எழுத்தும் இலக்கியமும்

பிரபு தன் வலைப்பதிவில் போகிற போக்கில் சொன்ன ஒரு விஷயம் என் சிந்தனையைத் தூண்டிவிட்டது. வர்த்தகம் பற்றி எழுதும் ஆட்கள் மிகக் குறைவு என்று அவர் சொன்னது, எனக்குள் மிக நீண்ட காலமாக இருக்கும் ஒரு எண்ணத்தை அசை போட வைத்துவிட்டது.

ஆங்கிலத்தில் கட்டுரை இலக்கியம் என்று என்று எடுத்துக் கொண்டால், யார் யார் எந்த எந்த துறைகளில் இருக்கிறார்களோ அவர்கள் அந்த அந்த துறைகள் பற்றி கட்டுரைகள் எழுதுகிறார்கள். நிபுணர்களும் வல்லுனர்களும் எழுதும் ஏதாவது ஒரு இயல் சார்ந்த கட்டுரைகளை நாம் நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், இணையத்திலும் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால், இங்கே பார்த்தால் , பொறியாளர்களும், வங்கி அலுவலர்களும், ஆசிரியர்களும், பத்திரிக்கைத் துறையாளர்களும், விஞ்ஞானிகளும், ஆடிட்டர்களும் கவிதைகளும் கதைகளும் நாவல்கள் மட்டும் தான் எழுதுகிறார்கள். கொஞ்சம் விலகி எழுதினால் கூட அது அரசியலாவோ ( கருணாநிதியா சோனியாவா?) சினிமாவாகவோதான் ( அகிரா குரோசோவா, வைரமுத்து, பாய்ஸ் இன்ன பிற) இருக்கிறது. வார இதழ்களில் வரும் கட்டுரைகளை ( அவை என்ன மேட்டராக இருந்தாலும் ) எழுதுவது பத்திரிக்கையாளர்கள் தான்.எல்லாவற்றிலும் அவர்கள் வாயை வைப்பதாலேயே, எதிலுமே ஆழமிருப்பதில்லை. பொருளாழம் மிக்க கட்டுரைகள் தமிழில் பெரும்பாலும் ( சில துறைகள் தவிர்த்து) கிடைப்பதில்லை என்பது உ. கை . நெல்லிக்கனி.

அதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தேன்.

முதலிலே, என்னதான் துறை வல்லுனராக இருந்தாலும், ஒரு கருத்தை , பிறர் புரிந்து கொள்ளும் அளவுக்கு எழுத அடிப்படையிலே ஒரு திறமை வேண்டும். சொல் வளம், நடை, கோர்வையான சிந்தனை, அதனை எழுத்தில் கொண்டு வரும் திறன் , விரல்களில் வலிவு, ஒரு நல்ல பார்க்கர் பேனா மற்றும் காகிதங்கள் அல்லது, ஆப்டிகல் மவுஸ் , சாம்சங் விசைப்பலகையுடன் கூடிய நல்ல கணிணி என்று பலதும் இருந்தால் தான் எழுத வரும்.

அப்படி இருக்கக் கொடுப்பினை உடைய கணிப்பொறியாளர்கள், அறிவியலாளர்கள்,. வர்த்தகர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற துறை வல்லுனர்கள் தங்கள் துறை தொடர்பான கட்டுரைகளுக்கு ஆங்கிலத்தையும் , கதை கவிதை போன்ற சில்லுண்டி சமாசாரங்களை எழுதுவதற்கு மட்டும் தமிழையும் பயன்படுத்துவது கொஞ்சம் மனசுக்கு பேஜாரான விஷயம் தான்.

கேள்வி : சரி, இப்ப என்னத்துக்காக, கணிப்பொறியின் உள்கட்டமைப்பு, மருத்துவக்கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், வானசாத்திரம், போன்றவற்றை மாய்ந்து மாய்ந்து தமிழில் எழுதியாக வேண்டும் ?

பதில் : என்ன காரணத்துக்காக அவை ஆங்கிலத்தில் எழுதப்படுகிறதோ, அதே காரணத்துக்காகத்தான்.

மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆ·ப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் என்ற ஒரு பிரபல கல்வி மற்றும் வளர்ச்சித்துறை நிறுவனத்திலே பேராசிரியராக இருக்கும் திரு.இரா. ஆ.வேங்கடாசலபதி, அவர் தொகுத்தளித்த புதுமைப்பித்தன் படைப்புக்களுக்காகவும், அவருடைய இலக்கிய விமர்சனங்களுக்காகவும் நன்றாக அறியப்பட்டவர். பேராசிரியராக இருக்கும் அவர், தன்னுடைய துறை பற்றிய கட்டுரை எங்காவது எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை.

( "இதே ரேஞ்சுலே போனா, சுந்தர.ராமசாமியை ஜவுளிக்கடை வியாபாரம் பத்தி எழுதச் சொல்லுவியா? "

" வாயை மூட்றா வெண்ணை...." )


எழுதத் தெரிந்தவர்கள் எதை எழுதினாலும் அவை இலக்கியம் அல்லது இலக்கியம் சார்ந்து தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது நியதி இருக்கிறதா?

எழுத்து என்பதும் இலக்கியம் என்பது ஒன்றா அல்லது வெவ்வேறா?

ஒரு படைப்பாளியை, இன்னது எழுது, இன்னதை எழுதாதே என்று கூற எவருக்கும் உரிமையில்லை.ஆனால் கட்டுரை இலக்கியம் நன்றாக விரிவடைய, பல்வேறு தரப்பினரும் , படைப்பிலக்கியம் தவிரவும், தங்களுக்கு மிகப் பரிச்சயமான மற்ற விஷயங்கள் பற்றியும் தமிழில் பதிவு செய்ய வேண்டும். ஒரு எளிய வாசகன் புரிந்து கொள்ளும் அளவுக்கு நேர்த்தியாகவும், நயமாகவும் எழுத வல்லமை பெற்றவர்கள் தமிழிலே உண்டு.

எந்த ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், அதற்கு தகுந்த புத்தகம், ஆங்கிலத்தில் உண்டு. மோட்டார் சைக்கிள் மெக்கானிஸத்தில் இருந்து முதலாளித்துவத்த்தின் சாதகபாதகங்கள் வரை, புகைப்பட இயலில் இருந்து, புத்தப்பதிப்புக் கலை வரை, ஆர்னித்தாலஜியில் இருந்து அமெரிக்க கலாசாரம் வரை என்று பலதும் ஆங்கிலத்தில் உண்டு. தமிழில்?

தேடித்தேடிப்பார்த்தாலும், மணிமேகலைப் பிரசுரத்தின் do-it-yourself டைப் மலிவு விலைப் பதிப்புகள் தான் இறைபடுகிறது. அயிரை மீன் குழம்பு செய்வது எப்படி , ஆட்டுக்கல்லில் மாவாட்டுவது எப்படி என்று துவங்கி, இந்த 'எப்படி' வகைப் புத்தகங்கள் நிறைய கிடைக்கும் கூடவே, ஜோசியம், வாஸ்து, சமையல் கலை, தோட்டக்கலை புத்தகங்களுக்கும் குறைவில்லை. . ஆனால், நல்ல, எளிய நடையில் உருப்படியான தமிழில், எழுதப்பட்ட கட்டுரைகளும், புத்தகங்களும் மிகக் குறைவு.

நம்மிடையே, அறிவியல் எழுதும் வெங்கட் ரமணனும், கிரிக்கெட் எழுதும் பத்ரியும், சட்டம் பற்றி எழுதும் பிரபு ராஜதுரையும், அரசியல் எழுதும் வெங்கடேஷ¤ம், பத்திரிக்கை இயல் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லி இருக்கும் பா.ராகவனும், இந்தத் தேவையை புரிந்து கொண்டோ அல்லது எதேச்சையாகவோ எழுதுபவர்கள். இவர்களும், இந்த லிஸ்ட்டில் இன்னும் சேர இருப்பவர்களும் தங்கள் படைப்பிலக்கிய முயற்சிகள் கூடவே கட்டுரை உலகத்துக்கும் தீனி போட்டால், தொடர்ந்து அதே அலைவரிசையில் இயங்கினால், நமக்கு நல்ல புத்தகங்களும் கட்டுரைகளும்
கிடைக்கலாம்.

அன்புடன்
பிரகாஷ்



Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

9 weird things about prakash

மிக்ஸர் - I