Prakash's Chronicle

ஜாகை மாத்தி ரொம்ப நாளாச்சு... புது வீட்டுக்கு வாங்க

Sunday, March 12, 2006

 

Jaane Bhi Do Yaroo


மூட் அவுட் ஆகியிருக்கிற சமயங்களில், மனசை லேசாக்கிக் கொள்ள, அவரவர்க்கு தெரிந்த வழிகள் பலதும் இருக்கும். சிலர் 'புண் பட்ட நெஞ்சத்தை புகை விட்டு ஆற்றுவார்கள். ஒரு சேஞ்சுக்கு மனைவியை சமைக்கச் சொல்லி அதிகாரம் செய்வார்கள். . சிலர் குட்டிகளுடன் (அதாவது குழந்தைகள் கூட ) விளையாடுவார்கள். இப்படி ஏதாச்சும் உபத்திரவம் இல்லாத வேலையைச் செய்தால், மனம் திசை திரும்பும். இன்றைக்கு நான் ஒரு கிந்தி படம் பார்த்தேன்.

'ஜானே பி தோ யாரோ' ( 1983) என்கிற படத்தை ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன். ராஜ் வீடியோ விஷனில் 'சேல்' போட்டிருந்த போது ( எல்லா ஊரிலும் சேல் என்றால் விற்பனை, சென்னையில் மட்டும் சேல் என்றால் தள்ளுபடி விற்பனை) , கண்ணில் விளக்கெண்ணய் விட்டுத் தேடியும் கிடைக்காத படம் ebay இல் கிடைத்து.

இந்தித் திரைப்படங்களில், 'ஜானே பி தோ யாரோ (JDBY)' ஒரு முக்கியமான திரைப்படம்.

வினோத் குப்தா ( நசிருத்தீன் ஷா) & சுதீர் மிஸ்ரா ( ரவி பாஸ்வானி) இருவரும் புதிதாக புகைப்பட ஸ்டுடீயோவை துவக்கி, வாடிக்கையாளர்கள் இல்லாமல் ஈ ஓட்டுபவர்கள். 'கபர்தார்' என்ற ஒரு சென்சேஷனல் ( குட்டி) நாளிதழின் எடிட்டர், ஷோபா ( பக்தி பார்வே). தர்னேஜா ( பங்கஜ் கபூர்), ஒரு பில்டர். தர்னேஜா, மாநகராட்சி கமிஷனர் டி மெல்லொ ( சதீஷ் ஷா) வுடன் கூட்டு சேர்ந்து, நிறைய ஊழல் செய்து, முறையற்ற வழிகளில், கட்டடங்கள் கட்டி கொள்ளை லாபம் அடிக்கிறான். இந்த ஊழலை அம்பலப்படுத்த, வினோத் மற்றும் சுதீருடன் சேர்ந்து , ஷோபா முயற்சி செய்கிறாள். ஊழல் நடக்கும் போதும், பணம் கைமாறும் போதும், வினோத்தும் சுதீரும் மறைந்திருந்து புகைப்படம் எடுத்து, ஷோபாவிடம் தருகின்றனர். தர்னேஜாவின் போட்டியாளர், அஹ¤ஜா (ஓம்பூரி). இவரும், தர்னேஜா போலவே ஒரு தாதா தான். ஒரு சந்தர்ப்பத்தில், டிமெல்லோ, அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு, அஹ¤ஜாவிடம் விலை போக, தர்னேஜா, டிமெல்லோவைக் கொன்று விடுகிறார். தற்செயலாக, அதை வினோத்தும், சுதீரும் படம் பிடித்து அதை ஷோபாவிடம் கொடுக்க, அவள் பத்திரிக்கையில் வெளியிடுவதற்கு பதிலாக, தனேஜாவிடம் பத்துலட்ச ரூபாய்க்கு பேரம் பேசுகிறாள். இறுதியில், ஒளித்து வைத்திருக்கும் டிமெல்லோவின் பிணம், புகைப்பட ஆதாரங்கள் ஆகிவற்றை போலிசிடம் கொடுத்தார்களா, நியாயம் கிடைத்ததா என்பதுதான் கதை..

இந்தக் கதைச்சுருக்கத்தைப் படித்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

துப்பாக்கி, வெற்றுக்குண்டர்கள், ரத்தம், பரபரப்புக் காட்சிகள், நரம்பு புடைக்கும் வசனங்கள், இப்படித்தானே?

அது தான் கிடையாது. ஒரு முழுநீள நகைச்சுவைப் படம். fire brand comedy ( கொஞ்சம் dark ) என்பார்களே அது இதுதான். குந்தன் ஷா தலைமையிலான இந்தக் கோஷ்டி, அடிக்கிற கூத்தை படம் பார்த்தால் தான் விளங்கிக் கொள்ள முடியும். கூடவே, இப்போது வரும் பல நகைச்சுவைத் திரைப்படங்களுக்கு ( சில தமிழ்ப்படங்கள் உள்பட) இதுதான் முன்னோடி.

இந்தப் படத்தை இயக்கிய குந்தன் ஷா, புனே திரைப்படக் கல்லூரி மாணவர். JBDY தான் அவர் இயக்கிய முதல் திரைப்படம். Albert Pinto Ko Gussa Kyo(n) Atha Hai (1980) என்ற படத்தில், சயீத் மிஸ்ராவுக்கு உதவி இயக்குனராகப் பணி புரிந்தார். ஆல்பர்ட் பின்டோ மற்றொரு அருமையான திரைப்படம் ( அது பற்றி பின்னொரு நாளில்). பிறகு, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் உதவியுடன் தன் முதல் திரைப்படமான JBDY ஐ இயக்கினார்.

நகைச்சுவை என்ற பெயரிலே கூத்தடிக்காமல், சமகால அரசியல், அதிகார வர்க்கம், ஊழல், போட்டி பொறாமை, கையாலாகத்தனம், மத்யமர் தன்மை, போன்றவற்றை, நசுருத்தீன் ஷா, விது வினோத் சோப்ரா, சதீஷ் கௌஷிக், சதிஷ் ஷா, பங்கஜ் கபூர் போன்றவர்களின் துணை கொண்டு அழகாக உருவாக்கி இருப்பார்.

வினோதும், சுதீரும் , சதீஷ் ஷாவின் பிணத்தை, வில்லனிடம் இருந்து கடத்திக் கொண்டு , மகாபாரத நாடகம் நடக்கும் அரங்கில் நுழைந்து விட, பிணத்துக்கு புடவை அணிவித்து மாறுவேஷம் போட, அதை துரௌபதி என்று நினைத்து மேடைக்கு, துச்சாதனன் இழுக்க, துரத்திக் கொண்டு வரும் எதிர் கோஷ்டி அனைவரும், ஆளாளுக்கு ஒரு வேஷம் கட்டிக் கொண்டு, ( ஒருத்தர் அக்பர் வேடம் அணிந்து கொண்டுவருவார்) திரவுபதியை ( பிணத்தை) இழுக்கும், அந்த கடைசி அரை மணி நேரக் காட்சி, ரண களம். சிரித்து மாளாது. அதே போல, சதீஷ் ஷா படுத்துக் கிடக்கும் சவப்பெட்டியை, புதிய மாடல் கார் என்று நினைத்து, ஸ்டெப்னி மாற்ற முயற்சி செய்து, முடியாமல், டோ செய்து, நடுராத்திரியில் ஊர்வலம் போகும் குடிகார ஓம்புரியும் லேசுப்பட்டவரில்லை.

இந்தப் படத்தை சில அறிவுய்திகள், cynical ஆன படம் என்றும் விமர்சனம் செய்வார்கள்.

பின்னாளில், இதே வாசனையுடன், நுக்கட் (1986) என்றொரு தொலைக்காட்சித் தொடரை தூர்தர்ஷனுக்காக இயக்கினார். கீழ்நடுத்தர வர்க்கச் சூழலில் உள்ள தெருமுனையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் நுக்கட். ஷா, பிறகு சில படங்களை இயக்கினார் என்றாலும், JBDY அளவுக்கு இல்லை. நாற்பது ஐம்பது வயதுக் கிழவர்கள், முகப்பூச்சுடன், தென்னிந்திய நடிகைகளுடன் aerobic நடனம் ஆடி டூயட்டு பாடிக் கொண்டிருந்த சமய்த்தில், JBDY திரைப்படம் refreshing ஆக இருந்தது.

இந்தக் குழுவில் இருந்து வெளிவந்த, சதீஷ் ஷா பல படங்களில் slapstick காமெடியனாக நடித்து புகழ் பெற்றார். விது வினோத் சோப்ரா, பரிந்தா(1989), 1942 - a love story(1993) போன்ற, நாயகத்தன்மை அதிகமுள்ள படங்கள் எடுக்க, மிகச் சிறந்த காரக்டர் என்று நான் நினைக்கும் சதீஷ் கௌஷிக், அனில் கபூர், போனி கபூர் கோஷ்டிக்கு, ஆஸ்தான டைரக்டராக மசாலாப் படங்கள் எடுத்துத் தள்ளினார். நசிருத்தீன் ஷாவும், ஓம்பூரியும், ஆத்ம திருப்திக்காக நல்ல படங்களும், துட்டுக்காக மசாலாப் படங்களும் செய்து இன்றைக்கும் பிரபலமாக இருக்கிறார்கள்.

JDBY வந்த காலத்தில் நிலவிய பிரச்சனைகளான், வேலை இல்லாத் திண்டாட்டமும், ஓரளவுக்கு கட்டுப்படுத்தப் படக்கூடிய நிலையில் இருந்த லஞ்ச லாவணியமும், அரசியல் சூழ்நிலைகளும், பிழைப்பதற்கான பொதுவுடைமைக் கொள்கைகளும், இன்றைய செல்போன்-பிஸ்ஸா-கோக் இளைஞர்களிடம் எடுபடாது.

ஒருக்கால், இதே சிக்கலில் தான், ஸ்ரீதர் துவக்கம், பாலசந்தர் பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்கள் கூட, மாட்டிக் கொண்டிருக்கிறார்களோ?

Comments:
பிரகாஷ்,

நல்லா இருக்கீங்களா?

//இன்றைக்கு நான் ஒரு கிந்தி படம் பார்த்தேன்.//

கிந்தி? புது பாஷையா?... ச்சும்மா :-)))))

அந்த 'டெட் பாடி' ஸீன் இப்போ நினைச்சாலும் சிரிப்புதான்.
 
இன்னா நைனா... வர வர பதிவுங்க எல்லாம் pathos ஸாங்கோட ஆரம்பிக்கிது... எதுவும் ஃபிகர் மேட்டர்ல மாட்டின்கினீங்களா.. ஆராவது ப்ர(ரப்)சர் பண்றாங்களா?
 
மல்மார் வீக்லி என்றொரு படம் வந்திருக்க்கிறது. அதைப்பார்த்ததிலிருந்து எனக்கும் ஜானேபிதோயாரொன் நினைவுதான். முடிவு நல்ல நகைச்சுவையுடன் கூடிய யதார்த்தம். நேற்று இன்னொருமுறை DVDயில் பார்த்தோம். தலைவருக்கு வேலை pressure.tension குறைய. நானும் உத்தரவின்றி உள்ளேவா, காதலிக்க நேரமில்லை, படோசன் போன்ற முழு நகைச்சுவை படங்களை பார்த்து டென்ஷனை குறைப்பது வழக்கம்.
 
துளசி : நல்ல சௌக்கியம். ஒளுங்கா ஊரு போய்ச் சேந்தீங்களா? மிஸ்டர் துளசி சௌக்கியமா?

//கிந்தி? புது பாஷையா?... ச்சும்மா :-)))))//

நண்பர்கள், நான் அறியாமலே, என்னை அதிகமாக இன்புளூயன்சு செய்துவிடுகிறார்கள் :-)
 
முகமூடி :
//எதுவும் ஃபிகர் மேட்டர்ல மாட்டின்கினீங்களா.. ஆராவது ப்ர(ரப்)சர் பண்றாங்களா? //

இது வேறயா, அது சரி :-)
 
:-) enjoy!!!
arul
 
//பிழைப்பதற்கான பொதுவுடைமைக் கொள்கைகளும், இன்றைய செல்போன்-பிஸ்ஸா-கோக் இளைஞர்களிடம் எடுபடாது. //
சரியாகச் சொன்னீர்கள். நுக்கட் தொடரில் வரும் சமீர் கக்கரின் குடிகார வேஷம்,வேலையில்லாத மக்களின் அவலம், சேரிப்பகுதியான திரைக்களம் போன்றவை இன்னும் ரசிக்கத் தகுந்ததெனினும், இளையதலைமுறையால் இவற்றை தனித்து உள்வாங்கி ரசிக்க முடிவதில்லை. குந்தனின் அருமையான படைப்புகளில் ஒன்று JBDY மற்றும் NUKKAD serial.
இப்போதைய நகைச்சுவை இந்தியிலும் அவலம்... தமிழிலும் அவலம்.
அன்புடன்
க.சுதாகர்
 
இல்லி:

http://andaiayal.blogspot.com/2006/03/blog-post_12.html

அருள்
 
//JDBY வந்த காலத்தில் நிலவிய பிரச்சனைகளான், வேலை இல்லாத் திண்டாட்டமும், ஓரளவுக்கு கட்டுப்படுத்தப் படக்கூடிய நிலையில் இருந்த லஞ்ச லாவணியமும், அரசியல் சூழ்நிலைகளும், பிழைப்பதற்கான பொதுவுடைமைக் கொள்கைகளும், இன்றைய செல்போன்-பிஸ்ஸா-கோக் இளைஞர்களிடம் எடுபடாது. //
பிரகாஷ் கொஞ்சம் அப்படியே இறங்கிக் கீழே வாங்கோ!


அப்படியே இராமநாதபுரம் போன்ற பல மாவட்டங்களையும் சிந்தனைக்கு எடுத்துக்கிடுங்க-ஒரு முன்னூறு மில்லியன்கள் மக்களின் வாழ்வுத்தரத்தை வைத்து முழு இந்திய மக்களையும் பிஸ்சா,கோக்,செல்போன் தலை முறையாகக் காணதுல் உங்களைப்போன்ற முன்னூறிலொருவருக்கு இயலும்!


நீங்கள் சொன்ன இவைகளையெல்லாம் முழுமொத்த ஐரோப்பியர்கள் பெற்றும், பேராடும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவரிலிருந்து பயிற்றுவிக்கும் பேராசிரியர்கள் வரை இந்த இடதுசாரியப் பொருளாதாரத்தை(பொதுவுடமை) ஏற்படுத்தவே கருத்தாடுகிறார்கள்-போராடுகிறார்கள்.பெரும் பொருளியல் மேதையான சில்வியோ கேசல்கூட மார்க்சியத்தின் பொருளாதார நோக்கை தனது எண்ணத்தின் வாயிலாக முதலாளிகளைக் காப்பதற்காகத் திரிக்கமுடிந்ததே தவிர அழிக்கமுடியவில்லை.


அதனால்தாம் சுதந்திர- திறந்த பொருளாதாரத்தில் ஏகபோகத்தை முறியடிப்பது,நிலவுரிமையை பொதுவுடமையாக்குவது,அதன்மூலம் நிலத்துக்கு வரியை அறவிட்டுப் பாட்டாளிய வர்க்கத்துக்கு இருத்திவைத்துக் காசு வழங்குவதுபோன்ற எண்ணங்களையும் உருவாக்கினார்.இருந்தபோதும் இவற்றை கோக்கும்,பிஸ்சாவும்,செல்போனும் நிறைவேற்றத் தயாரில்லை.


உலகத்தில் எங்கேயும் இல்லாத சமூகப்பாதுகாப்பு(ஓய்வ+தியம்,வாழ்நிலைத்தரம்,கூலி,கல்வி...)ஜேர்மனியிலேதாம் இருக்கு.இருந்தும்,இந்த நாட்டின் இன்றைய சமூக எழிச்சியின் உள்ளடக்கம் எது?உபரியின் ஆதிகத்தை உடைத்துச் சமபங்கீட்டை நோக்கியே அது உருப்பெறுகிறது.சமூகத்தில் மாற்றங்களும்,வளர்சியும்தாம் நடைபெறுவதேயொழிய "எல்லையைப் போட்டு"எதுவும் இறதி நிலை அடைவதில்லை.


பிஸ்சா,கோக் இளைஞர்களிலில்லை இந்திய மொத்தப் பொருள் உற்பத்தியில் உடலுழைப்பை நல்குவது!


கோலார் தங்க வயலிலும்,பெருநகரகங்களில் உங்களைப் போன்றோரை "ரிக்ஷா"வண்டியில் வைத்திழுப்பவர்கள் செல்ப்போன் வாரீசுகளில்லை!


ஓர் நாள் அறுநூறு மில்லியனகள்; அந்த முன்னூறு மல்லியன்களுக்கு எதிராகக் கலகக்கொடி பிடிப்பது நிஜம்!அதில் இந்த கோக்,செல்போன்கள் இருந்த இடம்தெரியாது எங்கோ போய்விடுவார்கள்.-இது கனவல்ல மாறாக அனல்!


சமூகத்தின் முழுமொத்த மக்களையும் இணைக்காத எந்தப் பொருளாதாரப் பண்பும் நீடித்து நிலைக்கமுடியாதென்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

செல்போன் வாரீசுகளிடம் எது எடுபடுமென்பது நன்றாகவே கோக்குக்ம்,பிஸ்சாவுக்கும் தெரியும், ஆனால் பஞ்சப்பட்டுணிகளுக்கு எது எடுபடுமென்பது அவர்களது குடலுக்குத் தெரிந்தேயிருக்கு-அந்தத் தெரிவு ஓர் நாள் வீதியில் வினையாகும்போது கோக்போத்தல்களே செல்போனை உடைக்கும்!
 
தேவுரே..

பஹாளா சந்தோஷா ஆகித்து.

சலீல் சௌத்ரி, எல்லாரீஸ்வரி காம்போ.. ஆஹா... மதியம் தான்.. அம்மிணி பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன்.. haunting னுவாங்களே.. சத்தியமாக அது இந்தக் குரல் தான்..
 
பத்மா : நீங்க போட்ட பட்டியலில், சபாஷ் மீனாவையும், பலே பாண்டியாவையும் சேர்த்துக்கங்க.. மூணு மணிநேரத்துக்கு கவலை மறந்துவிடும் உத்தரவாதம்,
 
சுதாகர் : மிகச் சரி. சமீர் கக்கரை, பேசும் படத்தில் பார்த்ததாக நினைவு. மறுமொழிக்கு நன்றி
 
ஸ்ரீரங்கன் ; அடேங்கப்பா, இன்னாமா யோசிக்கிறீங்க. சொல்லப் போனால், நீங்க சொல்ற கருத்துகளுக்கு நான் எதிர்ப்பதமாக சிந்திக்கிறவன். பின்னொரு நாளில் நிதானமாக...
 
Thanks for a good introduction to a fine movie.

//இந்தப் படத்தை சில அறிவுய்திகள்... //

Would've been even better without the needless preemption :)
 
மிஸ்டர் துளசி நல்ல சுகம்( அப்படின்னு நினைக்கறேன். யாராவது ச்சீனர்களைத்தான் கேக்கணும். அங்கெதான்
போயிருக்கார்)

அமோல் பாலேக்கர் நடிச்ச படங்கள் எல்லாம் இப்போப் பார்த்தாலும் நல்லாதான் இருக்கும். நம்ம வீட்டுலே
ச்சோட்டிஸீ பாத், தாமாத்ன்னு கொஞ்சம் இருக்கு.

நம்ம கொள்கையே கொஞ்சம் மனம்விட்டுச் சிரிக்கணும்ங்கறதுதான்.
 
நசீருத்தீன் ஷா பேரு வினோத் = அது குந்தன் ஷா அசிஸ்டெண்ட் விது வினோத் சோப்ரா-வோட பேரும் கூட.
ரவி பாஸ்வானி பேரு சுதீர் மிஸ்ரா.. குந்தனின் இன்னொரு அசிஸ்டெண்ட்.இவரு Hasaaron Khwaishein Jaisi, Chameli போன்ற படங்களெல்லாம் எடுத்தாரு.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< HomeMoved to here