ஜெயகாந்தன்

தங்கமணி மற்றும் அருள் பதிவுகளின் தொடர்வினையாக அல்ல, கிளைச் சிந்தனையாக.

நான் படிக்கத் துவங்கிய காலத்தில், ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினார்.

ஜெயகாந்தன் பற்றி பின்னால் தெரிந்து கொண்டு, அவரது கதைகளை வாசித்தாலும், நான் வாசித்த அவரது மூன்று படைப்புக்கள் ( சினிமாவுக்குப் போன சித்தாளு, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் & சில நேரங்களில் சில மனிதர்கள்) , அவரைப் பற்றிய அபிப்ப்ராயத்தை எனக்குள் உருவாக்கியதா என்று தெரியவில்லை. தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கம் ஏற்பட்ட பின்னர், ஜெயகாந்தனின் படைப்புக்களை முழுமையாக வாசிக்க இயலாவண்ணம், அவரைப் பற்றிய பல்வேறு அதிஉயர்வான மதிப்பீடுகள் வந்து குறுக்கிட்டன. ஒரு திறந்த மனதுடன், ஒரு படைப்பை அணுக முடியாமல் போக்குவதில், பல நேர்மறை / எதிர்மறை விமர்சகர்கள் ஓவர் டைம் செய்கிறார்கள் என்ற என் கருத்து வலுவானது. நானும் இந்த ஓவர் டைம் வேலையை, ( நான் அதீதமாகத் தொழும் சில எழுத்தாளர்களுக்காகச் ) சில சமயம் செய்திருக்கிறேன் என்ற காரணத்தால், அவர்களையும் குற்றம் சொல்ல முடியாமல் போனது.

ஜெயகாந்தன் பற்றி, என்னிடம் வந்து சேர்ந்த அபிப்ராயங்கள் பல்வேறு விதமாக இருந்தன. ஒரு எழுத்தாளர், அவரைத் தன் தெய்வம் என்று சொன்னார். ஜெயகாந்தன் கம்யூனிசத்தைப் பாவிக்கின்றவர் என்று நான் முன்னர் கேள்விப்படிருந்து குறுக்கே நினைவுக்கு வந்து குழப்பியது,. "அவர் மட்டும் சிம்மக் குரலில் கர்ஜனை செய்தாரென்றால்..." என்று இன்னொருவர் மிரட்டினார். மயிலாப்பூர் மாம்பலத்தில் உழன்று கொண்டிருந்த ஆனந்த விகடனில் சேரி வாசனையை அடிக்கச் செய்தவர் என்று பிறிதொருவர் சொன்னார். மொட்டை மாடிக் குடிசையில் அவரிடம் தீட்சை பெற்றவர்கள் தான் இன்று அவரையே தாக்குகிறார்கள் என்று இன்னொருத்தர் சொன்னார். அவர் துவங்கி நடத்திய கல்பனா என்ற மாதநாவலின் பழைய பிரதி ஒன்றை வாசித்த போது , அவர் வாசகர்களுக்கு அளித்த பதில்கள், அவரை ஒரு கலகக்காரராக நினைக்க வைத்தது. , அரசியல்/சமூக விமர்சனமாக அமைந்த அவரது பதில்கள் சுவாரசியமாகவும், ஒரு ரகசியமான கிளுகிளுப்பையும் ஏற்படுத்தின என்று தான் சொல்லவேண்டும். சிறுவயதில், பெரியவர்கள் பேசும் கெட்ட வார்த்தை வசவுகளை, ஓளிந்து நின்று கேட்கும் மகிழ்ச்சிக்கு ஈடானது இது என்றும் பின்னர் தோன்றியது.

இந்தக் கருத்துக்கள் என்னை வந்து சேரும் முன்பாகவே , ஜெயகாந்தனை வேறு ஒரு வடிவத்தில் நான் சந்திக்க நேர்ந்தது. அதாவது ஒளிப்பட வடிவில்.

சென்னைத் தொலைக்காட்சிகளில், விளம்பரதார வழங்கும் நிகழ்ச்சி என்ற பெயரிலே 13 வாரத் தொடர்கள் வந்து கொண்டிருந்த சமயத்தில், ஜெயகாந்தனின் 'பாரீசுக்குப் போ' என்ற நாவல், 'நல்லதோர் வீணை' என்ற பெயரில் வியாழக்கிழமை இரவுகளில் தொடராக வந்தது. கிருஷ்ணஸ்வாமி அஸோசியேட்ஸ் எடுத்தது என்று நினைவு. எஸ்.வி.சேகர், ஒய்.ஜி மகேந்திரா, கிரேசி மோகன் போன்றவர்கள், நகைச்சுவை தோரணங்களை, சீரியல்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்த போது, இந்த தொடர், அதன் வித்தியாசமான கதைக் கருவுக்காக என்னை பெரிதாக ஈர்த்தது. அப்படத்தில் லட்சுமி, நிழல்கள் ரவி, ஏர்.ஆர்.எஸ். ஏற்று நடித்த பாத்திரங்கள் இன்றளவும் என் மனதில் நிற்கிறது. இந்தத் தொடரைப் போலவே, ஜெயகாந்தன் என்கிற ஆளுமையைப் பற்றி அறியாமலே ரசித்தது, சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற திரைப்படம். " என்ன சும்மா சும்மா டைனிங் டேபிள்லே உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருக்கறதையே காமிக்கறான்" என்று என் இல்லத்து டிராயிங் ஹால் ரசிகர்களால் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப் பட்ட திரைப்படத்தை என்னுடைய அந்த வயசில் ஏன் வெகுவாக ரசித்தேன் என்று இன்னமும் புரியவில்லை. இயல்பான பாத்திரப் படைப்பிற்காகவா? ஸ்ரீகாந்தின் நடிப்பிற்காகவா? வீட்டுப் பெண் மேல் இச்சைப் படும் வயோதிகராக நடித்த ஒய்ஜிபியின் ரியலிஸ்டிக்கான பாத்திரத்துக்காகவா? அது வரை பார்த்ததே இல்லை என்கிற மாதிரியான காட்சி அமைப்புகள்/வசனங்களுக்காகவா? தெரியவில்லை.

இந்த விருது, முப்பதாண்டுகளுக்கு முன்பாகக் கிடைத்திருக்க வேண்டியது என்று அருள் சொல்லி இருந்தார். ஹர ஹர சங்கர பற்றி, நிறைய நண்பர்கள் சொல்லி எதிர்மறை விமர்சனங்களைச் சொல்லி இருந்தார்கள். ஜெயகாந்தனை, அவரது முழு வீச்சில், ஒரிஜினல் நிறம் குணம் காரத்துடன் தரிசித்தவர்களுக்கு, 'சங்கர'-ஜெயகாந்தன் மீது கோபம் கொள்ளும் உரிமை இருக்கிறது என்று நினைக்கிறேன்,

இனி தான் அவரைப் படிக்க வேண்டும். சேர்த்து வைத்திருக்கின்றவற்றை தூசு தட்ட வேண்டும். மரப்பசு படித்து விட்டு அடைந்த ஏமாற்றம் போல, இங்கு நேராது என்பது என் நம்பிக்கை.

ஜெயகாந்தனுக்கு என் வாழ்த்துக்கள்

Comments

Thangamani said…
'பாரிசுக்குப் போ' புத்தகமாகக் கிடைத்தால் படிக்கலாம். 'கோகிலா என்ன செய்துவிட்டாள்', 'சமூகம் என்பது நாலு பேர்' இதெல்லாம் எனக்குப்பிடித்தது. மரப்பசு உங்களைக் கவரவில்லையாதலால் எனக்கு இதையெல்லாம் சொல்ல பயமாயிருக்கிறதப்பா! :)
/மரப்பசு உங்களைக் கவரவில்லையாதலால் எனக்கு இதையெல்லாம் சொல்ல பயமாயிருக்கிறதப்பா! :)//

என்ன செய்யறதுங்க ... நம்முது "வேற'' கோத்திரம்... எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணுமில்லையா? :-) :-) :-)

// 'கோகிலா என்ன செய்துவிட்டாள்', 'சமூகம் என்பது நாலு பேர்' இதெல்லாம் எனக்குப்பிடித்தது.//

சமூகம் என்பது நாலு பேர் என்னிடம் இருக்கிறது. படிக்கணும்.
Unknown said…
ஜெயகாந்தன் படைப்புகள் தான் தொகுதி தொகுதியாக கிடைக்கிறதே, வாங்கிப் படிங்க பிரகாசரே :-).

//இயல்பான பாத்திரப் படைப்பிற்காகவா? ஸ்ரீகாந்தின் நடிப்பிற்காகவா? வீட்டுப் பெண் மேல் இச்சைப் படும் வயோதிகராக நடித்த ஒய்ஜிபியின் ரியலிஸ்டிக்கான பாத்திரத்துக்காகவா? அது வரை பார்த்ததே இல்லை என்கிற மாதிரியான காட்சி அமைப்புகள்/வசனங்களுக்காகவா? தெரியவில்லை.//

கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா உண்மையான காரணம் "லட்சுமி"யோன்னு தோணும் ;-).
பிரகாஷ்ஜி,

நானும் உங்களை போலத்தான். ஜெயகாந்தனின் எழுத்துக்களை அதிகம் படித்ததில்லை. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' பார்த்துவிட்டு அப்புறம் அதைமட்டும் படித்திருக்கிறேன். அம்மா, ஜெயகாந்தனின் தீவிர விசிறி என்பதால் சின்ன வயதிலிருந்தே மனதில் அதீத மரியாதையை வளர்த்துவிட்டுவிட்டாள். எழுதுவதை நிறுத்திவிட்டாலும் ஜெயகாந்தனின் எழுத்துக்கு இருந்து வரும் எதிர்பார்ப்புகளை பார்க்கும்போது அந்த அதீத மரியாதை கொஞ்சம் கூட குறையவில்லை.
aathirai said…
எனக்குப் பிடித்த ஜெயகாந்தனின் நாவல் 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்'. சுமார்
15 முறை படித்திருப்பேன். அதில் வரும் ஹென்றி, துரைராஜ், பைத்தியம் அனைவரும் இன்றும்
நினைவில் உள்ளார்கள். ஹென்றியின் சோப்பெங்கப்பா பாட்டு எங்கள் வீட்டில் பிரபலம்.

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I