E-zine & Databases

மடல் இதழ்களும் தரவு தளங்களும்

ஈ-சைன் ( Ezine ) என்று சொல்லப்படும் பல இதழ்களை நான் இணையத்தில் பார்க்கிறேன். அவை உண்மையில் இணையத்தளங்கள் மட்டும்தான். ஈசைன்கள் அல்ல.

ஒரு இதழை வடிவமைத்து, பொருத்தமான இணைப்புகள் கொடுத்து அவற்றை வாசகர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பதுதான் மடல் இதழ். இதனை சரியாகப் புரிந்து கொண்டு இருக்கிறார் என்ற மகிழ்ச்சிதான், வெங்கடேஷ் உருவாக்க முயன்று இருக்கும் மடல் இதழைப் பார்த்த உடனே வந்தது.

இந்த மடல் இதழுக்கான வரவேற்பு, அந்த இதழின் உள்ளடக்கத்தைப் பொறுத்த விஷயம். தொடர்ந்து நடத்தும் ஆர்வமும், இதழின் வடிவமைப்பும், மற்ற இதழ்களைப் போலவே பல பகுதிகளையும் உள்ளடக்கி இருப்பதும், வெகுஜனப்பத்திரிகைகளில் சோதனை செய்து பார்க்க அனுமதி கிடைக்காத சில விஷயங்களை, சோதித்துப் பார்ப்பதும், வாசகர்களுடனான ஊடாட்டமும், இந்த முயற்சி வெற்றி பெறுவதை உறுதி செய்யும்.

வெங்கடேஷ் பத்திரிக்கை உலகுடன் பரிச்சயம் உள்ளவரென்பதாலும், நல்ல எழுத்தாளர் என்பதாலும், இந்த மடல் இதழை நடத்துவதில் அவருக்கு சிரமம் ஒன்றும் இருக்காது.

அவருக்கு என் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் சொன்ன கையோடு, அவர் தன் வலைப்பதிவில் சொல்லி இருக்கும் மற்றொரு விஷயம் பற்றியும் சொல்லி ஆகவேண்டி இருக்கிறது.

அதுதான், இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட இணைய அன்பர்களின் தகவலை உள்ளடக்கிய ஒரு தரவு தளம் ( database).

ஒரு தகவலை, சாதாரண கோப்பாக வைத்திருப்பதற்கும், முறைப்படுத்தப்பட்ட தரவு தளமாக வைத்திருப்பதற்கும் என்ன வித்தியாசம், தரவுதளமாக இருப்பதில் என்ன நன்மை என்று கணிணி பற்றி நன்றாக அறிந்தவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.

பதிப்புலகம் ஒரு சில பத்தாயிரம் பேர்களை மட்டுமே நம்பி வாழ்கிறது என்று கேட்க அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. என்றாலும் அனுபவஸ்தர் சொல்லும் போது, சற்றே வேதனையுடன் அந்த உண்மையை விழுங்க வேண்டி இருக்கிறது. அதை விடவும், இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள் பட்டியல் என்று எதுவும் இல்லை என்பது சற்றே வியப்புக்குரிய விஷயம்.

இன்றைக்கு, இணையத்தில் இருந்து , சோப்பு தயாரிப்பவரில் இருந்து சோமபானம் விற்பவர் வரை, வெட்டினரி டாக்டர்களில் இருந்து வால்கிளாக்கு ரிப்பேர் செய்பவர் வரை என்று யாருடைய பட்டியலை வேண்டுமானாலும் உருவிக் கொள்ள முடியும். ( காசு கொடுத்தோ அல்லது காசு கொடுக்காமலோ). ஆனால் தமிழில் ஆர்வம் கொண்ட இணைய அன்பர்களின் பட்டியல் இன்றைய தேதிக்கு கிடைக்காது.

இணையத்தமிழ் அன்பர்களின் யார், எவர் ( who is who) பட்டியல் இருந்தால், அவை அனைவருக்கும் கிடைக்கும் படி எங்காவது பொதுமனையில் இருந்தால், அது இணையத்தமிழ் ஆர்வலர்களுக்கு ( குறிப்பாக, தமிழ் செயலி செய்பவர்களுக்கும், ஒருங்கிணைப்பு செய்பவர்களுக்கும், அறிவிப்பு செய்பவர்களுக்கும் ) மிகுந்த உபயோகமாக இருக்கும்.,

ஆயினும் இது போன்ற ஒரு பெரு முயற்சியில் ஈடுபடுவதற்கு முன் சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது.

1. இணையத்தில் பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்கள் , விமர்சகர்கள், இதழ் ஆசிரியர்கள் போன்றவர்களின் தகவல்களை சேகரித்து, அவற்றை பட்டியலிடுவது என்பதில் சிக்கலில்லை. ஏனெனில் அவர்களை பற்றிய தகவல்கள் இணையவெளியெங்கும் இறைந்து காணப்படுவது. ஆனால், பிரபலமாக இல்லாத, வாசகர்களுக்கு, எழுத்தாளருக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கும் தமிழ் ஆர்வலர்களின், குறிப்பாக குழுக்கள், மற்றும் வலைப்பதிவுகளில் மட்டும் ஈடுபடுபவர்களுடைய , தகவல்களை தரவு தளத்தில் சேர்க்கு முன்னால் அவர்களது அனுமதியைப் பெற்ற பின்னரே சேர்த்தல் நலம்.. தங்களது விவரங்களை வெளியிலே சொல்வதில் அவர்களுக்கு சில மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆகையால். அந்த இணையத்தமிழ் தரவுதளத்தில் தகவல்களைக் கொடுப்பதால், ஏற்படுகின்ற நன்மைகள் ( அவர்களுக்கு கிடைக்கிற மற்றும் பொது நன்மைகள்) பற்றியும், அது போன்ற ஒரு தரவுதளத்தின் தேவையைப்பற்றியும் விரிவாக ஒரு அறிமுகக் கட்டுரையை எழுதி, அவர்கள் நம்பிக்கை ஏற்பட்ட பின்னர் செய்வதுதான் நலம். இணையத்தில் சொந்த விவரங்களைக் கொடு என்று கேட்கும் யாரையும், எவரும் சினேகமாகப் பார்ப்பதில்லை.

2. அப்படி அவர்களிடம், அனுமதி கேட்டு, தகவல்களைப் பெற்று, நாம் அதை உள்ளிடுவதற்கு நீண்ட காலம் ஆகலாம். அப்படி செய்வதைக் காட்டிலும், தகவல்களை உள்ளீடு செய்வதற்கான ஒரு நிரல் ஒன்றை எழுதி, அதன் மூலம், அன்பர்கள், தன்னிச்சையாக தகவல்களை தரும்படி கோரலாம். இதனால் , " யாரை கேட்டுக்கிட்டு , என் ஈமெயில் ஐடியை, பப்ளிக் டொமைன்லே போட்டீங்க? " என்று யாராவது சண்டைக்கு வருவதைத் தவிர்க்கலாம். வலைபதிவாளர்களுக்கு என்று ஒரு தரவுதளத்தை அக்குழுவினர் நிர்மாணிதிருக்கிறார்கள். தமிழில் வலைப்பதிவு செய்பவர்களின் விவரங்கள் அதில் கிடைக்கும் . அங்கு இந்த முறைதான் கடைபிடிக்கப் படுகிறது. ( இன்னும் என் பெயரைப் பதியவில்லை, ரொம்ப பிசி அதான். ஹிஹி..:-) ) வலைப்பூ குழுவினரிடம் ஆலோசனை கேட்கலாம்.

3. தரவுதளத்திலே, வழக்கமாக, உள்ளிடும் , பெயர் முகவரி, வயது, பால், மின்னஞ்சல் முகவரி கூடவே, சற்று நவீனமாக சிந்தித்து, வேறு சில பகுதிகளையும் சேர்க்கலாம். படிப்பு ஆர்வம், பிடித்த எழுத்தாளர், பங்குபெறும் இணையக் குழுக்கள், சொந்தமாக வைத்திருக்கும் இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் போன்றவற்றையும் சேர்க்கலாம். (யார் யாருக்கு இந்த விவரங்களை வெளியே சொல்ல ஆர்வமிருக்கிறதோ அவர்கள் மட்டும் தந்தால் போதும்.) ஏனெனில் இது போன்ற ஒரு திட்டத்தை ஆரம்பிக்கும் போது, நாளைக்கு என்ன வேண்டும் என்று சிந்திப்பதை விட, அடுத்த வருடத்துக்கு என்ன வேண்டும் என்று சிந்தித்து, அதற்கான பாதையையும் இப்போதே போடுவதுதான் நல்லது. சின்னதாக இப்போது துவங்கினாலும், நாளைக்கு, யார் எவர் பட்டியல் என்று மட்டும் இல்லாது, இணைய இதழ்களின் பட்டியல், குழுக்களின் பட்டியல், தமிழ்நூல்கள் கிடைக்கும் இணையத்தள பட்டியல், மின்நூல்களின் பிரதிகள் என்று தமிழுக்கான ஒரு முழுமையான டைரக்டரியாகக் கூட மலரலாம். தேடியந்திர தொழில்நுட்பம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதையும் சேர்க்கலாம். கூகிள் போல நமக்கு நாமே ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். ஆகையால் எதை செய்தாலும் scalability ஐ பார்த்துக் கொள்வது முக்கியம்.

4. ஒரு நல்ல தரவுதளத்தை உருவாக்கி விட்டு குரல் கொடுங்கள். முதல் ஆளாக வந்து போணி பண்ணுகிறேன். வாழ்த்துக்கள்.

தற்போதைக்கு அவ்வளவுதான் நினைவுக்கு வருகிறது. வேறு ஏதாவது தோன்றினால் மீண்டும் தொடர்கிறேன்

அன்புடன்
பிரகாஷ்

Comments

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Chennai Tamil Bloggers Meet - 2005

ரா.கி.ரங்கராஜன் - நாலு மூலை