முகுந்த் நாகராஜனின் நான்கு கவிதைகள்
நூ ல் வடிவத்தில் படித்த மிகச் சில கவிதைத் தொகுப்புகளில் ஒன்று சமீபத்தில் வாசித்த 'அகி'. அதில் இருந்து நான்கு கவிதைகள்
ஆட்டம் போடும் வீடு
பூட்டிக் கொண்டு கிளம்பினேன்
எதையோ மறந்து போனதால்
உடனே திரும்பினேன்; திறந்தேன்
டிவியும் ·ப்ரிட்ஜும் ஓடிப் பிடித்து
விளையாடிக் கொண்டு இருந்தன
அலமாரியில் உள்ள புத்தகங்களெல்லாம்
அணி அணியாகப் பிரிந்து கபடி
ஆடிக் கொண்டிருந்தன.
சோ·பா-வுக்கும் சேரு-க்கும் ஓட்டப் பந்தயம்.
பழைய சாக்ஸ்கூட தன்னிச்சையா
சுற்றிக் கொண்டிந்தது
ஒரு நிமிஷத்துக்குள்
எல்லாம் இயல்பு நிலையை அடைந்து விட்டன
'என்ன இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டான்'
என்று தண்ணீர் பாட்டில் முணுமுணுத்தது.
அப்புறம் அமைதியாகிவிட்டது
பிறகு ஒன்றும் நிகழவில்லை.
பூட்டிக்கொண்டு கிளம்பினேன்.
திறப்பதற்கு முன் தட்டி இருக்க வேண்டும்
என்ன நாகரிகம் இல்லாத பிறவி நான்!
மரணத்தைக் கையாளுதல்
செத்துப் போனவர்களுக்குச்
செய்ய வேண்டியவைகளின் பட்டியல்
என்னிடம் இல்லை
கையாண்டதில்லை மரணத்தை
தனியாய் இதுவரையில்
எரிக்கவோ புதைக்கவோ வேண்டும்.
அதற்கு முன் மரணச் சான்றிதழ்
வாங்கி வரவேண்டும்.
...