Prakash's Chronicle

ஜாகை மாத்தி ரொம்ப நாளாச்சு... புது வீட்டுக்கு வாங்க

Saturday, May 14, 2005

 

உதிரிப்பூக்கள்மீண்டும் மீண்டும் பார்க்க சலிக்காத படங்களின் பட்டியலில் உதிரிப்பூக்களுக்கு இடம் உண்டு.

சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், போன்ற நடிகர்கள் ஒளிவட்டத்தில் இருந்து விலகத் துவங்கிய எழுபதுகளின் இறுதியிலிருந்து, எண்பதுகளின் துவக்கம் வரையிலான காலகட்டத்தை, தமிழ்ச் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லலாம். கதாநாயகனை மையப்படுத்தி, அதீதமான உணர்ச்சிக் குவியலாக இருந்த திரைப்படங்களை, மீட்டுக் கொண்டு வந்த படைப்பாளிகள் அனைவரும், அந்த காலகட்டத்தில் அறிமுகமானவர்கள் தான். பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், மகேந்திரனின் உதிரிப்பூக்கள், பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே ஆகிய மூன்று முக்கியமான படைப்புக்கள் அப்போதுதான் வெளிவந்து, தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றி அமைக்க முற்பட்டன. ஆனால், அந்த முயற்சி முழுதாக வெற்றி பெறவில்லை.

இயல்பான கிராமம் அது. ஊர்ப் பெரிய மனிதர் சுந்தரவடிவேலு ( விஜயன் ) அத்தனை நல்லவரில்லை. அவரது தம்பியே ( பூபதி ) அண்ணனுக்கு எதிரானவன். சுந்தரவடிவேலுவின் மனைவி, அஸ்வினி, அமைதியே உருவானவர், கணவன் செய்யும் அக்கிரமங்களை எதிர்க்கத் திராணியில்லாதவர். அவருடைய உலகம், தன் குழந்தைகள் ( அஞ்சு, ஹாஜா ஷெரீ·ப் ) தங்கை செம்பகம், அப்பா ( சாருஹாசன்) ஆகியோருடம் முடிந்து விடுகின்றது. அஸ்வினி நோய்வாய்ப்பட்டு இறந்து விட, மைத்துனியைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் சுந்தரவடிவேலு. மாமனார் மறுத்துவிட, வேறொருத்தியைத் திருமணம் செய்து கொள்கிறார். இதற்கிடையில் சுந்தரவடிவேலு நடத்தி வரும் பள்ளியின் ஆசிரியர் செம்பகம் மீது காதல் வசப்பட, சாருஹாசன், மகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். திருமணத்துக்குப் பின்பு, அக்காவின் குழந்தைகளை தன்னுடனே வைத்துக் கொள்ள அனுமதி வேண்டி, திருமணத்துக்கு முந்தைய தினம், சுந்தர வடிவேலுவைப் பார்க்க வரும் போது, சுந்தரவடிவேலு, அவளை மானபங்கப்படுத்தி விடுகிறார். பொறுத்த வரை போதும், கொதித்து எழுந்த ஊர்மக்கள், துரத்தி வந்து, தற்கொலை செய்து கொள்ள வைத்து விடுகின்றனர்.

வசனங்களுக்குப் பெயர் போன மகேந்திரன் ( ரிஷிமூலம், தங்கப்பதக்கம், வாழ்ந்து காட்டுகிறேன்.....) தன்னுடைய இரண்டாவது படத்திலே, வசனங்களுக்குப் பதில் காட்சியமைப்புக்களை நம்பியது முதல் ஆச்சர்யம். படத்தின் மொத்த வசனங்களையும் , இரண்டு A 4 காகிதத்தில் எழுதி விடலாம். அந்த ஊரில் டாக்டராக வரும் சரத்பாபுக்கும் அஸ்வினிக்கும் முன்பே பழக்கம் உண்டு என்று தெரிந்து கொண்ட சுந்தரவடிவேலு, டாக்டர் மீது காட்டும் வெறுப்பும், அதன் தொடர்ச்சியாக வரும் கைகலப்புக் காட்சியும், முதல் தரமானவை. சுந்தர.வடிவேலு மாதிரியான கணவனுக்கு வாழ்க்கைப் பட்ட அஸ்வினிக்கு, குழந்தைகள் தான் எல்லாம் என்பதை, ஒரே பாடலின் மூலமாக சொல்ல முடிகிற மகேந்திரனின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. இளையராஜாவின் இசையும், அஷோக்குமாரின் ஒளிப்பதிவும், மகேந்திரனின் கற்பனையும் ஒன்றாக சேர்ந்த அபூர்வமான கலவை அது.

பொதுவாக, திரைப்படங்களில் வில்லன்கள் திருந்தும் காட்சிகளை, எத்தனைக்கு எத்தனை சீரியஸாக எடுத்தாலும் சிரிப்பைத்தான் வரவழைக்கும். இதிலும் சுந்தரவடிவேலு, இறுதிக் காட்சியில் திருந்துகிறார். ஊர்மக்கள் அனைவரும், அவரை, கடற்கரைக்குக் தள்ளிக் கொண்டு வந்து, " குதித்து செத்துப் போ " என்று மிரட்டும் போது, அவரது முகபாவமே, அவரது மனமாற்றத்தைச் சொல்கிறது. ஊர் மக்கள் அனைவரையும், அமைதியாகத் திரும்பிப்பார்க்கிறார். அவர் ஏதோ நீளமான வசனம் பேசப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அவர் " நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க... உங்க எல்லாரையும் நான் என்னைப் போல மாத்திட்டேன்..நான் செஞ்சதுலேயே பெரிய தப்பு அது தான் " என்று சொல்லும் காட்சி, மகேந்திரனின் கூர்மைக்கு உதாரணம்.

சாகும் தருவாயில், அங்கே வரும் தன் குழந்தைகளை, அணைத்து முத்தமிட்டு, " ஒழுங்கா படிக்கணும் , நல்ல பிள்ளைங்களா இருக்கணும், அப்பா குளிக்கப் போறேன் " என்று சொல்லி விட்டு கடலில் இறங்கிறார். ஆனால், அவர் கடலில் மூழ்குவதை காமிரா காண்பிப்பதில்லை, மாறாக, அங்கே கூடியிருக்கும் மக்களைத்தான், அவர்களது முகபாவங்களைத்தான் பார்க்கிறோம். குழந்தைகள் இருவரும், கடலில் குளிக்கப் போன அப்பா வருவாரா என்று காத்துக் கொண்டிருக்கும் போது படம் நிறைவடைகிறது.

அதிரடியான இசை இல்லாமல், ஆர்பாட்டமான காட்சிகள் இல்லாமல், இயல்பான ஒளியில், யதார்த்தமான நடிப்பில், மகேந்திரன் உருவாக்கிய இப்படம், பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைப் பற்றி பேசுவதைக் காட்டிலும், விவரித்து எழுதுவதைக் காட்டிலும், படத்தை நேரடியாகப் பார்ப்பதுதான் முழுமையான அனுபவத்தைத் தரும்.

இந்த இயல்புத் தன்மை கெடாமல், மகேந்திரன் இயக்கிய மற்றொரு திரைப்படம், மெட்டி. இந்தப் படத்தைப் பற்றி பின்னொரு சமயத்தில்...

Comments:
அருமையான பதிவு, பிரகாஷ்.

-மதி
 
பிரகாஷ்
படம் முழுவதையும் மிகச் சுருக்கமாக - சிலவரிகளுக்குள் விளக்கியிருப்பது அருமை. சுந்தர வடிவேல் கடைசியில் ஆற்றில் இறக்கப்படுகிறார், கடலில் அல்ல என்ற ஞாபகம்.
 
நல்ல பதிவு. நன்றி.
 
என் தெய்வம் மாங்கல்யம்தான் என்கிற வரி மேலும் சிலவற்றைச் சொல்லவில்லை? இந்த வரிகள் அஸ்வினியின் பாத்திரத்தை அப்படியே ஓர் இயல்பான கிராமத்துப் பெண்ணின் பாத்திரத்தோடு ஒத்துப் போகச் செய்யும் வரி. குழந்தைகள் முக்கியம்; கணவன் மோசமானவன் என்றாலும் "என் தெய்வம் மாங்கல்யம்தான்" என்கிற வரிக்குப் பின்னால் இந்தியப் பெண்களின், புரட்சிப் பெண்களல்லாதவர்களின், பொதுவான மனத்தைப் பிடித்துவிடமுடியும். எழுதியது யார்? கங்கை அமரனா முத்துலிங்கமா?
 
த்த்தோடா.... அடுத்த வாரம் இந்த படத்தை எழுதலாமுன்னு நினைச்ச நீங்க போட்டுத் தாக்கிட்டீங்க.

நல்ல பதிவு பிரகாஷ்.

அடிக்கடி திரும்ப திரும்ப பார்க்கும் படங்களில் இதுவும் ஒன்று. சொந்தமாக விசிடி வாங்கி என்னுடைய பெர்சனல் கலெக்ஷனின் வைத்துக் கொண்டாகி விட்டது. படத்தில் இழையோடியிருக்கும் நகைச்சுவையை கவனித்தீர்களா பிரகாஷ்? முடிவெட்டுபவர்,குமரி முத்து என மிக இயல்பான படத்தோடு ஒட்டிய நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இந்த படத்தை ரஷ்ய அரசாங்கம் வாங்கி ரஷ்யாவெங்கும் திரையிட்டது என்பது கொசுறு செய்தி.

கடைசியில் விஜயனை ஆற்றில் இறக்குவிடுவாங்க. கடலில் அல்ல.
 
மகேந்திரனின் ஸ்கீரீன் ப்ளே மிகவும் கவர்ந்தது என்றாலும், விஜயனின் நடிப்பு சூப்ப்ப்ப்ர்!
ஆனா, இன்னி வரை மெட்டி நல்ல படம் என்று பலரும் சொல்வது என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஓவர் சோகம்! படம் முழுவதுமே யதார்த்தத்தை மிஞ்சிய சீரியல் டைப் அழுகை பிளஸ் அழுமூஞ்சிகள்.
 
மதி, நந்தலாலா, பிரசன்னா, அபூ, உஷா நன்றி

//"என் தெய்வம் மாங்கல்யம்தான்" என்கிற வரிக்குப் பின்னால் இந்தியப் பெண்களின், புரட்சிப் பெண்களல்லாதவர்களின், பொதுவான மனத்தைப் பிடித்துவிடமுடியும். எழுதியது யார்? கங்கை அமரனா முத்துலிங்கமா? //

பிரசன்னா : சொல்லிட்டீங்களா? கட்டுடைக்கிறவங்க கையிலே அகப்பட்டா அவ்ளோதான் :-). அந்தப் பாட்டை எழுதினது கண்ணதாசன்.

//த்த்தோடா.... அடுத்த வாரம் இந்த படத்தை எழுதலாமுன்னு நினைச்ச நீங்க போட்டுத் தாக்கிட்டீங்க. //

நன்றி விஜய் அதனால் என்ன? நீங்களும் எழுதுங்க...
 
அன்பு பிரகாஷ்,

நல்ல பதிவு. நானும் கூட இந்தப் படத்தை எழுத வேண்டுமென்றிருந்தேன். இந்தக் கட்டுரையை இன்னும் கூட நீளமாக எழுதியிருக்கலாம். தமிழில் அவ்வளவு முக்கியமான படமிது.

////தன்னுடைய இரண்டாவது படத்திலே, வசனங்களுக்குப் பதில் காட்சியமைப்புக்களை நம்பியது முதல் ஆச்சர்யம். ////


இது மகேந்திரன் இயக்கிய முதல் படம் என்று நினைக்கிறேன். மற்ற படங்களில் அந்தந்த இயக்குநர்களின் தேவைக்கேற்ப பக்கம் பக்கமாக வசனம் எழுதி வெறுத்துப்போன மகேந்திரன், வசனத்தை விட காட்சியமைப்புகளே முக்கியம் என்று அவர்களுக்கு உணர்த்துவதற்காக தன்னுடைய படங்களில் வசனங்களை மிகவும் குறைத்திருக்கலாம்.


/////ஊர்மக்கள் அனைவரும், அவரை, கடற்கரைக்குக் தள்ளிக் கொண்டு வந்து,//////

ஊர்மக்களின் கோபம் வைக்கோல் போரில் தீப்பற்றுகிறாற் போல் மெல்ல மெல்ல கனிந்து இறுதியில் ஊழித்தீயைப் போல் பெருக்கெடுத்து விடுகிறது. இதை மிக நுணுக்கமாக கையாண்டிருப்பார் மகேந்திரன்.

////இளையராஜாவின் இசையும்,/////


இளையராஜா நிஜமாகவே ராஜாவாக இருந்து தமிழ்த்திரையை ஆண்ட பொன்னான காலங்கள் அவை. 'அழகிய கண்ணே' படப்பாடலில் ஒரு வயலின் பிட்டுக்கு ஆட்டுக்குட்டி துள்ளிப் போகிற காட்சியை மிகப் பொருத்தமாக இணைத்திருப்பார் எடிட்டர் லெனின்.


////டாக்டர் மீது காட்டும் வெறுப்பும், அதன் தொடர்ச்சியாக வரும் கைகலப்புக் காட்சியும், முதல் தரமானவை. //////


மிகவும் அருமையான காட்சியமைப்பு. டிஷ்யூம் டிஷ்யூம் என்று வெறுப்பேற்றுகிற சண்டைக்காட்சிகள் மத்தியில், சாதாரண இரு நபர்கள் மூர்க்கமாக அடித்துக் கொள்வதை அவர்களை காட்டாமல் வேடிக்கை பார்க்கிற ஆடு மேய்க்கும் சிறுவனின் தீவர முகபாவத்திலும், பின்பு இருவரும் தலைகலைந்து மூச்சு வாங்கி நிற்கிற காட்சிகளிலுமே மிக அழுத்தமாக வெளிப்படுத்திய உத்தி பாராட்டத்தக்கது.

மீண்டும் பார்க்கத்தூண்டுகிறாற் போல் செய்துவிட்டீர்கள். படத்திற்கு எங்கே போவது? எப்பவாவது பொதிகையில் எதிர்பார்க்க வேண்டியதுதான்.
 
பிரகாஷ்
நன்றாக விளக்கியுள்ளீர்கள்.

பதினாறுவயதினிலே பற்றியும் எழுதுங்கள்.

அழியாத கோலங்கள் நான் பார்க்காத படம். கதையை மட்டும் தெரிந்து கொண்டேன்.
அந்த நேரத்தில் இப்படத்துக்கு சிலர் எதிர்ப்புக் குரலும் கொடுத்தார்கள். எனது தங்கையும் அண்ணனும் நல்ல படம் பார் என்றார்கள். எனக்குப் பார்க்க அந்த நேரத்தில் ஏதோ சந்தர்ப்பம் அமையவில்லை. இனிக் கிடைத்தால் பார்க்கலாம்.

நீங்கள் எழுதியதை வாசித்த பின் உதிரிப்பூக்களை மீண்டுமொருமுறை பார்க்க ஆவலாயுள்ளது.

நான் எண்ணும் போது.. பாடல் அழியாத கோலங்களில்தானா..?
 
பிரகாஷ்,தங்கள் பதிவு திரு.மகேந்திரனுக்கு ஒரு மாலையாகட்டும்.அவரை எல்லா வகையிலும் போற்றத்தாம் வேண்டும்.தமிழ்ச்சினிமாவின் தரத்தை சமூகமட்டத்தில் உயர்த்தியவரில் மகேந்திரன்,ருத்திரையா,பாலுமகேந்திரன் போன்றவர்களே போற்றப்படவேண்டியவர்கள்!இவர்கள்தாம் மக்கள் சார்ந்த படைப்புகளைத் தந்தவர்கள்.இவர்களில் முதன்மையான படைப்பாளி திரு.மகேந்திரன் ஓருவரே.உதிரிப்பூக்களை பற்பல சந்தர்பத்தில் பார்த்துப் பார்த்து நமது மனதுக்குத் தெம்பையூட்டிக்கொள்வது என் இயல்பு.அவரை எப்பவுமே மறக்கமுடியாது.ஆனால் இன்றைய வர்த்தகச் சினிமா முழு இந்தியத் துணைக்கண்டத்தையுமே பாழடிக்கிறது.இப்பவுள்ள படங்களைப் பார்ப்பதும் சரி சொவ்ற் செக்ஸ் படம் பார்ப்பதும் சரி-ஒரே நிலைதாம்.ஆண்குறி விறைத்துச் சுயதிருப்தி இன்பம் நோக்கித் தள்ளும் சினிமா, இன்றைய சினிமா!
 
//*கடைசியில் விஜயனை ஆற்றில் இறக்குவிடுவாங்க. கடலில் அல்ல.*//

நன்றி! விஜய்.
 
This comment has been removed by a blog administrator.
 
//தமிழ்ச்சினிமாவின் தரத்தை சமூகமட்டத்தில் உயர்த்தியவரில் மகேந்திரன்,ருத்திரையா,பாலுமகேந்திரன் போன்றவர்களே போற்றப்படவேண்டியவர்கள்!இவர்கள்தாம் மக்கள் சார்ந்த படைப்புகளைத் தந்தவர்கள்.இவர்களில் முதன்மையான படைப்பாளி திரு.மகேந்திரன் ஓருவரே//

சூப்பர்.. ஆனால் மகேந்திரனும் தற்காலத்திய அரசியல்வாதி கணக்காய் தனது மகனை மகனை வளர்த்து, அவரது மகனும் ஒரு சமூகவியல் படத்தை அண்மையில் கொடுத்திருக்கீறார். பார்த்தீர்களா?! ஊருக்கு தான் உபதேசம்!
 
ஈரோட்டுப் படம்,வணக்கம்!இன்றைய சினிமாவை-அதன் ஆளுமையைத் திசைதிருப்பி வெறும் பாலியல் இச்சைகளைத் தூண்டும் ஊடகமாக்கியது யார்?இந்த வர்த்தகத் துறைதானே?இவர்கள் எவருமே மக்கள் முன்னேற்றத்துக்காக-ஆத்மீகத்தேவைகளுக்காகப் படமெடுப்பதில்லை,மாறாகப் பணம்பண்ணும் நோக்கம்.எனவே எக்கேடுகெட்டாலும் தமிழரின் பணத்தைச் சுருட்டுவதே நோக்கமாக இருக்கும்போது மகேந்திரனே திரையுலகைவிட்டு ஓடவேண்டுடியிருந்தது.அவரது மகன் அப்பாமாதிரியே உருவாகுவாரெனப் பார்க்கமுடியாது.அது அவருது சுயதேர்வு.இத்தேர்வானது இன்றைய சினிமாவின் எண்ணவோட்டத்தால் தீர்மானிகப்படுகிறது.எனவேதாம் மாற்றுச் சினிமாகுறித்த ஆர்வமுடைய கமலகாசன் வெறும் மசாலத்தனமாகப் படம் எடுக்கிறார்.அந்த அற்புதக் கலைஞனே தன் சுயத்தை இழக்கும்போது புதியவர்கள் எப்படித் தாக்குப்பிடிப்பது?
 
மகேந்திரனின் இன்னொரு அருமையான படம் 'பூட்டாத பூட்டுக்கள்'. ஆனால் இந்த படம் படுத்தோல்வி. நல்ல ஒரு கருவை கையாண்டிருப்பதாக கூறியிருந்தார்கள். கதையை நானும் படித்தேன். மகேந்திரனின் இயக்கத்தில் அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.

நானும் சிங்கப்பூரில் விசிடியை தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. பார்த்தவர்கள் யாராவது உண்மை விமர்சனைத்தை எழுதலாமே.
 
விஜய் : பூட்டாத பூட்டுக்கள் நல்ல திரைப்படம் ஆனாலும் மெட்டி, உதிரிப்பூக்கள் அளவுக்கு இருக்காது. மலையாள நடிகர் ஜெயனும், ஒரு கன்னட நடிகையும் ( இவர் உதிரிப்பூக்களில் விஜயனின் இரண்டாவது மனைவியாக வருவார் ) நடித்த படம். கொஞ்சம் complicated story. ஜெயனுக்கு குழந்தை என்றால் ஆசை. ஆனால் அவனுக்கு குழந்தை பிறக்க வழியில்லை. அதனால், அவன் மனைவி, வழி தவறிப் போவாள் என்று கதை போகும். என்றாலும், உதிரிப்பூக்களில் இருந்த இயல்புத்தன்மை இதிலே இருக்காது. நடைமுறையில் இருந்து விலகி எடுக்கவேண்டும் என்பதற்காகவே, வலிந்து ஒரு சிக்கலான கதையைத் தேர்வு செய்தாரோ என்று தோன்றும். "ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது" என்று ஒரு அருமையான பாடல் இதில் இருக்கிறது. இணையத்தில் கிடைக்கவில்லை.
 
//நான் எண்ணும் போது.. பாடல் அழியாத கோலங்களில்தானா..? //

சந்திரவதனா : மன்னிக்கவும், இப்போதுதான் உங்கள் கேள்வியைக் கவனித்தேன். அந்த மாதிரிப் பாடலை, உதிரிப்பூக்களில் பார்த்த நினைவில்லையே...
 
Nandu enra oru arumaiyana padamum Undu, Romabanaal munnal parthathu. Meendum parthapin eluthugiren. Mahendranin arputhamaana padam.
 
//மகேந்திரனின் ஸ்கீரீன் ப்ளே மிகவும் கவர்ந்தது என்றாலும், விஜயனின் நடிப்பு சூப்ப்ப்ப்ர்!//
செண்பகம்: நீங்க மனுஷனே இல்ல.
சுந்தரவடிவேலு (தூக்க கலக்கத்தில்): சரி!
செண்பகம்: இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே ஆகவேண்டும்.
சுந்தரவடிவேலு: பாக்கலாம்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< HomeMoved to here