கடந்த இரண்டு நாட்களாக, இந்தியாவில், சில இணையச் சேவை நிறுவனங்கள், blogger.com, blogspot.com போன்ற வலைப்பதிவுச் சேவைகளைத்
தடை செய்திருக்கின்றன. வலைப்பதிவுகளை பார்க்க முடியாமல், தன்னுடைய இணையச் சேவை வழங்கியை, தில்லியில் இருந்து வலைப்பதியும் மிருதுளா
விசாரித்த போது, அரசு உத்தரவு என்று பதில் கிடைத்திருக்கிறது.
இந்தத் தடையினால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இது குறித்து விரிவாக வலைப்பதிந்திருக்கிறார்கள்.
தற்போது கிடைத்திருக்கும் நிலவரப்படி, இணையச் சேவையை வழங்கும் தனியார் நிறுவனங்களான Reliance Infocom, Star Hathway, Tata Internet Services ,Exatt, Spectranet போன்றவையும், பொதுத்துறை நிறுவனமான MTNL உம் தடையை அமுல் செய்திருக்கின்றன.
பெங்களூரில் இருந்து அபிநந்தன், spectranet என்கிற் ISP ஐ, தொலைபேசியில் அழைத்து
விசாரித்த போது, அரசிடம் இருந்து தடை செய்யக் கோரி அறிக்கை வந்தது என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
எதற்காக இந்தத் தடை என்று சற்றும் விளங்கவில்லை. அரசு, வலைப்பதிவுகளைத், இணையச் சேவை வழங்கிகள் மூலமாகத் தடை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது முதலில் ஆர்டர் போடுவது, BSNL க்காகத்தான் இருக்கும். ஆனால், பிஎஸ்என்எல் தடை செய்ய வில்லை. அல்லது, அரசு ஏதாவது குறிப்பிட்ட வலைப்பதிவைத் தடை செய்யச் சொல்லி, இவர்கள், அதி புத்திசாலித்தனமாக, ஒட்டு மொத்தமாகப் போட்டுத் தள்ளிவிட்டார்களா என்றும் புரியவில்லை. அப்படி வலைப்பதிவுகளைத் தடை செய்ய வேண்டும் என்றால், ஏன் blogger ஐ மட்டும் குறி வைக்கிறார்கள் என்று புரியவில்லை.
இது வரை, சம்மந்தப்பட்ட இணையச் சேவை வழங்கிகளிடம் இருந்தும், தொலைத் தொடர்பு அமைச்சகத்திலிருந்தும், இது தொடர்பாக எந்த அறிக்கையும் வரவில்லை என்பதால், தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
இந்தத் தடையில் பாதிக்கப்பட வலைப்பதிவராக நீங்கள் இருந்தால், வலைப்பதிவுகளைப் படிப்பது எப்படி என்று சில உருப்படியான குறிப்புக்களை அமித் அகர்வால்
தருகிறார்.