பழைய சரக்கு - part I

எழுதறதுக்கு விஷயம் இல்லேன்னா,இப்படி, பழைய சரக்கை போட்டு ஒப்பேத்துவது என் வழக்கம். ஏற்கனவே படிச்சவங்க விட்டுத்தள்ளுங்க. மரத்தடியில் இருந்து இதை உருவியிருக்கிறேன். அவங்களுக்கு என் நன்றி.


நானும் சுமதியும், ஒரு குட்டிச் சாத்தானும்

'It all started when i saw sumathi again..' என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து எழுதலாம்தான். ஆனால் வேண்டாம்.

சுமதி என் அத்தை பெண். அத்தை பெண் என்ற உடனே, கனவுகளைப் பறக்க விடாமல், சற்று பொறுமையாக வாசித்தால், அவளுக்குத் திருமணமாகி, ஐந்து வயதிலே வைஜெயந்தி என்ற பெயரில் ஒரு குட்டிச்சாத்தானையும் பெற்றெடுத்து இருக்கிறாள் என்பதை அடுத்த வரியில் சொல்லி இருப்பேன். பாதகமில்லை. கவனிக்கவும்.

இந்த சுமதியாகப் பட்டவள், ஒருவிதத்திலே எனக்கு குரு போன்றவள். அவளிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் இரண்டு. முதலாவது, புத்தகம் வாசிக்கும் பழக்கம். இரண்டாவது, அந்த பழக்கத்தைக் கொண்டு, என்ன மாதிரியான புத்தகங்கள் வாசிக்கக் கூடாது என்பது.

நிறைய படிப்பாள். ஆனால், அவை சொல்லிக் கொள்கிற மாதிரியாக இருக்காது.. அதுவும், நவீன இலக்கியம் பயில்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அவற்றை எல்லாம் பட்டியலிடுதல் எனக்கு ஆபத்தாகவே முடியும். என்றாலும், வாசிக்கும் பழக்கம் அவளிடம் இருந்துதான் வந்தது என்பதால், அவள் மேலே சற்று மதிப்பு உண்டு. ஆனால், அந்த மதிப்பு அம்மட்டில் தான்.

சிகரெட்டு புடித்து, அவளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டு, என் அப்பாவிடம் போட்டுக் கொடுத்தது.. கட்டடித்து விட்டு கமல் படம் போய், அவளிடம் வசமாக மாட்டியது.. அவளிடம் தீர்க்க வேண்டிய கணக்குகள் பல உண்டு என்ற போதிலும், கல்யாணம் ஆகி புகுந்த வீடு சென்று விட்டதால் அதை மறந்து விட்டேன்.

அந்தக் கணக்கில் புதுசாக ஒன்று வந்து சேர்ந்தது. சென்ற செப்டம்பர் ஆறாம் தேதி.

அலுவலக வேலையாக, கோவை சென்றிருந்த போது, தொலைபேசி வழியாக சேதி வந்தது. சேதியின் சாராம்சம், சுமதி, அவளது வீட்டுக்காரர், மற்றும், குழந்தை மூவரும், ஒரு கல்யாணத்துக்காக, இன்று ஜாம்நகரில் இருந்து வந்திருக்கின்றனர். (அவள் கணவனுக்கு ஜாம்நகர் ரிஃபைனரியில் வேலை). அதனால் உடனடியாக வந்து பார்க்கவும். அவர்கள் நாளை இரவு புறப்படுகின்றனர். இது தான் அம்மாவிடம் இருந்து வந்த சேதி.

சுமதியைப் பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டதனால், நானும் என் வேலையை ஒத்திப் போட்டு விட்டு அன்றிரவே புறப்பட்டு, அதிகாலை வீடு வந்து சேர்ந்தேன்.

முன் பார்த்ததுக்கு கொஞ்சம் பெருத்திருந்தாள். நலம் விசாரிப்புகள் முடிந்து, ஹிந்துவின் குறுக்கெழுத்தில் மூழ்கியிருந்த அவள் கணவனுக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு, அம்மா கொண்டு வந்த காஃபியைக் கையில் வைத்துக் கொண்டு, மெட்ராஸ் பிளஸ்சில் ( எகனாமிக் டைம்ஸின் துணை பதிப்பு) ஆழ்ந்த போது, அந்தக் கிராதகி கிட்டே வந்து ஒரு கடிதத்தை என் முன் ஆட்டினாள். கல்கியில் இருந்து வந்த கடிதம் அது.

அவள் முகத்தில் இருந்த எகத்தாளத்தை அளந்து பார்க்க என்னிடம் கருவி ஏதும் அப்போது இல்லை. மற்றவரைக் கூனிக் குறுகிப் போகச் செய்யும் ஏளனம் அது. இப்படிச் சொன்ன உடனேயே அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று விடாமல் பத்திரிகைகளைத் துரத்தும் உட்-பீ எழுத்தாளர்கள் எளிதில் ஊகித்து விடலாம்.

அக்கடிதத்தினை முன் வைத்து எழுந்த கேலி, கிண்டல் நையாண்டி முதலானவற்றை எனக்கு எழுத மனமில்லை. தேவைப்பட்டால் பின்னால் சொல்கிறேன்.

இதற்கு ஏதேனும் செய்தே ஆகவேண்டும்.

o o o

ரிலையன்ஸ் தொலைபேசியும், பா.ராகவனும்...

ரிலையன்ஸ் தொலைபேசிகளில் பேசுவதற்கென்று ஒரு knack இருக்கிறது. ரொம்ப அனுபவஸ்தர்களுக்குத்தான் அது தெரியும். முதல் இலக்கமான மூன்றைத் தொட்டதுமே IVRS உபயத்தில் ஒரு பெண் இயந்திரக்குரல், 'ஆல் தி லைன்ஸ் இன் திஸ் ரூட் ஆர் பிசி' என்று துவங்கும். மனம் தளரக்கூடாது. டையல்பேடின் ஈசானிய மூலையில் இருக்கும் ரீடையலை அழுத்தவேண்டும். இப்போதும் பிடி கொடுக்காது. குறைந்தது ஒரு ஒன்பதரை தரம் முயற்சி செய்த பின்னால், ரிங் போகும். பிடித்துக் கொண்டு வேலையை முடிப்பது உங்கள் சமத்து.

சில வேளைகளில், சொர்க்கத்திலோ, அல்லது வேறெங்காவதோ இருக்கும் தீரஜ்லால் அம்பானியின் தயவு இருந்தால், முதல் இரண்டு முயற்சிகளிலேயே லைன் கிடைத்து விடும்,

நான் ஓடிச் சென்று தொலைபேசியில் பாய்ந்து எட்டு இலக்க எண்களை அழுத்திய போது, அம்பானியின் தயவு இருந்திருக்கவேண்டும். முதல் முயற்சியிலேயே வெற்றி. ஆபரேஷன் வெற்றி பெற்றாலும், சிலவேளைகளில் நோயாளி பிழைப்பதில்லை அல்லவா? அது போல, எனக்கு கேட்டது, வெறும் ரிங் ரிங், ரிங் ரிங், ரிங் ரிங் மட்டும் தான். மகானுபாவர் எடுத்தால் தானே ஹலோ என்று குரல் கேட்கும்?

ஃபோனை தூர எறிந்து விட்டு, ஓடிச் சென்று பாய்ஸ் படத்தை இன்னொருதரம் பார்க்கலாமா என்ற அளவுக்கு கோபம் வந்தது. அடக்கிக் கொண்டு பொறுமை காத்தேன்.

Patience is virtue. உடனடியாகப் பலன் கிட்டியது.

"வணக்கம். பா.ராகவன் ஹியர்..."

o o o

கண்ணில் தெரியுது வானம் & நகுலேஸ்வரதாஸ்.

"என்னங்க, எவ்வ்ளோ நேரமா ரிங் போயிட்டிருக்கு? எடுக்க மாட்டீங்களா?, எங்கியாச்சும் மாட்டிட்டு இருக்கீங்களா என்ன?"

"ஆமாம், கம்பனி சேர்மன் கூட ஒரு மீட்டிங்லே இருக்கேன். ரொம்ப முக்கியமான விஷயம். என்னை இப்போ கூப்பிடுவார். அதுக்குள்ளே என்ன மேட்டர் சீக்கிரம் சொல்லு. அவர் போனப்பறம், நானே உன்னை ஃபோன்ல கூப்பிடறேன்."

"அதல்லாம் முடியாது. சேர்மன் தானே? அவரை கொஞ்சம் வெயிட் பண்ணச் சொல்லுங்க. எனக்கு உங்களை ரொம்ப அர்ஜண்ட்டா இப்ப பாத்தாக வேண்டியிருக்கு"

"என்ன மேட்டர் சொல்லு!"

"தலை போற மேட்டர், என் கௌரவப் பிரச்சினை, இன்னிக்கு ரெண்டுலே ஒண்ணு பாத்துடறது..." என்று நான் முண்டா தட்டினேன்.

இந்த வினோதங்கள் எல்லாம் அவருக்குப் புதிதல்ல. என்னைப் போல எத்தனை பிரகிருதிகளை அவர் பார்த்திருப்பாரோ? சந்தர்ப்பம் வாய்க்கும் போது நிச்சயம் கேட்கவேண்டும்.

அவர் அவசரமாக, "சரி ஒண்ணு பண்ணு. இன்னும் பத்து நிமிஷத்திலே மீட்டிங் முடிஞ்சுரும். ஒரு முக்கா மணிநேரத்துலே இங்க வந்திரு. I'll make myself available.."

"முக்கா மணிநேரமெல்லாம் முடியாது. இப்பமே, இப்பமே பாத்தாவணும்"

"யோவ், நீ இங்க கிளம்பி வரதுக்கே முக்கா மணி நேரம் ஆவாதா? அப்புற என்ன?"

அட, ஆமாம். கோபம் என் கண்ணை மறைத்திருக்கிறது. இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று எண்ணி, ஆட்டோவில் பாய்ந்தேன்.

உள்ளே போன போது, சற்று உற்சாகமாக இருந்தார். உற்சாக பானம் இல்லாமலேயே, எப்போதும் உற்சாகமாக இருக்கக் கொடுப்பினை உள்ள அதிர்ஷ்டசாலிகளில் அவரும் ஒருத்தர் என்று தெரியும். இருந்தாலும், இன்றைக்கு அது கொஞ்சம் அதிகமாக இருந்தது போலத் தோன்றியது. அது என் ஆத்திரத்தை இன்னும் கிளப்பியது.

"வாய்யா... " என்றார் வழக்கம் போலவே வாய் நிறைய சிரிப்புடன்.

நான் உட்ககார்ந்து, "மன்சாள் துக்கம் புரியாம, நீங்க எல்லாரும் சந்தோசமா இருக்கிறீங்க, நாந்தா கெடந்து கண்டவங்க கிட்டையும் பேச்சு வாங்கிகினு அல்லாடினு இருக்கேன். நல்லா இருங்க."

"இரு, இரு, என்ன மேட்டர்? விஷயத்தை சொல்லாமலே எண்ணைலே போட்ட சமோசா மாதிரி குதிச்சா என்ன புரியும்?"

நான் சற்று நேரம் மௌனமாக இருந்தேன். எப்படித் துவங்குவது? சுமதியுடனான அந்த காலத்து ஒன்ஸைட் காதலில் இருந்து ஆரம்பிக்கலாமா? வேண்டாம். மன்ஷர் அதை வைத்து கதை எழுதி கல்கிக்குக் கொடுத்து விட்டால், சுமதி வேற கல்கி ரெகுலராக படிப்பாள். வேணாம், இன்னிக்கு நடந்த மேட்டரை மட்டும் சொல்லுவோம் என்று நினைத்து குதிரை மாதிரி ஒரு guffaw பண்ணி விட்டு, ஆரம்பித்தேன்.

ஆரம்பித்த என்னை இடை மறித்து, "சரி யோசிச்சு வை. இதோ வந்துடறேன்..." என்று கிளம்பியதும், மீண்டும் வெறுப்பானேன்.

"பாத்தீங்களா? நீங்க கூட இப்படி எஸ்கேப் ஆவறீங்களே, எல்லாம் என் ராசி,.." என்று புலம்பலைத் துவங்க..

"யோவ், போய் வாய் கொப்புளிச்சிட்டு வந்துடறேன்யா.. இன்னிக்கு என்னமோ ஆயிடுச்சு உனக்கு..., அந்த ஷெல்புலே கண்ணில் தெரியுது வானம் இருக்கு பார், அதுல நகுலேஸ்வரதாஸ்ஸை இன்னொரு தரம் உக்காந்து பாராயணம் பண்ணு, அதுக்குள்ளே வந்துடறேன்".

நகுலேஸ்வரதாஸ் பல முறை படித்த கதை. கூழங்கைத் தம்பிரானையும்,அவனுக்கு லெச்ச ரூபாய் கொடுத்த சுகுணணையும், பாகிஸ்தான்காரனே சாப்பிடாத பாகிஸ்தானி ஊறுகாய் விரும்பி உண்ணும் ஹொங்கோங்காரியையும் எத்தனை முறை தான் படிப்பது. இருந்தாலும் இன்னும் ஒரு முறை படித்து முடித்தேன்,

லாகிரி சமாசாரங்களையெல்லாம் சுத்தம் செய்துவிட்டு எதிரிலே வந்து அமர்ந்து, "சொல்லு..." என்றார் பா.ராகவன்.

( தொடரும் )

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I