Obituary - P.V.Narasimha Rao

பி.வி.நரசிம்மராவ்

(1921 - 2004)


இந்திய அரசியலிலும், காங்கிரஸின் கோஷ்டி அரசியலிலும் ராவ் அவர்களின் இடம் என்ன என்பது விவாதத்துக்கு உரியது என்றாலும், இந்தியப் பொருளாதார முன்னேற்றத்தில் அவருக்கு ஒரு தனியான இடம் இருக்கிறது என்பதை, மாற்று சித்தாந்தங்கள் கொண்டவர்களும் ஒப்புக் கொள்ளுவார்கள்.


1991 க்குப் பிறகு தொழில் துவங்கியவர்கள் எல்லாம் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள் என நான் நினைப்பதுண்டு. தற்காலத் தொழில் அதிபர்கள், நிர்வாகம், விற்பனை, உற்பத்தி, பங்குதாரர்கள் மீதான கரிசனை என்று தங்கள் தொழிலை நேரடியாகப் பாதிக்கக் கூடிய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். தாராளமயமாக்கலுக்கு, முந்தைய கட்டுப் படுத்தப் பட்ட பொருளாதார சூழ்நிலையில் இது சாத்தியமில்லை.


தொழிலுக்கு முட்டுக்கட்டையான லைசன்ஸ் ராஜை ஒழித்துக் கட்டியதில் ராவுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. வெளிநாட்டு முதலீடுகளுக்கான தடைகளை நீக்கியதில், அதை விட முக்கியமான பங்கு உண்டு.


யார் எங்கு, எப்போது புதிய தொழில் துவங்கலாம், புதிய ஆலைகள் நிறுவலாம் என்று அரசாங்கம் தான் தீர்மானித்தது. ரேயான் தயாரிப்பதில் முன்னணியில் இருந்த பிர்லா நிறுவனம் ( தற்போது ஆதித்ய பிர்லா குழுமம்) மேலும் புதிய ஆலைகளைத் துவக்க அரசு அனுமதிக்காக பல வருடங்கள் காத்திருந்து விட்டு, பின் வெறுத்துப் போய், தன்னுடைய ஆலைகளை கிழக்கு நாடுகளான இந்தோநேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் ஆலைகளைத் துவக்கினார். ஒரு கணிணி வாங்குவதற்காக ( இறக்குமதி செய்வதற்காக ) இன்·போசிஸ் அதிபர் நாராயண மூர்த்தி டெல்லிக்கும், பெங்களூருக்கும் மேலும் கீழூமாக அலைந்த கதையைப் கேள்விப்பட்டிருக்கலாம். வெற்றிகரமாக இயங்கின டாடாவின் விமான சேவையை, அரசாங்கம், தேசிய உடமையாக்கிக் கொண்டதைப் படித்திருக்கலாம்.


இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் நேருவின் /காங்கிரஸின் பொதுவுடமைப் பொருளாதாரம் பொருத்தமாக இருந்தது. இந்தியா அடிப்படைக் கட்டமைப்புகளான அணைத்திட்டங்கள், எ·கு ஆலைகள், நீர் மின் நிலையங்கள், அனல் மின்நிலையங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யக் கூடிய தொழில் அதிபர்கள் அன்று யாரும் இல்லை. ( அந்தச் சமயத்தில் கையில் துட்டு வைத்திருந்தவர்கள் குஜராத்தி பனியாக்கள் மட்டும் தான்). மக்களிடமும் பணம் இல்லை. அதனால் அரசாங்கம் நேரடியாக ஈடுபட்டது. அன்றைக்கு, இந்தியாவை நம்பி முதலீடு செய்பவர்கள் யாரும் இல்லை. முதலீடு என்ன, தொழில் நுட்பத்தைத் தரக்கூட யாரும் தயாராக இல்லை. இந்தியாவை ஒரு ஒழுங்கு முறையோடு கட்டமைக்க, இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரம் உதவியாக இருந்தது. மொனோபோலிகள் உருவாகாமல் தடுக்கவும், வேலைவாய்ப்புப் பெருகவும், இவை உதவியாக இருந்தன. ஐந்தாண்டுத் திட்டங்களும், இருபது அம்சத் திட்டங்களும் உயர்ந்த நோக்கத்தைக் கொண்டவை. மஹனோலோபிஸ் போன்ற பொருளாதார மேதைகள், இத்திட்டங்கள் வடிவமைப்புக்கு காரணகர்த்தாக்களாக இருந்தனர்.


ஆனால்.....


ஒரு செயலுக்கான நோக்கத்தைக் காட்டிலும், செயல்முறைகளில் அதிகக் கவனம் செலுத்தும் நம்முடைய தேசியப் பழக்கம், நம்முடைய அரசாங்கங்களுக்கும் இருந்ததில் வியப்பில்லை. நல்ல லாபம் தரும் தொழிலா, உடனே வளைச்சுப் போடு என்ற ரீதியில், அடுத்து வந்த இந்திராவின் அரசு செயல்பட்டது. சட்டங்கள் மேலும் கடுமையாக்கப் பட்டன. வரிவிகிதங்கள் எக்கச் சக்கம் ( நம்ப முடியுமா ஒரு காலகட்டத்தில், நிறுவனங்களுக்கான வருமான வரி கிட்டதட்ட 97%. ). தங்கத்தை கொண்டு வர கட்டுப்பாடு. விளைவு கடத்தல். அல்ப சொல்பமான மின்னணுச் சாதனங்களுக்கு எக்கச்சக்கமான சுங்கவரி ( பொருளின் விலையை விட சில மடங்கு அதிகம்). மேலும் கடத்தல். வங்கிகள் தேசியமயம். அதிகாரிகளின் பச்சை கையெழுத்துக்கு எக்கச்சக்கமான மதிப்பு. விளைவு லஞ்சம் ஊழல். உற்பத்திக்கும் விற்பனைக்கும் கட்டுப்பாடு. அதன் விளைவு கள்ளசந்தை. விலையைக் கூட்டினாலோ குறைத்தாலோ, உற்பத்தி செய்பவனுக்கு கட்டுபடியாகாது. தொழில் நசிந்து போகும்.


இவற்றுக்கு ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. இன்றைக்கு தொழில் துறையில் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் தொழிலதிபர்கள் யாவரும், இத்தகைய சிக்கல்களை எல்லாம் கடந்து வந்தவர்கள் தான்.
ஒரு தொழிலின் தேவையை சந்தைதான் தீர்மானிக்கும். மற்ற எந்தக் காரணிகளும் அல்ல என்பதை மற்ற நாடுகள் போல உணர்ந்து கொண்டிருந்தால், பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள், பல வருடங்களுக்கு முன்பே ஏற்பட்டிருக்கும். ஏதோ இப்பவாச்சும்... என்ற ஆறுதல் பரிசுதான் நமக்கு பி.வி.நரசிம்மராவ்.


நரசிம்மராவ் தலைமை ஏற்றது ஒரு சிறுபான்மை அரசாங்கத்துக்கு. அந்தச் சூழ்நிலையிலும் absloute bureaucrat ஆன, பொருளாதார அறிஞரான, சுத்தமாக அரசியல் தெரியாத மன்மோகன் சிங் அவர்களை நிதியமைச்சராக ஆக்கியதும், வர்த்தகத் துறைக்கு ப.சிதம்பரத்தை அமைச்சராக ஆக்கியதும் , ராவ் அவர்களின் துணிச்சலான முடிவுகள். கஜனாவிலே துட்டு இல்லை. தங்கத்தை அடகு வைக்கலாமா, உலக வங்கியில் கையேந்தலாமா என்று ஏகப்பட்ட கேள்விகள் எழும்ப, பொருளாதார சீர்திருத்தம் தான் முதலில் செய்ய வேண்டிய காரியம் என்று , சட்டென்று ஒரு முடிவுக்கு வந்ததும் இந்தியப் பொருளாதார வரலாற்றில் குறிப்பிடவேண்டிய மிக முக்கியமான விஷயம்.


இந்தக் காரியங்கள் ராவ் இல்லாவிட்டாலும் நடந்திருக்கும் என்றாலும், நடந்த சமயத்தில் ராவ் அங்கே இருந்தார் என்பதினால் முக்கியத்துவம் பெறுகிறார்.
லக்குபாய் பாதக், ஹர்ஷத் மேத்தா , ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அதிமுக கூட்டணி என்று ராவ் மீதும் விமர்சனங்கள் இருக்கின்றன. அதைச் சொல்ல இது அல்ல நேரம்.

Comments

Mookku Sundar said…
நேரு குடும்பத்தைத் தவிர காங்கிரஸில் பிரதம மந்திரி பதவிக்கு ஆளே இல்லை என்ற வாதத்தை முதன் முதலில் ராவ் வெற்றிகரமாக உடைத்தார். அவருடைய சவுத் இந்தியன் ஆங்கிலத்தை - வேறு ஏதும் சொல்ல முடியாததால் - கேலி செய்த என் மாஜி முதலாளியே ( மும்பை 1993) , பின்னாளில் அவரது செயல்பாடுகளால் பெரிதும் கவரப்பட்டார்.
ராவ் ஒரு ச்சுப்பா ருஸ்தம். இவரைப் பற்றிய உங்கள் பதிவு கண்டிப்பாக பிஸினஸ் வீக/ எகனாமிக் டைம்ஸ் வாசனையோடு இருக்கும் என நினைத்தேன். ஏமாற்றவில்லை.
அன்புள்ள பிரகாஷ்,

'ராவ்' முகத்தில் சிரிப்பே வராது. அவர் ஒரு முசுடு என்றெல்லாம் கேள்விப் பட்டிருந்தோம். கார்ட்டூன் வரைகிறவர்களுக்கு அவர் ஒரு 'ஹல்வா' என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆனால் உங்கள் கட்டுரையைப் படித்தபின்மற்ற விஷயங்கள் புரிபடுகிறது.

அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.
Jsri said…
நன்றி ப்ரகாஷ். ஒரு முன்னாள் பிரதமர்- சிறுபான்மை அரசை வெச்சுகிட்டே தன் tenure முடிச்ச சாதனையாளர்- இறந்திருக்காரு, நம்ல வலைப்பதிவு மக்கள் யாரும் கண்டுக்கலையேன்னு வருத்தமா இருந்தது. (பரணீதரன் மட்டும் செய்திவெளியிட்டிருந்தாரு.) பாபர் மசூதி இடிப்பின்போது அவர் இன்னும் கொஞ்சம் ஆக்டிவா இருந்து அதைத் தடுத்திருக்கலாம், நாட்டுல இன்னும் தீராத அந்தப் பெரிய குழப்பமும் அதன் தொடர்வுகளும் வந்திருக்காதுங்கறது அவர்மேல இருக்கற என் ஆதங்கம்.

அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்!
Venkat said…
பிரகாஷ் - பெரும்பாலான விஷயங்களில் "அந்த நேரத்தில் அவர் அங்கே இருந்தார்" என்பதுதான் பொருந்தும். ஆனால் ஒருவிததில் இதற்கெல்லாம் குறுக்கே நிற்காமல் இருந்தார் என்பதே பெரிய விஷயம் (அதே காரியத்தை தேவே கௌடாவும் செய்திருக்கிறார் என்பதால் இங்கும் இவர் பங்கு குறைந்து போகிறது). எல்லாவற்றையும் விட என்னை அவர் அதிகம் எரிச்சலுக்குள்ளாக்கியது சாமியார்கள் காலடியில் கிடந்ததுதான். சாயிபாபா ஆஸ்ரமத்தில் நடந்த பல கொலைகள் விசாரனைக்கு வரமலேயே போக இவர் பெரிய உதவியாக இருந்திருக்கிறார். அதேபோல காஞ்சிப் பெரியவர் மேலே உட்கார்ந்திருக்க இவர் கைகட்டி கீழே உட்கார்ந்திருந்த காட்சி தூர்தஷணில் ஒளிபரப்பப்பட நாடுமுழுவது காஞ்சி மடத்தின் அரசியல் செல்வாக்கு பறைசாற்றப்பட்டது.
சத்தம் போடாமல் அதிகமாக சாதித்து காட்டியவர். ராவின் ஆங்கிலத்தில் இருக்கும் இந்தியத்தனம், புரியும்படி இருப்பதால் எனக்கு பிடிக்கும். சிலபேர் சாதித்து ரொம்ப காலத்திற்கு பின்னர்தான் அதிகமாக பேசப்படுகிறார்கள். நரசிம்ம ராவும் அந்த லிஸ்ட்டில் அடக்கம். பிரதமர் என்கிற வகையில் மன்மோகன் சிங்கை விட ரொம்பவே முந்தி இருந்திருக்கிறார் ராவ்!

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Chennai Tamil Bloggers Meet - 2005

ரா.கி.ரங்கராஜன் - நாலு மூலை