லக்கலக்கலக்கலக்கலக்க......

அசோகமித்திரன்-50 நிகழ்ச்சியில், சுந்தர.ராமசாமி ஆற்றிய உரையின், எழுத்து வடிவம் - பாகம் I

[ கிழக்குப் பதிப்பகம் விநியோகித்தளித்த விசிடியில் இருந்து சுட்டு எழுதியது. ஆகவே,வேறு வழியில்லாமல், அவர்களுக்கு நன்றி ]

சுந்தர.ராமசாமியின் உரை
---------------------------------


எழுத்தாள நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், என் சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தை உருவாக்கித் தந்திருக்கும் கடவு-கிழக்கு ஆகிய நிறுவனங்கள், மிகப் பெரிய ஒரு காரியத்தைச் செய்ய முன்வந்திருக்கிறார்கள். உங்கள் சார்பில், அவர்களுக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டம் நடைபெற வேண்டும் என்று சென்னையில் சில நண்பர்கள் முடிவு செய்ததும், நண்பர் பிரபஞ்சன் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதி, இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவருடைய அன்பான அழைப்புக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ,அற்றும் என் நண்பர்கள் பலரும் நான் வரவேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களுக்கும் என் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இப்போது, அசோகமித்திரன் படைப்புப் பார்வை - 50 என்ற தலைப்பில், அவரது படைப்புகள் பற்றி நாம் ஒரு சில விஷயங்களை நினைவு கூர்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைகிறேன். முக்கியமாக, அவருடைய சிறுகதைகளை முன்வைத்து அவரது படைப்புப் பார்வை என்ன என்பதைப் பற்றி சிறிது யோசித்துப் பார்க்க வேண்டும். அவரது சிறுகதைகளில், ஆழ்ந்த பயிற்சி கொண்ட வாசகர்களும், எழுத்தாளார்களும் இருக்கிறார்கள். அவர்களை முன்னிலைப் படுத்தி நான் பேச வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். அவர்களை முன்னிலைப் படுத்திப் பேசுவதை விடவும், அவப்போது அவரது சிறுகதைகளைப் படித்துப் பார்க்கிறவ்ர்கள், அவரது சிறுகதைகளைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்பியும், ஏதோ ஒரு காரணத்தினால், சந்தர்ப்பம் வாய்க்காமல் போனவர்கள், இவர்களை முன்னிலைப் படுத்தி, என் பேச்சை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விழைகிறேன். அது போல ஒரு காரியத்தைச் செய்வதன் மூலம் தான், அவரது வாசகர் வட்டத்தை மேலும் விரிப்பதற்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆகவே கதைகளுக்கு உள்ளே சென்று பல்வேறுபட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து பார்த்துப் பேசுவதைப் பார்க்கிலும், பொதுவாக அவரது படைப்புப் பார்வை சார்ந்த ஆற்றல் என்ன, ஏன் அவரைத் நான் தனிப்பட்ட முறையில், தமிழில் சிறுகதை எழுத்தாளர்களில் மிக முக்கியமானவராக் கருதுகிறேன் என்பதற்கான காரணங்களில் ஒரு சிலவற்றை கோடிட்டுப் பேசலாம் என்று நினைக்கிறேன்.,

என் நண்பர் ஒருவரிடம் நான் விசாரித்த போது, அசோகமித்திரன், ஏறக்குறைய இருநூறு சிறுகதைகள் வரை எழுதியிருக்கிறார் என்று சொன்னார். எனக்கு சற்று வியப்பாகத்தான் இருந்தது. பாரதி, வ.வேசு.அய்யர், புதுமைப்பித்தன், குபராஜகோபாலன், போன்ற பலரை கணாகில் எடுத்துக் கொண்டு பார்க்கிற போது கூட, இருநூறு கதைகளைப் படைத்தவர் என்பது, மிகவும் அபுர்வமான விஷயமாக எனக்குப் படுகிறது. ஒரு சமயம், தமிழில் ஜெயகாந்தன், அசோகமித்திரனை விட அதிகமான கதைகள் படைத்திருக்கிறார். இந்த எண்ணிக்கையானது , சிறுகதை உருவத்தின் மீது, மனித மனத்தின் இறுக்கத்தை, மிகக் குறைந்த நிமிடங்களில் தளர்த்தக் கூடிய ஆற்றல் கொண்ட இந்த இலக்கிய உருவத்தின் மீது, நுட்பங்களை எல்லையில்லாமல் விரித்துக் கொண்டு போகிற இந்த உருவத்தின் மீது , இந்தக் கலைஞன், கொண்டிருக்கக் கூடிய தீராத ஆசையைக் காட்டக் கூடியதாக் இருக்கிறது இந்த எண்ணிக்கை. அசோகமித்திரனின் கதைகளின் எண்ணிக்கையைப் பாராட்டுகின்ற போது, தமிழில் ஏறத்தாழ இரண்டாயிரம், இரண்டாயிரத்து ஐநூறு கதைகளெல்லாம் எழுதிய வீரப் புலிகளை, சிங்கங்களை மறந்து விட்டீர்களா என்று வாசகர்கள் என்னைக் கேட்கலாம். பொதுவாக, நான் ஒரு ஆள் செலுத்து வரும் உழைப்பை மறக்கக் கூடியவன் அல்ல. உழைப்பை நான் என்றும் அலட்சியப் படுத்தியது கிடையாது. உழைப்பாளர் தினத்தன்று நாம் அவர்களைப் பற்றி பேசிக் கொள்ளலாம். இபோது ஒரு நுட்பமான கலைஞனைப் பற்றி பேசக் கூடியிருக்கின்றோம், என்று தொடங்க விரும்புகின்றேன்.

அசோகமித்திரனை ஆத்மார்த்தமாகப் படிக்க விரும்புபவர்கள் - அவரைப் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது, அசோகமித்திரன் அல்ல, எந்தப் படைப்பாளியையும் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது, ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு அவர் ஒரு தவிர்க்க முடியாதவரும் அல்ல - ஆனால் யாராவது இவரது கதைகளைப் படிப்பதன் மூலம், தனது வாழ்க்கைப் பாதையை சிறிது செழுமைப் படுத்திக் கொள்ளலாம், என்று நம்புவார்கள் என்றால்,அவர்கள் அசோகமித்திரனின் படைப்புக்களைப் பற்றி முன்கூட்டியே சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு அவர்கள் படைப்புக்குள் போவது அவர்களுக்குப் பயன் தரக்கூடியதாக இருக்கும். அந்த விஷய்ங்களைப் பற்றித்தான் நான் இப்போது சொல்லப் போகிறேன்.

அசோகமித்திரன், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பது வாக்கில் எழுதத் தொடங்கி இருக்கிறார். இந்த ஐம்பது வருடங்களில், தமிழகத்தில் பல்வேறுபட்ட இயக்கங்கள் நடந்திருக்கின்றன. சமூக இயக்கங்கள், இலக்கிய இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், தத்துவ இயக்கங்கள் என்று பல் நடந்திருக்கின்றன. இந்த இயக்கங்களிலிருந்து வாசக்ன் திரட்டிக் கொண்ட கருத்துக்களை, அந்தக் கருத்தின் பிரதிபலிப்புக்களை, அசோகமித்திரனின் படைப்புக்களில் எதிர்பார்க்கக் கூடிய ஒரு வாசகனுக்கு, அசோகமித்திரனின் கதைகளில், அந்தக் கருத்துக்களின் பிரதிபலிப்பைப் பார்க்கமுடியும் என்று கருதுகிற ஒரு எழுத்தாளனுக்கு, அவரது படைப்புக்கள், ஏமாற்றத்தையே அளிக்கக் கூடியதாக இருக்கும். அந்த இயக்கங்களுடைய பிரதிபலிப்புக்களை, அவரது படைப்புக்களில் பார்க்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன். பல்வேறுபட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தமிழில் இருந்தாலும் கூட அந்த இயக்கவாதிகளின் கவனத்தை, அவர் போதிய அளவுக்குக் கவரவில்லை என்பது என்னுடைய மதிப்பீடாகும். முக்கியமாக திராவிடக் கழகத்தினரை எடுத்துக் கொண்டால், அந்த எழுத்தாளர்களுடைய கவனத்தையோ, அல்லது வாசகர்களுடைய கவனத்தையோ,இன்று வரை அவ்ர் பெற முடியவில்லை என்று நான் நினைக்கிறேன். இன்று வரை கூடாத ஒரு உறவு, இனிமேல் கூடுவதற்கான காரணங்கள் இருக்கின்றன என்று நாம் நம்பவில்லை. இவர்களெல்லாம் அடிப்படையிலேயே - அசோகமித்திரனும் சரி, பிற இயக்கவாதிகளும் சரி - பெருமளவுக்கு, தங்கள் இலக்கியப் பார்வை சார்ந்து மிகுந்த வேற்றுமை கொண்டவர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அதில் பெரிய ஏமாற்றமும் இல்லை. ஆனால், தமிழகத்தில் மிகுந்த சுறுசுறுப்போடு இயங்கி வரும் இடதுசாரி சிந்தனையாளர்கள், இடது சாரி எழுத்தாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், முற்போக்கு வாசக்ர்கள், அசோகமித்திரனின் படைப்புக்களை போதுமான அளவுக்குக் கவனித்திருக்கிறார்களா? அவரது படைப்புக்களால் பாதிப்பு அடைந்திருக்கிறார்களா? அவரது படைப்புக்கள் பற்றி பேச முற்பட்டிருக்கிறார்களா? என்றெல்லாம் யோசிக்கும் போது அவர்கள் கொண்டிருக்கும் உறவு கூட எனக்குத் திருப்தி அளிக்கக் கூடியதாக இல்லை. இத்தனைக்கும் அசோகமித்திரனின் கதைகளில் வாழ்க்கையைப் பற்றி ஓயாத கவலை ஒன்று எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த வாழ்க்கை நிறைவாக இல்லை என்ற ஒரு புகார் மென்மையாக, என்றாலும் கூட வலிமையாக - அவருடைய இயற்கையே மென்மையானது - ஒரு சரடாக அவரது படைப்புக்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு வாழ்க்கை பற்றிய அக்கறைப் படக்கூடிய ஒரு படைப்பாளியை, போதிய அளவுக்கு இடது சாரி எழுத்தாளர்கள் கவனிக்கவில்லை என்றால், அவர்கள் வாழ்க்கையின் மீது கொண்டிருக்கக் கூடிய அக்கறையின் பொருள் என்ன என்ற அடிப்படையான கேள்வி ஒன்று உருவாகின்றது. அவர்கள், அசோகமித்திரனுக்கு நற்சாட்சிப் பத்திரம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.அவர்களுடைய பார்வையில், அசோகமித்திரனுக்கு அதற்கான தகுதிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரைப் பொருட்படுத்திப் பார்க்க வேண்டும், அவருடைய கவலைகளைக் பகிர்ந்து கொள்ள வேண்டும், அல்லது அவரது சிந்தனைகள் பற்றி ஆராயவேண்டும்.பரிசீலனை செய்து பார்க்க வேண்டும், மறுபார்வை செய்து பார்க்கவேண்டும், என்ற எண்ணங்கூட அவர்களுக்கு இல்லாமல் போனதற்கான காரணம் எதுவுமே நமக்குப் புரியவில்லை. ஒருவேளை, இந்தக் காரியங்கள் நடக்காமல் போனதற்கு, இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட காரணங்கள் இருக்கலாம். ஆனால், இலக்கிய நீதிகளுக்கு உட்பட்ட காரணங்கள் எதுவும் இல்லாமல் தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறன்.

வாசகர்களில் இரண்டுவிதமான வாசகர்கள் இருக்கிறார்கள். ஒன்று இலக்கியத்தை நேசித்து வாசிக்கக் கூடியவர்கள். மற்றொரு பிரிவினர் விசுவாசமான வாசகர்கள். விசுவாசிகள். இந்த விசுவாசிகள், தங்களுடைய நம்பிக்கையைச் சார்ந்த, தங்களுடைய தீர்மானங்கள் சார்ந்த, விதிகள் சார்ந்த படைப்புக்களை வெளியுலகில் தேடி அலைந்து, படித்து, தங்களுடைய பார்வைதான் சரி என்பதை உறுதி செய்துகொண்டே வர்க்கூடியவர்கள். . தங்கள் பார்வையைக் கலைத்துவிடக் கூடிய, உலகம் உய்ய தான் கொண்டிருக்கும் தத்துவத்தைக் கலைத்து விடக்கூடிய படைப்புகளைப் பார்த்து பயப்படக்கூடியவர்கள், இந்த விசுவாசிகள். அவர்களை சிறந்த வாசகர்கள் என்று நாம் கருத முடியாது. ஆனால், சிறந்த வாசகர் என்பவர், தங்களுடைய பார்வை எப்படி இருப்பினும் சரி, வெளியுலகத்தில், அவற்றுக்கு முரண்பட்ட படைப்பு இருந்தாலும், அது தங்களுடைய பார்வையைக் கலைக்கக் கூடியதாக இருந்தாலும், தங்களைத் தொந்தரவு செய்யக் கூடியதாக் இருந்தாலும்., அதைத் தேடிப் படித்து தங்களுடைய பார்வையையும், அல்லது தாங்கள் நம்புகிற தத்துவத்தையும், சோதனை செய்து பார்த்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தான், இலக்கியவாதிகளுக்கு தொடர்ந்து ஒரு ஆதாரமான பலமாக இருந்து வருகிறார்கள். அந்த பலம் இன்று தமிழில் உருவாகி இருக்கிறது.. இன்னும் காலம் போகப் போக இன்னும் அந்த பலம் அதிகமாகும் என்று நம்புகிறேன். அந்தக் காலகட்டத்தில் அசோகமித்திரனின் சிறப்பும் செல்வாக்கும், இதை விட பன்மடங்காக அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்.

அசோகமித்திரனின் படைப்புக்களில் பொதுவாக நீங்கள் எதையும் இறுக்கங்கள் எதையும் பார்க்க முடியாது. தத்துவ இறுக்கங்கள் என்று சொல்வதை விட தத்துவங்களையே பார்க்க முடியாது என்று சொல்லலாம். தத்துவங்களில் இருந்து வெளியே போகவேண்டும் என்பது அவருடைய ஒரு திட்டம், யோசனை என்று நான் சொல்லமாட்டேன், அவரது இயற்கை. பெரும்பான்மையான அவரது பலங்கள் எல்லாம் அவரது இயற்கை சார்ந்தவைதான். அவரது சிந்தனை சார்ந்ததல்ல, அவர் ஆராய்ந்த அறிந்த முடிவு அல்ல. அவருடைய இயற்கை சார்ந்துதான் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எழுத ஆரம்பித்த காலத்தில், மூன்று நான்கு கதைகள் எழுதிய நேரத்தில், அவரது கதைளையும் எழுதுவதற்குரிய பக்குவம் அனைத்துமே உருவாகிவிட்டது. அதற்குப் பின் பெரிய பயணம் ஒன்றும் அவருக்கு இல்லை. ஆனால், பல்வேறுபட்ட காட்சிகளை தன்னுடைய வாழ்க்கை அனுபவத்த்தில் இருந்து எடுத்து அதைப் படைப்பாக, சிறந்த படைப்பாக, அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்ளக் கூடிய படைப்பாக, சுவாரசியமாக நாம் படிக்கக் கூடிய படைப்பாக, ஒரு உறுத்தல் இல்லாமல் நாம் படிக்கக் கூடிய படைப்பாக தரக்கூடிய ஆற்றல், அவரிடம், கடந்த ஐம்பது வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எப்போதுமே நீங்கள் பார்த்தீர்கள் என்றால், வாழ்க்கையின் முன்னால், நம் கண்களுக்குத் தெரியாத ஒரு பட்டுத்திரை ஒன்று, தொங்கிக் கொண்டிருக்கிறது. காற்றில் இந்தப் பட்டுத்திரை அசைகின்ற போது, உள்ளே இருக்கிறது என்று நாம் நம்பத் தலைப்படுகின்றோம். அந்தப் பட்டுத்திரையைக் கிழித்து எறியக்கூடிய ஒரு புரட்சிகரமான காரியங்கள் எதுவுமே அவர் இயற்கையாகச் செய்யக் கூடியவர் அல்ல. ஆனால், அந்தத் திரையின் ஓரத்தில், அந்தத் திரையை சிறிது அகற்றி, உள்ளே அவர் எட்டிப் பார்க்கிறார். உள்ளே அவர் எட்டிப் பார்ப்பது, அவர் தவிர வேறு யாருக்குமே தெரியாது. அவ்வளவு அந்தரங்கமாக அவருக்கு எட்டிப் பார்க்கத் தெரியும். அப்படித்தான் அவர் அதைச் செய்கிறார். யாரையும் உறுத்தாமல் , யாரையும் சங்கடப்படுத்தாமல், அவரால் அந்தக் காரியத்தைச் செய்ய முடிகிறது.

அப்படிப் பார்க்கிற போது, வாழ்க்கை சார்ந்த சில அந்தரங்கங்களை, வாழ்க்கையின் சாராம்சங்கள் சார்ந்த சில தரிசனங்கள், அவருக்குக் கிடைக்கின்றன. அந்த அந்தரங்கங்களை, அவருடைய படைப்பாக மாற்ற அவருக்குத் தெரிகிறது. அதைப் படிக்கும் போது, நாம் அதன் மூலம் பாதிப்படைகிறோம். அவருடைய பார்வையைத் தொகுத்து நம்மால் பார்த்துக் கொள்ள நம்மால் முடிகின்றது. தொடர்ந்து அவருடன் பரிச்சயம் கொள்வதன் மூலம், அந்த பாதிப்பு நம்மிடம் நிகழும் என்றுதான் நான் நம்புகிறேன்.

உலகத்தில் உள்ள எழுத்தாளர்கள் எல்லோரும், இந்தத் திரைச்சீலைக்குப் பின்னால் இருக்கக்கூடிய அந்தரங்கங்களை, திரைச்சீலைக்குப் பின்னால் இருக்கக் கூடிய சாராம்சத்தை உணர்த்தக் கூடியவராகத்தான் இயங்கி வருகிறார். அந்த வம்சத்தில் வந்தவர் அவர்தான் என்று நம்புகிறேன்.

அவருடைய மொத்தக் கதைகளையும் சொல்லுவது என்பதோ, அதில் இருக்கக் கூடிய சிறப்புக்களை முழுக்க நாம் நினைவு படுத்திப் பார்ப்பது என்பதோ சிரமமான விஷயம், இருந்தாலும், ஒரு தவளைப் பாய்ச்சலாக, ஒரு சில காட்சிகளையும், ஒரு சில அவரது இயல்புகளையும், இயற்கைகளையும், தந்திரங்களையும் - தந்திரங்கள் என்று சொல்வது, அவரது கதைகளுக்கு உள்ளே இருக்கும் தந்திரங்கள் - நுட்பங்கள், observations, தொனிகள், அதிர்வுகள், என்று நமக்குக் கிடைக்கக் கூடிய பல்வேறுபட்ட, விஷயங்களை நினைவு படுத்திக் கொள்ள வசதியாக, நான் ஒரு சில காட்சிகளை, நினைவு படுத்திப் பார்க்கிறேன்.

ஒரு காட்சி, ஒரு ஸ்டுடியொவில், திரைப்படங்கள் எடுக்கக் கூடிய அலுவலகத்தின் வரவேற்பறையில் நடக்கக் கூடிய காட்சி. நமக்கு அந்த வரவேற்பறை சம்மந்தமாக நிறையக் கனவுகள் இருக்கின்றன. ஏனென்றால், அந்த வரவேற்பறைக்குப் பின்னால் தான் அந்த ஸ்டுடியோ இருக்கிறது. அந்த ஸ்டுடியோவில் தான் நடிகர்கள் வருகிறார்கள், நடிகைகள் வருகிறார்கள். தமிழில் நடிகர்கள் சார்ந்து, நடிகைகள் சார்ந்து, என்ன என்ன விதமான அந்தரங்கக் கனவுகள் கொண்டிருக்கிறார்கள் என்று நான் உங்களிடம் சொல்ல வேண்டியதில்லை. அந்தக் கனவுகளுக்குப் பெயர் போன ஒரு இனம் தமிழினம். ஆகவே அந்தக் கனவுகளை லேசாக அசைக்கத் தொடங்குகிறார், அவர் எழுத்துக்கள் மூலமாக. அங்கு வேறுவிதமான கதாபாத்திரங்களை அவர் உருவாக்கித் தருகிறார். அன்றாட வாழ்க்கைக்கு அல்லல்படக்கூடிய நடிகர்கள், அன்றாட வாழ்க்கைக்கு அல்லல்படக்கூடிய நடிகைகள் என்று பல்வேறுபட்ட விஷயங்களைச் சொல்கிறார். சினிமாவைப் பற்றி மிக நுட்பமான காட்சிகளை அமைக்கும் போது, சினிமாவைப் பற்றி நமக்கு இருக்கும் அதீதமான கவனம் - (சினிமா) அது கலைதான், அந்தக் கலையை நாம் மதிக்க வேண்டியதுதான் - ஆனால், நமக்கு இருக்கக் கூடிய அதீதமான கவர்ச்சியை தணிக்கும் படியான எழுத்துப் போக்கு அவரிடம் இருப்பதை, நீங்கள் பார்க்கலாம். இதே போல எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, அந்த விஷயத்துக்கு உள்ளே சென்று, அந்த விஷயத்தின் சாராம்சத்தை ஸ்பரிசிக்கக் கூடிய ஒரு தன்மை அவருக்கு இயற்கையாகவே வந்திருக்கிறது. சாதாரணமாக அவருடைய உலகம், அவர் நேசிக்கக் கூடிய உலகம் - அதில் பல்வேறுபட்ட சூட்சுமங்கள் இருக்கின்றன - எல்லாவற்றையும் இப்போது நாம் சொல்ல முடியாது, ஆனால், ஒரு சில விஷயங்களை நாம் இப்போது நம்முடைய ஞாபகத்துக்குக் கொண்டு வந்து கொள்ளலாம்

முக்கியமாக, அவருக்குப் பல்வேறு விஷயங்கள் ஆச்சர்யமாக இருக்கின்றன. உங்களுக்கு மிகச் சாதாரணமாக வாகனமாக இருப்பது சைக்கிள். அவருக்கு மிக ஆச்சர்யமாக ,நேசிக்கக் தகுந்ததாகவும் இருக்கக் கூடிய வாகனமாக சைக்கிள் இருக்கிறது. ரசித்தல், அவருக்கு விருப்பம் தரக்கூடியதாக இருக்கிறது. எருமைகள் இன்னும் அதிக விருப்பம் அவருக்கு - எருமையா பசுவா எது அதிக விருப்பம் என்று தெரியவில்லை - இரண்டும் வேற்றுமை இல்லாத விருப்பத்தைத் தரக்கூடிய பிராணிகளாக அவர் மனதில் இருக்கிறது. பஸ்ஸில் பயணம் செய்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான், எல்லோரும் சென்னையில் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பஸ்ஸில் பயணம் செய்வதுக்குள் இருக்கக் கூடிய சுயநலங்கள் சார்ந்த ஒரு நாடகம், சுயநலங்கள் சார்ந்த ஒரு அழுத்தம், சுயநலங்கள் சார்ந்த ஒரு வன்முறை, இவற்றை எல்லாம் அவரால் அற்புதமாகச் சொல்ல முடிகிறது. ஒரு ரேஷன் கடையில் ஒரு க்யூ நிற்கிறது. எல்லோரும் க்யூவில் நிற்கிறோம், ஒரு சாதாரணமான குழந்தையும் நிற்கக் கூடிய ஒரு காட்சியை வைத்து ஒரு கதையைச் சொல்கிறார். அங்கு , ஒருவரை ஒருவர் முந்த வேண்டிய அவசியம் வருகிறது. கட்டாயம் இருக்கிறது. நீங்கள் ஒரு பொருளைப் பெறுவதுதான் வெற்றி, அந்த ரேஷன் கடையிலே, பொருளைப் பெற, முந்த வேண்டிய அவசியம் வருகிறது. அந்த முந்தக் கூடிய கலையில், ஒவ்வொருவரும் அடைந்திருக்கக் கூடிய அபாரமான தேர்ச்சிகள், அந்தத் தேர்ச்சிகளைப் பற்றி எல்லாம், மிக நன்றாக அவரது கதைகளிலே சொல்லி இருக்கிறார். அதைப் படிக்கின்ற போது, அது வரிசையா? அல்லது வாழ்க்கையா? என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. அது வரிசை அல்ல, வாழ்க்கையைப் பற்றித்தான் சொல்கிறாரோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. அதற்காக, செயற்கைத்தனமாக எதுவுமே இல்லை. அந்த அம்சம், அவரிடம் இயற்கையாக இல்லாத ஒரு விஷயம். இவ்வாறு எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும், அதற்குள்
நாம் கொண்டிருக்கக் கூடிய உறவுகள் சம்மந்தப்பட்ட கவித்துவங்கள், உறவுகள் சம்மந்தப்பட்ட லயங்கள், இவற்றை எல்லாம் அவரால் அற்புதமாகச் சொல்ல முடிகின்றது. சைக்கிளில் போவது மட்டுமல்ல, அந்தச் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போவது, சைக்கிளை நடைபாதையில் தூக்கி வைப்பது, நடைபாதையில் இருந்து கீழே இறக்கி வைப்பது, செயினை மாற்றுவது, செயினை மாற்றுகிற போது, கையில் படக்கூடிய கரைகள், எல்லாமே அவருக்கு பிடித்தது போலத்தான் நடந்து கொள்கிறார். அந்த அளவுக்கு ஒரு நேசம், முக்கியமாக இயந்திரங்கள். இயந்திரங்கள் மனிதனுக்கு மிகப் பெரிய பதட்டத்தை உருவாக்குகின்றன. என்ன இயந்திரம் என்று தெரியாத ஒரு பதட்டத்தை உருவாக்குகின்றன. ஆனால், அவற்றுடன் ஒரு வலுக்கட்டாயமான உறவு கொண்ட பின், ஒரு குறிப்பிட்ட நிமிஷத்தில், இயந்திரம் மிகவும் சாதுவாகி விடுகின்றது. அந்த நிமிஷத்தை அவர் ஸ்பரிசிக்கிறார். அந்த நிமிஷத்தை நாம் உணர்ந்துகொண்டோமானால், அவருக்கு நாம் மரியாதை செய்தவர்களாக ஆவோம். ஏனென்றால், அந்த நிமிஷத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும் என்றால், அது போன்ற எத்தனையோ நிமிஷங்களை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அந்த நிமிஷம் மட்டுமல்ல, எண்ணற்ற நிமிஷங்களின் ஒரு பகுதி அது. அந்த நிமிஷங்களை எல்லாம் நாம் உணர்ந்து கொள்ளக் கூடிய அளவுக்கு, சிந்தனை நமக்கு இருக்க வேண்டும். அது இல்லை என்றால், அதை உருவாக்கக் கூடிய தன்மை அவரது கதைகளுக்கு இருக்கிறது.

அவர் கொஞ்சம் கூட, உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தக் கூடிய எழுத்தாளரே அல்ல. உங்களை அழைத்துப் போகக் கூடியவர். அவரிடம் நகைச்சுவை இருக்கிறது. ஒன்றை மற்றொன்றாக மாற்றிச் சொல்லக் கூடிய கெட்டிக்காரத்தனங்கள் இருக்கின்றன. என்றோ அவரது மனதில் பதிந்த ஒரு விஷயம், ஒரு observation, அந்தக் குறிப்பிட்ட நேரத்தில், அவருக்கு வந்து உதவுகின்றது. ந்மக்கும் தெரிந்த விஷயம் தான் அது. நமக்கும் தெரிந்த observation தான் அது. ஆனால், நமக்கு அந்த observation தெரியும் என்பது அவருக்குத் தெரியாது. அவருக்கு அதை எழுதும் போது, தெரியாமல் தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இது போன்ற எண்ணற்ற விஷயங்கள், மனத்தளத்தில் இருக்கக் கூடிய எண்ணற்ற விஷயங்கள், வெளியே வரக்கூடிய தரத்தில் , ஒரு எழுத்தாளன் அடையக்கூடிய சந்தோஷம் தான் படைப்புக்கலை தரக்கூடிய சந்தோஷம். நாம் வாசிக்கும் போது, நாம் அடைந்திருக்கக் கூடிய எத்தனையோ அனுபவங்கள், நம் மனதுக்குத் தெளிவு ஏற்படுத்துகின்றன.அதுதான் நாம் பெறக்கூடிய ஒரு சந்தோஷம்.

[ தொடரும் ]

Comments

Prakash,

Thanks for this post. you did a good job. But the irrelevant title makes me irritating.


Suresh kannan.
//Thanks for this post. you did a good job. But the irrelevant title makes me irritating.//

நன்றி சுரேஷ். ஏன் இந்தத் தலைப்பு என்று, இரண்டாம் பாகத்தைப் படித்தால் புரிய வரும்.
Badri Seshadri said…
http://thoughtsintamil.blogspot.com/2005/03/50.html

இங்கு முழு ஒலிக்கோப்புகள் உள்ளன. விரும்புபவர்கள் கேட்கலாம்.

பிரகாஷ்: டிராஸ்கிரிப்ட் வேலையை நன்றாகச் செய்துள்ளீர்கள். சில தவறுகள் உள்ளன. (திராவிடக் கழகம் -> திராவிட இயக்கம்). இன்னமும் சில வரிகள் சரியாக வரவில்லை.

முடிந்தால் யாராவது ஒலித்துண்டைக் கேட்டு, சரி செய்யலாம்.

அத்துடன் இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ள 'தி ஹிந்து'வில் வந்த அசோகமித்திரன் கட்டுரைத் தொகுப்புகள் பற்றிய விமர்சனம் இங்கே.
http://www.hindu.com/br/2005/05/10/stories/2005051000261600.htm
Haranprasanna said…
Thanks for this post

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Mani Ratnam's Guru - Review

வரைவின் மகளிர் from பாண்டவபுரம்