தமிழ் வாழ்க...

இந்த குற்ற உணர்ச்சியாகப்பட்டது பல ரகம். பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுவிட்டு, மோட்சம், பரங்கிமலை ஜோதி இன்ன பிற திரையரங்குகளில், படம் பார்த்து விட்டு வீட்டுக்கு தாமதமாகச் சென்று , ஏதாவது ஒரு சாக்கு சொல்லி ஏமாற்றும் போது ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் இருந்து தொடங்கி, வேலை அதிகம் என்று வரும் மடல்களுக்கு பதில் போடாமல் விட்டுவிட்டு பின் வருத்தப்படும் சமீபகால குற்ற உணர்ச்சி வரை, ரகம் ரகமாக இருக்கும் இவை, ஏற்படுத்தும் தாக்கமும் வகை வகையானவை.

என்னுடைய சமீபத்திய குற்ற உணர்ச்சி, தமிழில் ஆங்கில வார்த்தைகளைக் கலந்து எழுதுதல் தொடர்பானது. இது திடீரென்று அதிகரித்ததற்கு மரத்தடி இணையக்குழுவில் நடந்த சில மடல் பரிமாற்றங்களும் காரணம்.

2003 ஆண்டு மத்தியிலே இணையத்தில் முதன் முதலாக எழுத வந்த போது, சிந்தனை ஓட்டத்துக்கும், எழுதுகிற வேகத்துக்கும் இடைவெளி அதிகமாக இருந்த நேரத்திலே, பொருத்தமான தமிழ் வார்த்தைகள் கிடைக்காமல் போகும் போது, சட்டென்று வந்து விழும் ஆங்கில வார்த்தையை அப்படியே எழுதி வலையில் ஏற்றும் பழக்கம் வந்தது. இன்றைக்கும் இந்தப் பழக்கம் இருக்கிறது.

நம் சிந்தனையை, ஒப்பனையில்லாமல், அது முகிழ்த்த நேரத்திலே, தோன்றிய கணத்திலேயே வெளிப்படுத்துவது, ஒரு விதமான நேர்மையைக் குறிக்கிறது என்று நான் கருதிய போதிலும், எழுதத் துவங்கி சில வருடங்கள் சென்ற பின்னரும், சிறிதளவு முனைப்பும் இல்லாமல், நன்றாகப் புழக்கத்தில் இருக்கும் தமிழ்ச் சொற்களை பயன்படுத்தாமல், யதார்த்தம் என்ற பெயரிலே ஆங்கிலம் கலந்து பேசுவது, ஒரு விதமான அராஜகம் ( என்னுடைய) என்றே தோன்றுகிறது
தமிழை தமிழாகப் புழங்குவது குறித்து ( இதை தனித்தமிழ் என்று சொல்வது இன்னொரு வேடிக்கை) இராம.கி அய்யா, வாசன், ஆசீப் மீரான் , இன்னும் பல நண்பர்கள் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்கள். அவர்களும், இந்தப் பதிவுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

ஆகவே, இந்த நிமிடம் துவங்கி, இனி ஆங்கிலம் கலக்காமல் தமிழை எழுதுவது என்று ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆசையாகத் தான் இருக்கிறது என்றாலும், வகை தொகை தெரியாமல், வாக்குறுதி கொடுத்து விட்டு தேர்தல் காலத்தில் முறத்தால் அடிபடும் சட்டமன்ற உறுப்பினர் வகை ஆள் நான் இல்லை என்ற காரணத்தால்.....

......இன்று தொடங்கி, இனி ஏழு நாட்களுக்கு இங்கே தினமும் பதிவு இடப்படும். அதிலே ஒரே ஒரு ஆங்கில வார்த்தை கூட இருக்காது. அப்படி ஆங்கில வார்த்தையை கண்டுபிடித்து எழுதும் முதல் மூன்று அன்பர்களுக்கு ஒரு சிறப்புப் பரிசு உண்டு......

இந்த ஆட்டத்திலே யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.

Comments

Thangamani said…
வாழ்த்துகள்!
SnackDragon said…
அப்படியா சரி. கண்ணில் ஊற்றிக்கொள்ள விளக்கெண்ணெய் வாங்கியாச்சு. அது சரி எப்போது
சமக்கிருதம் கலக்காமல் எழுதுவதாக முடிவெடுக்கப் போகிறீர்கள்? :-P
இந்த குற்ற உணர்ச்சியாகப்பட்டது பல ரகம்.

bachelor days (and nights) குற்ற உணர்ச்சி will differ from post-bachelor days (and nights)குற்ற உணர்ச்சி :).
அது சரி எப்போது தமிழ்
கலக்காமல் எழுதுவதாக முடிவெடுக்கப் போகிறீர்கள்? :)
Kasi Arumugam said…
அட! அப்படிப்போடுங்க அய்காரஸ் :-)
Mookku Sundar said…
//அட! அப்படிப்போடுங்க அய்காரஸ்//

காசிக்கு பரிசு உண்டா..??
சூ விடலை ஞாலம்.. ஆங்காங் இல்லை சுடலைஞானம்.
"posted by icarus prakash at 9:49 AM on Sep 20 2005" இஃது என்ன சுண்டலத்தெலுகா?


அப்படியே வந்த இடத்திலே வராது வந்து சந்தித்த மாமணிக்கும், "காசி அய்யா கும்புடுறேனுங்க."
SnackDragon said…
அட யாருங்க அது காசி? புது வளைப்படிவாரா தெரியுதே... ஏங்க கவலைப்படாதீங்க
3 பதிவு தொடர்ந்து எழுதினா நீங்க தமிழ்மணத்துல "வந்துருவீங்க" :-))
பிரகாசு,

தனித்தமிழா?

அவ்வளவு தமிழ் தெரிஞ்சா நான் ஏன் இப்படி இருக்கேன்?

அது போட்டும் அந்த ஐகாரஸ் தமிழ்தானே?
//விளக்கெண்ணெய் வாங்கியாச்சு //

"" "" "" "" " " :-)

வாழ்த்துக்கள்!
இப்படி எல்லாம் மரத்தடியில் கதைக்கிறீர்களா? மகிழ்ச்சி. எப்படியோ, தமிங்கிலம் தவிர்க்கத் தொடங்கினால் நல்லது தான்.

அண்மையில் தமிழ்முரசு என்ற மாலையிதழ் "கலக்கலா ஈவினிங் பேப்பர்" என்று விளம்பரம் செய்ததைப் பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட எரிச்சல், இன்னதென்று கிடையாது. ஒரு பக்கம் நாளிதழ்ப் பெயரில் தமிழ்; இன்னொரு பக்கம் அதை நடைமுறைப் படுத்தலில் தமிங்கிலம்; இவர்களைப் போன்றவர்கள் தான் நம்மைக் கெடுத்தவர்கள். காசில் மட்டுமே குறியாய் இருப்பவர்கள். அண்மையில் தினகரன் வாங்கிய தொலைக் காட்சியினர் தான் இதைத் தொடங்குகின்றனரோ?

உங்களைப் போல் இன்னும் பலர் தமிங்கிலத்தைத் தங்களால் முடிந்த அளவு தவிர்க்க முன்வந்தால், எதிர்காலம் என்ற ஒன்று தமிழுக்கு இருக்கும். இல்லையென்றால் ஒரு பத்து, பதினைந்து ஆண்டில் சங்கூதும் நிலை வந்துவிடும்.

அன்புடன்,
இராம.கி.
ஜோ/Joe said…
பாராட்டுக்கள்!வாழ்த்துக்கள்!!
பிப்ரவரியில் சென்னை சென்றிருந்த பொழுது அமுதசுரபியின் ஆசிரியர் அண்ணா கண்ணனிடம் தொலைபேசினேன். ஒரு சொல் கூட ஆங்கிலத்தில் இல்லாமல் அழகான தமிழில் தடங்கல் இல்லாமல் அவர் பேசியதை கேட்டு எனக்கு பதில் பேச கொஞ்சம் பயமாக கூட இருந்தது. 'அடுத்தவருக்கு புரியாது என்றால் தான் நான் ஆங்கிலத்தில் பேசுவேன்' என்று அவர் சொன்னது மனதில் பதிந்தாலும், நீங்க சொன்ன காரணங்களினால் நானும் ஆங்கிலம் கலந்து தான் எழுதுகிறேன்.

உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள். நானும் முயலப் போகிறேன்..
Nambi said…
வாழ்த்துகள்!
Nambi said…
வாழ்த்துகள்!

........

Prakash's Chronicle :-)
மறுமொழி அளித்த நண்பர்கள் தங்கமணி, ரவி, காசி, சுந்தர், ரமணி, துளசி, அருணா, ஜோ, ரம்யா, நம்பி ஆகிய அனைவருக்கும் நன்றி
//bachelor days (and nights) குற்ற உணர்ச்சி will differ from post-bachelor days (and nights)குற்ற உணர்ச்சி :). //

ரவி : எத்தனை உசுப்பேற்றினாலும் இன்னும் ஆறு நாட்களுக்கு ஆங்கிலம் கலக்க மாட்டேன் :-)
//இல்லை சுடலைஞானம்.
"posted by icarus prakash at 9:49 AM on Sep 20 2005" இஃது என்ன சுண்டலத்தெலுகா?//

ரமணி : உள்ளே புகுந்து சரி செய்வது எப்படி என்று தெரியவில்லை. இன்றிரவு சோதனை செய்து பார்க்கிறேன்.
இராம.கி : அய்யா, நீங்கள் சொன்ன மாலை நாளிதழ் குறித்த விவாதம் தான், மரத்தடியிலே நடந்து கொண்டிருந்தது. நீங்களும் உள்ளே புகுந்து, நாலு போடு போட்டால் நன்றாக இருக்கும்.
இந்த பதிவு டோட்டலா எனக்கு அண்டர்ஸ்டாண்டிங்கே ஆவ மாட்டேங்குது.. ஏன் ஒரு மாதிரி கெரோன்னு எளுதியிருக்கீங்க. சம்திங் ராங் வித் யுவர் ஹெல்த்? ஒயுங்கா உங்க டமில்ல இன்னும் ப்ளாக்போஸ்ட் வர செவன் டேஸ் இருக்கா?
தூய தமிளில் எழுதரதுங்கறது அவ்ளோ சுலபமான வேலை இல்லை. முக்கியமா படிக்கிறவங்களுக்கு அது புரியோனும்! வெஷ பரீட்சை தான்.

ஒரு வாரம் தானே? இட்ஸ் ஓகே :-))
அன்பு said…
சும்மா 'நச்'னு இருக்கு..." பாராட்டுக்கள் பிரகாசம்...
(சும்மா 'தனித்தமிழ்' முயற்சி(த்)தேன்...:)
குறைந்தபட்சம் எழுத்திலாவது ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் குறைக்கும் (நீக்கும்) முயற்சி வரவேற்கத்தக்கது; வாழ்த்துகள்!
அன்பு, சுபமூகா, முகமூடி, இராதா கிருஷ்ணன், பின்னூட்டத்துக்கு நன்றி
ம்ம், இந்த வெள்ளாட்டு நல்லாதான் இருக்கு.

சரி அப்போ ஒரே ஒரு நிபந்தனை. சும்மா போங்கு எல்லாம் அடிக்கக்கூடாது. இந்த ஏழு நாள்ல எழுதற பதிவுகள்ல இருக்கற சொற்களின் மொத்த எண்ணிக்கை குறைஞ்சது 300ஆவது வரணும்.

வந்துட்டா? வந்துட்டா நான் இதே மாதிரி 30 நாளுக்கு முயற்சிப்பேன். ஹி, ஹீ.
//வந்துட்டா நான் இதே மாதிரி 30 நாளுக்கு முயற்சிப்பேன்//
பிறகு படம் போடுறாங்களோ நாலுவரி கவிதை எழுதிறாங்களோ எண்ணம்தானே முக்கியம்? ;-)
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
எனக்கென்னவோ சிலர் உங்கள் முயற்சியை விளையாட்டாக விளங்கிக்கொண்டார்களோ என்ற ஐயமுண்டு.
பிரகாஷ்,
இதை வைத்து "இந்த வாரம் தமிழ் நட்சத்திரம்" என்று ஆரம்பிக்கலாமே! 'தமிழ் மணத்தின் முதல் தமிழ் நட்சத்திரம்' ஒளிக! ச்சே, ஒளிர்க!!

அப்படியே "ஜாலியா ஜெயிக்கலாம், வாங்க ஸ்டூடென்ட்ஸ்" என்றால் என்ன பொருளென்று உங்கள் கோயிஞ்சாமி குழுவிடம் கேட்டு சொல்லுங்களேன்.
Unknown said…
//அப்படியே "ஜாலியா ஜெயிக்கலாம், வாங்க ஸ்டூடென்ட்ஸ்" என்றால் என்ன பொருளென்று உங்கள் கோயிஞ்சாமி குழுவிடம் கேட்டு சொல்லுங்களேன்.//

:-))))))))
"தமிழ்முரசு" வந்த வேளை, இப்படி பலன்கள் எல்லாம் கிடைக்கின்றன. வாழ்க தமிழ் முரசு..வெல்க அதன் தமிழ்ச் சேவை..

வாழ்த்துக்கள் பிரகாஷ்..
தங்கள் சுய விமர்சனத்தை படித்தவுடன் என் கண்கள் குளமாகி விட்டன, ஐகாரஸ் :-)
//அப்படியே "ஜாலியா ஜெயிக்கலாம், வாங்க ஸ்டூடென்ட்ஸ்" என்றால் என்ன பொருளென்று உங்கள் கோயிஞ்சாமி குழுவிடம் கேட்டு சொல்லுங்களேன்//

சு.மு, கோயிஞ்சாமி குழுவுக்குள் குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :-)

ராம்கி, மதியிலி, பாலா, வசந்தன், பொடிச்சி, கிருபா... அனைவருக்கும் நன்றி.
இகாரசு, கவனிச்சுப் பார்த்தீங்களா?

இப்பத் தொலைக்காட்சியில் வரும் தமிழ்முரசு விளம்பரத்துலே "கலக்கலா ஈவினிங் பேப்பர்" என்கிற வாசகம் போய், "கலக்கலா மாலை நாளிதழ்"ன்னு வருது. நல்ல மாற்றம் தான். அப்ப யாரோரோ வலைப்பதிவு, மடற்குழு எல்லாம் கூர்ந்து படிக்கிறாங்க.

மொத்தத்துலே அடிக்க, அடிக்க அம்மியும் நகரும் சாமி.

அன்புடன்,
இராம.கி.
//நல்ல மாற்றம் தான். அப்ப யாரோரோ வலைப்பதிவு, மடற்குழு எல்லாம் கூர்ந்து படிக்கிறாங்க.

மொத்தத்துலே அடிக்க, அடிக்க அம்மியும் நகரும் சாமி.//

அய்யா, நீங்கள் சொல்வது சரிதான். தமிழ் மென்பொருள் விவகாரத்திலிருந்து ( குறிப்பாக பத்ரி பதிவில் எழுந்த விவாதங்களில் இருந்து ) தமிழ் வலைப்பதிவுகள் நிறைய பேரின் கவனத்தை ஈர்த்தன. அதிலிருந்து தமிழ் வலைப்பதிவுகளை கவனமாகப் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். வலைப்பதிவுகளின் சக்தி எத்தகையது என்பதைச் சொல்லும் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையின் சுட்டி இதோ

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Mani Ratnam's Guru - Review

வரைவின் மகளிர் from பாண்டவபுரம்