கன்னட ராஜா பராக் பராக்...

தமிழிலே சில நல்ல படங்களைக் கொடுத்த வீனஸ் ஸ்டுடியோ ரத்தினம் அய்யருக்கு மகனாகப் பிறந்த ஜி.சுப்பிரமணியம் என்கிற மணிரத்னம், முதன் முதலாக எடுத்தது ஒரு கன்னடத் திரைப்படம். பாலுமகேந்திரா தான் ஒளிப்பதிவு.

அந்தத் திரைப்படம் எடுத்த போது நேர்ந்த விஷயங்கள் ( " flow chart , cashflow statement எல்லாம் பக்காவா தயாரித்துத்தான் அந்த பிராஜக்ட்டிலே இறங்கினேன். ஆனால் அடுத்த வாரமே அதை கிழித்துப் போட்டு விட்டேன்" என்று சமீபத்தில், லாண்ட் மார்க்கில் நடந்த விழாவில் பேசிய போது வாக்குமூலம் கொடுத்தார்) தனிக் கட்டுரைக்கான விஷயம்.

இளையராஜாவின் இசையில் வந்த இந்தப் படம், ஒரு சிக்கலான கதை அமைப்பைக் கொண்டது.

எஸ்டேட் மேலாளரான கணவனை வேறொரு பெண்ணுடன் 'பார்க்கும்' லக்ஷ்மி கோபம் கொண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டு மகனுடன் தனியாக வசிக்கிறாள். காதலியுடன் கொஞ்சலும் ஊடலுமாகப் பொழுதைக் கழிக்கும் இளைஞன் ( அனில்கபூர் ) லக்ஷ்மியின் வீட்டுக்குப் பக்கத்தில் குடிவருகிறான். அவனுக்கு, லக்ஷ்மி மீது ஒரு விதமான ஈர்ப்பு. இதை தவறாகப் புரிந்துகொள்கிறாள் அவனது காதலி ( கிரண்). இறுதியில், லக்ஷ்மி அவர்கள் வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்ள காதலனுன் காதலியும் ஒன்று சேர்கிறார்கள். சிறந்த திரைப்படத்துக்கான கர்நாடக அரசு விருது பெற்ற இந்தப் படத்தில், இளையராஜாவின் அற்புதமான இசை உண்டு.

தமிழைத் தவிர்த்து இளையராஜா புகுந்து விளையாடிய மற்றொரு மொழி, கன்னடம்.

1. ஹ்ருதய ரங்கோலி....
பாடியவர் : எஸ்.பி. ஷைலஜா

2. நகூ எந்திதே...
பாடியவர் : எஸ்.ஜானகி

3. நகுவா நயனா...
பாடியவர்கள் : எஸ்.பி.பி & எஸ்.ஜானகி

படத்தை மொத்தமாகப் பார்க்கும் போது, கொஞ்சம் 'கடியாக' இருந்தாலும், பல நல்ல காட்சிகள் படத்திலே உண்டு.

மணிரத்னத்தின் பிந்தைய படங்களான பகல்நிலவு (1985) , மௌனராகம் (1986 ), அக்னி நட்சத்திரம் ( 1988), கீதாஞ்சலி (1989) போன்றவற்றில் விரிவாக இடம் பெற்ற காட்சிகள் பலவும், இந்தப் படத்தில் உண்டு. அனில்கபூருக்கும் கிரணுக்கும் இடையிலான காதல் காட்சிகள், அனில்கபூருக்கு லட்சுமி மீது ஏற்படும் இனக்கவர்ச்சி ( infatuation), அதன் தொடர்பான சில காட்சிகள் என்று படத்தில் சில நல்ல இடங்கள் உண்டு. [ இந்த இனக்கவர்ச்சி விஷயத்தை, மணிரத்னத்தை விட, மற்றவை நேரில் (1980) என்ற பாஸ்கர் , ஜெயதேவி, விஜயன் நடித்த திரைப்படத்தில், மௌலி , உளவியல் ரீதியாக மிகச்சிறப்பாகக் கையாண்டிருந்தார். மௌலியை, காமெடி ஆக்டர் என்று ஒதுக்கி வைத்தது, தமிழ்த் திரையுலகின் மற்றொரு பெரும் சோகம்]

மணிரத்னம் பிரபலமான பிறகு, இந்தப் படம், தமிழிலும் "ப்ரியா ஓ ப்ரியா" என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப் பட்டது. ஆனால், நாயகன், அக்னிநட்சத்திரம் போன்ற படங்களை ரசித்தவர்களிடையே, இந்தப் படம் எடுபடவில்லை. தனிப்பட்ட முறையில், பாடல்களும், தமிழை விடவும், கன்னடத்தில் நன்றாக இருந்ததாகத் தோன்றியது.

இதிலே உள்ள பிரபலமான soundtrack ஐ, பின்னர், ராஜா, சிவாஜி அம்பிகா நடித்த வாழ்க்கை என்ற படத்தில், "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு..." என்ற டிசுகோ பாட்டில் உபயோகப்படுத்தினார்.

பாட்டு பிடித்து இருந்தால் சொல்லுங்கள். புடிக்காட்டி அப்டியே ஓடிப்போய்டுங்க..

Comments

jeevagv said…
நன்றாகத்தான் இருந்தது பிரகாஷ், இளையராஜாவின் தமிழ்ப் பாடல்களுக்கும் இவற்றுக்கும் வேறுபாடு ஏதும் தெரியவில்லை.

மொழியின் வரையரைகளைக் கடந்தது அல்லவா இசை.
சோடிப் பாடல் பிடித்திருக்கிறது.
//மௌலியை, காமெடி ஆக்டர் என்று ஒதுக்கி வைத்தது, தமிழ்த் திரையுலகின் மற்றொரு பெரும் சோகம//

மிக சரி பிரகாஷ். மெளலி மிக அற்புதமான இயக்குநன். அவரின் ஆரம்பகால படங்கள் நாடக சாயல் அடித்தாலும், மிக எள்ளலான வசனத்திற்கும், கூர்மையான திரைக்கதையும் அடங்கியவை. அவ்வப்போது கே டிவியில் போடப்படும் அண்ணே அண்ணே, ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது போன்றவை கொஞ்சம் அபத்தமாய் இருந்தாலும், அது வந்த காலக்கட்டத்தினை வைத்துப் பார்த்தால், மகா வித்தியாசமாக இருக்கும்.

ரோஜா எப்படி கூப்பிட்டாலும் ரோஜா தான். அதேப் போல்தான் ராஜாவும். இப்போது தான் அது ஒரு கனாக்காலத்தின் பாடல்களை கேட்டேன். ராஜா-பாலுமகேந்திராவிற்கு இடையிலிருக்கும் புரிதல் ஆச்சர்யப்படுத்துகிறது. "அந்த நாள் ஞாபகம்" என்கிற பாடலை கேளுங்கள், ராஜா ராஜாதிராஜாவாக தான் இருப்பார் என்பதை ஆழமாக சொல்லுகிறார்.

இது தாண்டி, அனுமந்து என்றொரு நடிகர் இருந்தார். ஞாபகமிருக்கிறதா. எப்போதும் பேக்கு மாதிரியான கதாபாத்திரங்கள் கொடுத்து தமிழ் சினிமா நாசமாக்கிய இன்னொரு நடிகன். மணிரத்னம் பற்றி சொல்லவேண்டுமானால் என் பதிவினைப் பாருங்கள் ;-)
நன்றி ஜீவா, சுந்தரவடிவேல்.

நாராயண்: அனுமந்து இறந்து விட்டார் என்று எங்கோ படித்தேன். நல்ல நடிகர். நிழல் நிஜமாகிறது இன்னும் கண்முன் நிழலாடுகிறது.
Vassan said…
பிரகாஷ்

உசிரே ங்கற கன்னட படத்தில் இளையராஜா இசையில் யேசுதாஸ் பாடின இரண்டு பாடல்கள், என்றைக்கும் அலுக்காத வகையைச் சேர்ந்தவை.

சந்திரி நீ சந்தா,சந்தா ஹெஸரே

&

ப்ரீதிசுவே ப்ரீதிசுபா

http://www.musicindiaonline.com/l/18/s/movie_name.3030/
Suresh said…
ஒரு காலத்தில் நல்ல படங்களின் புதிய முயற்சிகள் கன்னடத்தில் தான் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இப்போதுதான் கன்னட இல்லை இல்லை சுய நல வெறியர் ராஜ்குமாரினால் கன்னட திரைப்பட உலகம் சீரழிந்து கிடக்கிறது.

(பாலு மகேந்திராவும் கன்னடத்தில் சில படங்களை இயக்கியுள்ளார் என்று கேள்விப்பட்டேன்)
பிரகாஷ் படத்தின் பேரை சொல்ல மறந்திட்டீங்களே. பெங்களூர் போன பிறகு பார்த்த முதல் கன்னடப் படம். பெயர் தொண்டைக்குள் சிக்கி வரமாடேங்குதே!
Venkat said…
சுந்தரமூர்த்தி - அது பல்லவி அனுபல்லவி.

பிரகாஷ் - வாங்க, வாங்க. நான் போட்றதுக்காக வச்சிருந்தத ஹைஜாக் பண்ணிட்டீங்க. இதுதான் கன்னடத்தில் ராஜா முதன் முதலில் இசையமைத்தது என்றில்லை. மாது தப்பட மகா, கர்ஜனே, ஜன்ம ஜன்மத அனுபந்தா போன்ற படங்களுக்கு ப.அ.க்கு முஞ்சே கன்னடதல்லி ராஜா சங்கீதா மாடுபிட்ரு.

ப.அ. கன்னடத்தில் நன்றாக ஓடியது. ராஜாவைப் பொருத்தவரை நகுவா நயனா-வைத் தவிர வேறெதுவும் அவ்வளவு ராஜாத்தரத்தில் இல்லை. அதே வருஷத்தில் ராஜா சாகர சங்கமா (சலங்கை ஒலி), தங்கமகன், வெள்ளை ரோஜா, முந்தானை முடிச்சு, தூங்காதே தம்பி தூங்காதே என்று பல அற்புதமான படங்களைத் தந்தார்.

நாங்களெல்லாம் கன்னட நண்பர்களிடம் "அது அப்படித்தான் உங்களுக்கெல்லாம் ராஜா பீச்சாங்கையாலத்தான் ம்யூசிக் போடுவாரு" என்று ஓட்டுவோம். :)
ROSAVASANTH said…
//தமிழைத் தவிர்த்து இளையராஜா புகுந்து விளையாடிய மற்றொரு மொழி, கன்னடம்.//

பிரகாஷ், போகிற போக்கில் எதோ எழுதிவிட்டீர்களோ? தெலுங்கிற்கும்(தமிழ் தழுவலாகவும், நேரடியாகவும்), மலையாளத்திற்கும் அளித்ததை பார்க்கும் போது கன்னடத்திற்கு வெங்கட் சொன்னமாதிரி ராஜா 'பீச்சாங்கைய்யால் போட்ட' மாதிரிதான் தெரிகிறது.

(பாடல்களுக்கு நன்றி)
Boston Bala said…
>>மெல்ல மெல்ல என்னைத் தொட்டு..."

ஒரிஜினல் இங்கேதான் இருக்கிறதா! அருமையான பாடல்.
வாசன் : நன்றி. 'உசிரே' கேட்டிருக்கிறேன்,

சுரேஷ் : பாலுமகேந்திராவின் முதல் படமே கன்னடப்படம் தான். கோகிலா.

சுந்தரமூர்த்தி : பாருங்க... இத்தனை வியாக்கியானத்துக்குப் பிறகு. படத்தோட பேரையே மறந்திருக்கேன். வெங்கட் சொன்னதுதான். பல்லவி அனுபல்லவி.

ரோசா வசந்த் : எனக்கென்னமோ, தெலுங்கு, மலையாளத்தை விட, கன்னடத்திலே நன்றாக இசை அமைத்திருந்தார் என்று தான் தோன்றியது. தோன்றுகிறது.

பாலா : ஆமாம். வாழ்க்கை பாடல், coolgoose இல் இருக்கிறது.

மறுமொழி அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
சரிகமபதநி எங்கு போனாலும் அதே தானே! இளையராஜா பீச்சாங்கையில் போட்டிருந்தாலும் கூட அது அற்புதமான இசை தான் :-))

சந்தோஷக்கே என்று ஆரம்பமாகும் பாடல் [எஸ்.பி.பி. தூள் கிளப்பியிருக்கிறார் இந்த பாடலில்!]
நன்ன நீனு கெல்லலாரே [என்னை நீ வெற்றி கொள்ள மாட்டாய்!] என்று ராஜ்குமார், ஜானகி பாடிய
பாடல். ராஜ் குமார் அருமையாக ஈடு கொடுத்திருந்தார் அந்த பாடலில்.

ஜன்ம ஜன்மத அனுபந்தா படத்தில் ஒரு பாடல் எஸ்.பி.பி. குழுவினர் .. அட்டகாசமாக இருக்கும். தமிழில் கூட அந்த பாடல் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். [கேளுவே நினகாகி..]

இலியராஜா இலியராஜா தான் [அப்படித் தான் இங்கு அழைக்கிறார்கள் :-)]

போங்கப்பா ஒழுங்கா ஒர்க் பண்ண விட மாட்டேங்கிறீங்க :-))
Unknown said…
//தமிழைத் தவிர்த்து இளையராஜா புகுந்து விளையாடிய மற்றொரு மொழி, கன்னடம்.//

ப்ரகாஷ், இளையராஜா சேட்டன்களுக்கும் அள்ளிக் கொடுத்துள்ளாரே...
Unknown said…
//பிரகாஷ், போகிற போக்கில் எதோ எழுதிவிட்டீர்களோ? தெலுங்கிற்கும்(தமிழ் தழுவலாகவும், நேரடியாகவும்), மலையாளத்திற்கும் அளித்ததை பார்க்கும் போது கன்னடத்திற்கு வெங்கட் சொன்னமாதிரி ராஜா 'பீச்சாங்கைய்யால் போட்ட' மாதிரிதான் தெரிகிறது.//

ஓஹ்ஹ்ஹ் ராசாவுக்கு முன்னரே ரோசா சொல்லிவிட்டாரா, கவனிக்கவில்லை.
G.Ragavan said…
கன்னடத்திலும் இளையராஜா நன்றாகச் செய்திர்ருக்கிறார். பொதுவாகவே தெலுங்கிலும் தமிழிலும் ஒரே பாடல்கள் இருப்பது போல இருக்கும். ஆனால் கன்னடத்தில் எனக்குத் தெரிந்து அந்த மாதிரி பாடல்கள் குறைவு.

கீதா என்ற திரைப்படத்தில் இளையராஜா இசைவேள்வி நடத்தியிருப்பார். அந்தப் படத்தின் பாடால்களை பின்னால் தமிழிலும் பயன்படுத்தியிருக்கிறார்.
1. தேவதை இளம் தேவி (கன்னடத்தில் நன்றாக இருக்கும்)
2. தேவன் தந்த வீணை (தமிழில் மிகவும் நன்றாக இருக்கும்)
இன்னொரு பாட்டு நினைவிலில்லை.

அந்தக் காலத்தில் பிரியா படம் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்ப் பாடல்களின் சுகம் கன்னடத்தில் இல்லை.
சுபமூகா : வாங்க வாங்க...கேளுவ நிமகாகி பாட்டு, கீதா என்ற திரைப்படத்தில் வந்தது. தமிழில், தேவதை இளம் தேவி ... ( ஆயிரம் நிலவே வா) என்பது இதன் ஒரிஜினல் வடிவம்

கேவிஆர் : பிராப்ளம் என்னனா, நான் மலையாளப் பாடல்களை அதிகமாகக் கேட்டதில்லை. எப்பவுமே fast forward தான் :-). குரு மட்டும் அடிக்கடி கேட்பேன்.

ஜி.ராகவன் : பின்னூட்டத்துக்கு நன்றி.
>>கேளுவ நிமகாகி பாட்டு, கீதா என்ற >>திரைப்படத்தில் வந்தது.

ப்ரகாஷ்,

கீதா? பெயர் மாற்றி விட்டார்களா? :-))
நன்றி திருத்தியதற்கு!

யாவ ஷில்பி கண்ட கனசு நீனோ
[எந்த சிற்பி கண்ட கனவு நீயோ?!]
என்கிற பாடல் தான்
ஜெ.ஜெ.அ. படம்
என்று நினைக்கிறேன்.
அதுவும் சூப்பர் பாடல்,
ஜிவ்வென்றிருக்கும் கேட்க..
எஸ்பிபி மற்றும் ஜானகி.

அப்புறம், கோகிலா படத்தில் தான்
மோகன் அறிமுகம் என்று நினைக்கிறேன். அவருக்கு கர்நாடகாவில்
'கோகிலா மோகன்'
என்று தான் பெயர்.
hi prakash do u have any wal papers or stills of that movie..i saw the movie once in vijay t.v wat u said is correct ..maniratnam used many scenes elabaratly in his later movies
hi prakash do u have any wal papers or stills of this movie

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Mani Ratnam's Guru - Review

வரைவின் மகளிர் from பாண்டவபுரம்