்டார்கள். அவர்களுக்கு குறும்படங்கள் எடுப்பதிலே முன் அனுபவம் இருந்தது என்று தெரியவந்தது.


உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் அமர்வு தொடங்கியது. இந்த அமர்விலே, சின்னத்திரை இயக்குனர் கவிதாபாரதி, திரைக்கதை அமைப்பு பற்றிய பாடம் நிகழ்த்தினார். இந்த வகுப்பு மிகவும் சுவாரசியமாக இருந்தது. அவர், பிரபல திரைப்படக்காட்சிகளை உதாரணமாக வைத்து, திரைக்கதை கட்டமைப்பின் அடிப்படைகளை விளக்கியது நன்றாக இருந்தது. எளிதிலே புரியவும் செய்தது. ஒரு கதையை முடிவு செய்த பின்னர், அந்தக் கதையை திரைக்கதையாகுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று படிப்படியாக விளக்கினார். ஒரு திரைப்படத்தை எடுத்துக் கொண்டு, அதன் திரைக்கதை எப்படி கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்று அழகாக விளக்கினார். அதன் பின்னர் கேள்வி நேரம். இந்தக் கேள்வி நேரம் மிகவும் சுவாரசியமாக அமைந்திருந்தது. பொதுவாக முழுநீளத் திரைப்படங்களின் திரைக்கதை அமைப்பைப் பற்றியே கேள்விகள் கேட்கப்பட்டன. நானும் ஒரு சில கேள்விகள் கேட்டேன்.

இது முடிந்த உடன், வந்திருந்த அனைவரும் மொத்தம் பதிமூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும், காமராவை கையாளத் தெரிந்த ஒருவர், குறும்பட இயக்கத்தில் ஓரளவாவது பரிச்சயம் உடைய ஒருவர், இருக்குமாறு பார்த்து குழு பிரிக்கப்பட்டது. இதன் நோக்கம், பிரிக்கப்பட்ட குழு ஒவ்வொன்றும், அடுத்த நாள் மதிய உணவுக்குப் பின், ஒரு குறும்படம் அல்லது ஆவணப்படத்தை எடுத்து, தொகுத்துக் காண்பிக்கவேண்டும் என்பதே. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளார்கள், சுமார் ஏழு காமராவையும் , இரண்டு எடிடிங் கருவிகளையும் time share அடிப்படையிலே அனைத்துக் குழுக்களுக்கும் பகிர்ந்து அளித்தார்கள். பிரிக்கப்பட்ட குழுக்கள், அனைத்தும், கும்பலாகக் கூடி, அடுத்த நாள் எடுக்க வேண்டிய திரைப்படம் பற்றி விவாதிக்கத் துவங்கினார்கள். என்னையும் தூக்கி ஒரு குழுவிலே போட்டார்கள். இரவு முழுதும், இந்தியாவிலே எடுக்கப்பட்டு, விழாக்களில் விருதுவாங்கிக திரைப்படங்களையும், பின், அயல்நாட்டுத் திரைப்படங்களான பைசிக்கிள் தீவ்ஸ் , a man with a movie camera போன்ற திரைப்படங்களைத் திரையிட்டுக் காட்டினார்கள்.


என் குழுவில் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம். அதிலே, கோவில்பட்டி சரவணகுமார் என்பவருக்கு, வீடியோ கருவியை இயக்குவதில் அனுபவம் இருந்தது. அவர் திருமண விழாக்கள், கோவில் உற்சவங்கள் ஆகியவற்றைப் படம் பிடிக்கும் தொழில்முறை படப்பதிவாளர். பெங்களூரில் இருந்து வந்த கணேஷ் என்பவர், சென்ற வருடம் பொறியியல் பட்டம் பெற்று வேலை தேடிக் கொண்டிருப்பவர். அவருக்கு, adobe premier என்ற எடிடிங் மென்பொருளில் , வேலை செய்த அனுபவம் இருந்தது. மற்ற யாருக்கும் குறும்படம் எடுப்பதில் எந்த விதமான முன் அனுபவமும் இல்லை.

அப்போதுதான் camcorder என்கிற வஸ்துவையே, பலரும் நேரில் பார்க்கிறோம். இதை வைத்துப் படம் எடுத்துப் போட்டுக்காட்டுவதாவது என்று ஒரே கிலியாக இருந்தது. இரவோடிரவாக சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு ஓடிவிடலாமா என்று கூட யோசனை இருந்தது. சரவண குமாரும் கணேஷ¤ம் தைரியம் சொன்னார்கள். நான் இரவு தங்குவதற்காகக் கோவைக்குக் கிளம்பினேன். மறுநாள் வரும் போது ஐந்து நிமிடத்திலே சொல்கிற மாதிரி ஏதாவது, கதையை யோசித்து வைத்துக் கொண்டு வரச் சொன்னார்கள்.

அன்றிரவு கோவையிலே 'நம்ம நண்பருடன்' முன்னிரவு வரை ' தாக சாந்தி'.... இதிலே எங்கே யோசிப்ப்பது?

( தொடரும்...)

Comments

inomeno said…
/விழாக்களில் விருதுவாங்கிக திரைப்படங்களையும், பின், அயல்நாட்டுத் திரைப்படங்களான பைசிக்கிள் தீவ்ஸ் , a man with a movie camera போன்ற திரைப்படங்களைத் திரையிட்டுக் காட்டினார்கள்./

hmmmmmmmm :-( i missed it.
inomeno said…
i mean.. i didn't come to kovai.. but this is wat i wanted to see
நல்ல அனுபவம் தான்..அடுத்த பகுதி படிக்க ஆவலா இருக்கு..

//பட்டறை நடக்கும் கணுவாய் என்கிற கிராமத்துக்குச் சரியாக வழியைக் காட்டி...//

நம்ம ஊர், நம்ம ஊர் தான்!
rajkumar said…
பிரகாஸ்.

கலக்குங்க

அன்புடன்

ராஜ்குமார்
பரணீ said…
//கோவைக்கு அருகே கணுவாய் என்கிற இடத்திலே நடத்தியது//
அட !! நான் பிறந்து / வளர்ந்த ஊருக்கு ரொம்ப பக்கத்தாலே போயிட்டு வந்திருக்கீங்க.
பைசிக்கள் தீவ்ஸ் இனைப் பற்றிப் பேசத்தொடங்கினால்... வேண்டாம்..

a man with a movie camera : சென்ற மாதந்தான் பார்க்கும் ஒழுங்குமுறைக்குள்ளே வருகிறதேயென ஒரு சலிப்புடன் எடுத்துப்பார்த்தேன். பிடித்துக்கொண்டது. நுணுக்கங்கள் படங்களுள்ளே வர ஆரம்பித்த காலத்தினை எண்ணிப் பார்க்கும்போது, இந்தப்படம் ஒரு நுணுக்கக்கொத்து.
SnackDragon said…
பிரகாஷ்,
குறும்படங்கள் திரையிடுவதில் தமிழ்ழகத்தில் உள்ள சிக்கல்கள் (அப்படி இருந்தால்) பற்றி ஏதேனும் விவாதித்தீர்களா? அதன் மார்கெட் பற்றி ஏதாவது முடிவுக்கு வர முடிந்ததா?

உங்களுக்கும், உங்கள் படப்பிடிப்பு குழுவுக்கும் வாழ்த்துக்கள். :-) என்ன படம் எடுத்தீங்க?
Prakash,
Great to know these kind of things happening in TamilNadu. Looking forward for the next episode.

Regards,Arun Vaidyanathan
பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

கார்த்திக், நீங்கள் சொல்கிற பிரச்சனை பேசப்பட்டது. பொதுவாகக் குறும்படங்கள் தமிழகத்தில் திரையிடப்படுவதில்லை. பெரும்பாலும், அவை குறும்படத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்காக மட்டுமே எடுக்கப்படுகின்றன.

எங்கள் குழுவும் படம் பிடித்தது. 'நகர்வு' என்றொரு ஒரு ஐந்து நிமிட டாகுமெண்டரி எடுத்தோம். அது பற்றி அடுத்த பதிவில்
Mookku Sundar said…
//அன்றிரவு கோவையிலே 'நம்ம நண்பருடன்' முன்னிரவு வரை ' தாக சாந்தி'....இதிலே எங்கே யோசிப்ப்பது? //

ஆஹா..குறும்படம் எடுக்க அருமையான சப்ஜெக்ட்..."நகர்வு" இதைப் பத்திதானா..?? :-)
Nirmala. said…
நம்ம ஊர்லயே எதாவது நடக்கும். அப்ப நாம் அங்க இருக்க மாட்டோம்! நாம இருக்கிற இடத்தில நடக்கறது நமக்கு தெரியாமலே போயிருக்கும்! என்ன சொல்ல?

ஆனா, ரொம்ப பொறாமையா இருந்துது.

நிர்மலா.
//ஆஹா..குறும்படம் எடுக்க அருமையான சப்ஜெக்ட்..."நகர்வு" இதைப் பத்திதானா..?? :-)
//

சுந்தர் : இல்லீங்.. அந்த அளவுக்கு இன்னும் தைரியம் வரலீங்க.. ரொம்ப அமெச்சூர்த்தனமான் முயற்சி ஒண்ணை செஞ்சோம். இங்க சொல்லலாமா வேணாமான்னே குழப்பமா இருக்கு...
அருண் : இப்படியாகப் பட்ட விஷயங்கள் தமிழ்நாட்டிலே நடக்குதுன்னு இங்க ஒக்காந்திருக்கிற எனக்கே இப்பத்தான் தெரியும். பின்னூட்டத்துக்கு நன்றி
//இடத்தில நடக்கறது நமக்கு தெரியாமலே போயிருக்கும்! என்ன சொல்ல?

ஆனா, ரொம்ப பொறாமையா இருந்துது.//

நிர்மலா : பொது வாழ்க்கையிலே இதல்லாம் சகஜமுங்க.. :-)

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Chennai Tamil Bloggers Meet - 2005

ரா.கி.ரங்கராஜன் - நாலு மூலை