தகவல் vs தொழில்நுட்பம் - 1

தகவல் தொழில்நுட்பம் என்கிற, கொஞ்ச காலமாக, மவுசைப் பெற்று பின் இழந்து, பின் மீண்டும் மவுசு பெற்று விளங்கும் துறையில், தகவலை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தொழில்நுட்பத்தை மட்டும் முதன்மையானதாக முன் நிறுத்துபவர்களை கிண்டலடிக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை.

ஒரு விளையாட்டுக்கு இப்படிச் சொன்னாலும், கணிணி தொழில்நுட்பவியலாளர்களை குறைத்து சொல்வதற்காக அல்ல, தகவல் என்பது எத்தனை தூரம் இன்றியமையாதது என்பதற்கான கட்டுரைதான் இது.

கல்லடிக்கவும், தர்ம அடி போடவும் விருப்பம் கொண்டவர்களுக்காக என் மின்னஞ்சல் முகவரி கட்டுரையின் அடியில் தரப்பட்டிருக்கிறது.

கட்டுரை இலக்கணப்படி, இது போன்ற தலைப்பு வைத்தால்., முதலிலே தகவல் என்றால் என்ன? தொழில் நுட்பம் என்றால் என்ன என்பதை வரையறை செய்யவேண்டும். அதுதான் முறை. ஆனால் நான் தொழில்நுட்பம் பற்றி அதிகம் ஏதும் சொல்லப் போவதில்லை. காரணம், இதைப் படிக்கும் நீங்கள், ஒரு கணிணி வழியாகப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அடிப்படை தெரிந்திருக்கிறது .

முழுச்சமையல் தெரியாவிட்டாலும் கூட, ஒரு ஆத்திர அவசரத்துக்கு காபி போடவோ அல்லது, ·ப்ரிட்ஜில் இருந்து மாவை எடுத்து தோசை வார்க்கவோ - முதலில் ஒரு வெங்காயத்தை நன்றாகத் தேய்த்து விட்டு கல்லில் போட்டால், தோசை விள்ளாமல் வரும் என்ற அளவுக்கு - சில புருஷாத்மாக்களுக்கு தெரிந்து இருக்கின்ற மாதிரி, கணிணியுடன் ஸ்நானப் ப்ராப்தி இல்லாத
நண்பர் பா.ராகவன் போன்ற பிறவி ஜர்னலிஸ்ட்டுக்கு கூட , எச்டிஎம்எல் எடிட்டரில் வேலை செய்யத் தெரிந்திருக்கிறது. அதன் பயன்பாட்டில் இருக்கும் எளிமைதான் காரணம்.

ஆகவே, தொழில்நுட்பத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும் என்று எடுத்துக் கொள்கிறேன். ஆனால், தகவல் மற்றும் அறிவு?

இன்றைக்கு கணிணித்துறைக்கு ஈடான, அறிவுசார் நிறுவனங்கள் பல புதிதாக முளைத்து வருகின்றன. knowledge based industries என்று சொல்வார்கள். வெறும் தகவல்களை மட்டுமே வைத்து வியாபாரம் செய்யும் இது போன்ற நிறுவனங்களை துவக்கி நடத்துபவர்கள் தீர்க்கதரிசிகள் என்று சொல்ல முடியும்.

இரண்டு உதாரணங்களைத் தருகிறேன்.

1. ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும் என்று கோவையில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறீர்கள். அவருடைய அலுவலகப் பெயர் தெரியும். தொலைபேசி எண் , முகவரியைத் தொலைந்துவிட்டது. அவருடைய அலுவலக எண் டெலிபோன் டைரக்டரியில் இல்லை. ஒரு பிரவுசிங் மையத்துக்கு சென்று, அவருடைய நிறுவனத்தின் பெயரை கூகிளில் தேடினால் ச்சீப்போ என்று துப்புகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவரை அவருடைய அலுவலகத்தில் பார்த்தே ஆகவேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் ?

2. கிளாரிந்தா என்ற நாவலை எழுதியவர் அ.மாதவையாவா அ.மாதவையரா என்ற சந்தேகம் திடீரென்று வந்து விட்டது . அந்த தகவல் அவசியம் இப்போது வேண்டும். கூகிளில் கிடைக்காது. ஒரு சுலமான வழி, மாலனுக்கு போன் செய்து கேட்கலாம். அவர் லைனில் மாட்டவில்லை என்றால்? எப்படி கண்டுபிடிப்பது?

4. முதன் முதலாக இணையத்துக்குள் வந்து தமிழில் புழங்க நினைக்கும் ஒருவர், தமிழ் தொடர்பான, வலைப்பூக்கள், இணையத்தளங்கள், இணையக் குழுக்கள், விவாத மையங்கள், தமிழ் எழுத்துருக்கள், தமிழ் செயலிகள், உலாவிகள் கிடைக்கும் இடங்கள் போன்றவற்றை ஏதேனும் ஒரே ஒரு இடத்தில் ( தளத்தில்) பார்க்க வேண்டும் என்றால் தற்போதைக்கு அது முடியுமா?

நான்காவது கேள்வியை மட்டும் சற்று விளக்குகிறேன்.

சமீபத்திலே, பத்திரிக்கையாள நண்பர் ஒருவரை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இணையத்த் தமிழ் தொழில்நுட்பம் பற்றி பேச, அவருக்கு ஒரு இயல்பான ஆர்வம் பிறந்தது. நானும், இ-கலப்பை, முகுந்தராஜ், சுரதா, வெங்கட், உமர் போன்றவர்கள் செய்யும் தன்னார்வ வேலைகள், தமிழா உலாவி, ஓப்பன் ஆபீஸ், தமிழ் திறவூற்றுச் செயலிகள் என்று ஆரம்பித்து சமீபத்திய வலைப்பூக்கள் வரை விலாவரியாகப் பேசியதும், அவருடைய ஆர்வம் அதிகமாகி, " இதைப் பற்றி ஒரு மேட்டர் செய்யலாமே, அந்த சைட்டு பேரெ குடுங்க என்று சொன்னார்."

அப்போது தான் எனக்கு உறைத்தது. என்ன தேவைக்கு எந்த இணையத்தளம் என்று எனக்குத் தெரியும். ஆனால், அவருக்குத் தெரியாது. " tell me one or two sites, where i can get all the information about the latest developments in tamil computing" என்று அவர் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. சரி வந்த வாய்ப்பை எதற்கு விடுவானேன் என்று தமிழ்லினக்ஸ், தமிழா, தமிழ்ப்ளாக்ஸ், உள்ளிட்ட இணையக்குழுக்கள், முக்கியமான இணையத்தளங்கள், முக்கியமான ப்ளாகுகள் என்று ஒரு பதினெட்டு 'உரல்'களைக் கொடுத்தேன். அத்தோடு போனவர்தான். தொலைபேசியில் கூட சிக்க மாட்டேன் என்கிறார்.

திறவூற்றுச் செயலிகள் கூட்டு முயற்சியால் விளைபவை. அது அப்படித்தான் இருக்க வேண்டும். ஆகவே ஒவ்வொருத்தரும் வெவ்வேறு வேலைகளை செய்கின்றனர். இருக்கட்டும். யார் யார் என்ன என்ன வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள், எந்த அளவில் இருக்கின்றது என்பதை எங்கேயாவது குறித்து வைக்கலாமே. வேலையைச் செய்வதென்பது, ரிபோர்ட் செய்வதைவிடவும் முக்கியமானதுதான். ஆனால், தொழில்நுட்பம் தெரியாமல், சும்மா ஜல்லி அடிக்கும் என் போன்ற பிரகிருதிகள் ஒருத்தர் கூடவா இந்த வேலையைச் செய்ய அகப்படவில்லை?

இதைச் செய்யாதவரை, வாரா வாரம் தன் தமிழ்பிசி திட்டம் பற்றி ஸ்டேடஸ் ரிபோர்ட் கொடுக்கும் சுஜாதாவுடன் சண்டை போடுவதில் அர்த்தமில்லை.

இது ஒரு உதாரணம் தான். முறைப்படுத்தப்படாதவரை, எந்த தகவலும் குப்பைதான் என்பதற்கான உதாரணம். ஆனால், இந்தத் 'தகவல் vs தொழில்நுட்பம்' தொடரின் நோக்கம் இது மட்டுமே அல்ல. இன்னும் விரியும்

( மீண்டும்....)


prakash
icarus1972us@vsnl.net



Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I