வெயிலோ வெயில்
( புகைப்படத்துக்கும் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை )
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது சூரியன் எ····ப்ப்ப்ப்ப் எம்ம்ம்ம்ம்ம் என்று ஒரு அம்மணி என் ரேடியோ பொட்டியில் குந்திக் கொண்டு , அரைமணிக்கொருதரம் விடாமல் அலறிக் கொண்டிருக்க, படையப்பா ரஜினிகாந்த் போல சொக்காயை கழட்டிப் போட்டு விட்டு உட்கார்ந்திருந்தேன்.
இதற்காக போலீஸ்காரர்கள் நியூசென்ஸ் கேசில் எல்லாம் பிடிக்க முடியாது. நான் உட்காந்திருந்தது நாலுசக்கர சீருந்துக்குள். ஸ்பென்சர் வளாகத்தில் இருந்து மௌண்ட் ரோடு தர்கா இஞ்சு இஞ்சாக நகர்ந்து வர கிட்டதட்ட அரை மணிநேரம். நடுவில் ஒரு வெள்ளை யானை, i mean, ஒயிட் அம்பாசடர், நகரமாட்டேன் என்று சண்டி செய்ய, டிரா·பிக் போலீஸ்கார் கூட நாலு ஆளைக் கூட்டிக் கொண்டு, வந்து தள்ள, அதற்குள் எதிர்பக்கத்தில் இருந்து நாலைந்து வண்டிகள் குறுக்கே புகுந்து விட, க்ஷண நேரத்தில் பர்·பக்ட் டிரா·பிக் ஜாம்.
வெள்ளிக்கிழமையாக இருந்தால், இடப்பக்கம் இருக்கும் தர்காவுக்கு நாசர் வருவார். வேடிக்கை பார்க்கலாம். சனி ஞாயிறாக இருந்தால் வண்டியை ஓரங்கட்டிவிட்டு, எதுத்த பக்கம் இருக்கும் புகாரியில் வான்கோழி பிரியாணி சாப்பிடலாம். ஆனால் வியாழக்கிழமை. ஓம் ராகவேந்திராய நமஹ!
விடாமல் ஒலிக்கும் ஹாரன்களுக்கு இடையிலும் சூரியன் எ·ம் பெண் குரல் நன்றாகத்தான் கேட்கிறது. ஜிங்கிள்ஸ் தொல்லைதான் கொஞ்சம் ஓவர். கில்லி, ஆயுதஎழுத்து என்று புதுசு புதுசாக பாட்டு போட்டு கலக்குகிறார்கள். பழைய பாட்டெல்லாம் போடமாட்டாங்களா என்று விசாரித்தால், போடுவாங்களாம் ஆனால் ராத்திரி பதினோருமணிக்கு மேலாகத்தானாம். பழைய பாட்டு போட்டாலும் கூட, நண்பகல் பன்னிரண்டு மணிக்கு மௌண்ட் ரோடில் வெயிலில், வியர்வை கசகசக்க, காத்திருப்பது என்பது அவஸ்தைதான்.
சென்னை என்று இல்லை. இந்திய நகரங்கள் பெரும்பாலானவற்றில் இதுதான் நிலை. எல்லா வருடமும், இந்த வருஷம், போன வருஷத்தை விட வெயில் அதிகம் என்று சொல்கிறார்கள். எந்த ஊரில் இருந்து வருபவர்களாக இருந்தாலும், உங்க ஊரை விட எங்கள் ஊரில் வெயில் ஜாஸ்தி என்று தான் சொல்கிறார்கள். இதிலே மின்சாரத்தட்டுப்பாடு வேற. ஆளாளுக்கு மின்சாரதிட்டம் போடத்தான் செய்கிறார்கள். என்ரான் மாதிரி ஏதாவது ஒண்ணு வந்து அதிலேயும் சிக்கல்.
எல்லாபுத்தகத்திலும், வெயில் கொடுமையை சமாளிப்பது எப்படி என்று நடிகைகள் டிப்ஸ¤ கொடுக்கிறார்கள், உடம்பை சுற்றி ஒரு centralized air conditioning system வைத்துக் கொள்ளவும் என்று சொல்வதைத் தவிர்த்து, மோர் சாப்பிடுங்க, தர்பூசணி சாப்பிடுங்க எலுமிச்சை ரசத்தில் சோடா விட்டு குடித்தால் தொண்டை வறட்சி இருக்காது என்று நல்ல நல்ல உபதேசம் கிடைக்கிறது. டான்ஸில்ஸ் பிரச்சினை இருக்கிறவன் இந்த உபதேசங்களைக் கேட்டால் என்னாறது?
இன்னும் கத்திரியே துவங்கலே, அதுக்குள்ளேயே புலம்பலா என்று எனக்கே கடுப்பாகத்தான் இருக்கிறது, கத்திரியும் வரும். ரோட்டிலே அப்பளத்தை போட்டால் பொறியும். நிலத்தடி நீர் குறைந்து போகும். CSE இன் அறிவுரைகளை எல்லாம் தூர தூக்கிப் போட்டு விட்டு, ஜனங்கள் பெப்ஸி கோக் குடித்து தற்காலிகமாக வெயில் கொடுமையில் இருந்து தப்பிப்பார்கள். அதற்கு இன்னும் நாள் இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக எஸ்கேப் ஆகமுடியுமோ? சான்ஸே இல்லை.
சில விஷயங்களில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஒரு முறை, கோவையில் இருந்து சென்னைக்கு வரும் போது, விடாப்பிடியாக ஒரு பாடாவதி சிலம்பரசனின் படத்தை போட்டுத் தொலைத்தார்களே? என்ன செய்ய முடிஞ்சது? காதையும் கண்ணையும் இறுக்க மூடிக்கொள்வதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்? அது போலத்தான் சென்னை வெயிலும். வேனிலைத் தொடர்ந்து அடுத்து வர இருக்கும் வசந்த காலத்துக்காக காத்திருக்க வேண்டியதுதான், இல்லாட்டி ரொம்ப சுலபமா, ஊட்டி ஏற்காடு என்று ஜாகையை மாத்திக்கலாம்.
இங்கன இருக்கிற சென்னை மகா ஜனங்களே! எப்படிப்பா வெயிலை சமாளிக்கிறீங்க?
அன்புடன்
பிரகாஷ்
Comments