
ராம்கோபால் வர்மா ஸ்டைலில் வந்திருக்கும் ஒரு தமிழ்த் திரைப்படம். ( ராம்கோபால் வர்மாவின் எந்தப் பட ஸ்டைலில் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.)
சித்திரம் பேசுதடி படத்துக்கும் பிறகு, சென்னையின் நிழலாளிகள் பற்றிய படம். களமும், மாந்தர்களும் எத்தனை தூரம் அசலுக்கு அருகிலே இருக்கிறதா என்பதை நாராயண் போன்றவர்கள் சொல்லலாம்.
கதை?
< spoilers ahead >
சின்ன வயசில் இருந்தே, சென்னைக் குப்பத்தில் பிறந்து வளர்ந்து,
'போட்டுத் தள்ளுவதையே' தொழிலாகக் கொண்ட இரு நண்பர்கள் கோசி ( ஆர்யா) செல்வா ( பரத் ). அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் நம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக பட்டியல் இட்டு காட்டுவதுதான் பட்டியல். கோசி யை இதற்கு முன்பே, அறிந்தும் அறியாமலும் படத்தில் பார்த்திருக்கிறோம். அதே வசன உச்சரிப்பு, அதே குணச்சித்திரம். தண்ணி அடித்து விட்டு புலம்பும் போதும், போட்டுத் தள்ளியவன் சவ ஊர்வலத்திலேயே குத்தாட்டம் போடும் போது, மேலே வந்து விழும் நாயகி ( பத்மபிரியா) மீது எரிந்து விழும்போதும், பின்னர் அவளையே காதலிக்கும் போதும் நன்றாகவே செய்திருக்கிறார்.
செல்வா(பரத்) பாத்திரம் புதுசு. வாய் பேசாத, காது கேளாதவர். ஓட்டல் ரூமில் கதவைத் தட்டி, உள்ளே வருபவரை, ஒரே குத்தில் கொலை செய்து, வாஷ் பேசினில் நிதானமாக கத்தியை கழுவித் துடைத்து, வெளியேறுவதற்கு முன்னர், தொலைக்காட்சியில் சானல் மாற்றி, கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வருமளவுக்கு அசால்ட்டனவர். மருந்துக் கடையில் வேலை பார்க்கும் நாயகி மீது ( பூஜா ) மீது காதல் கொள்வதும், பின்னர் ரௌடி என்று தெரிந்ததும் வெறுத்து ஒதுக்கும் போது, அவருக்குப் புரிய வைக்க முயற்சி செய்யும் காட்சியிலும் அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது. ஒரு பெரிய புள்ளியை போட்டுத் தள்ளும் அசைன்மெண்ட்டில், இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் உச்சகட்டம்.
முகம் தெரியாத நிழலாளிகளின் தேவைகள், சந்தோஷங்கள், கோபதாபங்கள், உணர்ச்சிகளை நன்றாக உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். பரத், ஆர்யா, பத்மபிரியா ஆகிய மூவருக்குமான உறவு நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. ( இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்ற போதும்)
இருவருக்கும் தொடர்ந்து வேலை கொடுக்கும் கொச்சின் ஹனீபா, சத்யா படத்தின் ஜனகராஜை நினைவு படுத்துகிறார். பல காட்சிகள், சத்யாவை, பிதாமகனை, நினைவு படுத்துகின்றன.
அறிந்தும் அறியாமலும் படத்தில் இருந்த மாதிரியான pleasant surprise எதுவும் இந்தப் படத்தில் இல்லை. அதுதான் பெரிய குறை. எல்லாம் எதிர்பார்த்த மாதிரியே நடக்கின்றன.
விஷ்ணுவர்த்தன் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கவேண்டும்.