இனி - பாரதிராஜா - I

பாரதிராஜாவின் திரைப்படங்கள் குறித்த ஒரு அலசல் கட்டுரை, சொ.சங்கரபாண்டி அவர்களால் எனக்குக் கிடைக்கப் பெற்றது. 1991-92 வாக்கில் வெளியான இக்கட்டுரையை எழுதியவர் சக்கரவர்த்தி. தற்போது சிற்றிதழ்களில் திரைப்படக் கட்டுரைகளை எழுதி வரும் வெங்கடேஷ் சக்கரவர்த்தியும் இவரும் ஒருவரே என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இக்கட்டுரை, இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமாக இருக்கின்றதா என்று ஆராய்ந்து பார்க்கும் போது புலப்படும் சங்கதிகள் சுவாரசியமானவை.

பாரதிராஜா ஒரு முக்கிய திரைக்கலைஞராக அடையாளம் காட்டப்படுவதற்கு என இருக்கும் பல காரணங்களில், அவரது யதார்த்தமான கிராமத்துச் சித்திரிப்பும் ஒரு முக்கியமான காரணம். சக்கரவர்த்தியின் கட்டுரையும் இதைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளின் பிற்பகுதியிலே திரையுலகுக்குள் நுழைந்த பாரதிராஜா, அச்சு அசலான கிராமத்தை என்று இல்லாவிட்டாலும், நிஜத்துக்கு சற்றேனும் நெருக்கமாக இருக்கிற கிராமத்தை படம் பிடித்துக் காட்டி, ரசிகர்களை , விமர்சகர்களை ஆச்சர்யப்படுத்தினார். அவருடைய திரைப்படங்கள் வருவதற்கு முன்பு வரை, தமிழ்த் திரை கிராமங்கள் அரங்குகளில் நிர்மாணிக்கப்பட்டன. சில சமயங்களில் வெளியூர்களில் படமாக்கப்பட்டாலும், அவை எப்போதும் பச்சை பசுமையுடன் காட்சி அளித்தன. கிராம மக்களின் உணவுப் பழக்கங்கள், மக்களின் பெயர்கள், உறவு முறைகள், கிராமத்து மக்கலின் வேலைகள், கூலி விவரங்கள், மத நம்பிக்கைகள், அவர்களுடைய இசைக் கருவிகள், திருவிழாக்கள் போன்றவை, பாரதிராஜா திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பாக இடம் பெற்றதே இல்லை என்று சொல்லலாம். கிராமங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற ஊகத்தின் அடிப்படையிலே, செயற்கையாக எழுதப்பட்ட காட்சிகள், ஆழமான வசனத்தாலும், நல்ல நடிப்பினாலும் வெற்றி பெற்று, கிராமங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற செயற்கையான பிம்பத்தை ஏற்படுத்தின.

இதை முதன் முதலாக உடைத்தெறிந்து, நிஜ கிராமத்தைப் படம் பிடித்தவர் பாரதிராஜா.

கிராமப் பின்புலத்தை யதார்த்தமாக காட்டியதால் மட்டுமே பாரதிராஜா வெற்றிகரமான இயக்குனராக மிளிர்ந்தார் என்று சொல்லமுடியாது. பாரதிராஜாவின் திரைப்படங்களை விடவும் வெகுயதார்த்தமான கிராமப் பின்புலத்தைக் கொண்ட , கல்லுக்குள் ஈரம் (1980) திரைப்படம், வெற்றி பெறவில்லை என்பதுடன், நிவாஸ் அதன் பின் வெகுகாலத்துக்கு திரைப்பட முயற்சிகளில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜாவின் திரையுலகச் சாதனைகளை நாலைந்து காலகட்டமாகப் பிரித்துக் கொள்ளலாம்.

பாரதிராஜாவின் ஆரம்ப காலட்டம், ஐந்து வெற்றிப்படங்களை உள்ளடக்கியது. 16 வயதினிலே ( 1977) , கிழக்கே போகும் ரயில் ( 1978) , புதிய வார்ப்புக்கள் (1979) , போன்ற கிராமத்துப் பின்னணியைக் கொண்ட திரைப்படங்களும், நிறம் மாறாத பூக்கள் (1979) , சிவப்பு ரோஜாக்கள் (1978) போன்ற நகரத்துப் பின்னணியைக் கொண்ட திரைப்படங்களும், அதனளவிலேயே, கதை, திரைக்கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என்ற எல்லா முக்கிய அம்சங்களிலும் சிறப்பாக அமைந்து, வெற்றிப் படங்களாக அமைந்தன. பாரதிராஜாவின் ஆரம்பகால வெற்றிக்கு முக்கிய காரணம், சிறந்த கதையைத் தேர்ந்தெடுப்பதும், அதை அழகாகக் காட்சிப்படுத்துதலும் தான். [16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் தவிர்த்து, அவரது அனைத்துத் திரைப்படன்ங்களுமே, பிறரது கதையை , திரைக்கதையாக்கி, இயக்கப்பட்டவை தான்]

இந்த தொடர் வெற்றிக்குப் பிறகு, கிராமத்தில் இருந்து வந்து வெற்றி பெற்ற இயக்குனர், திரைப்படங்களில் புதிய புரட்சி ஏற்படுத்தியவ்ர் என்ற அடைமொழிகள் பாரதிராஜாவை வந்து அடைந்தன. பாரதிராஜா, கிராமத்து அடையாளங்களை விட்டு விலகத் துவங்கி, எல்லா விதமான திரைப்படங்களையும் உருவாக்க வல்ல இயக்குனராக தன்னை காட்டிக்கொள்ள துவங்கிய காலகட்டம் இது. நகரத்து இளைஞர்களின் மனோபாவத்தைப் படம் பிடிக்க முயன்ற நிழல்கள் (1980) , மலிவான பாலியல் நகைச்சுவையை மையமாக வைத்து வாலிபமே வா வா(1982) , ஆங்கில திரைப்பட பாணியில் டிக் டிக் டிக்* ( 1982) , கிராமப் பெண்களின் குணாதிசயங்களை மையப்படுத்தி எடுத்த திரைப்படங்களைச் சமன் செய்யும் விதமாக உருவாக்கிய நகரப் பின்னணியிலான 'புதுமைப் பெண்' (1983) , இசையை அடிப்படையாகக் கொண்ட காதல் ஓவியம் (1982) ஆகிய திரைப்படங்கள் இந்த காலகட்டத்தில் தான் வந்தன.

அல்லிநகரத்துப் பால்பாண்டியன், கிராமத்தான் என்ற அடையாளத்தை விட்டு விலகத் துவங்கி, நகரத்துக் கலாசாரத்துடன் ஒன்ற முயற்சி செய்து , அண்ணா சாலை அடுக்கு மாடிக் குடியிருப்பு, நவநாகரீகமான உடைகள், பேச்சிலே அவ்வப்போது குறுக்கிடும் ஆங்கிலம் என்று முழுமையான கோடம்பாக்கத்து முதல் தரமான இயக்குனராகவும் மிளிர்ந்த காலகட்டமும் இதுதான்.

நகர ஆசாமிகள், கிராமங்களைச் செயற்கையாகக் காட்டினார்கள் என்றால், பாரதிராஜாவின் நகரங்களும் செயற்கையாகத்தான் இருந்தன. போதைப் பழக்கத்துடன், கனவுலகில் மிதக்கும் நிழல்கள் நாயகன், டிக் டிக் டிக் படத்தின் பின்புலம், புதுமைப் பெண்ணின் கதைக் களம் போன்றவை செயற்கையாகவே இருந்தன. நகரத்துக்கு என்று ஒரு தனியான மனோபாவம் உண்டு. அதைச் பாரதிராஜா சரியாகப் புரிந்து கொண்டாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

( தொடரும், நாளை அல்லது தோன்றிய நேரத்தில்)

( * டிக் டிக் டிக் என்பது ஆங்கிலப் பெயர் என்று சொல்லி முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசை கோருதல் கூடாது. ஏனெனில், இந்தப் படத்துக்கு அப்பெயரை வைத்தது பாரதிராஜாவே அன்றி நானில்லை. மேலும் அப்படத்தின் பெயரை குறிப்பிட்டே ஆகவேண்டிய அவசியம் இருக்கிறது என்பதன் கூடவே, அதனைத் தமிழ்ப்படுத்துவதை என்னப்பன் முருகப்பெருமான் கூட விரும்ப மாட்டான். ஆகவே விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு காத்திருக்கும் கதிர்காமஸ் -க்கு என் ஆழ்ந்த வருத்தங்கள் )

Comments

If my memory is right Ini came in 87-88 or so and certainly not in 91-92.Yes it is venkatesh chakrvarti. There is an article by Sundar Kaali in Making Meaning of
Indian Cinema (ed) Ravi Vasudevan
on neo-nativity genre.If you can get access try to read that.
//There is an article by Sundar Kaali in Making Meaning of
Indian Cinema (ed) Ravi Vasudevan
on neo-nativity genre.If you can get access try to read that.
//

இது எங்கே கிடைக்கும்? எனக்கு அவசியம் வாசிக்க வேண்டும். உங்களிடம் மென்பிரதி இருக்கும் என்றால், எனக்கு அனுப்பி வைக்கவும்.
arulselvan said…
>>neo-nativity genre

அப்போதைய கன்னட சினிமாவின் தாக்கம் பா.ராஜா
மீது நிறைய. அதைப் பற்றியும் பேச வேண்டும்.
(காடு குதிரெ, ரங்க நாயகி, சோமன துடி ....)

அருள்
//அப்போதைய கன்னட சினிமாவின் தாக்கம் பா.ராஜா மீது நிறைய. அதைப் பற்றியும் பேச வேண்டும்.
(காடு குதிரெ, ரங்க நாயகி, சோமன துடி ....)//

வாய்ப்பிருக்கிறது. என்ன இருந்தாலும், புட்டண்ண கனகாலின் சீடர் தானே? [ காடு குதிரே, சோமன துடி தெரியும். ரங்கநாயகி கொத்தில்லா :-) ]
This comment has been removed by a blog administrator.
1991-92 என்பது ஆங்கிலமாகும். இதை தமிழில் எழுத முடியும் முடியாது என்றோ, நடைமுறையில் இல்லை என்றோ சொல்லாமல் முதல் பரிசை எனக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன்.
Thangamani said…
நல்ல கட்டுரை.
பேசாமல் டிக் டிக் டிக்- கை தமிழ்ப்படுத்தி டிக் டிக் டிக் என்றே எழுதியிருக்கலாம்!
16 வயதினிலே சரி, சிகப்பு ரோஜாக்களும் பாரதிராஜாவோட சொந்தக்கதையா? புஷ்பா தங்கதுரை இல்ல?
SnackDragon said…
பாவம் பிரகாஷ், எனக்காகவெல்லாம் ரொமப கஷ்டப்பட்டு எடிட் பண்ணாதீங்க. ;-)
உந்த விளக்கெண்ணெய்ப் பின்னூட்டங்களைக் கண்டுகொள்ளாதீர்கள்.
டிக் டிக் டிக் என்பது ஒலிதானேயொழிய அது எந்த மொழிக்கும் சொந்தமான சொல்லன்று.
ஆகவே அது வேற்றுமொழிச்சொல்லென்று கொள்ளத்தேவையில்லை. தங்கமணி சொன்னதுதான் என்கருத்தும்.
மேலும் 1978 என்பதும் வேற்றுமொழிச்சொல்லன்று.
தமிழில் இந்த இலக்கத்தை எழுதலாமென்றாலும் பொதுவாக தமிழ் எண்கணித முறை மீது எனக்கு நிறைவில்லை.
தற்போதுள்ள தமிழ் எண்கணித முறைப்படி நாம் நினைக்கும் எந்த எண்ணையும் எழுதிவிட முடியாது. அது ஏறத்தாள உரோமன் இலக்க முறையை ஒத்திருப்பதால் குறிப்பிட்டளவிற்குமேல் எண்ணை எழுத முடியாது.
ஆகவே தமிழ் எண்முறையை தசம முறைக்கு மாற்றினாலொழிய அதைப்பயன்படுத்துவது முட்டாள் தனமாகவே முடியும். (மிகக்குறைந்த எண்ணிக்கையை வெளிப்படுத்த தற்போதுள்ள தமிழ் எண்முறையைப் பயன்படுத்தலாம். ஆனால் குறைந்த எண்ணிக்கைக்கு இதையும், பெரிய எண்ணிக்கைக்கு இந்தோ அராபிய எண்முறையையும் பயன்படுத்துவதைவிட இரண்டாவதையே பொதுவிற் பயன்படுத்துவது சிறந்தது.)
மேலே "விளக்கெண்ணெய்ப் பின்னூட்டங்கள்" என்று சொல்லியதற்காக என்னைக் கோபிக்க வேண்டாம். அது குற்றம் பிடித்துப் பரிசை வெல்ல முனைவோரைக் கொச்சைப்படுத்தச் சொல்லப்பட்டதன்று. மாறாக அவற்றை ஒற்றைச் சொல்லில் வெளிப்படுத்தவே அச்சொல் பயன்படுத்தப்பட்டது.

(ஒற்றைச் சொல்லிற் சொல்லப்போய், இப்படி நீட்டி இன்னொரு பின்னூட்டம் போடவேண்டி வந்துவிட்டது. பேசாமற் கருத்தை மட்டும் எழுதியிருக்கலாம்;-)
பிரகாஷ்,
ரவி சொல்வது சரி. இனி 80களின் பிற்பகுதிகளில் வந்தது. தமிழ்ப் படங்கள் மேடை நாடகத்தின் பரிணாம வளர்ச்சியாக இருந்ததால் பெரும்பாலான காட்சிகளில் பாத்திரங்கள் படக்கருவியைப் பார்த்தே பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த போக்கிலிருந்து மாறுபட்டது பாரதிராஜா படங்களின் காட்சிகள் என்றும் அக்கட்டுரை நிறுவ முயன்றதாக நினைவு.

'இனி'யில் பாக்யராஜ் பற்றிய கட்டுரையும் வந்தது. துவங்கும் புள்ளியிலேயே முடிக்கும் 'வட்ட' கதை சொல்லும் உத்தியை கையாளுபவர் என்ற மையப்பொருளில்.
லதா said…
// இன்று தொடங்கி, இனி ஏழு நாட்களுக்கு இங்கே தினமும் பதிவு இடப்படும். அதிலே ஒரே ஒரு ஆங்கில வார்த்தை கூட இருக்காது. அப்படி ஆங்கில வார்த்தையை கண்டுபிடித்து எழுதும் முதல் மூன்று அன்பர்களுக்கு ஒரு சிறப்புப் பரிசு உண்டு...... //

ஆங்கில திரைப்பட பாணியில்

இதில் ஒரு ஆங்கில வார்த்தை இருக்கிறது :-))

பரிசு எனக்கு வேண்டாம். மண்டபத்தில் ஒருவர் சொல்லிக் கொடுத்தார். :-))
Boston Bala said…
---கல்லுக்குள் ஈரம் (1980) திரைப்படம்---

நல்ல படம். முடிவுதான் :((( எதற்கு சாகிறார்கள், யார் சாகிறார்கள் என்று புரியாத வேகத்தில் கட்டையேறுவார்கள்.

டிக் டிக் டிக் என்பதை ஒழுங்காக தமிழில் எழுதலாமே. சொல்லின ஆரம்பத்தில் டகரம் வராது. December-ஐ திசம்பர் என்று எழுதுவது போல், திக் திக் திக் என்று எழுதலாம்.

[திக்குவாயை கிண்டல் செய்வதாக வாசகர் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புண்டு; திக் என்பது Thick-ஆக நினைத்து குழம்பலாம்; திக்கெட்டும் செல்வதற்கு பதில் குன்றுதோறாடும் முருகன் திக் விஜயம் செய்து திருவாவினன்குடி, திருப்பரங்குன்றம், திருத்தணிகை தலங்களை பரப்புகிறாரோ என்றும் பரவசமாகலாம் ;-)]

குழப்பமில்லாத முறையில் இடிக் இடிக் இடிக் என்று தமிழ் இடிக்குமாறு வலியுறுத்துகிறேன்.
லதா நான் சொல்வது,
இப்போதுள்ள தமிழ் எண்முறையினால் எல்லா எண்களையும் எழுத முடியாதென்பதே. இதை யாரும் மறுக்க முடியாது.

எண்களை எழுதிக்கொண்டு செல்கையில் ஒருகட்டத்துக்கு மேல் எம்மால் தமிழில் எண்ண முடியாது.
மாறாக சுழியம் முதல் ஒன்பது வரை வெறும் பத்து வரிவடிவத்தைக்கொண்டுள்ள, இப்போது நாம் பயன்படுத்தும் எண்முறையில் நாம் எந்தப்பெரிய எண்ணையும் அல்லது எந்தச் சிறிய எண்ணையும் எழுத முடியும்.
பின்னங்களை எழுதுவதற்குத் தனித்தனியே சில எழுத்துக்களைத்தான் தமிழ் எண்முறையில் வைத்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக 1/8 என்பதை 'வ' என்ற எழுத்துக்கூடாகக் குறிக்கிறோம். அதன்படி மிகச்சில பின்னப்பெறுமானங்களை மட்டுமே எம்மால் எழுதமுடியும். மேலும் நூறுக்கு, ஐநூறுக்கு, ஆயிரத்துக்கு, ஐயாயிரத்துக்கு, பத்தாயிரத்துக்கு, இலட்சத்துக்கு, கோடிக்கு என தனித்தனி எழுத்துக்களை பயன்படுத்திக்கொண்டு போனால் எவ்வளவு தூரம்தான் போக முடியும்?

நான் நினைக்கிறேன், இப்போது நாம் பயன்படுத்துவதைப்போலவே தமிழிலும் எண்கணித முறை இருக்கிறதாகப் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்களென்று. உண்மையில் அப்படியில்லை. எண்முறை கிட்டத்தட்ட உரோமன்முறைப்படி எண்ணப்படுகிறது. மாறாக நாமும் சுழியன் முதல் ஒன்பது வரை வெறும் பத்து வரிவடிவங்களை மட்டுமே வைத்து தசம முறையில் எண்ணினால் எந்தச் சிக்கலும் இருக்கப்போவதில்லை. இப்போது பாவிக்கும் முறையைப்போலவே இலகுவாகவும், எந்த எண்ணையும் எழுதக்கூடியதாகவுமிருக்கும்.

அத்துடன் பெரும்பாலான தமிழ் எண்வரிவடிவங்கள் தமிழ் எழுத்துக்களாகவே இருப்பது சிக்கலானது. ஒரு பத்தியில் அப்படிப்பட்ட எண்ணையும் சேர்த்து எழுதும்போது சொற்குழப்பம் கட்டாயம் வரும். எடுத்துக்காட்டாக இரண்டு என்பதை 'உ' என்று எழுதும்போதும், எட்டு என்பதை 'அ' என்று எழுதும்போதும் அதனுடன் வரும் மற்றச்சொல்லுடன் இவ்வெழுத்துக்கள் குழப்பத்தைத்தரும். இன்னொரு எடுத்துக்காட்டு, எட்டேகால் எனும் இலக்கத்தைத் தமிழில் எழுதினால் அது 'அவ' என்றுதான் வரும். (எட்டேகால் லட்சணமே- திட்டியது ஒளவையாரா?). அதற்கு அடுத்ததாக வரும் அளவைக்குரிய பொருள் அவ என்ற சொல்லுடன் சேர்ந்து வந்து பிறிதொரு பொருளைத்தரலாம்.
மேலும் கணிணிமயப்படுத்தி யோசித்தாற்கூட இப்போதுள்ள தமிழ் எண்கணித முறையில் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்வோம்.

இக்கருத்தைப்பற்றித் தனியே விவாதிக்கலாம் போலவும் தெரிகிறது. இது சம்பந்தமான எதிர்வினைகளை எதிர்பார்க்கிறேன். என்கருத்துப் பண்பட உதவக்கூடும்.

ஒரு கேள்வி. இப்போதுள்ள தமிழ் எண்கணித முறைப்படி நாம் எழுதக்கூடிய ஆகக்கூடிய எண் எது? அதைத் தமிழ்வடிவத்தில் எப்படி எழுதுவது?
மாறிப்பதிலளித்ததுக்கு மன்னிக்கோணும்.
ஜெயசிறி,
நானும் அதைத்தான் சொல்கிறேன். இப்போது பயன்பாட்டிலுள்ள தமிழ்எண்கணித முறை பயன்பாடற்ற ஒரு வடிவம். நான் சொன்னமுறைதான் இப்போது பயன்பாட்டிலுள்ளது. அதில்தான் 1/8 ஐ 'அ' என்று எழுதுகிறார்கள். மேலும் 1/2, 1/4, என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வரிவடிவங்கள். மேலும் உரோமன் முறைபோலவே ஐம்பதுக்கு, நூறுக்கு. ஐநூறுக்கு என்று ஒவ்வொரு வரிவடிவங்கள். இவற்றை மாற்றி எண்கணித முறையைச் சீரமைத்தாலன்றி, இப்போதுள்ள முறையைப் பயன்படுத்தி எம்மால் முழுத்தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது. வேண்டுமானால் புத்தகத்தின் பக்கங்களை, மைற்கற்களை, நாட்காட்டிகளை இவ்வெழுத்துக்கள் கொண்டு நிரப்பலாம். ஆனாற் பொதுப்பயன்பாட்டுக்கு இந்தத் தமிழ்எண்முறை உகந்ததன்று என்பதே என்கருத்து. நீங்கள் சொல்வதைப்போல மாற்றங்கள் செய்யப்பட்டபின் அவற்றைப் பயன்படுத்துவதில் எனக்கு எந்தச் சிக்கலுமில்லை. வேண்டுமானால் ஆதரிக்கிறேன். ஆனால் இப்போதுள்ள தமிழ் எண்கணித முறைக்கு நான் ஆதரவாளனல்லன்.

சரி, பின்ன முறையை விடுவோம், எழுத்துவடிவமும் எண்வடிவமும் ஒன்றாக இருப்பதையிட்டு நான் சொன்ன சிக்கலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
எடுத்துக்காட்டு: 1-'க', 2-'உ', 8-'அ'.
//அதில்தான் 1/8 ஐ 'அ' என்று எழுதுகிறார்கள்.//

என்ற வசனம்,
"1/8 ஐ 'வ' என்கிறார்கள்" என்று வந்திருக்க வேண்டும்.
ஜெ,
இந்த பதிவில் ஹைஜாக் என்கிற சொல்லை யூஸ் பண்ணக்கூடாது. :-)
தமிழாஹா,

பவத்யாஹா ஞானார்த்தம் ப்ராப்யந்து, அஹம் இஹம் தமிழ் நம்பர்ஸ் யூனிகோடானாம் டைப்பிங்க் கரிஷ்யாமி:

௦௦௦௦0 ௦
1 ௧
2 ௨
3 ௩
4 ௪
5 ௫
6 ௬
7 ௭
8 ௮
9 ௯
10 ௰
100 ௱
1000 ௲

தேக்தா? தமிழ் மேய்ன் தசம, சஹஸ்ர, ஔர் ஹசார் நம்பரோம்ோபி ஏக் அக்ஷர் சே லிக்தா சுலப் ஹை, ப்ரொவிஷன் ஹை.

ஔர் தேகோ:
நாள் ௳
திங்கள் ௴
ஆண்டு ௵
பற்று ௶
வரவு ௷
மேற்கண்டவாறு ௸
எண் ௺

தேக்கியே க்யா? பாவா, லதா ஃபாண்ட் யூஸ் சேஸ்தானண்டே அபௌ லட்டர்சு சால தமிழ்லெ தெளிலேது.

(மேலே ஹிந்தி, தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளை நான் கொன்று குவித்திருப்பதற்கும் என் தமிழ்ப்பற்றுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை).
லதா said…
ஜெ,
இந்த பதிவில் ஹைஜாக் என்கிற சொல்லை யூஸ் பண்ணக்கூடாது. :-)

அன்புள்ள சுபமூகா,
யூஸ் (மட்டும்) பண்ணலாமா :-))
தரவுகளுக்கு நன்றி கிருபா.
ஏன் ஆயிரத்தோடு நிறுத்திவிட்டீர்கள். அதற்கும் அப்பால் இருக்கிறதென்று நினைக்கிறேன்.
ஆயிரம் தான் இறுதியென்றால் ஒருலட்சத்தை வெளிப்படுத்த நாம் நூறுமுறை ஆயிரத்துக்குரிய எழுத்தை ஏழுதவேண்டும்.
இதெல்லாம் சரிப்பட்டுவராது. இன்றைய உலகத்தில் வரையிலி வரையான எண்களைப் பயன்படுத்தக்கூடியதாக எண்ணும் முறையிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் புத்தகப் பக்கங்களையும் நாட்காட்டிகளையும் அலங்கரிப்பதோடு தமிழ்எண்முறை நின்றுவிடவேண்டியதுதான்.

ஜெசிறிக்குப் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.
கிருபா முடிந்தாற் பின்னங்களையும் தந்தால் நன்று.
வசந்தன், நான் மேலே கொடுத்த எண்கள் எல்லாம் யூனிகோட் அமைப்பில் தமிழுக்கென்று ஒதுக்கிய எண்கள். அவ்வளவுதான். 1000க்குப் பிறகு ஒதுக்கவில்லை (நமக்கென்று ஒதுக்கியதையேக்கூட நாம் பயன்படுத்தமாட்டோம் என்று முன்பே தெரிந்து வைத்திருக்கிறார்கள்).

ஒரு லட்சத்தை எழுத எதற்கு நூறுமுறை ஆயிரத்துக்குரிய எழுத்தை எழுதவேண்டும்? இரண்டே எழுத்துக்கள்தான்:

1,00,000=௲௱

சுலபமாக இல்லை? பின்னத்தை கணினியில் எப்படிக் குறிப்பது என்று தெரியவில்லை. பார்க்கிறேன்...
நியாயமான கேள்விகளை விளக்கெண்ணெய் பின்னுட்டம் என்றெல்லாம் சிலர் திட்டுகிறார்கள்... இதற்கு அப்புறமும் அந்த பாவப்பட்ட பின்னூட்டத்துக்கு பரிசு உண்டா இல்லையா என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக சொல்லுங்கள்
ஓகே. கம்மிங் பேக் டு த பாயிண்ட்.

தமிழ் சினிமாவில் நிஜ கிராமத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது பாரதிராஜாதான். ஆனால், கிராமங்களின் ஆதார பிரச்னைகளை முன்னிறுத்தினாரா?

ஆம் என்றால் மேற்கொண்டு தொடரலாம்; பிரச்னைகளை முன்னிறுத்த வேண்டிய அவசியமில்லை என்றால் நானும் உங்கள் கருத்துக்கு ஆமாம் போட்டுவிட்டு ஜகா வாங்கிக்கொள்கிறேன்!
முகமூடி said...
//1991-92 என்பது ஆங்கிலமாகும். இதை தமிழில் எழுத முடியும் முடியாது என்றோ, நடைமுறையில் இல்லை என்றோ சொல்லாமல் முதல் பரிசை எனக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன்.//

முகமூடிக்கு தமிழ் என்றால் என்ன ஆத்திரமோ தெரியவில்லை. இவை தமிழ் எண்களே....

டாக்டர் மு.வரதராசனார் அவர்களும், ‘மொழி வரலாறு’ என்னும் தமது நூலில் 1, 2, 3, 4-என வரும் எண்கள் தமிழ் எண்களே என்று கல்வெட்டு ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், “உலகமெங்கும் எழுதப்பட்டு வரும் இந்த எண்கள் அரபி எண்கள் என்றே கூறப்படுகின்றன. ஆனால், அரபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கும் இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை. தமிழ்நாட் டின் பழைய எண் வடிவங் களைப் பற்றி இவர்கள் அறி யாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணமாகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் அந்த எண்கள் (1, 2, 3, 4... முதலியவை) பழைய தமிழ் எண்களே என்பது, பழந்தமிழ் எண் வடிவங்களை நோக்கின் உணரப்படும்.

விரிவாக படிக்க இங்கே அழுத்தவும்.
// முகமூடிக்கு தமிழ் என்றால் என்ன ஆத்திரமோ தெரியவில்லை. //

வெங்காயம்... நான் சொல்லியதில் தமிழ் மீது ஆத்திரம் தொனிக்கும்படி உமக்கு என்ன தெரிகிறது என்று விளக்கினால் நானும் புரிந்து கொள்வேன்...

இல்லை நீரும் அறிஞர்கள் கூட்டத்தை சேர்ந்தவரா?
//நகரத்துக்கு என்று ஒரு தனியான மனோபாவம் உண்டு. அதைச் பாரதிராஜா சரியாகப் புரிந்து கொண்டாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்//

முதல் ஐந்தாறு கிராமிய படங்களை எடுத்ததால் என்னவோ, எல்லோருக்குமே அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி, இந்த ஒரு கருத்து அனைவரிடமும் இருந்தது. ஆனால், அவருடய இயக்கத்தை டிக் டிக் டிக் படத்தில் நீங்கள் கவனித்துருந்தால், இது போன்ற விமரிசனங்களுக்கே இடமில்லை என்று சொல்லவேண்டும். ஒரு காட்சியில், வில்லன் தன்னுடன் கூடவே இருக்கும் காரியதரிசி, தன்னுடய ரகசியங்களை எல்லாம், கதாநாயகனிடம் சொல்லிவிட்டதைத் தெரிந்து, அவளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவுடன், அவள் கீழே சரிந்து விழுந்தவுடன், காமிரா அப்படியே அவள் விழுந்து சரிந்த கண்ணாடியில் ஒரு குளோசப் ஷாட். ரத்தம் வழிந்து ஓடி வழியும் கண்ணாடியில் ஒரு 30 செகண்டுகளுக்கு ஒரு ஃபிரீசிங் ஷாட். அப்போழுது ஒரு சின்ன ஹேர் லைன் கிராக் கீறல்! அதாவது, வில்லன் இருக்கும் அறையானது, ஒரு புல்லட் புரூஃப் டஃப்ண்ட் கிளாஸால் ஆனது என்பதை மிகவும் தத்ரூபமாக, இந்த உறையவைக்கும் காட்சியை நீங்கள் பார்க்கலாம்.

இது போன்று பல டைரக்டோரியல் டச்சுடன் நிறையக் காட்சிகள் அந்தப் படத்தில் உண்டு. அதாவது நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், நகர வாழ்க்கையை ஒட்டி எடுக்கப் பட்ட அவரது திரைப் படங்கள் பலவற்றில் இது போன்ற காட்சிகள் உண்டு. கதாபாத்திரங்கள் வேண்டுமானல், சில செயற்கைதனத்துடன் கையாளப் பட்டிருக்கும், ஆனால் சப்ஜக்ட் ட்ரீட்மெண்ட் அப்பட்டியிருக்கது.

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்