bye bye adolesence - for thenkoodu contest

ஒரு மொட்டு எப்போது மலராகிறது என்று யாராவது சொல்லமுடியுமோ? ஒரு பையன் எந்தக் கணத்தில் வயசுக்கு வருகிறான் என்றாவது சொல்லமுடியுமோ? அறிவியல் பூர்வமான விடைகள் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமலேயே, இது போல கோக்கு மாக்காகக் கேள்விகள் கேட்க, கவிஞர்களுக்கு உரிமை உண்டு. அதற்கு poetic license என்று பெயர். இதை இன்னமும் விரிவாகச் சொன்னால், கவிப்பேரரசரை வம்புக்கு இழுக்கிறாற் போல ஆகிவிடும். ஆக, அதைத் தவிர்த்து விட்டு, தற்சமயத்துக்கு, அந்த உரிமத்தை மட்டும், கவிதை வாசனையே தெரியாத நான் எடுத்துக் கொள்கிறேன்.

எதுக்கா?

தேவைப்படுதுங்க..

சுஜாதா எழுதின புதினங்களிலேயே அதிகம் பிடிச்சதுன்னு தலை பத்து பட்டியல் ஒண்ணு போட்டால், நிலாநிழல்ங்கற கதை என்னுடைய பட்டியலிலே நிச்சயம் இருக்கும். கல்லூரி முதலாண்டு படிக்கிற மாணவன் ஒருவன், கிரிக்கெட்டே பிடிக்காத கண்டிப்பான அப்பாவின் விருப்பத்துக்கு மாறாக, (சித்தரஞ்சன் போவதாகப் பொய் சொல்லி விட்டு), மும்பைக்குச் சென்று கிரிக்கெட் ஆடி வெற்றி பெற்று, பின்னர், தன் கல்லூரி வாழ்க்கைக்கு திரும்புகிற அந்தக் கதையை சிலர் வாசிச்சிருக்கலாம். ஒரு முறை ( பல மாதங்களுக்கு முன்னால் ) கிரிக்கெட்டில் மிகுந்த ஈடுபாடும், தகவலறிவும் உள்ள திருமயிலைவாழ் சக வலைப்பதிவு நண்பர் ஒருத்தரிடம் பேசிக்கொண்டிருந்த போது, நிலாநிழல் பற்றி பேச்சு வந்தது. அவர் இந்த நாவலை மொத்தமாக நிராகரிக்கவில்லை என்றாலும், அதிலே, கிரிக்கெட் ஆட்டத்தை பற்றி இடம் பெற்றிருக்கிற தகவல்ரீதியான குற்றங்குறைகளைச் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்தார். அவர் சொன்னது உண்மையாக இருக்கலாம். ஆனால், இது வாத்தியார் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் நான் வழக்கம் போல டிஃபென்ஸ் ஆடினேன்.

என்னுடைய கோணத்தில், அது ஒரு கிரிக்கெட் பற்றிய நாவல் அன்று. வாழ்க்கையில் அடைய வேண்டிய வெற்றி தோல்விகள் மீதானஒரு பத்தொன்பது வயதுப் பையனின் பார்வையும், அந்த இலக்கை அடைந்த பின்னர், வெற்றி தோல்விகள் குறித்த அவனது மதிப்பீடுகள் என்னவிதமாக மாறுகிறது என்பதைப் பற்றிய கதைதான் நிலாநிழல்.பதின்ம வயதைக் கடக்கும் போது, நிலா நிழல் முகுந்துக்கு ஏற்பட்டது போன்ற பாரடைம் ஷிஃப்ட், பெரும்பான்மையானவருக்கு ஏற்படத்தான் செய்கின்றன. நானும் விதிவிலக்கில்லை.

பிறந்ததில் இருந்து, ஒரு குறிப்பிட்ட வயதுவரை நமக்கு, நம்மைப் பற்றியும், பிறரைப் பற்றியும், விவரங்கள் தெரிவதில்லை. அதற்குப் பிறகு நாளாக நாளாக, பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். சில தகவல்கள் புகட்டப் படுகிறது. நாமாக சில முடிவுக்கு வருகிறோம்.

உதாரணமாக, ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, ரோசலின் டீச்சர் மாதிரி ஒரு அழகான பெண் உலகத்திலேயே இல்லை என்று நினைக்கிறோம்.ஆனால், அடுத்த வருஷமே, கணக்கு சொல்லித்தர, சில்வியா மிஸ் வந்ததும், முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது. கால்குலேட்டர் என்கிற மாஜிக் கருவியை, அனாயசமாக இயக்கும் போது, அப்பாவை மிஞ்சிய புத்திசாலி இல்லை என்று தீர்மானமாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, அவருக்கு செட் தியரி சொல்லித் தரத் தெரியவில்லை என்கிற போது, அவரது புத்திசாலித்தனத்தை, நெற்றியில் ஆச்சர்யக் கோடுகளுடன், மறுபரிசீலனை செய்யவேண்டி இருக்கிறது. ஒரு காலத்திலே, எந்நேரமும், இடுப்பிலே தூக்கி வைத்துக் கொண்டு, கொஞ்சி கொஞ்சி பேசிய அம்மா, ரிப்போர்ட் கார்டில் சிவப்புக் கோடுகளைப் பார்த்து விட்டு, நெஞ்சில் ஈரமில்லாமல், முதுகிலே சுளீர் சுளீரென்று நாலு வைக்கும் போது, அதிலும் - சுமதி, அரையாண்டு பரீட்சைக்குக் பின்னான லீவில் வீட்டுக்கு வந்திருக்கிற நேரம் பார்த்து - நிசமாகவே இவள் அம்மாதானா என்று சந்தேகம் வருகிறது. சுமதியின் நக்கல் பார்வை தாங்க முடியாமல் கிணற்றில் குதித்துவிடலாமா என்று தோன்றுகிறது.

பதின்ம வயது வரையிலும், இது போன்ற தீர்மானங்களும், முடிவுகளும், நமக்கு ஏற்படுத்தும் பாதிப்பின் விளைவுகள், அதிகம் சிக்கலில்லாதவை.

இந்தச் சிக்கலில்லாத பருவம் தான், ஒருவனுக்கு, அல்லது ஒருத்திக்கு, வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய வசந்தகாலம் என்பது என் தனிஅபிப்ராயம். இந்த அபிப்ராயத்துடன் இணங்குபவர்கள் அனைவரும், bye bye adolosence என்கிற சொற்றொடர் மனசுக்குள்ளே ஏற்படுத்தும் வலிகளையும் சந்தோஷங்களையும் புரிந்துகொள்ளுவார்கள்.

டீனேஜைக் கடக்கிற பருவம், ரொம்ப சிக்கலானது, சில சமயங்களில் கொடூரமானது. இந்த transition, உடலளவில் இல்லாமல், மனதளவில் ஏற்படுத்துகிற பிரச்சனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தப் பருவத்தில், படிப்பின் மீது காட்டப்படுகிற அக்கறையும் அக்கறையின்மையும் தான் சில வருடங்கள் கழித்து, நம்முடைய pay scale என்ன என்பதை நிர்ணயிக்கப் போகிறது. அந்த பருவத்தில், ஏற்படுத்திக் கொள்கிற பழக்கங்கள் தான், சில வருடங்கள் கழித்து நம் நுரையீரல் கல்லீரலின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கப் போகிறது. இதிலே வேடிக்கை என்ன என்றால், இந்த மாற்றம் நம்மிடம் ஏற்படுத்தும் விளைவுகளின் பின் விளைவுகளை, அந்த transition phase இலே தெரிந்து கொள்ளமுடியாது. சில காலம் கழித்துத்தான் தெரிந்து கொள்ள இயலும்.

அந்த பருவத்திலே, எதிர்கொள்ள வேண்டிய மற்றொரு பிரதானமான சிக்கல், எதிர்பாலர் மீதான கவர்ச்சி. இந்த விஷயத்தை, என் அனுபவங்களினூடாக மட்டுமே பார்ப்பதால்,சொல்லும் விஷயம், வேறு வழியில்லாமல்,ஆண்தன்மை கொண்டதாக -ஆண்மைத்தன்மை அல்ல - அமைகிறது.பதின்ம வயதில் தோன்றும் எதிர்பாலர் மீதான இனம்புரியா கவர்ச்சியை, கவிஞர்கள், தேனில் குளிப்பாட்டிய, மலர்கள் தூவிய வார்த்தைகளால், காதல் என்றும், அறிவியல் படித்தவர்கள், ஹார்மோன்களின் சிலுமிஷம் என்றும், அறிவியல் படித்திருந்தாலும், பெற்றோராக வாய்க்கப்பட்டவர்கள், 'தொடப்பக்கட்டை' என்றும் வர்ணிப்பார்கள். இந்த ஹார்மோன்கள் செய்யும் அராஜகத்தைத் தட்டிக் கேட்க யாருமில்லை என்பதுதான் ஆகப் பெரிய சிக்கல்.

இன்னொரு கோணமும் இதிலே இருக்கிறார்போலப் படுகிறது. இன்றைக்கு, நகமும் சதையுமாக உயிருடன் இருப்பவர்கள் அனைவரும், டபிள் அல்லது ட்ரிபிள் ப்ரமோஷன் பெற்று, இந்த வயதுக்கு வந்துவிடவில்லை. அந்த அந்த பருவங்களை, அதற்கு உண்டான, குணாதிசயங்களை, ஏற்று , மறுத்து அல்லது கலகம் செய்து தான் வந்திருக்கிறார்கள். என்கிற போது, நான் ஒன்றுமில்லாத, இயல்பாக நடக்கிற விஷயத்துக்கு கை கால் மூக்கு வைத்து பெரிதாக்குகிறேனோ? தெரியவில்லை.

தட்டுத் தடுமாறிப் படித்ததை வைத்து, இன்றைக்கு , ஆர்மோன் அது இது என்று அறிவியல்தனமான விளக்கம் கொடுத்தாலும், மனசுக்குள்ளே முதன் முதலாய் பூப்பூத்த தருணங்களில் கிடைத்த 'ஜில்' என்ற உணர்வு, அப்பழுக்கில்லாத உண்மை. பொய்யான, நீடிக்கச் சாத்தியக்கூறு துளியும் இல்லாத ஒரு சங்கதி, அத்தனை சந்தோஷத்தை எப்படி தந்தது என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

"கடைக்கண் பார்வையைக் காட்டிவிட்டால், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்' என்று பாரதிதாசன் சொன்னது, மூன்று கழுதை வயசு கடந்த பின்னர், தற்பொழுது, நகைப்புக்குரியதாகத் தோன்றினாலும், முதலில் வாசித்த காலத்தில், அவ்வரிகள் ஏற்படுத்திய கிளர்ச்சியின் மிச்சங்கள், இன்றும், அடி மனசில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. கொலுசு, சைக்கிளின் ஹாண்டில் பார், தாவணியை மீறி கொஞ்சமே தெரிந்த ஃப்ரில், கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸின் S-6 கோச், மௌனராகம், எழும்பூர் ரயில்வே நிலையம், பழைய வீட்டின் முற்றம் என்று சட்டென்று மனசுக்குள் தோன்றுகிற குழப்பமான படிமங்களை, கலைத்துப் போட்டுச் சீராக்கினால், நல்ல கவிதை ஒன்று கிடைக்குமோ என்னமோ தெரியாது, நிச்சயமாக இரண்டு போத்தல் பியர் தேவைப்படும் :-)

Comments

Nice....very nice...

:-)

Srikanth
பத்தாது. அடுத்த வாரம் தேர்தல் நடக்கும். அப்ப ஓட்டு போடுங்க :-)
ilavanji said…
கலக்கலா இருக்குங்க!

//நல்ல கவிதை ஒன்று கிடைக்குமோ என்னமோ தெரியாது, நிச்சயமாக இரண்டு போத்தல் பியர் தேவைப்படும் :-)//

:)))
பிரகாஷ்,

ரொம்பவும் அவசரப்படுகிறீர்களோ என்று தோன்றுகிறது. இன்னும் நிதானமாக அசை போட்டுப் பார்த்திருந்தால் (அசை போடுவது என்றாலே அது நிதானமாகத்தானே இருக்க வேண்டும்? (ஹ! என்ன ஒரு லாஜிக்!) சிறந்த கட்டுரையாக இது மலர்ந்திருக்கும் என்று (எனக்குத்) தோன்றுகிறது. எனிவே, படிக்க நன்றாக இருந்தது.
//பத்தாது. அடுத்த வாரம் தேர்தல் நடக்கும். அப்ப ஓட்டு போடுங்க :-) //

இன்ஷா அல்லாஹ்

சுரேஷ் சொன்னதை கவனிச்சிங்களா பிரகாசரே??

சுரேஷ், நீங்களும் ஒரு பதிவு போடுங்க, எனக்கென்னமோ நீங்க இந்த விஷயத்தை கலக்கலா எழுதுவிங்கன்னு தோணுது...
//சுரேஷ், நீங்களும் ஒரு பதிவு போடுங்க, எனக்கென்னமோ நீங்க இந்த விஷயத்தை கலக்கலா எழுதுவிங்கன்னு தோணுது...//

அடா! அடா! மக்கள் எப்படில்லாம் போட்டு வாங்கறாப்பா! :-)

ஆசாத், என் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. முயற்சி பண்றேங்க.
கதிரவனின் கதிர்கள் ஒரு மலர் மொட்டை தீண்டிய பின்புதான் அது முழுமையாக மலர்கிற்து.

அதே போல் ஒரு பெண் எப்பொழுது பூப்பாகிறாள் என்பதை அவளுடைய நடை,உடை,பாவனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது,ஒரு குழந்தை போல் மனம் படைத்த ஒரு பெண்ணுக்கு ஒரு "சாக் டீரீட்மெண்ட்" கொடுத்தாள் அவள் தானாகவே அவளையே உணர்ந்து பூப்பாகிறாள்.
Dubukku said…
nice one.

http://www.desipundit.com/2006/06/12/adolesence/
//நல்ல கவிதை ஒன்று கிடைக்குமோ என்னமோ தெரியாது, நிச்சயமாக இரண்டு போத்தல் பியர் தேவைப்படும் :-)//

கலக்கலாத்தான் இருக்கு பிரகாஷ். ஆனா, மேலே இருக்கும் வசனங்களின் காரணமாக அவசரவசரமாக எழுதிக்கொண்டு போய்விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

மறுபடியும் முயற்சிக்கலாம் என்றால் செய்யுங்களேன்.
சுரேஷ் மட்டுமல்ல ஆசாத் பாய் அப்புறம் இளவஞ்சின்னு இங்க பின்னூட்டம் இட்டிருக்கிறவங்க எல்லாருமே நல்லா எழுதுவீங்கன்னு நினைக்கிறேன்.

எழுதுங்களேன். :)
இளவஞ்சி, நன்றி. நீளமா எழுதறதைப் பத்தி உங்களை கிண்டலடிச்சதுக்கு, நீங்களும் கிண்டல் செய்து பழி வாங்குவீங்களோன்னு நினைச்சேன் :-). இல்லை. அதுக்கும் ஒரு நன்றி :-)
சுரேஷ் கண்ணன், மதி : நிதானமாகத்தான் எழுத ஆரம்பிச்சேன். ஆனால், அவசரப்பட்டு முடிச்சுட்டேன். நீளமா எழுதி, டச் விட்டுப் போச்சு :-). விடுங்க, அடுத்த மாசப் போட்டிலே பார்த்துக்கிடலாம்,,
ஆசாத், அது என்ன, சுரேஷை 'சூ' காட்டறீங்க.. உங்க கிட்ட எத்தனை கதை இருக்கும்னு தெரியாதா? அவுத்து வுடுங்க..
டுபுக்ஸ், தன்யனானேன் ஸ்வாமின் :-)
அன்பின் தேசம் : நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு, என் சிற்றறிவுக்குத் துளியும் எட்டலே ஸ்வாமி :-)
Unknown said…
/////பத்தாது. அடுத்த வாரம் தேர்தல் நடக்கும். அப்ப ஓட்டு போடுங்க :-) //

இன்ஷா அல்லாஹ்

சுரேஷ் சொன்னதை கவனிச்சிங்களா பிரகாசரே??

சுரேஷ், நீங்களும் ஒரு பதிவு போடுங்க, எனக்கென்னமோ நீங்க இந்த விஷயத்தை கலக்கலா எழுதுவிங்கன்னு தோணுது...///

பிரகாஷ், மாப்பு மாப்பு மாப்பு.

இது ஆசாத் அண்ணன் சொன்னது இல்லை, நான் சொன்னது. அன்றைய தினம் ஆசாத் அண்ணனின் வலைப்பதிவில் பிரச்சனை வர, நான் என்ன ஏது ஆராய்ந்துகொண்டு இருந்தபோது சைடிலே இதையும் படித்து மறுமொழி அளிக்க, அது அவருடைய பெயரில் வந்து விழுந்துவிட்டது.

சுரேஷ், நீங்க ஆசாத் சொன்னதாக நினைச்சுகிட்டாவது ஒரு பதிவு போடுங்களேன்.
நல்லா இருக்கு..
வெற்றி பெற வாழ்த்துக்கள்
Unknown said…
பிரகாஷ்,

கட்டுரைக் கொஞ்சம் அவசரத்தில் எழுதியதுப் போல் உள்ளது... ஆனாலும் அனுபவிச்ச விஷயங்கள் உங்கள் பதிவில் படிக்க கிடைத்தது நல்ல வாசிப்பு அனுபவம்.
"கண்ணின் கடைப்பார்வை காதலியர்
காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும்
ஓர் கடுகாம்"
ந்ல்ல கட்டுரையில் இது ஓர் உறுத்தல்;
திருத்த முடியுமா? தொந்தரவிற்கு
மன்னிக்கவும்:
"தொந்தரவிலும் ஒரு சுகமுண்டு தோழீ"-பாரதிதாசன்
ஏறத்தாழ இதே பொருளில்

"காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்ணின் கடைக்கண் பாணியிலே"
எல்லாரும் அவசரம் அவசரம்னு சொல்றாங்க.. ஆனா இந்தக் கட்டுரை சரியான வேகத்துல தான் வந்திருக்குன்னு தோணுது. நிறைய சமாச்சாரம் சொல்லி இருக்கீங்க.. இதெல்லாம் இன்னும் பொறுமையா சொல்லி இருந்தா பெரிய கட்டுரை ஆகி, படிக்கக் கஷ்டமாகப் போயிருக்கும்..

(இந்த விமர்சனம் வேஸ்டுங்க.. இன்னிக்குத் தான் என் ஓட்டைப் போட்டுட்டு வர்றேன் :) )

//மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்' என்று பாரதிதாசன் சொன்னது, மூன்று கழுதை வயசு கடந்த பின்னர், தற்பொழுது, நகைப்புக்குரியதாகத் தோன்றினாலும்//
:))
நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்