பிரபலங்கள் சந்திப்பு - my version

மூக்கரின் கட்டுரையை ஒட்டி

பிரபலங்கள் சந்திப்பு எல்லாம் பின்னால் தான் நடந்தது. முதலில் பிரபலங்களைப் பார்த்தது.

1981. அந்த ஆண்டில் தான் முதலில் சென்னையில் காலடி எடுத்து வைத்தது. ஜாகை மந்தைவெளி, சடையப்ப முதலி தெரு. எங்கள் வீடு அந்தத் தெருவின் முதல் வீடு. அதனால், சைடில் இருக்கும் பலகணி, பிரபலமான ராமகிருஷ்ணா மடம் சாலையைப் பார்த்த வண்ணம் இருக்கும். நாலு கட்டிடம் தாண்டினால் கபாலி டால்க்கீஸ் ( முதலில் அதை அப்படித்தான் உச்சரித்தேன்). அந்த வீட்டுக்கு வந்து குடியேறிய சில தினங்களிலேயே நடிகர் சுருளிராஜனைப் பலகணி வழியாக பார்த்தேன். படுத்துக் கொண்டிருந்தார். அவரை தூக்கிக் கொண்டு இடுகாட்டுக்குப் போய்க் கொண்ட்டிருந்தார்கள். ( பல வருடங்கள் கழித்து அவருடைய மகன் சண்முகவேல், என்னுடன் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தார்). அவர்தான், மன்னிக்கவும் அதுதான் நான் பார்த்த முதல் பிரபலம்.

பள்ளிக்குச் சேர்ந்த கொஞ்ச நாளில், வேறொரு ஊரில் இருந்து வந்த நான், எதிலும் ஒட்டாமல் ஒரு பயங்கலந்த பார்வையுடனே இருப்பேன். ஆங்கிலம் வேறு புரியாது. (மூன்றாவது வகுப்பில் என்னத்தை புரியும்.) ஒரு நாள் வகுப்பில் திடீர் என்று பரபரப்பு கிளம்பியது என்னவென்று விசாரித்ததும், ஒருத்தரைக் காட்டினார்கள். அவரை நான் முன்னே பின்னே பார்த்ததில்லை. அவர், கடைசி பெஞ்சு தேன்மொழிக்கு சாதம் ஊட்டிக்கொண்டிருந்தார். யார் அவர் என்று கேட்டதும். தெரியாதா? அவர்தான் நடிகர் ஜெய்கணேஷ் என்றார்கள். அவர் ரஜினிகாந்த்தாக இல்லாததாலும், அதுவரை அவரை நான் பார்த்ததே இல்லை என்பதாலும் நான் அவரைக் கண்டு கொள்ளவில்லை. அப்போது மார்க்கெட் இல்லாமல், நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் என்று ஏழாம் வகுப்பு படிக்கும் போது தேன்மொழி சொன்னாள். சில வருடத்துக்கு முன் ஜெய்கணேஷ் மறைந்த போது அவரது குடும்பத்தினரின் படத்தை ஒரு வார சஞ்சிகையிலே பார்க்க நேர்ந்தது. கும்பலாக பெண்கள் இருந்த அந்தப் புகைப்படத்தில் தேன்மொழியை கண்டுகொள்ள இயலவில்லை.

நான் இருந்த தெருவும் லேசுபட்டதில்லை. எங்கள் தெருவுக்குள் நுழைந்து வலது பக்கம் திரும்பினால் அடைஞ்சான் முதலி தெரு. அதை அடையாமல் நேராகப் போனால்,வலது பக்கம், நாலாவது பில்டிங்கில் திருச்சி லோகநாதன் அவர்களின் இல்லம். பிரதி எடுத்தாற்போல பல சைசில் மகாராஜன், தியாகராஜன் என்று பல ராஜன்கள் அவருக்கு மகன்களாக இருந்தார்கள். அப்போது அவர் மிகவும் நோய்வாய்பட்டிருந்ததால், வெளியே வரமாட்டார். அவருடைய ஒரு மகனான தீபன்சக்ரவர்த்தி, என் வீட்டுக்கு எதிரே நின்று நண்பர்களுடன் கதையடித்துக்கொண்டிருப்பார். அவர்தான் பூங்கதவே தாழ்திறவாய் என்ற பாட்டை பாடியவர் என்று அப்போதே தெரிந்திருந்தால் ஓரிரு வார்த்தை பேசியிருப்பேன்.

நான் வந்து குடியேறி சில காலத்திலேயே ஜாகை மாற்றிக் கொண்டு வேறு இடத்துக்குப் போனவர் ஷோபனா ரவி. ஷோபனா ரவி எப்பேர்ப்பட பிரபலம் என்பதை 70களின் இறுதிகளிலும் , எண்பதுகளின் துவக்கத்திலும், வார இறுதி தொலைக்காட்சி சினிமாவுக்கு நடுவில்ம் செய்திகளை ஆவலுடன் பார்க்கும் நேயர்களிடம் விசாரித்தால் தெரிய வரும். அவருடைய கணவர் ரவியும் எங்கள் ஏரியாவின் பிரபலம் தான். கிரிக்கெட் ஆர்வலர். வக்கீல். எதிர் வீட்டில் இருந்த நடிகர் ப்ரேம் ஆனந்த் ( 80களின் துவக்கத்தில் சிவாஜி ஹீரோவாக நடித்து வந்த படங்களில் நிச்சயம் இருப்பார். அண்ணன் ஒரு கோவில் படத்திலே வில்லனாக வருவார்), ஏரியாவில் இருந்ததனால் அடிக்கடி தென்படுகிற வி.எஸ்.ராகவன், டி.எம்.சவுந்திரராஜன், கைனடிக் ஹோண்டாவில் பறக்கும் 'மாது' பாலாஜி போன்றவர்களையெல்லாம் லிஸ்ட்டில் சேர்க்கலாமா என்று தெரியவில்லை.

பிறகு, மந்தைவெளியில் இருந்து சாந்தோம் பீச்சுக்கு போகிற வழியில் வெஸ்ட் சர்க்குலர் ரோட் இருக்கும். அங்கே இருந்த இருந்த சீர்காழி கோவிந்தராஜன் வீட்டில், பி.ட்டி பீரியட் முடிந்து வேர்க்க விறுவிறுக்க ஓடிவரும் போது, ஒரு முறை ஐஸ் வாட்டர் வாங்கிக் குடித்த புராணத்தை கிளப்பில் ஒரு முறை பாடியிருக்கிறேன். டியூஷன் போகிற போது, டீச்சர் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பங்களாவின் வாசலில் பெர்முடாஸ் போட்டுக் கொண்டு ஒருவர் இருந்ததை பார்த்து வியந்து போனேன். சினிமாக்களில் விடவும் நேரில் இளமையாக இருந்தார் எஸ்.வி.சேகர். என்ன மேத்ஸ் ட்யூஷனா என்று வாலண்டியராக விசாரித்து ஆச்சர்யப்படுத்தினார்.

அதன்பிறகு பள்ளிக்காலம் முடியும் வரை வேறு பிரலங்களைப் பார்த்தது கிடையாது. பள்ளி ஆண்டுவிழா, பள்ளியின் அறிவியல் கண்காட்சி ஆகியவற்றுக்கு வருகை தந்த ஹெச்.வி.ஹண்டே ( இவர் இப்ப எந்த கட்சியில் இருக்கிறார்? ), கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகம், சபாநாயகராக இருந்த க.ராசாராம், லேனா.தமிழ்வாணன், கவர்னராக இருந்த குரானா, முதல்வராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன், பின்பு முதல்வராக வந்த கருணாநிதி, லேனா தமிழ்வாணன், நாட்டிய தாரகை அலர்மேல்வள்ளி இன்னும் நினைவுக்கு வராத நிறையப்பேர்களைத் தவிர.

இவர்களைப் பார்வையாளனாகத்த்தான் பார்த்திருக்கிறேன். அவர்கள் கையால் பரிசுகள் வாங்கிய அனுபவம் கூட இல்லை. கூடப் படித்த துரோகிகள் அதற்கு வாய்ப்புத்தரவில்லை. :-)

பள்ளி முடிந்து ஊருக்கு, சொந்த வீட்டுக்கு போனால் அனுபவங்களும், சந்தித்த பிரபலங்களும் வேறு மாதிரி. தமிழ் இலக்கிய மன்றம் என்ற ஒரு அமைப்பின் நிறுவன செயலாளராக என் தந்தை இருந்ததனால், மன்றம் ஏற்பாடு செய்திருக்கும் விழாவுக்கு வந்த பேச்சாளப் பிரபலங்களுக்கு மதிய உணவு எங்கள் இல்லத்தில் தான். மார்கழி மாத திருப்பாவை திருவெம்பாவையின் போது பத்து நாட்களுக்கு பத்து பேர் வருவார்கள். அப்படி வந்தவர்களில் டாக்டர் சுதா சேஷய்யன், வழக்கறிஞர் சுமதி, ஔவை.து.நடராசன், பேராசிரியர்.சத்தியசீலன் , அ.ச.ஞானசம்மந்தன், சுகி.சிவம் போன்றவர்கள் முக்கியமானவர்கள். (இதிலே சுகி.சிவம், ஸ்டெப்கட்டிங்குடன் பட்டையான சோடா பாட்டில் கண்ணாடி அணிந்த்து ஒல்லியாக இருந்து கொண்டு உணவருந்தும் கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்று எங்களிடம் உண்டு. பார்த்தால் சிரிப்பாக இருக்கும். சிரித்துவிட்டு சன் டீவியை போட்டால், எளிமையாக தோற்றமளிக்கு ஆடம்பர ஜிப்பாவுடன், படு பந்தாவாக காட்சி தரும் சுகிசிவத்தைப் பார்த்தால் அந்த சிரிப்பு ஆ·ப் ஆகும். :-).

பள்ளி இறுதி ஆண்டு முடிந்ததும் தான், பிரபலங்கள் சினிமா அரசியலில் இருந்து மட்டும் வருபவர்களில்லை என்று புரிந்தது. பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களை வாசிக்கத்துவங்கி இருந்தேன். ஒரு கட்டத்தில் என் வீட்டில் இருந்து ரெண்டு பஸ் ஸ்டாப் தூரத்தில் இருந்த பாலகுமாரனை பார்த்தே ஆகவேண்டும் என்று வெறி ஏற்பட்டு, ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அந்த புராணத்தையும் கிளப்பில் ஒரு முறை எழுதி உள்ளேன். நான் முதன் முதலாக எழுதிய கட்டுரை அது. அந்த சந்திப்பில் மாலன், ஞானக்கூத்தன் போன்றவர்களையும் பார்த்தேன். பாலகுமாரனுடனான அந்த சந்திப்போடு, எழுத்தாளப் பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பும் போயிற்று.

நான் படித்த கல்லூரிக்கும் பிரபலங்களுக்கும் சம்மந்தமே கிடையாது. அதனால் அங்கு, முதல் ஆண்டுக்கு ஆங்கில வகுப்பு எடுத்த, ஊட்டியில் இருந்து வந்திருந்த ஞானாம்பிகை தவிர வேற ஒரு பிரபலத்தைப் பார்த்தது கிடையாது. பிரபலம் எனப்படுபவர் யார் ? ஒரு டொமெயினில் அவரை அறியாதவர்கள் யாரும் கிடையாது என்று இருந்தால் அவர் பிரபலம் என்று சொல்லப்படுவார். எங்கள் கல்லூரிப் பிரதேசத்தில் எங்களை விட மூன்றே வயது மூத்த ஞானாம்பிகையை அறியாதவர்கள் யாரும் கிடையாது. அந்த தோற்றப் பொலிவையும் வனப்பையும், குரலினிமையையும், உச்சரிப்பு சுத்தத்தையும், இன்றது தேதிவரை இன்னொருத்தரிடம் நான் பார்த்தது கிடையாது. அந்த வகையில் அவரும் ஒரு பிரபலம் தான்.

இதல்லாம் முடிந்து ஒரு பத்து வருடங்கள் கழிந்து, ராகாகியில் மூலம் எழுத்தாளர் வெங்கடேஷைத்தான் முதலில் பார்த்தேன். அவர் கணையாழி எழுத்தாளர். நான் கணையாழி வாசிக்கத்துவங்கிய காலங்களில் அவர் அதில் இருந்து விலகியிருந்தார். அதிகமாக அவரைப் பற்றித் தெரியாது. ஆனால் , ஒரு எழுத்தாளப் பிரபலம் என்று பத்திரிகைகளின் மூலம் அறியப்பெற்ற ஒருவரைப் பார்த்தது. எழுத்தாளர் பா.ராகவனைத்தான். போன் செய்து வரவழைத்துப் பேசினார். அதன் பிறகு ஹாலி·பாக்ஸில் இருந்து வரும் வரை காத்திருந்து சந்தித்தது எழுத்தாளர் இரா.முருகனை. பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகி, சந்திப்புகள், கூட்டங்கள் என்று அதிகமாகி அழகிய சிங்கர், பி.ஏ.கிருஷ்ணன், இயக்குனர் வசந்த், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் சிபிச்செல்வன் போன்றவர்களை பார்ப்பது மட்டுமில்லாமல் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. திசைகள் இயக்கம் மூலமாக மாலன், கவிஞர் வைகைச் செல்வி, மிக நல்ல நண்பராகிவிட்ட யுகபாரதி, பாரதிபாலன், அமுதசுரபி ஆசிரியர் அண்ணா கண்ணன், எழுத்தாளர் அருண் சரண்யா, பத்திரிக்கையாளர் சந்திரமவுலி, தீராநதி ஆசிரியர் குழுவின் தளவாய் சுந்தரம், கல்கி ஏக்நாத், மூக்கர் போட்டு வறுத்தெடுத்த எஸ்.ஷங்கரநாராயணன் என்ற லிஸ்ட்டும் கொஞ்சம் நீளம்.

நாளைக்கு, அதாவது ஞாயிற்றுக்கிழமை, இலக்கிய பீட புதினப் போட்டியில் முதல் பரிசு பெற்ற பா.ராகவனுக்கு பரிசளிப்பு விழா , நாரத கான சபாவில் காலை பத்தரை மணிக்கு நடக்க இருக்கிறது. சென்னை வானொலியின் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் பரிசு வழங்க, சிறப்புரை ஆற்றுபவர் எழுத்தாளர் அனுராதாரமணன்.

விழா முடிந்ததும், நான் மேற் சொன்ன பட்டியலில் ஒன்றிரண்டு பேர் கூடுதலாக இடம் பெற்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.


அன்புடன்
பிரகாஷ்

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I