புகை பிடித்தல் - சில குறிப்புக்கள்

" to quit smoking all you need is a cigarette and a few wet matches " என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் முன்மொழிந்திருப்பது, பல் வேறு மட்டங்களில், விதம் விதமான விமர்சனங்களைக் கிளப்பி இருக்கிறது. புகைபிடிக்கிற பழக்கம், சமூகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதில் நிச்சயமாக ஐயமில்லை.

புகை பிடிக்கிற பழக்கம் இருக்கிறவர்களில், பெரும்பான்மையானோர், அப்பழக்கத்தை விட்டு ஒழித்து விடவேண்டும் என்று நினைத்து, முடியாமல் சிரமப்படுகிறவ்ர்கள் தான் என்பது என் கணிப்பு.

இந்தப் புகைபிடிக்கிற பழக்கத்தை ஒட்டு மொத்தமாக சமூகத்தில் இருந்து களைந்து விட, இருக்கிற எளிமையான ஒரே வழி, ஒட்டுமொத்தமாக சிகரட்டு உற்பத்தி, விநியோகத்தைத் தடை செய்வது என்று நினைக்கலாம். ஆனால், அது அத்தனை எளிய காரியமில்லை. புகையிலை விவசாயிகள், புகையிலை வர்த்தகர்கள், சிகரட்டு ஆலையில் வேலை செய்பவர்கள், அந்தத் தொழிலில் புழங்கும் பணம், நம் உள்நாட்டு உற்பத்தியில் சிகரட்டுத் தொழிலின் பங்களிப்பு, அந்தத் தொழிலில் முதலீடு செய்திருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், சிகரட்டு உற்பத்தியிலும், விற்பனையிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும், வேலைவாய்ப்புப் பெறுபவர்கள் அனைவரையும் பாதிக்கக் கூடிய ஒரு பிரச்சனையை, நான்கு பேர் சேர்ந்து முடிவெடுத்து விட முடியாது.

புகைபிடிக்கிற காட்சிகளை, திரைப்படங்களில் இருந்து நீக்குவதன் மூலம், அப்பழக்கத்தை படிப்படியாகவாவது சமூகத்தில் இருந்து ஒழித்து விட வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை, அதாவது அவர்கள் சொல்வது நடக்கும் என்றால். ஆனால், அது ஒரு படைப்பாளியின் உரிமையில் கைவைக்கிற செயல் என்பதையும் மறந்து விட முடியாது. அதுவும், சமூகத்தில் இருக்கும் புகைப்பழக்கத்திற்கும், திரைப்படங்களில் வருகின்ற புகைப்பிடிக்கிற காட்சிகளுக்கும், எவ்வளவு தூரம் தொடர்பிருக்கிறது என்பதை முறைப்படி ஆராய்ந்து பார்க்காத வரையிலும். அப்படி ஒரு சமூகவியல் ஆராய்ச்சியோ, அல்லது கருத்துக் கணிப்போ நடந்ததாக நினைவில்லை. அப்படி ஏதேனும் நடந்து, அந்த ஆராய்ச்சியின் முடிவை மக்களிடத்தில் வைத்து, அதன் காரணமாக திரைப்படங்களில், புகைபிடிக்கிற காட்சியை தடை செய்கிறோம் என்று சொன்னால், சமூக நலன் மீது பற்று கொண்டோரிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். தடை செய்கிற அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்ற காரணத்தால், அதை தவறாக பயன் படுத்த முடியாது, அதிலும், இந்தியா போன்ற ஒரு சனநாயக நாட்டில். தங்களுக்கு பிடிக்காதவற்றை, சமூகத்துக்கும் ஆகாது என்று சொல்லி, தடைகளை விதித்துக் கொண்டே போவதற்கு, இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களுடைய whims & fanices ஐ எல்லாம் பொது ஊடகங்களில் திணிக்க முடியாது.

இதை வாசிக்கிறவர்கள் அனைவரும், தங்களுக்குத் தெரிந்த புகைப்பழக்கம் இருக்கிற அனைவரிடமும், ஒரு கேள்வியைக் கேட்க வேண்டுகிறேன், அதாவது " எந்த வயதில் இந்தப் பழக்கம் ஏற்பட்டது? " என்று. பதில் சொல்பவர்களில் பெரும்பான்மையானோர், 17 வயதில் இருந்து 25 வயதுக்குள்ளாகத்தான் சொல்லுவார்கள். புகைப்பிடிக்கிற பழக்கத்தைப் பொறுத்தவரை, நான் இது வரையிலும், இளவயதில் அப்பழக்கத்துக்கு ஆளானவர்களைத்தான் பார்த்திருக்கிறேன். நாற்பது வயதில், ஒருவருக்கு திடீரென்று புகைப்பழக்கம் ஏற்பட்டது என்று நான் கேள்விப்பட்டதில்லை.

ஆக, சிகரட்டுப் பழக்கம் ஒருவரை, வாலிப வயதில் தான் பற்றிக் கொள்கிறது. குறிப்பாக, பள்ளி இறுதி வகுப்புகளிலும், கல்லூரிப் பருவங்களிலும் ( குறிப்பாக விடுதிகளில் தங்கிப் படிக்கும் போதும்), salaried bachelors ஆக இருக்கும் போதும் தான். கல்யாணம் ஆனபிறகு மனைவி பார்த்துக் கொள்ளுவார்.

இந்த குறிப்பிட்ட வகையினரை, சிகரட்டுப் பக்கம் போகாமல் பார்த்துக் கொண்டாலே, புகைபிடிக்கிற பழக்கத்தை, பெருமளவில் குறைக்கலாம். அது எப்படி?

1. பள்ளி கல்லூரிகளுக்கு அருகாமையில் ( அதாவது ஒரு குறிப்பிட்ட தூரம் வரையிலும் ) இருக்கும் கடைகளில், சிகரட்டுகள் விற்பனையைத் தடை செய்யலாம். புகைப்பிடிக்கிற பழக்கத்தினால், ஏற்படுகின்ற தீமையை, உடல்நலக்கேடுகளை, சமூகவியல் வகுப்புகளில் ஒரு பாடமாக வைக்கலாம். நான் பள்ளியில் படிக்கின்ற காலத்தில், போதைப் பொருட்கள் கூட புழக்கத்தில் இருந்தன. ஆனால், நானோ என் நண்பர்களோ, அந்தப் பக்கம் ஒதுங்கியதில்லை. பயம் தான் காரணம். போதைப் பொருட்கள் எடுத்துக் கொள்வதினாலான பின் விளைவுகளை நன்றாக அறிந்திருந்தோம். நரம்பு எலும்புகள் தெரிய ஒரு அரைகுறை உயிருடன் இருந்த ஒரு போதைப் பொருள் ஆசாமியை, ஒரு விவரணப்படத்தில் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. உயிரே போனாலும், இந்த வஸ்துக்களை தொடுவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால், புகைக்கு எதிரான இது போன்ற பிரச்சாரம் ஏதும் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை.

2.புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கும் பெரியவர்கள், தங்கள் குழந்தைகளை, " கடைக்குப் போய், ஒரு வில்ஸ் பாகெட்டு வாங்கிட்டு வா " என்று சொல்லாமல் இருத்தலும், குழந்தைகளுக்கு தெரியும்படியாகவே புகை பிடிக்காமல் இருப்பதும் முக்கியம். இவையும் பெருமளவில், இள வயதிலேயே புகைப் பழக்கம் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பது.

3. புகைப்பிடிக்கிற பழக்கம் இல்லாத பெரியவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு புகைப்பழக்கம் இருப்பதைக் கண்டு பிடித்து விட்டால், அதனை ஒழுக்கக் குறைவான விஷயமாகப் பார்க்காமல், உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கிற விஷயமாக மட்டுமே பார்க்க வேண்டும். தங்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தினால், பெற்றோரை வெறுப்பேற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிற வழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. ("இது ·பைனல் இயர், நோ கேபிள் டிவி, நோ கிரிக்கெட், அண்ணா யுனிவர்சிட்டிலே மட்டும் சீட்டு கெடைக்கலன்னா..." வகையான, மிரட்டல்கள், பெற்றோர் நினைப்பதை விடவும் அதிகமான மன அழுத்தத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் ). அதனால், பெற்றோரை வெறுப்பேற்ற வேண்டும் என்று நினைக்கிற குழந்தைகள், தங்கள் உடல்நல்த்துக்கும் கேடு விளையும் என்பதைப் புரிந்து கொண்டு சிகரட்டு பக்கம் எல்லாம் போகாமல், க்ளாஸ¤க்கு கட் அடித்து விட்டு ராணி முகர்ஜி படத்துக்குப் போவது, நடு ராத்திரி டிவி பார்ப்பது போன்ற உபத்திரவமில்லாத விஷயங்களினால் outlet தேடிக் கொள்ளுவார்கள்.

4. ஆந்திராவில் இருக்கும் ராயலசீமா ஆல்கலிஸ் என்ற ஒரு தனியார் தொழிற்சாலையில் , புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கு என்று தனியாக ஊக்கத் தொகை வழங்குகிறது. மற்ற நிறுவனங்களும், இது போல ஊக்கத் தொகை வழங்காவிட்டாலும், வேறு ஏதாவது யோசித்து, தங்கள் நிறுவனங்களில் புகைப்பழக்கம் இல்லாமல் செய்வதற்கு வழிமுறை செய்யலாம். அந்த நிர்வாகங்கள், தங்களுடைய HR துறையில் விசாரித்தால், நிறைய ஐடியாக்கள் கொடுப்பார்கள்.

இந்தியா விடுதலை அடைந்த காலத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்பக்கட்டுப்பாட்டுக்கு என்று பிரச்சாரம் செய்தது. பல கோடி ரூபாய்களை அதற்கென ஒதுக்கி திறமையாக வேலை செய்தது. அது, தந்த பலனை, நாம் நேரடியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதே போல சுகாதாரத்துறை அமைச்சகமும், யோசித்து, சிறிது சிறிதாக திட்டங்களைத் துவங்கி, முறையாக சிகரட்டு பழக்கத்தை சமூகத்தில் இருந்தே ஒழித்து விடலாம். சமூகத்தில் இல்லாத காரியம், பின் சினிமாவில் இடம் பெறாது. ( ஒரு சின்ன உதாரணம்,. ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது அறுபதுகளில் வந்த திரைப்படங்களில், குதிரை பந்தய் சூதாட்டம், பணக்காரர்களின் பொழுதுபோக்காக அடிக்கடி காட்டப்படும். ஏனெனில், அப்போது அது நிஜத்திலும் பணக்காரர்களின் பொழுது போக்காக இருந்தது. பின்னர் குதிரைப்பந்தயம், இருபது ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட போது, அப்போது இருந்த இரண்டு தலைமுறையினருக்கு குதிரைப் பந்தயம் என்றாலே என்ன என்று தெரியாமல் போனது. இப்போது காட்சி அமைக்கும் உதவி இயக்குனர்கள், " சார், ஹீரோ ஒரு பெரிய பணக்காரன், அடிக்கடி குதிரை ரேசுக்குப் போவான் " என்று காட்சி சொன்னால், " யோவ், குதிரை ரேசெல்லாம், பழைய கதை, ஹீரோ golf ஆடுவான்ன்னு சீனை மாத்து" என்று சொல்வார்கள்)

அதை விடுத்து, புகைபிடிக்கிற காட்சிகளைத் தடை செய்கிறேன் என்று இறங்குவது, கொஞ்சம் கூட முன்யோசனை இல்லாத பப்ளிசிட்டி ஸ்டண்ட்டாகத்தான் தோன்றுகிறது.

Comments

Chandravathanaa said…
This comment has been removed by a blog administrator.
Chandravathanaa said…
நல்ல குறிப்புக்கள்
Unknown said…
நீங்கள் கூறி இருக்கும் முதல் இரண்டு பாயிண்ட்டுகள் என் தந்தை செய்துகொண்டு இருந்த விஷயம்.

தான் புகைப்பவராக இருந்தும் பள்ளிக்குச் செல்லும்போது சிகிரெட் பாக்கெட் எடுத்துச் சென்றது இல்லை, பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் கடைகளில் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டு சிகிரெட் விற்காமல் இருக்கச் செய்தார். அதே போன்று என்னை கடைக்கு அனுப்பி சிகிரெட் வாங்கி வரச் செய்தது இல்லை, என் முன் புகைப் பிடித்ததும் இல்லை.

ஆனால், இவை தான் நான் சிகிரெட் பிடிக்காமல் இருக்கக் காரணமா என்று என்னிடம் யாராவது கேட்பார்கள் எனில் எனக்கு பதில் சொல்லத் தெரியாது.
Vijayakumar said…
Prakash,

Excellent thoughts. I encourage your points.
அருமையான அலசல். எடுத்தோம் தொடுத்தோம் என்றில்லாமல், சிந்தித்து செயல்பட வேண்டிய விஷயமிது. அன்புமணிக்கு புரிந்தால் சரி!
இரண்டு வாரங்களுக்கு முன்பே இது பற்றி விரிவாக எழுத நினைத்து முடியாமல் போனது.

//ஆனால், அது ஒரு படைப்பாளியின் உரிமையில் கைவைக்கிற செயல் என்பதையும் மறந்து விட முடியாது.//

ஒரு சராசரி தமிழ்ப் படத்தைப் பாருங்கள். அதில் வரும் சிகரெட் புகைக்கும் காட்சிகளை fast forward செய்து பாருங்கள். எவ்வளவு தூரம் அந்த காட்சிகள் 'கலைக்கு' தேவை என்று புரிந்துகொள்ளலாம்.

//அதுவும், சமூகத்தில் இருக்கும் புகைப்பழக்கத்திற்கும், திரைப்படங்களில் வருகின்ற புகைப்பிடிக்கிற காட்சிகளுக்கும், எவ்வளவு தூரம் தொடர்பிருக்கிறது என்பதை முறைப்படி ஆராய்ந்து பார்க்காத வரையிலும். அப்படி ஒரு சமூகவியல் ஆராய்ச்சியோ, அல்லது கருத்துக் கணிப்போ நடந்ததாக நினைவில்லை. அப்படி ஏதேனும் நடந்து, அந்த ஆராய்ச்சியின் முடிவை மக்களிடத்தில் வைத்து, அதன் காரணமாக திரைப்படங்களில், புகைபிடிக்கிற காட்சியை தடை செய்கிறோம் என்று சொன்னால், சமூக நலன் மீது பற்று கொண்டோரிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். //

இந்த World Health organization இன் அறிக்கையைப் பார்க்கவும்.

//தடை செய்கிற அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்ற காரணத்தால், அதை தவறாக பயன் படுத்த முடியாது, அதிலும், இந்தியா போன்ற ஒரு சனநாயக நாட்டில். தங்களுக்கு பிடிக்காதவற்றை, சமூகத்துக்கும் ஆகாது என்று சொல்லி, தடைகளை விதித்துக் கொண்டே போவதற்கு, இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களுடைய whims & fanices ஐ எல்லாம் பொது ஊடகங்களில் திணிக்க முடியாது. //

மீண்டும் இதை அன்புமணி/ராமதாஸ் (பெயரை குறிப்பிடாவிட்டாலும்) பிரச்சினையாக்கி தர்ம அடிபோட அவர்களுக்கு வழிகோலியிருக்கிறீர்கள்.
ரவி எழுதிய பதிவையும் , முக்கியமாக அதில் கொடுத்திருந்த WHO சுட்டிகளையும் மீண்டும் படித்துப் பார்க்கவும்.

இது ஓரிரு அரசியல்வாதிகள் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களுக்குப் பிடிக்காததை தடை செய்யும் விஷயமல்ல. ஒரு சர்வதேச உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டு, பாரளுமன்றம் அதை ஆமோதித்து இருக்கிறது (அன்புமணி அமைச்சராவதற்கு முன்பே நடந்தது இதெல்லாம்).

ரவியின் பதிவில் கேட்ட அதே கேள்விகளை மீண்டும் கேட்கிறேன். இதை கருத்துச் சுதந்திரத்தின் மீதான போராகக் கருதுபவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.

1. திரைப்படங்களில் தடை செய்யப்பட வேண்டிய காட்சிகளென்று எவையேனும் உண்டா?

2. தணிக்கைக் குழு என்ற ஒன்று தேவையா?
அருமையான கருத்துக்கள். இங்கே அமெரிக்காவில் அரசு வரி அதிகரிக்கிறது. அதிகமாக கிடைக்கும் வரிப்பணத்தில் நகரங்களுக்கு ஒரு உடல் நல கல்வியாளரை நியமித்து மாணவர்களுக்கு பள்ளி சென்று புகைப்டிப்பதின் தீமையை சொல்ல வைக்கிறது. இந்த் அமாணவர்களுக்கு மதிய உணவும் இந்த் அபணத்திலிருந்து வழங்கப்படுகிறது. போட்டிகள், பரிசுகள் போன்றவையும் ஊக்க பரிசாக வழங்கப்படுகிறது.
மார்ல்பரோ பொன்ற நிறுவனக்களும் சட்டத்தின் கட்டாயத்தால் குறிப்பிட்ட சதவிகிதம் புகைபிடிப்பதன் விளைவுகளை பரப்புவதில் செலவிடுகிறது. மேலும் REBEL போன்ற மானவ குழுக்கள் பிற மாணவர்களிடம்தீமையை எடுத்து சொல்கிறது. இவை கல்லூரிகளில் ஒரு சாதனையாக நுழௌ தேர்விகளின் போது கவனிக்க படுகிறது.இதுகுறித்து (secondhand smoke)நான் தமிழோவியத்தில் எழுதீருகிறேன்.It has to be miltiprong stragety.
//அதில் வரும் சிகரெட் புகைக்கும் காட்சிகளை fast forward செய்து பாருங்கள். எவ்வளவு தூரம் அந்த காட்சிகள் 'கலைக்கு' தேவை என்று புரிந்துகொள்ளலாம்.//

சுந்தரமூர்த்தி : எனக்குப் புரியவில்லை. படைப்புக்கு என்ன தேவை என்பதை, நீங்களும் நானும் எப்படி முடிவு செய்ய முடியும்? நீங்களோ, நானோ, ஒரு காட்சியை FF செய்து விட்டால், அது அந்தப் படத்துக்குத் தேவை இல்லை என்று ஆகிவிடுமா?

//இந்த World Health organization இன் அறிக்கையைப் பார்க்கவும்.//

நன்றி, மொத்தம் 25 பக்கங்கள் இருக்கின்றன. இன்றிரவு படித்துப் பார்க்கிறேன்.படித்துப் பார்க்கிறேன்.

//மீண்டும் இதை அன்புமணி/ராமதாஸ் (பெயரை குறிப்பிடாவிட்டாலும்) பிரச்சினையாக்கி தர்ம அடிபோட அவர்களுக்கு வழிகோலியிருக்கிறீர்கள்.//

இல்லை. அந்த இடத்தில் அன்புமணி இருப்பது தற்செயல்.

//1. திரைப்படங்களில் தடை செய்யப்பட வேண்டிய காட்சிகளென்று எவையேனும் உண்டா?//

இல்லை.

//2. தணிக்கைக் குழு என்ற ஒன்று தேவையா? //

தேவை இல்லை.
Badri Seshadri said…
பிரகாஷ்: உங்கள் அடிநாதக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. சுந்தரமூர்த்தியின் வாதங்கள் சரியான திசையில் செல்கின்றன. படைப்பாளியின் சுதந்தரம் என்று சொல்லி அதீதமான வன்முறையைக் காண்பிக்க முடியாது. செக்ஸ், வண்புணர்ச்சி ஆகியவற்றை பெருமைப்படுத்திப் படங்களை எடுக்க முடியாது. அறிவியல் தன்மைக்கு எதிரான அபத்தமான கருத்துகளை படமாக எடுக்கக் கூடாது; ஆனால் எடுத்து எப்படியோ தணிக்கைச் சான்றிதழ் வாங்கி விடுகிறார்கள். மத வன்முறையைத் தூண்டும் படங்களை எடுக்கக் கூடாது. இதெல்லாம் நாட்டில் உள்ள சட்டங்கள்.

இதுநாள் வரையில் வந்த படங்களில் எல்லாம் சிகரெட் புகைப்பதை ஒரு வீரதீரச் செயல் மாதிரியும், பெருமையான விஷயமுமாகத்தான் காட்டி வந்திருக்கிறார்கள். சிகரெட் பிடிப்பவன் கேன்சர் வந்து செத்தது மாதிரியான இயல்பான, உண்மையான விஷயங்கள் வெகுஜன சினிமாவில் வந்ததாகத் தெரியவில்லை.

இதனால் சிறுவர்கள், பதின்மர்கள் மனசு பாதிக்கத்தான் செய்கிறது. சில படங்களில் ஹீரோ ஒரு பெண் மீது சிகரெட் புகை ஊதுவது போலவும் வந்துள்ளது. என்ன படம் என்று இப்பொழுது ஞாபகம் இல்லை.

சிகரெட் புகைப்பதைப் பெருமையாகக் காட்டுவதைத் தடைசெய்யவேண்டும் என்று அரசு சொல்லலாம்.

ஆனால் ஒரேயடியாகத் அதுபோன்ற காட்சியே வரக்கூடாது என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. சில படங்களில் காட்சியமைப்புக்கு சிகரெட் புகைப்பது தேவை என்றால் அதை தணிக்கை அதிகாரிகளிடம் நிரூபித்து சான்றிதழ் பெறவேண்டியது அவசியம் என்று வேண்டுமானால் வைக்கலாம்.

அப்படிச் செய்யும்போது படைப்புக்கு இந்தக் காட்சி தேவையில்லை என்றால் படைப்பாளர் தானாகவே இதை ஒதுக்கி வைத்துவிடுவார்.
பிரகாஷ்,
உங்கள் கட்டுரையில் கடைசி வரியில் குறிப்பிட்டபடி இது அரசியல் ஸ்டண்ட் இல்லை என்பதைச் சொல்லவந்தேன். ஐந்தாண்டுகள் விவாதத்திற்கு பிறகு உலக சுகாதார உருவாக்கிய அமைப்பின் உடன்படிக்கையில் இரண்டாண்டுகளுக்கு முன்பே இந்தியா உள்பட 150 மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதன் முக்கியமான அம்சங்களுள் ஒன்று சிகரெட் பிடிப்பதை ஊக்குவிக்கும் (நேரடி, மறைமுக)விளம்பரங்களை எப்படியெல்லாம் கட்டுப்படுத்தமுடியுமோ அப்படியெல்லாம் கட்டுப்படுத்தவேண்டும் என்பது--சினிமா, தொலைக்காட்சி உட்பட. கையெழுத்திட்ட நாடுகள் தத்தம் அரசியல் நிர்ணய சட்டம் அனுமதிக்கும் அனைத்தையும் செய்யவேண்டும். ஆகையால் சினிமாவில் தடை என்பது அமெரிக்காவில் செயல்படுத்த முடியாது. முதலாம் அரசியல்நிர்ணயச் சட்டத் திருத்தம் அதற்கு அனுமதி அளிக்காது. இங்கு அதிகாரப்பூர்வமான தணிக்கைக் குழு கிடையாது. அரசாங்கம் சான்றிதழ் வழங்குவதில்லை. Motion Picture Assocition என்ற Hollywood அமைப்பே தரநிர்ணயம் வழங்குகிறது. ஆனால் இந்தியாவில் அதிகாரப்பூர்வமான தணிக்கைக் குழு உள்ளது. படங்களில் அரசியலிலிருந்து அரைகுறை உடைவரை பல்வேறுவிதமான காட்சிகள் தடை செய்யப்படுகின்றன. சமயங்களில் ஒட்டுமொத்த படமே தடைசெய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ராஜிவ் காந்தியின் படுகொலையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டதென நம்பப்படும் 'குற்றப்பத்திரிகை' என்ற படத்துக்கு தணிக்கைச் சான்றிதழே கொடுக்கப்படாமல் முடக்கப்பட்டது. (அப்படத்தை தயாரித்த இளைஞரை சந்தர்ப்பவசமாக சந்திக்க நேர்ந்தது. அதனால் ஏற்பட்ட கடன் தொல்லைகள், மன உளைச்சல்களைச் சொன்னார். அவற்றிலிருந்து விடுபட்டாரா என்று தெரியாது). அதிலெல்லாம் கெடாத கலை சிகரெட் பிடிக்கும் காட்சிகளை தடை செய்வதால் கெட்டுப்போகும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. தணிக்கை, தணிக்கைக் குழுவே தேவையில்லை என்று கருதும் உங்களைப் போன்றவர்கள் முதலில் எதிர்க்க வேண்டிய தணிக்கை என்ற ஒட்டுமொத்த கருத்தாக்கத்தையே. தனிப்பட்ட ஒரு வகை தடையை மட்டுமல்ல.

அடுத்து, கலைக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்யும் முழு உரிமையும் கலைஞனுக்கு மட்டும் தானா? கலாரசிகனுக்கு இதில் சொல்ல எதுவும் உரிமை இல்லையா? கலையை நுகரும் சமூகத்தின் நலனை முன்னிட்டு அரசு ஒன்றும் சொல்லமுடியாதா?

நான் சுட்டிய WHO அறிக்கையை படிக்கும் அவகாசம் உங்களுக்கு கிடைத்ததா என்று தெரியவில்லை. இந்தியத் திரைப்படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள், பார்வையாளர்களின் மீதான தாக்கம் பற்றிய ஆய்வறிக்கை இது. நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள். ரஜனி படங்களில் வரும் புகைப்பிடிக்கும் காட்சிகள், அவை ஏற்படுத்தும் தாக்கம் பற்றி முக்கிய தகவல்கள் அடங்கியுள்ளது.

பத்ரி,
சிகரெட் பிடிப்பதை ஒட்டு மொத்தமாக தடை செய்வதிலே சில பிரச்சினைகளும் இருக்கலாம். சில காட்சிகள் கண்டிப்பாக இடம் பெற்றே ஆகவேண்டுமானால் திரைக்கதைப் பிரதியின் அடிப்படையில் முன்கூட்டியே விதிவிலக்கு அளிக்கலாம். ஆனால் அதற்கென்று பிரத்தியேகமான வரி விதிக்கலாம். வரி என்றால் சாதாரண தொகை அல்ல. படத்தின் வருவாயில் 1-2% வரி விதித்து அதை புகைப்பிடித்தலுக்கெதிரான அரசு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட நடிகருக்காக மட்டுமே படம் ஓடுகிறது என்ற காரணத்துக்காக அந்த நடிகருக்கு 50% ஐ சம்பளமாக வழங்கும்போது சிகரெட்டு தான் கலையையே தூக்கி நிறுத்தப்போகிறது என்றால் அதற்கென்று 1-2% வரி ஒரு பெரிய தொகையில்லை. கலையையும் காப்பாற்றலாம். அரசு செயல்பாடுகளுக்கு கொஞ்சம் பணமும் கிடைக்கும்.
//இதுநாள் வரையில் வந்த படங்களில் எல்லாம் சிகரெட் புகைப்பதை ஒரு வீரதீரச் செயல் மாதிரியும், பெருமையான விஷயமுமாகத்தான் காட்டி வந்திருக்கிறார்கள்//

இது மறுக்கமுடியாத உண்மை
அன்பின் சுந்தரமூர்த்தி

நீங்கள் சுட்டிய கட்டுரையை வாசித்தேன். அந்த ரிப்போர்ட்டை அடிப்படையாகக் கொண்டு, புகைபிடித்தல் காட்சிகளைத் தடை செய்ய முகாந்திரம் இருக்கிறது. ஆனால், அந்தத் தடையை நீக்கினால், புகைப்பழக்கம் சமூகத்தில் இருந்து அடியோடு அகன்றுவிடும் என்று நான் நம்பத் தயாரில்லை. ஒருத்தருக்கு புகைப்பழக்கம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து, அந்தப் பிரச்சனையின் அடிவேரைக் கண்டு பிடித்து, அதை நீக்குவதுதான் ஒரு திறமையான நிர்வாகத்தின் வேலை. சினிமாவினால் தான் என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நீங்கள் எதிர்க்கிறீர்களோ அல்லது நான் ஆதரிக்கிறேனோ, மொத்தத்தில், இந்தத் தடை வந்துவிட்டது. ஆகஸ்ட்டு மாதத்தில் இருந்து இந்தத் தடை அமுலுக்கு வரும். நாளா வட்டத்தில் புகைபிடிக்கும் பழக்கம் சமூகத்தில் இருந்து அடியோடு ஒழிந்து விடும். நமக்கு இது ஆகும், இது ஆகாது என்று ஒழுக்கத்துடன் நம்மை செலுத்த இந்த cultural and moral police ( நான் அன்புமணியைச் சொல்லவில்லை ) முழுநேர வேலை செய்யும் போது இனி என்ன குறை? கருத்துச் சுதந்திரம் என்று இனிமே யாராவது ஆதரித்தால், அவங்களை அங்கேயே போட்டுத் தள்ளிவிடுகிறேன்
பிரகாஸ் அவர்களுக்கு
ரவியி பதிவில் ரோசாவசந்தும் சுந்தரமூர்த்தியும் விவாதித்தபோதே இதுபற்றி எழுதி சேமித்து வைத்திருக்கிறேன் அதன் தர்க்க நியாயத்திலுள்ள ஓட்டைகளை அடைத்து பிரசுரிக்கலாம் என வைத்து அப்படியே கிடப்பில் இருக்கிறது.

பாதசாரிக் கடவையில் நடப்பவருக்கு வாகனம் வழிவிடவேண்டும்,வீதிச்சமிக்கைகளில் நின்றுதான் போகவேண்டும் என்று எங்களை வழிநடத்துவதற்கு யார் இந்த போக்குவரத்துக் காவல்துறையும் அரசாங்கமும்?எனது வண்டி,எனது எரிபொருள் அட நான் வரிசெலுத்தும் வீதி அதிலே நான் விரும்பியபடி போகமுடியாது அது அதற்கென விதிக்கப்பட்ட வழிமுறைகள் விதிமுறைகளைப் பின்பற்றியே போகவேண்டும்.

எனது உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் அம்மணமாக ஓடினால் தண்டிப்பதற்கு நீதிமன்றங்கள் யார்?அட நான் தற்கொலை செய்ய முயன்றால் தடுத்து வழக்கும் போடுவதற்கு இந்த அரசாங்கம் யார்?எதற்காக இதற்கெல்லாம் கீழ்ப்படிந்து நடக்கிறோம்?எதற்காக பலதாரமணம் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது இருவரும் விரும்பினால் எத்தனைபேரையும் மணம் செய்யலாமே.இதுதான் விதிமுறை இதுதான் ஒழுக்கம் என்று பாதைகாட்டி எங்களை அழைத்துச் செல்லும் பொறுப்பை நாம் எப்போது இந்தச் சமூகத்திடம் ஒப்படைத்தோம் என்றெல்லாம் கேட்டுப்பாருங்கள்.மனிதன் ஒரு சமூக விலங்கு எனப்படுவதன் உண்மை அர்த்தம் புரியும்.

நீ சிகரட் குடிக்காதே என்று சொல்வதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை ஆனால் புகையை எனக்கு முன்னால் ஊதாதே என்று சொல்வதற்கு உரிமை உண்டு.அது உங்கள் தனிமனித உரிமையைப் பாதித்தாலும் கூட.இந்த தனிமனித சுதந்திரம் படைப்பாளியின் சுதந்திரம் என்பவற்றுக்கெல்லாம் ஒரு எல்லை உண்டு.அதை யார் தீர்மானிக்கிறார்கள் என்றால் அட அதுகூடா நாம் வாக்குப் போட்டு பாராளுமன்றம் அனுப்பியவர்கள் தானே.நாங்களே பாராளுமன்றம் அனுப்பிவிட்டு அவர்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது குமுறுவது நியாயமா?

திரைப்படங்களில் புகைபிடித்தலை முற்றாக தடுக்க முடியாது காட்சிகளோடு ஒட்டிவருவதுபோன்ற இடங்களில் தேவைப்படும்போதுமட்டும் அவ்வாறான காட்சிகளை அனுமதிக்கலாம் என்ற பத்ரியின் வாதம் யதார்த்தமானது ஏற்புடையது.அதை யார் நடைமுறைப்படுத்துவார்கள் என்றால் எந்தத் தணிக்கைக்குழு காலை எவ்வளவு தூரம் தூக்கலாம்.ஆகக்குறைந்தது நடிகர்கள் எவ்வளவு ஆடை அணியவேண்டும்.அனுமதிக்கப்பட்டும் வன்முறைக்காட்சிகள் எவை என்றெல்லாம் தீர்மானிக்கிறதோ அதே தணிக்கைக் குழுவிடம் இந்தப் பொறுப்பையும் விடுவது சிறந்தது.

மற்றும்படி புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கும் இளையவர்கள் அதற்கு அடிமையாகாமல் தடுப்பதற்கும் நீங்கள் கொடுத்திருக்கும் வழிமுறைகளை ஆமோதிக்கிறேன்
Badri Seshadri said…
பிரகாஷ்: தி ஹிந்து மெட்ரோ பிளஸ் இன்றைய கட்டுரை. தலீவர் வாய்ல சிகெரெட்டோட ஒரு ஸ்டில் கூட இருக்குமா!
பிரகாஷ்,
இரண்டு சிறு விளக்கங்கள்
1. சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளை தடைசெய்தால் மட்டும் புகைப்பழக்கம் சமூகத்தில் இருந்து அடியோடு அகன்றுவிடும் என்று யாரும் கூறவில்லை. Anti-tobacco campaign க்கு எதிரான பல நடவடிக்கைகளுள் ஒன்று. முன்பெல்லாம் பேருந்துகளில் 'புகை பிடிக்கக்கூடாது' என்று மட்டுமே எழுதிவைத்திருப்பர். இப்போது மீறி புகைப்பிடித்தால் அந்த நபருக்கு அபராதம் விதிக்க நடத்துனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2. இது moral and cultural policing அல்ல. சிவசேனாவின் எதிர்ப்புகள் இவ்வகையைச் சேர்ந்தவை. சிகரெட் சமாச்சாரம் public health சம்பந்தமானது.

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்